Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே
#23
ஓய்வு நிலைப் பேராசிரியர் க.சிவதம்பி அவர்களிற்கு!


கடந்த வாரம் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியில் நீங்கள் புலம் பெயர்ந்த தமிழர் மீது தொடுத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், உங்களது விமர்சனத்தில் உள்ள யதார்த்தங்களை ஆரோக்கியமாக நாம் உள்வாங்குகின்ற அதே வேளை, உங்களது சில வார்த்தைப் பிரயோகங்கள் பற்றியும் அவை கூறும் தவறான செய்தி பற்றியும் உங்களிற்கு உணர்த்தும் நோக்கில் இம்மடல் வரையப்படுகின்றது.
அண்மைக்காலமாக புலம் பெயர்நத தமிழர் பற்றிய இகழ்ச்சிகள் உங்களால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.




உங்களது பீஷ்மர் அவதாரம் வாயிலாக தினக்குரலிலும் இதர ஊடகங்களில் இதர அவதாரங்களிலும் நீங்கள் புலம்பெயர்ந்த உங்களின் உறவுகளைக் காய்ந்து வருகின்றீர்கள். சரி உறவுகள் நாம் நமக்குள் மனந்திறந்து கருத்தாடல்கள் மற்றும் விமர்சனங்களை மேற்கொள்வதில் தவறில்லை.

அத்தோடு உரிமை உள்ளவர் தான் உறைக்கும் படி உண்மை கூற முடியும். அந்த வகையில் உங்களது விமர்சனங்களை நாம் மதிப்போடு ஏற்றுக் கொண்டு எமது செயற்பாடுகள் பற்றிய சுய பரிசோதனையில் ஈடுபடுகின்றோம், தேவை ஏற்படுமிடத்து எமது செயற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். எனினும் கருத்துப் பரிமாற்றமானது எப்போதும் ஒரு திசையில் இருப்பது ஆரோக்கியமற்றது என்ற அடிப்படையில் அக்குறையினை நிவர்த்தி செய்ய இதோ எங்களிடம் இருந்து உங்களிற்கு.

புலம் பெயர் தமிழரின் தாயக மேம்பாடு பற்றிய செயற்பாடுகள் தொடர்பில் நீங்கள் முன்வைத்த விமர்சனங்களில் பின்வரும் விடயங்களை உங்களது வாதத்திற்கு ஆதாரமாக நீங்கள் வரியிட்டுக் காட்டியுள்ளீர்கள்:

கனடா, இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் வாழ் தமிழரைப் பார்க்கிலும் அவுஸ்திரேலியா வாழ் தமிழர் ஆங்கிலப் புலமையில் மிளிர்கின்றார்கள். கனடா இங்கிலாந்து வாழ் தமிழர் போலல்லாது அவுஸ்திரேலியாவில் உடல் வருத்தி தமிழர் வேலை செய்வதில்லை.

அவுஸ்திரேலியா வாழ் தமிழர்கள் "அடிநிலை வேலை எனினும்" அரச வேலை புரிகின்றார்கள்.

புலம் பெயர்ந்த உறவுகள் கடனெடுத்து ஊரிற்கு உதவுகிறார்கள்.

எத்தனை நல்ல விடயங்களைச் சொன்னோம், இவன் யாரடா பன்னாடை போன்று வெறும் மூன்று விடயங்களை மட்டும் பிடித்துக் கொண்டு நம்மோடு மல்லுக்கட்டுகிறான் என எண்ணாதீர்கள். நான் ஏற்கனவே கூறியது போன்று உங்களது 90 விழுக்காடுகளிற்கு மேற்பட்ட யதார்த்தங்களை நாம் ஆரோக்கியமாக உள்வாங்கியுள்ளோம். அவற்றில் எமக்கு கருத்தொற்றுமை உள்ளமையால் அவை பற்றி விவாதிக்க ஏதுமில்லை. ஆனால் மேற்கூறிய மூன்று விடயங்களும் உங்களது உள்ளார்ந்த மனோநிலையைக் கண்ணாடி போன்று காட்டுவதற்கு உதவுவதாலும் இம்மடலின் நோக்கம் உங்களது உள்ளார்ந்த மனோநிலை பற்றி ஆலசுவது என்பதனாலும் இம்மூன்று விடயங்களையும் இங்கு எடுத்துக் கொள்கின்றேன். தற்போது மேலுள்ள மூன்று கருத்துக்களையும் ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.

உங்களது கருத்து இலக்கம் ஒன்று பற்றி

முதற்கண், எவ்வித ஆதாரமுமின்றி, கேள்வி ஞானத்தில் இத்தகையதொரு பிரதேசவாதச் சிந்தனையை முன்வைப்பது ஆரோக்கியமற்றது. முதற்கண் தமிழ் துறைப் பேராசிரியராகிய நீங்கள் கொண்டுள்ள ஆங்கில மோகமானது காலனித்துவ காலம் உங்கள் மீது விட்டுச்சென்ற எச்சமாக நாம் கருதவேண்டி உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர் எல்லாம் அறிஞர் என்ற பத்தாம் பசலிக்கருத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தினால் தமது நலன்களிற்காக அவர்களது குடியேற்ற நாடுகளில் அத்து மீறி விதைக்கப்பட்ட ஒன்று. மேற்கு எப்போதுமே தனது கலாச்சார சமூகப் பெறுமதிகளை உலகத்தோர் அனைவரும் ஏற்று அடிபணியச் செய்யும் குள்ளநரி வேலையில் ஈடுபடுவது என்பது நாடு அடிபட்டவர்கள் நன்கு அறியும் ஓரு விடயம். உதாரணத்திற்கு, மாமனிதர் தராக்கி போன்ற உலக பட்டறிவு பெற்ற அறிஞர்கள் இதனை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே முதலில் ஆங்கில மோகத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டு உங்களது கருத்தின் பொய்மையை இங்கு புலப்படுத்துவோம்.

நான் கனடாவாசி என்பதனால் எனது வாதத்திற்குக் கனடாவை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கின்றேன்.

கனடாவின் உத்தியோக மொழிகள் இரண்டு: ஆங்கிலம், பிரஞ்சு. ஒருவர் கனடாவின் எந்தப் பாகத்தில் வாழ்கின்றார் என்பதனைப் பொறுத்து இந்த இரண்டில் ஒரு மொழியில் சம்பாசிக்கும் ஆற்றல், அது பல்கலைக்களக தரத்திலான சம்பாசனையாக இல்லாது போயினும் கூட அம்மொழியிலான சம்பாசனை, அற்றவராக இருப்பின் அவரால் கனடாவில் தொழில் புரிய முடியாது. நம்மவர்கள் இங்கு வேலைசெய்யாத துறையே இல்லை எனலாம். அந்தந்தத் துறையின் நடைமுறைகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஆங்கில புலமை தேவையில்லை எனினும் மொழிப் பரீட்சயம் அவசியம். பத்து மணிநேரம் வேற்று இனத்தவரோடு வேலை செய்யும் நம்மவர்கள் வாய் பொத்தி வேலை செய்வதில்லை. ஏதோ தமக்குத் தெரிந்த வரையில் பொது மொழி ஆங்கிலத்தில் பேசித் தான் தமது வேலைப் பொழுதினை மகிழ்ச்சியாகக் கழிக்கின்றனர். மொழி என்பதன் அடிப்படை நோக்கம் என்ன? கருத்துப் பரிமாற்றம். எனவே இரு மனிதர்கள் தமக்கிடையே கருத்துக்களைப் பரிமாற முடிகின்றது என்றால் அதற்கு மேல் அங்கு புலமையினை ஆராய்வது அனைத்துச் சந்தர்ப்பங்களிற்கும் பொருத்தமாகாது. வேண்டுமாயின் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியர்கள் கூடும் கொக்ரெயில் பாட்டிகளிலும் மொழிப் புலமை எடைபோடப்படலாம். ஆனால் சாதாரண வாழ்விற்கு புலமை என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய்.

தற்போது நீங்கள் நினைக்கலாம். யார் அதை மறுத்தது அது அல்லவே எனது கருத்து. நான் சொன்னதெல்லாம் வெறும் பரீட்சயத்தை மட்டும் ஒரு மொழியில் கொண்டுள்ள ஒருவரால் அம்மொழியில் கருத்தாடலினை மேற்கொள்ள அதாவது Lobby பண்ண முடியாது என்பது தானே என்று. சற்றுப் பொறுங்கள் அங்கு தான் வருகின்றேன்.

மேற்குலக நடப்பு புரிந்தவர்களிற்குத் தெரியும் இங்கு கொள்கை வகுப்பானது மூன்று பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ளது. இம்மூன்று பிரிவினரும் முறையே: அரச அலுவலர் (Bureaucrats), ஊடகத்துறை (Media) மற்றும் அரசியல் வாதிகள் (Politicians) ஆவர். இம்மூன்று பிரிவினரது ஆசீர்வாத்தோடு தான் இங்கு சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஆனால் இம்மூன்று பிரிவினர் மீதும் மிகப்பெரும் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள மிகப்பெரும் பிரிவு பொது மக்கள் (grass roots). எவ்வாறெனின் அரசியல் வாதிகள் வாக்கு என்ற வடிவத்தில் பொது மக்களால் கடிவாளமிடப்படுகின்றனர். அலுவலர்கள் பொது மக்களாக பொதுமக்களோடு வாழ்பவர்கள். ஊடகங்கள் பணம் பண்ணுவது பொதுமக்களிடம். எனவே பொது மக்கள் மேற்கில் பாரிய பலமுள்ள ஒரு பிரிவு. இந்த அடிப்படையில் வெறும் மொழிப் பரீட்சயம் மட்டுமே உள்ள ஓருவரால் கூட இங்கு மிகச் சிறந்த Lobbying செய்ய முடியும்.

உதாரணத்திற்கு ஒரு கொள்கை வகுப்பாளர், ஊடகவியலாளர், அலுவலர், இவர்களிற்கும் நாளாந்த தேவைகள் உள்ளன. உதாரணமாக சாப்பிடுவதற்கு உணவு விடுதிகளிற்குச் செல்வார்கள், துணி சலவை செய்ய Dry Cleaners இடம் செல்வார்கள், எரிபொருள் நிரப்ப அந்நிலையங்களிற்குச் செல்வார்கள். இப்படிப்பல இடங்களில் இன்று நம்மவர்கள் உரிமையாளர்களாக அல்லது முகாமையாளர்களாக அல்லது தொழிலாளர்களாக தினமும் கடமையாற்றுகின்றார்கள். அந்த வகையில் இத்தகைய உயர்மட்டச் சந்திப்புக்கள் நம்மில் பலரிற்கு தினமும் ஏற்படுகின்றது. இதன் வாயிலாக பரீட்சயமும் சில சமயங்களில்

நட்பும் ஏற்படுகின்றன. அத்தகைய ஒரு பரீட்சயத்தின் பின்னர் அத்தகைய ஒரு தமிழர் மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கிலத்திலேனும் எமது தாயக நிலை பற்றிய உண்மை கூறும் போது ஆங்கில புலமை பெற்ற ஆனால் அறிமுகமில்லாத சிங்களத்தின் முகவர்களைக் காட்டிலும் அத்தமிழரின் கருத்து அவ்வலுவலரின் மனதில் பதிகின்றது. இந்நடை முறைக்கு மிகச் சிறந்த உதாரணம் சுனாமி ஏற்பட்ட வேளையில் கனடாவில் நிகழ்ந்த சில பிரமிப்பூட்டும் சம்பவங்கள். அவற்றிற் சில உதாரணங்கள்.

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தை அடுத்துள்ள யோர்க் பிரதேசத்தின் நகரசமை மண்டபம் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கும் உணவு விடுதியில் ஒரு தமிழர் தலை சிறந்த உணவு தயாரிப்பாளராகக் கடைமையாற்றுகின்றார். இவ்விடுதிக்கு உணவருந்த அடிக்கடி செல்லும் யோர்க் பிரதேச நகரபிதா (மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதி) உட்பட்ட பல நகரசபை அலுவலர்கள (Bureaucarats) இத்தமிழரோடு பரீட்சயம் பெற்றுள்ளார்கள். சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த உடனே, அது சிறீலங்காவைத் தாக்கியது என்று அறிந்த உடனே, நகரபிதா உட்பட்ட யோர்க் பிரதேச நகரசபை ஊளியர்கள் அனைவரதும் நினைவில் உடன் வந்தது இந்த தமிழ் உணவு தயாரிப்பாளரது ஞாபகமே.

அந்த வகையில் உடனே அவர்கள் அவரோடு தொடர்பு கொண்டார்கள், அவர் வாயிலாக உண்மை நிலவரத்தை அறிந்தார்கள், அவரது சோகத்தில் பங்கேற்றார்கள் அத்தோடு நிற்காது மிகப் பெரிய ஒரு நிதி சேகரிப்பினை இத்தமிழரது உணவோடு ஏற்பாடு செய்து சுனாமி அனர்த்த நிவாரணத்திற்கு நிதி சேகரித்தார்கள். இந்நிகழ்வானது 'மார்ககம் எக்கனோமிக் அன்ட் சன்' என்ற யோர்க் பிரதேச பத்திரிகையில் முற்பக்கச் செய்தியாக மேற்படி தமிழரது அரைப்பக்க புகைப்படத்தோடு வெளியானது. இங்கே நீங்கள் பார்க்கலாம் எவ்வாறு கொள்கை வகுப்பை மேற்கொளளும் மூன்று பிரிவினரும்(அரசியல் வாதி, அரச அலுவலர், ஊடகம்) ஒரு உணவு தயாரிக்கும் சாதாரண தமிழரால் கருத்தூட்டப்பட்டுள்ளார்கள் என்பதனை.

இது போன்று எத்தனையோ வெள்ளை இனத்தவரது நிறுவனங்கள் அங்கு தொழில் புரியும் தமிழர்களுடைய சோகத்தில் பங்கேற்று சுனாமி நிவாரணத்திற்காய் நிதி சேகரித்தன ஊடகங்களில் தமிழரிற்குச் சாதகமாகப் பேட்டி கொடுத்தன. இது கனேடியத் தமிழரின் தாயக மேம்பாடு தொடர்பான நாளாந்த செயற்பாடு.. சுனாமி மட்டுமல்ல தமிழர் தாயக நிலவரங்களும் இவ்வாறு நமது சக கனேடியர் மத்தியில் அறிவிக்கப்பட்டவண்ணமே உள்ளன.

சரி அதை விட்டு விடுங்கள். உங்களது வகைக்கு வருவோம். தற்போது, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் 15,000 ற்கு மேற்பட்ட தமிழர் மாணவர்கள் கனடாவின் பல்கலைக்களகங்களில் இன்னோரன்ன துறைகளில் கல்வி கற்று வருகின்றார்கள். தாயகத்தின்பால் தீராத காதல் கொண்டுள்ள (இங்கு பிறந்து வளர்ந்த மாணவர்கள் தாயக தாகம் கொண்டுள்ளார்கள் என்றால் அதில் பெற்றோரிற்கும் ஏதோ பங்குண்டு என்பதனை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்) இத்தனை ஆயிரம் தமிழ் மாணவர்களால் உந்தப்பட்டு கனடாவின் பல்கலைக்களக மாணவர் பேரவை (Canadian Federation of Students) என்ற மாபெரும் அமைப்பு எமது தாயகத்தில் தமிழ் மக்கள் மீது அத்து மீறல்கள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் கண்டன அறிக்கை வெளியிட்டு வருகின்றது. அண்மையில் யாழ் பல்கலைக்களக ஆசிரியர் மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் புங்குடு தீவில் தர்சினி படுகொலை செய்யப்பட்ட போதும் கூட இவ்வமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டது. இது கனேடியத் தமிழரின் தாயக மேம்பாட்டிற்கான செயற்பாடு.

இது மட்டுமல்ல, பொறியியலாளர்களாக, வைத்தியர்களாக, சட்ட வல்லுனர்களாக, கணக்காளர்களாக, பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக, விஞ்ஞானிகளாக, நிறுவனங்களின் அதியுயர் முகாமையாளர்களாக பல்லாயிரந் தமிழர்கள் தொழில் புரிகின்றார்கள். இவர்களது வேலையிடங்களிலும் எமது தாயக நிலவரம் தொடர்பான சரளமான கருத்தாடல்கள் நாளாந்தம் நிகழ்கின்றன. இது கனேடியத் தமிழரின் தாயக மேம்பாடு பற்றிய செயற்பாடு.

எனவே, முதலில் கனடாவாழ் தமிழர்கள் உடலை வருத்தி வேலை செய்யும் பத்தாம் பசலிகள் என்ற உங்களின் காலாவதியான கணிப்பினை மாற்றிக் கொள்ளுங்கள். தரவுகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இத்தனை கருத்தாடல் நிகழ்ந்தும் ஏன் இங்கு தமிழர் தரப்பு தடை செய்யப்பட்டது என்கிறீர்களா?

இதற்கு இரண்டு பதில்கள். ஒன்று இத்தனை காலம் எவ்வாறு இங்கு தடை செய்யப்படாது இருந்தது என உங்களைக் கேட்டுப்பாருங்கள். அதாவது இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பின்னரும், கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் பலத்த பிணைப்பு உள்ள போதிலும், சிங்களம் மில்லியன்களை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்து "சாச்சி அன்ட் சாச்சி" போன்ற உலகப் புகழ்வாய்ந்த வல்லுனர்கள் வாயிலான Lobbying இனைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து கனடாவில் செய்து வருகின்ற போதிலும், லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோர் இங்கு வந்து பொய்யுரைத்துச் சென்ற போதிலும், ஆனந்த சங்கரி அடிக்கடி இங்கு வந்து செல்கின்ற போதிலும், இந்தியாவின் இந்து பத்திரிகை ஆசிரியர் றாம் மற்றும் இலங்கையின் றாதிகா குமாரசாமி மற்றும் நீலன் திருச் செல்வம் போன்றோர் தமிழ் எதிர்ப்புப் பிரச்சாரத்தினை உயர்மட்டங்களில் செய்து வந்திருந்த போதிலும் எவ்வாறு கனடாவில் இத்தனை ஆண்டுகள் தடை வராது இருந்தது என்ற கேள்வியில் உங்களது சிந்தனையைக் குவியுங்கள்...பல விடயங்கள் உங்களிற்குப் புரியத் தொடங்கும்.

இரண்டாவது, உலகம் தெரிந்தவர்களிற்குத் தெரியும், மேற்கின் வெளியுறவுக் கொள்கைகள் தம்மகத்தே கொண்டுள்ள சில சூட்சுமங்கள். ஒரு வரியில் சொல்வதானால் நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம் பாசாங்கு செய்பவரை?

விவாதத்திற்காக ஒரு கேள்வி: நீங்கள் படித்தவர், கொழும்பைத் தளமாகக் கொண்டவர் ஓரளவிற்கு சிங்கள மொழிப் பரீட்சயம் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன், அவ்வாறாயின் ஏன் உங்களால் சிங்கள பேரின வாதத்தினை கருத்தாடல் செய்து தமிழரைத் தாக்காது செய்ய முடியவில்லை? கொழும்பிலே உங்கள் பணி எவ்வாறு உள்ளது. அறிய ஆவலாய் உள்ளோம். 83 கலவரத்தில் கொழும்பில தமிழர்கள் கொழுத்தப்பட்டது தமிழர் கருத்தாடல் செய்யத் தவறியதால் தான் என்றா கூறுகின்றீர்கள்?

தமிழர் தரப்பிற்கு இங்கு வந்த தடையால் நொந்து போயுள்ளோம். எழுந்த மானத்தில் ஆதாரமின்றி வேல் பாய்ச்சாதீர்கள்.

உங்களது இரண்டாவது கருத்துப் பற்றி

அவுஸ்திரேலியா வாழ் புலம் பெயர் தமிழரை பாராட்டுவது போல் ஆங்கிலப் புலமை உடையவர்கள் என்று பாராட்டி விட்டு மறுகணம் எங்கே அவர்கள் உங்களது பாராட்டால் பேர் பெற்று விடுவார்களோ என்பது போல், அவர்கள் அடிநிலை என்றாலும் அரச அலுவலில் இருப்பதாகக் கூறி அவர்களை அடிநிலை ஊழியர்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் நையாண்டி செய்துள்ளீர்கள். மீண்டும் இது உங்களது காலாவலியான தரவுகளைக் காட்டுகின்றது. முதலில் தரவுகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களது மூன்றாவது கருத்துப் பற்றி

இது அப்பட்டமாக புலம் பெயர் உறவுகள் மீது நீங்கள் மேற்கொண்ட Character Assassination.
புலம் பெயர் தமிழரின் வியத்தகு பங்களிப்பால் தாயக உறவுகள் மலைத்துப் போய் மரியாதை செய்யத் தொடங்கிடுவரோ என்று பயந்து அவசரஅவசரமாக அது கடனெடுத்த பணம் என்று சொல்வது போல் உள்ளது உங்களின் பேச்சு. தங்களிற்கு ஒரு சிறிய தரவு. கடன் என்பது மீளளிக்கப்பட வேண்டிய ஒன்று. திருப்பக் கொடுக்கும் தகுதி உடையவனிற்குத் தான் கடன் கிடைக்கும். அத்தகுதியை அடைவதற்கு ஒருவர் சில தகமைகளை வளர்த்துக் கொள்ளல் அவசியம். அது எவ்வளவு அதிக கடன் ஒருவர் பெறலாம் என்பது அவரது தகுதியைப் பொறுத்தது. மேற்கின் பொருளாதாரம் வியத்தகு விந்தைகளைக் கொண்டுள்ளது என்றால் இந்த கடன் பெறும் வசதி அதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

முடிக்கு முன்னர், எனது கருத்துக்களை சீனி பூசாது நேரடியாகக் கூறியுள்ளேன். தங்களைத் தாக்குவதோ புண்படுத்துவதோ எனது நோக்கம் அன்று. தாயகம் உதயமாகும் இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் போறுப்போடு நடந்து கொள்ளல் அவசியம் என்பதனாலும் எமது கருத்துக்கள் செயற்பாடுகள் என்பன எமது தரவுகளைப் பொறுத்தே அமைகின்றன என்பதனாலும் உங்களின் தரவுகளைச் சரி செய்ய இம்மடலினை எழுதியுள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.


நன்றி.

கண்ணன்
மார்க்கம்,
கனடா.

- சூரியன் இணையத்தளம்
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-22-2006, 06:15 AM
[No subject] - by நேசன் - 04-22-2006, 07:27 AM
[No subject] - by Ilayathambi - 04-22-2006, 07:46 AM
[No subject] - by agathyan - 04-22-2006, 07:53 AM
[No subject] - by Vasan - 04-22-2006, 07:55 AM
[No subject] - by Vasan - 04-22-2006, 08:01 AM
[No subject] - by MEERA - 04-22-2006, 08:39 AM
[No subject] - by ThamilMahan - 04-22-2006, 09:03 AM
[No subject] - by narathar - 04-22-2006, 09:19 AM
[No subject] - by Ilayathambi - 04-22-2006, 11:09 AM
[No subject] - by Bond007 - 04-22-2006, 04:47 PM
[No subject] - by karu - 04-22-2006, 06:37 PM
[No subject] - by Jude - 04-22-2006, 07:28 PM
[No subject] - by sathiri - 04-22-2006, 10:20 PM
[No subject] - by cannon - 04-23-2006, 07:21 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-23-2006, 08:38 PM
[No subject] - by ThamilMahan - 04-23-2006, 10:21 PM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 12:51 AM
[No subject] - by kurukaalapoovan - 04-26-2006, 08:07 PM
[No subject] - by putthan - 04-27-2006, 07:32 AM
[No subject] - by Jude - 04-27-2006, 08:28 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 01:47 AM
[No subject] - by தூயவன் - 04-29-2006, 03:37 AM
[No subject] - by narathar - 04-29-2006, 04:45 AM
[No subject] - by தூயவன் - 04-29-2006, 05:03 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-29-2006, 06:30 AM
[No subject] - by அருவி - 04-29-2006, 07:06 AM
[No subject] - by kurukaalapoovan - 04-29-2006, 08:37 AM
[No subject] - by தூயவன் - 04-29-2006, 03:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)