Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமகால யாழ்ப்பாணம்....!
#2
மேலை நாட்டு கலாச்சாரத்தில் சர்வ சாதாரணமாகவிருக்கும் விவாகரத்து என்னும் விஷக் காய்ச்சல் தற்போது இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள குடும்பங்களிடையேங அசுர வேகத்தில் பரவியுள்ளதாக அண்மைய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. இது எம் சமூகத்தின் ஆரோக்கிய குடும்ப வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலும், பண்பாட்டு ரீதியான பின்னடைவாகும்.
எமக்கென கலை, கலாச்சார பாரம்பாரிய விழுமியங்கள் உண்டு. ஆனால் அண்மைக்கால அதிகரித்த வெளிநாட்டுத் தொடர்புகளினால் எமது கலாசார பாரம்பரிய விழுமியங்கள் பலத்த அடிவாங்கத் தொடங்கியுள்ளன. வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் தாயகம் நோக்கிய படையெடுப்பும், தாயகப் பெண்கள், பெற்றோரின் வெளிநாட்டு சுகபோக வாழ்க்கைக் கனவுகளுமே இந்த அவல நிலைக்கு அடித்தளமிடுகின்றன.

20 வருட கால யுத்தத்தினால் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் 20 ஆயிரத்து 79 பெண்கள் விதவையாகியுள்ள நிலையில் தற்போது விவாகரத்துக் கோரும் வழக்குகளும், வட,கிழக்கு பகுதிகளில் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணம், மல்லாகம், சாவகச்சேரி, பருத்தித்துறை, ஊர்காவற்துறை பகுதிகளிலேயே விவாகரத்து கோரும் சம்பவங்கள் அதிகம் என நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுக்கோப்பு, பந்தபாசம், அடக்கம், சகிப்புத்தன்மை ஆகிய அருங்குணங்களை வழக்கமாக்கிக் கொண்ட எமது தமிழ்ப் பண்பாடு இன்று அத்தகைய குணங்களிலிருந்து விடுபட்டு மிகவும் அபாயகரமானதொரு பாதையில் சென்று கொண்டிருப்பது தமிழினத்திற்கு வந்த சாபக்கேடாகவே நோக்கப்பட வேண்டியதாகும்.

விவாகரத்து கோருவோர் தமது தரப்பு நியாயங்களை முன்வைக்கும் போது அதிகமாக எதிர்த்தரப்பினரின் நடத்தையை முதலில் குறிப்பிடுகின்றனர். அடுத்ததாக பாலியல் பிரச்சினைகள் என்று சொல்கின்றனர். இவையே விவாகரத்துக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இவை தவிர, சந்தேகம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு இல்லை, மதுபாவனை, சித்திரவதை, மகப்பேறின்மை, நோய், என்று வேறு நபர்களுடனான தொடர்புகள் போன்றவற்றை சுட்டிக் காட்டுகின்றனர். இந்த விவகாரத்து மோகத்துக்கு மூல காரணம் யார்? ஆணா, பெண்ணா? அல்லது அவர்களை உசுப்பி விடும் சூழலா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.

ஆண்களைப் பொறுத்தவரையில் அனைவரும் இராமனும் இல்லை. நளனும் இல்லை. துரியோதனன்களும் துச்சாதனன்களும் இருக்கவே செய்கின்றனர். அதேபோல் பெண்கள் அனைவரும் பார்வதிகளும். பாராசக்திகளுமல்ல, பத்திரகாளிகளும், பிசாசுகளும் இருக்கவே செய்கின்றனர். முதலில் ஆண்கள் விவகாரத்துக் கோரிய சில சம்பவங்களை பாரப்பபோம்.

யாழ். குடாநாட்டில் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு மாப்பிள்ளை இவர். ஜரோப்பிய நாடொன்றில் மிகுந்த வசியான வாழ்க்கை. இவரின் பெற்றோரும் ஊரில் மிகவும் செல்வாக்கானவர்கள். இவர் வருடத்துக்கொரு தடவை தனது பெற்றோரை வந்து பார்த்து விட்டுச் செல்வார். இவர் வந்து விட்டுச் செல்லும் போதெல்லாம் கல்யாணத் தரகர்கள் இவர் வீட்டுக்கு படையெடுப்பார்கள். ஆனால், இவர் இப்போது அவசரமில்லை என நழுவி விடுவார்.

பெற்றோருக்கு மகன் மீது மிகுந்த நம்பிக்கை. ஆனால். திருமணத்திற்கு ஏன் சம்மதிக்கவில்லை என்பது அவர்களுக்கு புரியாத புதிர். ஒரு முறை மகன் விடுமுறையில் வந்த போது அவர் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் பெரியப்பா மூலம் வற்புறுத்தி ஒருவாறு திருணமத்திற்கு சம்மதிக்க வைத்து பெண்ணும் முடிவானது.

பெண்ணும் பிரபல கல்விமான் ஒருவரின் மகள். அழகானவர். அமைதியானவர். திருமண பேச்சுக்கள் தடபுடலாக நடைபெற்ற சீதனங்கள் இலட்சக்கணக்கில் தீர்மானிக்கப்பட்டு திருமணமும் மிகவும் ஆடம்பரமாக நடந்து முடிந்தது. அதன் பின்னர் ஒருவாரம் வரையில் ஊரியல் தங்கியிருந்த மாப்பிள்ளை மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தார். விடுமுறை முடிந்து பிரிவுத் துயர்களுடன் விமானம் ஏறினார் மாப்பிள்ளை.

வெளிநாடு சென்று விட்ட அவரின் தொடர்புகள் பின்னர் அதிகமாகவில்லை. வழமைபோன்று அடுத்த வருடமும் வந்தார். மனைவியுடன் சில நாட்கள் இருந்த அவர் கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது தனது மனைவிக்கு மூளை சரியில்லை. அதனால் அவருடன் தொடர்ந்தும் என்னால் வாழ முடியாது என்றார். இதை ஒருவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவரின் மனைவி கல்லூரியொன்றில் சிறந்த ஆசிரியராக சேவையாற்கிக் கொண்டிருக்கிறார். எவ்வளவோ சமரச முயற்சிகள், மன்றாட்டங்கள், ஆனால், மாப்பிள்ளை விடாப்பிடியாக விவாகரத்து கோரி வழக்குகளும் நடைபெற்று விவகாரத்தும் கிடைத்தது.

இதன் பின்னரே மாப்பிள்ளையின் வெளிநாட்டு வாழ்க்கை இரகசியம் மனைவியின் வீட்டாருக்குத் தெரிய வந்தது. மாப்பிள்ளை இங்கு திருமணம் முடிக்க முன்னரே அவருக்கு வெளிநாட்டில் வெள்ளைக்கார மனைவியும் ஒரு பிள்ளையும் இருந்தது தெரிய வந்தது. அதனாலேயே அவர் இங்கு திருமணத்திற்கு மறுத்த போதும் மதிப்புமிக்க பெரியப்பாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இன்னொரு திருமணம் முடித்து பெரியப்பாவுக்குத் தனது விசுவாசத்தை காட்டினார்.

ஆனால், இந்த விடயம் வெளிநாட்டு மனைவிக்குத் தெரிய வரவே அங்கு ஏற்பட்ட மோதல்களையடுத்தே அடுத்த தடவை இங்கு வந்து விவகாரத்து பெற்று தனது முதல் மனைவிக்கு விசுவாசத்தை காட்டினார்.

இதேபோன்று இன்னொரு சம்பவம். இவர்களும் ஊரில் பிரபலமானவர்கள் தான். மாப்பிள்ளை உள்ளுர் தான். மிகவும் அiதியானவர். பெற்றோர் திருமணப் பேச்சையெடுத்த போது ப10ரண சம்மதம் தெரிவித்து அவர்கள் காட்டிய பெண்ணையே மனைவியாக்கிக் கொள்ளச் சம்மதித்தார். மிகவும் ஆடம்பரமாக திருமணமும் நடந்தது.

திருமணத்தன்று இரவு தனது மனைவி பராயமடையாதவர் என்பதை இவர் அறிந்து கொண்டார். இதனால் இவர் மனைவியைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. மனைவி பராயமடையாதவர் என்ற உண்மையை மனைவியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இவர் விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்தார். அதில் தனது மனைவி பராயமடையாதவர் என்பதை மருத்துவ சான்றிதழ்கள் மூலம் நிரூபித்தார். இதையடுத்து விவாகரத்துக்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. இதன் பின்னரே பெண்னின் வீட்டாக்காரரும் தமது மகள் பராயமடையாதவர் என்பதை தாம் மறைத்ததையும் திருமணத்திற்குப் பின்னர் எல்லாம் சரிவரும் என நினைத்ததாகவும் தமது தவறை ஒப்புக் கொண்டனர்.

இன்னொரு விவகாரத்து சம்பவம். கணவன் - மனைவி இருவருமே அரச உத்தியோகத்தர்கள். திருமணப் பேச்சுகள் நடக்கும்போது மனைவி தொடர்ந்தும் வேலைக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கியே மணமுடித்தார் கணவர். திருமணம் முடிந்து ஒரு சில வருடங்கள் இருவரும் ஊர் மெச்சும் தம்பதியராகவே இருந்தனர். ஆனால், திடீரென மனைவியை தொடர்ந்தும் வேலைக்குச் செல்ல வேண்டாமெனக் கூறினார் கணவர். மனைவி காரணம் கேட்டபோது மழுப்பல்களே கணவரிடமிருந்து பதில்களாக வந்தன. இதனால் இருவருக்கும் இடையே விரிசல்கள் ஆரம்பமாகி நித்த சண்டையாக மாறத் தொடங்கியது.

திடீரென மனைவியிடமிருந்து விவாகரத்து கோரினார் கணவர். விவாகரத்துக்கான காரணம் மனைவியின் நடத்தையில் சந்தேகம் என்பதாக இருந்தது. ஆனால் ஊரில் அந்தப் பெண்ணைப் பற்றி கேட்டால் 'மிகவும் அருமையானவர்" என்னும் பதிலே கிடைக்கும் அப்படியான மனைவி மீதே கணவனுக்கு சந்தேகம் வந்தது.

கணவனிடம் விவாகரத்து வேண்டாமென மனைவி எவ்வளவோ வாதாடினார். மன்றாடினார். தனது புனிதத்தை நிரூபிக்கப் போராடினார். ஆனால், எல்லாம் விழலுக்கிறைத்த நீரானது. இறுதியில் சந்தேகப் பேயாக மாறிய கணவனுடன் வாழ்க்கை முழுவதும் மிதிபடுவதை விட விவாகரத்தே மேலானது என்ற முடிவக்கு வந்த மனைவி விவாகரத்துக்கு முழுச் சம்மதம் தெரிவித்து தற்போது விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து வாழ்கின்றார்கள்.

இனி சில பெண்கள் சம்பந்தப்பட்ட விவாகரத்து சம்பவங்களை பார்ப்போம்.

நகரில் அரச உயர்பதவியில் உள்ள ஒருவரின் மகளுக்கும் டாக்டராக உள்ள ஒருவருக்கும் மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நடைபெற்று சில மாதங்களிலேயே கணவனிடமிருந்து விவாகரத்துக் கோரினார் மனைவி. பதறிப் போயினர் இரு தரப்பு வீட்டாரும்.

இருதரப்பினரும் சமரச முயற்சிகளை மேற்கொண்டனர். பலனளிக்கவில்லை. கணவன் மனைவியிடமிருந்து விவகாரத்துக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தமது மகளை பெற்றோர் வற்புறுத்தி விவாகரத்துக்கான காரணம் கேட்ட போது அவர் சொன்னகாரணம் பெற்றோரை தூக்கி வாரிப் போட்டதுடன், அது ஒரு பெண்ணின் உளவியல் பிரச்சினை என்பதால் பெற்றோரால் மறுப்பேதும் சொல்லவும் முடியவில்லை.

விவகாரத்துக்கான காரணமாக மகள் கூறியது, 'எனது கணவனால் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை". தாம்பத்திய உறவில் அவர் மிகவும் பலவீனமானவராகவுள்ளார் எனவே, என்னால் அவருடன் தொடர்ந்தும் வாழ முடியாது" இது குறித்து மாப்பிள்ளையிடம் அவர்கள் கேட்டபோது, அவரும் தனது இயலாமையை ஒப்புக் கொண்டார். எனவே, இருதரப்பு சம்மதத்துடனும் விவாகரத்து இடம்பெற்றது.

இன்னொரு சம்பவம் வேடிக்கையானதும், வேதனையானதுமாகும். இந்தக் கணவர் பகலில் இராமனாகவும் இரவில் இராவணனாகவும் இருக்கும் ரகமானவர். அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வரும் இவர் அவர்கள் நன்றாக உபசரிக்கும்படி மனைவியை வற்புறுத்துவார். கணவரின் நண்பர்களாயிற்றே என்றுவிட்டு மனைவியும் சிரமத்தைப் பாராது நன்றாகவே உபசரிப்பார். விருத்துக்கு வரும் நண்பர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்கள்.

இரவானதும் மதுபோதையுடன் வரும் கணவன். தான் அழைத்து வரும் நண்பர்களுடனேயே மனைவியை தொடர்புபடுத்தி கேவலாமாக பேசுவதுடன் சில சமயங்களில் அடி உதையாகவும் சித்திரவதை செய்வார். ஆனால், பகலானதும் சாந்த சொரூபியாக மாறிவிடும், அவர், இரவு நடத்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வார். சில நாட்களில் மீண்டும் நண்பர்களுக்கு விருந்தளிப்பார். பின்னர் மனைவிக்கு அடி உதை தான். இந்தச் சம்பவம் தொடர்ந்ததால் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரிய மனைவி, தற்போது தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

இன்னொரு விவாகரத்து சம்பவம். தமது மகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டுமென ஒற்றைக் காலில் நின்ற பெண்ணின் பெற்றோர், எத்தனையோ உள்ளுர் வரன்களையெல்லாம் தட்டிக் கழித்துவிட்டு கனடா மாப்பிள்ளையொருவருக்கு தமது மகளை கட்டிக் வைத்தனர். சில மாதங்களில் தனது மனைவியை கனடாவுக்கு அழைத்து விட்டார் மாப்பிள்ளை. தமது மகள் கனடாவில் என்று பெற்றோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. கனடா சென்ற மகளும் கடிதமும், போட்டோக்களுமாக கணவனைப் பற்றி ஆகா, ஓகோவென புகழ்ந்து எழுதி வந்தார்.

ஆனால், சில மாதங்களின் பின்னர் வந்த மகளின் கடிதங்களிலெல்லாம் மகள் கண்ணீருடன் அவர் இப்படி மோசமானவர். அங்கே இங்கேயெல்லாம் அவருக்கு தொடர்பிருக்கிறது. எனக்கும் சித்திரவதை தான் என்றெல்லாம் கடிதம் எழுதினார். அங்கே மகள் தனது வாழ்க்கையை நினைத்துக் கண்ணீர். இங்கே பெற்றோர் தமது மகளை நினைத்து கண்ணீர். சில நாட்கள் மகளிடமிருந்து கடிதம், தொலைபேசி தொடர்புகள் எதுவும் இல்லை. திடீர்ரென ஒருநாள் தான் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக மகளிடமிருந்து கடிதம் வந்தது. இடிந்து போனார்கள் பெற்றோர்.

இன்னொரு விவாகரத்து வழக்கு இவ்வாறானது. தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போதே பெண் வைத்த நிபந்தனை. தனக்கு வரப் போகும் கணவன் மது, புகைத்தல் எதுவும் இல்லாதவராக இருக்க வேண்டும் என்பது தான். பெற்றோரும் மிகுந்த சிரமத்தின் பின்னர் தனது மகள் விரும்பியவாறான ஒருவரையே மகளுக்கு திருமணசெய்து வைத்தனர்.

மாப்பிள்ளையும் சில மாதங்கள் ஒழுக்கசீலராகவே இருந்தார். அதன் பின்னர் அவரின் நடத்தைகளில் மாற்றங்கள் காணப்பட்டன. இதனால் இருவருக்கும் இடையே சச்சரவுகள் ஏற்படத் தொடங்கின.

மாப்பிள்ளை ஏற்கனவே மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் உள்ளவரெனவும், ஆனால் பெண் வீட்டாரின் கொழுத்த சீதனத்துக்காக அவரின் பழக்கவழங்கங்கள் எல்லாம் கல்யாணத் தரகராலும், மாப்பிள்ளையின் பெற்றோராலும் மறைக்கப்பட்டே திருமணம் செய்து வைக்கப்பட்டதும், பின்னரே பெண் வீட்டாருக்குத் தெரிய வந்தது.

முதலில் நல்லவராகவே இருந்த மாப்பிள்ளை, பின்னர் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கவே கணவன்- மனைவிக்கிடையில் சண்டைகள் ஏற்படத் தொடங்கின. இதனால் வெறுப்படைந்த மனைவி தனது கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு பல சம்பவங்களினால் இருதரப்பினராலும் விவாகரத்துக்கள் கோரப்படுகின்றன.

விவாகரத்து என்பது இருவரின் மனது தொடர்புடையது என்பதுடன் சுயமாக சிந்தித்து செயற்பட வேண்டியதொரு விடமும் கூட. ஒருவர் விவாகரத்துப் பெற முடிவு செய்து விட்டால் மற்றவர்களால் அவருக்கு ஆலோசனைகளும், புத்திமதிகளும் கூற முடியுமே தவிர விவாகரத்தைக் தடை செய்ய முடியாது.

எனவே விவாகரத்து பெற முடிவு செய்வதற்கு முன்னர் ஒருவர் அது தொடர்பாக ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை சிந்திக்க வேண்டும்.
ஒரு கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கைக்குரியவர்களாகவும் விட்டுக் கொடுக்கும் தன்மை, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை போன்றவற்றை கடைப்பிடித்தாலே போதும், அங்கே விவாகரத்து என்னும் விவகாரத்துக்கு இடமேயில்லாமல் போய்விடும்.

எனவே, விவாகரத்து கோர நினைக்கும் ஒவ்வொரு தம்பதியினரும் தமது எதிர்காலத்தை. தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விவகாரத்து என்னும் விஷக் காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

எமது கலை, கலாச்சார, பாரம்பரிய விழுமியங்களை சீரழித்து, சின்னாபின்னப்படுத்தும் விவாகரத்து என்னும் அரக்கனுக்கு பலியாகாமல் ஒவ்வொருவரும் தமதும் தமது குழந்தைகளினதும் எதிர்காலத்தை பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி மகிஷா தினக்குரல்


முக்கியம் கருதி இச்செய்தி சூரியன் டொட் கொம்மில் இருந்து பிரதி செய்யப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 03-03-2004, 05:20 PM
[No subject] - by kuruvikal - 03-03-2004, 05:26 PM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 12:02 AM
[No subject] - by vasisutha - 03-04-2004, 12:32 AM
[No subject] - by Mathan - 03-04-2004, 12:36 AM
[No subject] - by vasisutha - 03-04-2004, 12:40 AM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 12:41 AM
[No subject] - by Mathan - 03-04-2004, 12:43 AM
[No subject] - by vasisutha - 03-04-2004, 12:55 AM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 12:58 AM
[No subject] - by kuruvikal - 03-04-2004, 01:00 AM
[No subject] - by Ramanan - 03-04-2004, 05:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)