Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அயல் சினிமா
#2
<img src='http://74.52.34.130/kumudamcms/magazine/Theranadi/2006-03-01/imagefolder/pg3-t.jpg' border='0' alt='user posted image'>


கேமராவைப் பயன்படுத்துவதில் குவென்டின் <b>மியுசிக் </b>சேனல்களின் உத்திகளை பயன்படுத்தினார். மியுசிக் சேனல்களின் வருகையால் கேமரா நடனம் ஆடுபவரோடு சேர்ந்து ஆடுவதும், அவர்களைப் பின்தொடர்ந்து செல்வதும் இசையின் தாள கதிக்கு ஏற்ப பல்வேறு நிலைகளில் தாவிச் செல்வதும், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம் தருவதாக இருந்தது. அந்த உத்திகள் யாவையும் குவென்டின் குற்றவாளிகளைப் பற்றிய இந்த திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். குற்றவாளிகள் மிகப் பெரிய வணிக நிறுவனப் பிரதிநிதிகள் போல உடையுடுத்திக் கொண்டு செல்வதும், கேமரா அவர்களை பின்தொடர்ந்து போவதும், குற்ற நிகழ்வுகளின் போது கேமரா அலைந்து திரிவதும், பரஸ்பரம் சந்தேகம் கொள்ளும்போது அவர்கள் முகங்கள் மிக அண்மைக் காட்சிகளாக படமாக்கப் பட்டிருப்பதும், பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக அமைந்தது. இந்தப் படத்தை மிரமாக்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது. அவர்கள் இப்படத்தை <b>சன்டேன்</b> திரைப்பட விழாவில் பங்கேற்கும்படியாகச் செய்தனர். குவென்டின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரைப்பட விழாவில் பங்கேற்றார். ஆனால் அதில் அவருக்கு விருது கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிய அவர் Pulp Fiction என்ற திரைக்கதையை உருவாக்கினார்.

<b>Pulp Fiction</b> கதைக்கான கரு, அவரது நண்பர் ரோஜர் அவாரியுடையது. அதற்கு முழுமையானதொரு திரைக்கதை வடிவம் தந்திருந்தார் குவென்டின். இந்த திரைக்கதை ஒரு நாவல் போன்று அத்தியாயங்கள் வடிவத்தை கொண்டிருந்தது. 1994இல் வெளியான இப்படம் பெரிய வரவேற்பு பெற்றதோடு, அந்த ஆண்டு நடைபெற்ற <b>கான்ஸ்</b> திரைப்பட விழாவில் சிறந்த சினிமாவிற்கான விருதையும் பெற்றது. கான்ஸ் விருது பெற்றதும் குவென்டின் படங்களுக்கு ஒரு உலகச் சந்தை உருவாகத் துவங்கியது. பிரிட்டனிலும் இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அத்தோடு ஹாலிவுட் சரித்திரத்தில் இல்லாத அளவு, நூறு மில்லியன் டாலர் வசூல் செய்தது. அத்தோடு சிறந்த திரைக்கதைக்கான <b>ஆஸ்கார்</b> விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளையும் பெற்றது. ஹாலிவுட் சினிமாவில் குவென்டின் புதிய அத்தியாயத்தை எழுதத் துவங்கினார். படம் வெளியாகி பத்தாண்டுகள் கடந்துவிட்ட சூழலில் இன்றும்கூட இந்தப் படம் குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டேதானிருக்கின்றன. பல்வேறு நாடுகளில் திரைப்படக் கல்லூரிகளில் இப்படம் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கதையைப் பற்றிய மூன்று கதைகள் என்ற துணைத்தலைப்போடு வெளியான Pulp Fiction ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.The Prologue, Vincent Vega and Marsellus Wallace's wife, The Gold Watch, The Bonnie situation, மற்றும் The Epilogueஆகிய ஐந்து பகுதிகளில் முதலும் கடைசியும் ஒரே நிகழ்வின் இரண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்காவில் பிரபலமாக உள்ள துப்பறியும் நாவல்களின் வடிவமாகும். நிழல் உலகிலிருந்து வெளியேற விரும்பும் இரண்டு பேர், ஒரு உணவு விடுதியில் சந்தித்து, இனி இந்தத் தொழில் தேவையில்லை என்று விலக விரும்புவது குறித்து உரையாடுவதில் துவங்குகிறது படம். இவர்களின் பேச்சின் ஊடாகவே ஒரு ஆள் கொலை செய்யப்படப் போவதைப் பற்றிய செய்தி விவரிக்கப்படுகிறது.

குவென்டின் டெரான்டினோவின் வசனங்கள், குற்றவாளிகள் ரகசியமாகப் பேசிக் கொள்வது போலன்றி, தேசம் தோறும் உள்ள கலாசார வேறுபாடுகளைப் பற்றியதாக உள்ளது. சிறு குற்றவாளியான ஒருவன் ஐரோப்பாவில் உள்ள விடுதிகளில் போதை மருந்துகள் எப்படி விற்கப்படுகின்றன என்பதைப் பற்றி சொல்கிறான். அடுத்தவன் இத்தாலியில் மீனை எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி விவரிக்கிறான். அவர்கள் பேச்சு குற்றம் தொடர்பானதாக இன்றி, நீண்ட நாட்கள் பழகிய இருவர் பேசிக் கொள்வது போல உள்ளது. பேச்சின் ஊடாகவே அவர்கள் குற்ற உலகின் மீது கொண்டிருக்கும் அதிருப்தி வெளிப்படுகிறது. இங்கிருந்து துவங்கும் கதை, அதன் அடுத்த மூன்று பகுதிகளிலும் குற்றத்தின் தொடர்ச்சி என்ற கண்ணியால் பின்னப்படுகிறது. கடவுள் தீமையை அழிப்பதற்காக சில நேரம் இதுபோன்ற காரியங்களை செய்யத் தூண்டுவதாக ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. இவர்கள் தங்களைக் கொல்ல வரும் எதிராளிகளைக்கூட பிரதர் என்றே அழைக்கிறார்கள். ஹிட்ச்காக்கும், கோடாட்டும், பிரைன் டி பால்மாவும் ஒன்று கலந்தது போன்ற வடிவம் கொண்டிருக்கிறது இப்படம். தோற்றத்தில் இது ஒரு கேங்ஸ்டர் படம் போன்று உருவாக்கப்பட்டிருந்தாலும் படத்தின் ஊடாக அமெரிக்க மக்களின் மனதில் உள்ள குழப்பங்களும் வன்முறையும் தவிர்க்க இயலாதபடி வாழ்வின் பகுதியாகிவிட்டது துல்லியமாக வெளிப்படுகிறது.

திரைக்கதை அமைப்பில், முக்கிய கதாபாத்திரங்களும் அவர்களுக்கு ஏற்படப் போகும் பிரச்னையும் படத்தின் முதல் அங்கத்திலே சொல்லப்பட்டு விடவேண்டும் என்ற விதிகளிருந்தன. ஆனால் குவென்டின் படத்தில் கதாபாத்திரங்கள் தங்கள் செயல்களால் அறியப்படுகிறார்கள். படத்தின் முடிவு வரை பிரச்னை புதுப் புது வடிவம் எடுத்துக் கொண்டேயிருக்கிறது. வில்வியம்பாக்னரின், தி சவுண்ட் அண்ட் ப்யூரி நாவல் இது போன்று ஒரு வடிவம் கொண்டது. கதையின் முக்கிய சம்பவம் வேறு வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. ஆச்சரியமானதொரு ஒற்றுமை, பாக்னரின் நாவலில் டெரான்டினோ என்ற பெயரில் இருவர் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான்.

Pulp Fiction படத்தை விமரிசனம் செய்த எரிக் டேவிட், இப்படம் ஷேக்ஸ்பியரின் எழுத்துகளுக்கு நிகரானது என்கிறார். ஷேக்ஸ்பியரின் வசனங்கள் போல நீண்ட தனிமொழியும் கதாபாத்திரங்களின் மனநிலையை விளக்கும் உரையாடல்களும் படத்தில் உள்ளன என்று குறிப்பிடுகிறார். இப்படத்தில் ஒரு கதாபாத்திரம், அற்புதம் என்றால் என்ன? என்று கேட்கும் போது, அது இறைவன் நிகழ்த்தும் செயல் என்கிறான். அதற்கு மற்றவன், நிஜம், நாம் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டு சுடப்படாமல் தப்புகிறோம் இல்லையா; அது அற்புதம் இல்லையா? கடவுள்தான் நம்மை காப்பாற்றியிருக்கிறார். நாம் குடிக்கும் கோக் எப்படி பெப்சியாகியிருக்கிறது; அதுவும் கடவுளின் விருப்பம்தானே என்று அற்புதங்கள் அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி பின்னப்படுவதை விவரிக்கிறான். இதுதான் குவென்டினின் பார்வை.

எனது மதம் சினிமா, எனது தேவாலயம் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் என்று கூறும் குவென்டின், கடந்த பத்தாண்டுகளுக்குள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டவர். தயாரிப்பாளர்களோடு சண்டை, பழைய காதலிகளை மிரட்டினார் என்பது உட்பட எத்தனையோ பரபரப்புக் குற்றச்சாட்டுகள் இவர் மீது வைக்கப்பட்டபோதும், தொடர்ந்து தனது படங்களின் வழியே அதைத் தாண்டிய தனது வலிமையை வெளிப்படுத்தி வருகிறார் குவெண்டின். Sleep With Me, Four Rooms, Jackie Brown என தொடர்ந்து இவரது படங்கள் ஹாலிவுட்டில் புதிய சினிமாவிற்கான சாத்தியங்களை உருவாக்கி வருகிறது.

குவென்டினின் சமீபத்திய படங்களான Kill Bill, Hostel இரண்டுமே மர்மக் கதை படங்கள். ஆனால், இதில் Kill Bill சாமுராய், குங்பூ, பிரெஞ்சு துப்பறியும் படங்கள், அனிமேன் என்று பல்வேறு வகைப்பட்ட சினிமா வகைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்று கூறும் குவென்டின், தான் ஹாம்லெட்டை ஒரு பெண்ணாக மாற்றியிருப்பதாகப் குறிப்பிடுகிறார்.

டெரான்டினோவின் படங்கள் உணர்ச்சிபூர்வமாக கதைகளை சொல்வதில்லை. பின்நவீனத்துவ நாவல்களைப் போல கதையை சொல்லும் முறையும் கதையின் மையப் பாத்திரங்களை சிதறடிக்கும் உத்தியும் இவரிடம் காணப்படுகிறது. இன்று குவென்டின் வகைப் படங்கள் என்று வகைப்படுத்துமளவு இவரது பாதிப்பில் உருவான படங்கள் ஏராளமாக உள்ளன. சமீபத்திய ஒரு பேட்டியில் அவரிடம், பைபிளை படம் எடுப்பதாக இருந்தால் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்லகுவான்டின் சிரித்தபடியே, என்னை மிகவும் கவர்ந்த பகுதி பாம்பு ஏவாளை மயக்கி அறிவுக்கனியை தின்பதற்குத் தூண்டும் பகுதிதான்; அந்தப் பாம்பு இதுவரை நான் வாசித்த கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் விடவும் மிகவும் தனித்துவமானது என்கிறார். யாரை நடிப்பதற்கு தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதும், உமா தர்ண்டனை ஏவாளாக நடிக்க வைப்பேன் என்றபடி நானே பாம்பாக நடித்துவிடுவேன் என்றார். இதுதான் குவென்டின்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக அவரது படங்கள் சீனாவில் திரையிடப்பட்டபோது, அதைக் காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தார்கள். குவென்டின் இதன் காரணமாகவே தனது அடுத்த படத்தை சீனாவில் உருவாக்கினார். தொலைக்காட்சிக்கான சிறு தொடர்கள், டாகுமெண்டரி திரைப்படங்கள் என்று, தொடர்ந்து இயங்கி வரும் குவென்டின் டெரான்டினோ, சமகால அமெரிக்க சினிமாவின் மையப் புள்ளியாக இருந்து வருகிறார். குவென்டின் திரைப்படங்கள், இந்திய சினிமாவில் மலினமான ரீதியில் நகலெடுக்கப்பட்டிருக்கின்றன.

தொடரும்............

நன்றி:எஸ்.ராமகிருஸ்ணன் (தீராநதி)
Reply


Messages In This Thread
அயல் சினிமா - by AJeevan - 04-27-2006, 09:18 PM
[No subject] - by AJeevan - 04-27-2006, 10:06 PM
[No subject] - by AJeevan - 04-27-2006, 10:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)