Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடைத்தேங்காய்
#1
தான் அறியாச் சிங்களம்... - விஜயாலயன்


"தான் அறியாச் சிங்களம், தன் பிடரிக்குச் சேதம்". இது எங்கள் நாட்டில் வழக்கிலுள்ள ஒரு பழமொழி. தனக்குத்தெரியாத ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் ஒருவரை எச்சரிக்கப் பயன்படுத்தும் ஒரு பழமொழியாகவே இதனைப் பயன்படுத்துவார்கள். இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவையான (உண்மையில் சோகமான) ஒரு கதையிருக்கக்கூடும் என்று சிறுவயதில் நான் யோசித்ததுண்டு. கவுண்டமணியிடம் செந்தில் உதைபடுவதை நகைச்சுவையாக பார்த்துப்பழகியதால் யாரோ பிடரியில் அடி வாங்கியிருந்தாலும் அதுவும் நகைச்சுவை என்றே சிந்தித்திருக்கிறேன்.

ஆனால் பின்னாளில் என் பிடரிக்கே சேதம் வரக்கூடும் என்று நான் நினைத்துப் பார்த்ததேயில்லை.

சிங்களவர்களின் ஊரான களுத்துறையில் பிறந்தாலும் ஒரு வயதிலேயே யாழ்ப்பாணத்திற்கே திரும்ப வேண்டியேற்பட்டதால் வீட்டில் எனக்கு மட்டும் சிங்களத்தில் கதைக்கத் தெரியாதிருந்தது. ஆனாலும் மொழிகளைத் தெரிந்திருப்பது நல்லது என்று எனது அப்பா சிங்கள எழுத்துக்களைச் சொல்லிக்கொடுத்தார். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் ஒரு சிங்கள வகுப்பிற்குப் போய் பாலர்வகுப்பு சிங்களப்புத்தகங்களை படித்தேன். பள்ளிக்கூடத்தில் எனது வகுப்பில் எனக்கு மட்டுமே மூன்று மொழிகளையும் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) எழுதத் தெரியுமென்ற புளுகத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் மூன்று மொழிகளிலும் எழுதிக்கொள்வேன்.

காலம் மாறி கொழும்பிற்கு வந்து மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, சக தமிழ் மாணவர்களிலும் பார்க்க எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே சிங்களம் தெரியுன்று ஒரு அசட்டுத் தைரியம் என்னுடன் ஒட்டிக்கொண்டது. அப்பொழுது நான் கல்கிசையில் இருந்த அண்ணா வீட்டில் தங்கியிருந்தேன்.

ஒரு நாள் முடிவெட்ட வேண்டுமென்று வீட்டிலிருந்து வெளிக்கிட்டேன். சிங்களம் ஒழுங்காகக் கதைக்கக்கூடிய அப்பா அல்லது அண்ணாவுடன் போயிருக்கலாம். ஆனாலும் எனக்குத்தான் சிங்களம் அதிகம் தெரியும் என்ற நினைப்பு இருந்ததே.

நடந்துபோய் கல்கிசைச்சந்தியிலிருந்த சலூனுக்குள் புகுந்துவிட்டேன். முடிவெட்டுபவர்கள் எல்லாரும் வேலையாக இருந்தார்கள். அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டு ஓரமாக ஒரு கதிரையில் இருந்துகொண்டேன். ஊர் ஞாபகத்தில் பத்திரிகை படிக்கலாமென்று சுற்றிப்பார்த்தால் தமிழ்ப் பத்திரிகைகள் ஒன்றையும் காணவில்லை. சரி, உட்கார்ந்திருக்கும்போது முடிவெட்டுபவருக்கு என்ன சொல்ல வேண்டுமென்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் படித்த பாலர்வகுப்புச் சிங்களப்புத்தகங்களில் முடிவெட்டுவது பற்றிய வசனங்கள் எதுவுமே படித்திருக்கவில்லை என்பது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது. நைசாக வீட்டிற்கு திரும்பிப் போய்விடலாமோ என்று நினைத்தால், வீட்டில்தான் முடிவெட்டப்போகிறேன் என்று சொல்லிப்புறப்பட்டு விட்டு "மொழி தெரியாததால் முடிவெட்டவில்லை" என்று சொல்லித்திரும்ப தன்மானம் இடங்கொடுக்கவில்லை.

ஒருவழியாக தலைமயிருக்கு "ஹிச கெச" என்றும் வெட்டுவதற்கு "கபன்ன" என்றும் ஞாபகத்திற்கு வந்தது. கொஞ்சம் தைரியம் வந்துசேர்ந்தது. "ஹிச கெச கபன்ன ஓன" (தலைமயிர் வெட்ட வேண்டும்) என்று மனதிற்குள் உருப்போட்டுக்கொண்டேன். எனது முறை வந்ததும் "வாடிவென்ன" (உட்காருங்கள்) என்றதும் போய் உட்கார்ந்துகொண்டேன். "கொண்டய கபன்ன ஓனத" என்று கேட்டார் முடிவெட்டுபவர். இதென்ன கொண்டையில்லாத என்னைப்பார்த்து 'கொண்டையை வெட்டவா' என்று கேட்கிறாரே என்று யோசித்ததில் அவருக்கு கண்பார்வை சரியில்லையோ என்ற சந்தேகம் வந்தது. "நா, நா. ஹிச கெச கபன்ன ஓன" என்றேன் நான்.

***

கொண்டய கபன்ன ஓனத - முடி வெட்ட வேண்டுமா, பேச்சு வழக்கில் ("ஹிச கெச கபன்ன ஓன" யாரும் சொல்வதில்லை)
நா - இல்லை

***

குழப்பம் அங்கேதான் தொடங்கியது. முடிவெட்டுபவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்தார். இதென்னடா இவன் என்னைப்பார்த்து முழிக்கிறான், ஒரு வேளை அவரும் சிங்களம் சரியாகத் தெரியாத தமிழனோ என்று யோசித்தேன். ஆனாலும் விடக்கூடாது அவருக்கு எனது சிங்களப்புலமையை காட்டத்தான் வேண்டுமென்று முடிவெடுத்தேன்.

அந்த நபர் அடுத்ததாக ஏதோ சிங்களத்தில் கேட்டார். முடியை எப்படி வெட்டவேண்டுமென்று கேட்கிறார் என்று மட்டும் விளங்கியது. சிறுவயதிலிருந்தே தலைமுடியை கொஞ்சம் நீளமாகவே வைத்திருந்து பழகியதால் (ஒரு முறை குட்டையாக வெட்டி பரீட்சை மண்டபத்தில் மேற்பார்வையாளர் எனது அடையாள அட்டையில் இருப்பது யாரென்று குடைந்தது தனிக்கதை), கொஞ்சமாக வெட்டினால் போதும் என்று தெரிந்த சிங்களத்தில் ஏதோ சொன்னேன். முடிவெட்டுபவரில் ஏற்பட்டிருந்த வெறுப்பாலும் உண்மையில் அப்போது எனக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரிந்திருக்காததாலும் என்ன சொன்னேன் என்பது இப்போது ஞாபகத்திலில்லை.

துணியால் போர்த்திவிட்டு முடிவெட்டும் இயந்திரத்தைக் கையிலெடுத்தார். அவர் எந்த அடியை இயந்திரத்தில் பொருத்தினார் என்பதை நான் கவனிக்கவில்லை. எனது தலையின் இடதுபக்கத்தில் சதிசெய்ய ஆரம்பித்தார் அந்த முடிவெட்டுபவர். நான் என்ன ஏது என்று யோசிப்பதற்குள் கற்றை கற்றையாக முடி வெட்டப்பட்டுவிட்டது. இனிமேல் சொல்லி என்ன, வெட்டிய முடியை திரும்ப ஒட்டவா முடியும், என்று பேசாமலேயே இருந்துவிட்டேன். தான் அறியாச் சிங்களம், தன் பிடரிக்குச் எப்படிச் சேதமாகும் என்பது அப்போதுதான் சரியாக விளங்கியது. கொஞ்சம் வெட்டச்சொல்வதாக நினைத்து கொஞ்சத்தை விட்டுவிட்டு வெட்டச்சொல்லிவிட்டேன் என்பது அப்போதுதான் தெரிந்தது.

வீட்டிற்கு வந்தபோது என்ன இது என்று கேட்டவர்களுக்கு "கொழும்பு ஸ்டைலில வெட்டிப்பார்த்தேன்" என்று சொல்லிச் சமாளித்துக்கொண்டேன்.

ஆனாலும் சூடு கண்ட பூனையாக அந்தச் சம்பவத்தின் பின் இன்றுவரை, சிங்களம் சரளமாகப்பேசமுடிந்த பின்னரும் கூட, முடிவெட்ட சிங்கள சலூன்களுக்குப் போனதேயில்லை. பிடரியை கவனமாக வைத்திருக்க வேண்டும்தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
கடைத்தேங்காய் - by Mathan - 03-10-2004, 10:26 PM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 11:26 PM
[No subject] - by Mathan - 03-11-2004, 03:01 PM
[No subject] - by kuruvikal - 03-11-2004, 03:43 PM
[No subject] - by Mathan - 03-11-2004, 07:21 PM
[No subject] - by Mathan - 03-11-2004, 08:44 PM
[No subject] - by Mathan - 03-15-2004, 08:36 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 10:25 PM
[No subject] - by Rajan - 03-21-2004, 05:00 PM
[No subject] - by Rajan - 03-21-2004, 05:04 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 12:44 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 07:00 PM
[No subject] - by Mathan - 07-24-2004, 06:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)