03-08-2004, 02:20 AM
BBC Wrote:தமிழினத்துக்கு ஒற்றுமையே இன்றைய தேவை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முரண்பாடானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்திவிட்ட செய்தியாக அமைந்துவிட்டது.
தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தேசியத் தலைவர் வே.பிரபாகரனையும் வெறுமனே ஒரு இயக்கமாகவோ அல்லது அதன் தலைவரை தனி நபராகவோ பார்க்காததன் விளைவே மேற்கூறிய உணர்வலைகள் தமிழ் மக்கள் மத்தியில் எழக்காரணமாகியது.
தமிழ் மக்களின் பாதுகாப்பு, இருப்பு என்பன மாத்திரமல்ல, கூனிக் குறுகிக்கிடந்த தமிழினத்தை இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தலைநிமிரச் செய்வதற்கும், தமிழ் மக்களின் சுயகௌரவத்தை நிலைநிறுத்துவதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்பதில் இரு கருத்துக்களுக்கிடமில்லை.
எனவேதான் விடுதலைப் புலிகளுடன் முரண்படும் மாற்றுக் கருத்துகளைக் கொண்ட தமிழ்க் குழுக்கள் கூட புலிகளுக்கிடையிலான முரண்பாடு குறித்து தமது கருத்தையும் கவலையையும் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றன.
அந்தளவுக்கு தமிழர் தொடர்பான வரலாற்றில் விடுதலைப் புலிகளின் பிரசன்னத்தின் தேவை ஆழமாக உணரப்பட்டதின் வெளிப்பாடாகவே இவை அனைத்தும் அமைந்துள்ளன.
அத்துடன் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய முரண்பாடுகள், பூசல்கள் தேவையற்றது. அது தமிழ் மக்களை சகல வழிகளிலும் பலவீனப்படுத்தி தமிழ் மக்களை மோசமான பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்பதுமட்டுமல்ல தீர்மானிக்கப்பட உள்ள தமிழரின் தலைவிதி திசைமாறிப்போய்விடும் என்ற பயபீதியின் வெளிப்பாடாகவும் தமிழ் மக்களினதும் மற்றும் தரப்பினரதும் உள்ளுணர்வுகள் அமைந்துள்ளன.
தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி இன்று சகல தரப்பினரும் அதீத அக்கறைகாட்டி வருகின்றனர்.
கடந்த 20 வருடகாலப் போர் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கியதுடன் உயிர், உடைமை அழிவுக்கும் வழி வகுத்ததுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இரு வருடங்களுக்குமுன் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு நாட்டில் அமைதிச் சூழலை உருவாக்கி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடைநடுவில் நின்றுவிட்ட போதும் இன்றைய அமைதிச் சூழல் தொடர்வதன் மூலமே அது மீண்டும் தொடர்வது சாத்தியமாகும்.
இந்நிலையில் பிரதேசவாதம், தனிநபர் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு சமாதானச்சூழல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சமாதான பேச்சுவார்த்தை என்பன பலிக்கடா ஆக வேண்டுமா என்பதே கேள்வியாகும்.
போர் நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்து சமாதானச் சூழலை நிலைபெறச் செய்வதிலும், எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெரும் பொறுப்பும், பங்கும் உள்ளதென்றவகையில் முரண்பாடுகளுக்கும், பூசல்களுக்கும் இடம்கொடுக்காது முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.
எனவே தனிநபர் பிரச்சினைகள், பிரதேச ஏற்றத்தாழ்வுகள் என்பனவற்றை உள்வீட்டுப் பிரச்சினையாகக் கருதி தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்.
வடக்கு கிழக்கு என்ற பேதம் காரணமாகக் கூடுதலான பாதிப்பினை, சுமையினை சுமக்கப்போவது கிழக்கு மாகாணமாகவே இருக்கும்.
கிழக்கு மாகாணத்தின் மொத்த ஜனத்தொகையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர்.
பல இன, மதங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது பிரதேசவாதத்தால் ஏற்படும் பிரிவினால் பல்வேறுதாக்கங்கள் ஏற்படும் என்பதையும் கருத்திற்கொண்டும் தமிழினத்தின் நிகழ்கால, எதிர்கால நலனைக்கருத்திற் கொண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரதேசவாதம் மற்றும் பிளவுகள், முரண்பாடுகளுக்கும் இடம்கொடுக்கக்கூடாது என்பதில் தமிழ் மக்களும் அவர்கள் சார்ந்த தலைமைகளும் அதிக கரிசனை எடுத்துச்செயற்பட வேண்டும். இது தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் போக்குக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
நன்றி - வீரகேசரி
உண்மை.....
...... 8)

