03-03-2004, 09:30 AM
<span style='font-size:25pt;line-height:100%'>கடவுள்களும் நானும்.</span>
சின்ன வயதில்
அம்மாவின் தங்கைகளால்
கடவுள்கள்
எனக்கு அறிமுகப்படுத்தப் பட்டபோது
அவை சாந்தமானவையாயும்
இரக்கமும் அன்பும்
அபரிமிதமாய்க் கொண்டவையாகவும்
இருந்தன...
நான் குற்றங்கள் புரிந்தால்
தண்டனையை
அவைகள் ஏற்றுக் கொள்ளுமாம்
அவைகள்
பார்க்க பாவாமாயிருந்ததால்
தவறு செய்யும் முன்
யோசிக்கத் தோன்றும்
சிந்தனை தெளியத்தெளிய
அந்த பிம்பங்கள் மேலிருந்த
ஈர்ப்பு குறைந்து போய்
கருணை மட்டும் மனதில்
தங்கிப் போக
அது உயிர்களின் மீது
ஊற்றெடுத்தது.
அக்காலங்களில்
சதா
கசிந்துருகும் கண்ணீரோடு
அலைந்துகொண்டிருந்த
என்னைப் பார்த்து
நான் கடவுளுக்குத் தொண்டு
செய்யவே பிறந்திருப்பதாய்
அம்மா சொல்லி
அப்பாவிடம்
வாங்கிக் கட்டிக் கொண்டது
நன்றாய் நினைவிருக்கிறது
மெதுவாய் என்னுலகம்
விரிந்து வளர்ந்த போது
மற்ற கடவுள்கள் பற்றியும்
அறிந்து கொள்ள நேர்ந்தது.
அவைகளில் சில
கொடூரத்தோற்றத்தோடும்
பழி வாங்கும் இயல்புடையவையாகவும்
பயமுறுத்துபவையாகவும்
விவரிக்கப் பட்டதால்
அதை வழிபட்ட
மனிதர்கள் பால்
பரிதாபம் சுரந்தது.
மீதி இருந்தவையோ
மனித இயல்பிலிருந்து
எந்த விதத்திலும்
மாறுபடாமல்
மனிதனின் அத்தனை ஆசாபாசங்களும் கொண்டு
சமயத்தில் மனிதனுக்குப் போட்டியாகவும்.....
அவைகள் காலங்காலமாய்
கடவுள்களாய்
அடையாளங்காட்டப்பட்டதாலேயே
இன்னும் கடவுள்களாய்
இருந்து கொண்டிருப்பதும் புரிந்தது.
பிறகென்ன
தெய்வத்தை விட
மனிதமே போதுமென்று
முடிவெடுத்து
இப்போது
கடவுள்களற்றுப் போன
என் உலகத்தில்
நானும்
மனிதத்தின் மீது கொண்ட
தீராத
என் பரிவும் மட்டும்.
உதயா
நன்றிகள்:http://womankind.weblogs.us/

