03-31-2004, 12:49 PM
BBC Wrote:மக்கள் சேவகனை மட்டு மண் இழந்து தவிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரும், வர்த்தக சங்கத் தலைவருமான ராஜன் சத்தியமூர்த்தி நேற்றுக்காலை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் மீது தணியாத தாகம் கொண்ட சத்தியமூர்த்தி பிரதேச அபிவிருத்தியில் அதீத அக்கறை காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது வெற்றி நிர்ணயிக்கப்பட்டதற்கான சான்றாக மக்கள் அமோக ஆதரவை உற்சாகத்தை ஊட்டி வந்தது வியப்பில்லை.
தற்போது மட்டக்களப்பு மாவட்டம் மாபெரும் சமூக சேவகனை இழந்து கண்ணீர் வடிக்கிறது. மக்கள் கதறி அழுகின்றனர்.
மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட அன்னார் தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்துக்காக அயராது படுபட்டார். மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் பிணக்குகள் எது எங்கு நடந்தாலும் அங்கு ராஜன் சத்தியமூர்த்தி பிரசன்னமாகியிருப்பார். அவர் வருவார் எப் பிரச்சினையானாலும் தீர்த்து வைக்க துணை நிற்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டிருந்தது நேற்றுடன் அந்த நம்பிக்கை அகன்று விட்டது.
மட்டக்களப்பு கல்வி மான்கள், புத்தி ஜீவிகள், அரசியல் சேவகர்கள் என அனைவரையும் துரோகி எனக் கூறி சுட்டுத் தள்ளுவதால் இன விடுதலையை அடையமுடியாது. இந்த துரோகத்தை புரிந்தவர்கள் உணர்ந்து கொள்வது மேல்.
ராஜன் சத்தியமூர்த்தி ஆத்மா சாந்திக்காகவும், அவரது உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர்.
நன்றி - தமிழ் அலை
யார் இந்தச் சத்தியமூர்த்தி?
நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.
நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.
இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.
ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.
சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.
சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.
சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.
இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.
எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

