Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அயல் சினிமா
#1
<img src='http://74.52.34.130/kumudamcms/magazine/Theranadi/2006-03-01/imagefolder/pg3-t.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:red'>\"சினிமா என்பது ஒரு நிமிஷத்திற்குள் இருபத்து நான்கு பிரேம்களில் சொல்லப்படும் உண்மை\" என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட்.
ஆனால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான பிரைன் டி பால்மா,
\"ஒரு நிமிஷத்தில் இருபத்து நான்கு முறை பொய் சொல்லக்கூடியதற்கு பெயர்தான் சினிமா\" என்கிறார். பெரும்பான்மை ஹாலிவுட் திரைப்படங்கள் பிரைன் டி பால்மாவின் வழித்தடத்தில் பயணிக்கக் கூடியவை.

வன்முறையும் கடத்தல் நாடகங்களும் துப்பறியும் கதைகளும் எப்போதுமே ஹாலிவுட்டின் மையப்பொருளாக இருந்து வந்திருக்கின்றன. ஒரு தீமையை அழித்தொழிப்பதற்காக நூற்றுக்கணக்கான வன்செயல்களைப் புரிவதுதான் ஹாலிவுட் படங்களின் கதை சொல்லும் முறை.

ஹாலிவுட் சினிமாக்கள் பெரிதும் ஸ்டுடியோவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அங்கே கதைக்கான உரிமை பெறப்பட்ட பிறகு திரைக்கதை எழுதுபவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என யாவரும் ஸ்டுடியோவின் விருப்பப்படியே முடிவு செய்யப்படுகின்றனர். ஸ்டுடியோ மாபெரும் வர்த்தக நிறுவனத்தைப் போல, தன் விருப்பத்தின்படி திரையுலகை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை, சார்லி சாப்ளினில் துவங்கி மார்லன் பிராண்டோ வரை பலரும் கண்டித்திருக்கிறார்கள். சாப்ளின் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துப் பேசுகிறார். சினிமாவை அடிநிலை மக்களுக்கான வெளிப்பாட்டு சாதனமாக மாற்ற முயற்சிக்கிறார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஹாலிவுட் ஸ்டுடியோகள் அவர் மீது பகிரங்க விசாரணைக்கு ஏற்பாடு செய்தன. சாப்ளின், இதுதான் குற்றம் என்றால் அதைத்தான் தொடர்ந்து செய்வேன் என்று பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார். ஹாலிவுட் ஸ்டுடியோவால் அவரை எதுவும் செய்ய இயலவில்லை.

மார்லன் பிராண்டோவை காட்ஃபாதர் திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரான்சிஸ் போர்டு கபோலா சிபாரிசு செய்தபோது, தயாரிப்பு நிறுவனம் அவர் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துவாரா என்று வசனம் பேசச் செய்து, சோதனை செய்யவேண்டும் என வற்புறுத்தியது. இது புதுமுக நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சோதனை. ஆனால் பிராண்டோ, ஸ்டுடியோ அதிகாரத்தை விமரிசித்த காரணத்தால் அவரையும் இந்தச் சோதனையைச் செய்ய கட்டாயப்படுத்தினார்கள். பிராண்டோ, தான் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால், கபோலா, தனக்காக பிராண்டோ இதற்கு அனுமதிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டதும், பிராண்டோ, தானே ஒரு ஒப்பனைக் கலைஞரை அழைத்து வந்து காட்ஃபாதர் படத்தில் வருவது போன்ற ஒப்பனையைத் தானே புனைந்துகொண்டு, வாயில் செயற்கையான தாடையைப் பொருத்திக்கொண்டு, கபோலா வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். கபோலாவால் நம்ப முடியவில்லை. சோதனை படப்பிடிப்பு நடத்தினார்கள். ஸ்டுடியோ வாயை மூடிக்கொண்டு மௌனமாகியது.

ஸ்பீல்பெர்க், மார்டின் ஸ்கார்சசி, கபோலா, லூகாஸ் இந்த நால்வரின் வருகை ஹாலிவுட் சினிமாவின் போக்கை முற்றிலும் திசைமாற்றம் கொள்ளச் செய்தது. நால்வரில் ஸ்பீல்பெர்க் வணிக ரீதியான சாதனைகளை நிகழ்த்தியபோது, ஸ்கார்சசி, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு அடித்தட்டு உலகமான குற்றவாளிகளின் நிழல் உலகை அறிமுகம் செய்து வைத்தார். திரையில் இருண்ட உலகின் தினசரி காட்சிகளை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார். லூகாஸ், ஹாலிவுட் சினிமாவிற்கு கிராபிக்ஸ் எனும் புதிய தொழில்நுட்பத்தை முக்கியப்படுத்தி தனது விஞ்ஞானக் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தார். இந்த மூவருக்குப் பின்வந்த கபோலா, இத்தாலிய நிழல் உலகம் எப்படி அமெரிக்காவிற்குள் பெரிய சக்தியாக தொடர்ந்து வளர்ந்து வந்தது என்பதை, தனது காட்ஃபாதர் வரிசை படங்களில் உருவாக்கி, புதிய கதவை திறந்துவிட்டார். ஹாலிவுட் திரைப்படம் அதுவரை நம்பியிருந்த எளிய காதல் நாடகங்களும், சாகசக் கதைகளும், துப்பறியும் கதைகளும் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகத் துவங்கின. மாறாக, விஞ்ஞான புனைக்கதைப் படங்களின் உருவாக்கம் மேலோங்கத் துவங்கியது. விண்வெளியை மையமாகக் கொண்ட கதைகள் ஏராளமாக திரைக்கு வரத் துவங்கின.

ஹாலிவுட் சினிமாவின் கையில் எப்போதுமே இருக்கும் கதைக்களஞ்சியம் பைபிள். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பைபிள் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்தபடியே இருக்கும். பைபிளில் வலியுறுத்தப்படும் அறக்கோட்பாடுகளை மறைமுகமாக வெளிப்படுத்தும் கதைகளும் எப்போதுமே மிகுந்த வரவேற்பு பெற்று வந்திருக்கின்றன.

அமெரிக்கா இதுவரை தனது தேசத்திற்குள் எந்த யுத்தத்தையும் சந்தித்ததில்லை. அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய பேரழிவு பியர்ல் ஹார்பர் மட்டும்தான். ஆனால், உலக யுத்தம் துவங்கி பல்வேறு யுத்தங்களில் அமெரிக்கா பங்கேற்றிருக்கிறது. அமெரிக்க வீரர்களை மக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆகவே, அமெரிக்க மக்கள் யுத்தம் குறித்த திரைப்படங்களைக் காண்பதில் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இதன் விளைவு ஆண்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட யுத்த சம்பவப் படங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்படுகின்றன.

துப்பறியும் வகைப் படங்களும், குற்றவாளிகளின் உலகைப் பற்றிய படங்களும் கலைப்படங்களா என்ற கேள்வி எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. வெகுஜன சினிமா இந்த கதைக்கருக்களை ஜனரஞ்சகப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தியது. ஆனால் கலைப்படங்களோ, குற்றவாளிகள் மற்றும் கொலைக்கு பிந்திய மனநிலைகளை அதன் உளவியல் பார்வையில் ஆராயத் துவங்கியது. குற்றம் குறித்த நமது பார்வைகளுக்கு வெளியில் இந்தத் திரைப்படங்கள் குற்ற நிகழ்வை ஆழமான விசாரணைக்கு உட்படுத்தின. ஹிட்ச்காக்கின் படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ஹிட்ச்காக் கொலையை சுவாரஸ்யப்படுத்துவதில்லை; மாறாக அவர் துப்பறிவாளரின் வேலையை விடவும் மனோதத்துவவாதியின் வேலையைத்தான் அதிகம் செய்கிறார். குற்றம் மறைக்கப்படும்போது குற்றவாளியின் மனவுலகம் எப்படியிருக்கிறது என்பதையும், எதிர்பாராமை என்பது குற்றங்களுக்குப் பின்னணியில் என்ன பங்கு வகிக்கிறது என்பதையும் ஹிட்ச்காக்கின் படங்கள் விவரிக்கின்றன. இன்னொரு வகையில், கோடார்ட் போன்றவர்கள், குற்றவாளிகள் எந்தப் புள்ளியில் இருந்து உருவாகிறார்கள் என்பதில் துவங்கி, சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தை திரைப்படமாக உருவாக்குகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம், கோடார்ட்டின் பிரெத்லெஸ். இப்படத்தின் கதாநாயகன் ஒரு குற்றவாளி. ஆனால் அவனது அன்றாட செயல்களில் குற்றம் பிரதிபலிக்கப்படுவதில்லை. மாறாக, கலாசார நெருக்கடிகளை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையே கோடார்ட் முக்கியத்துவப்படுத்துகிறார். இந்தப் போக்கைதான் த்ரூபாவின் துப்பறியும் படங்களிலும் காண முடிகிறது.

ஹாலிவுட் திரைப்படங்களில் மார்டின் ஸ்கார்சசி எப்போதுமே தனியிடம் கொண்டவர். அவரது திரைப்படங்கள் வடிவ ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் மிகுந்த நுட்பமானவை. டாக்சி டிரைவர், ரேகிங் புல், காசினோ, மீன் ஸ்ட்ரீட் போன்ற அவரது திரைப்படங்கள் சம்பிரதாயமான ஹாலிவுட் சினிமாவின் வரம்புகளை மீறியவை. நிழல் உலகை முன்வைத்து கதை சொல்வதைப் போலவே மார்டின் ஸ்கார்சசிக்கு இன்னொரு பக்கமிருக்கிறது. இயேசு கிறிஸ்து குறித்த, தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் ஜீசஸ் கிரைஸ்ட், மற்றும் தலாய்லாமாவின் வாழ்வை விவரிக்கும் குந்தன், இந்த இரண்டு படங்களிலும் மார்டின் ஸ்கார்சசி, மதம் நிறுவனமயமாகிப் போனதால் அதற்கு வெளியில் உள்ள தனிநபரின் இறை நம்பிக்கைகள் குறித்து ஆராய்கிறார். குந்தன், தலாய்லாமாவின் வாழ்வை விவரிக்கின்ற போதும், அது ஒரு அரசியல் நிலைப்பாட்டினையும் முன்வைக்கிறது. அதே நேரம் பௌத்த வாழ்வியலை நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது. குந்தன் திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கதை சொல்லும் முறை மிக நவீனமயமானது.

இந்த வரிசையில் சமகால ஹாலிவுட் திரைப்படங்களில் முக்கிய இயக்குனர்களாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் இருவர்; ஒருவர், ஸ்பைக் லீ; மற்றவர் குவென்டின் டெரான்டினோ. ஸ்பைக் லீ, மால்கம் எக்ஸ் பற்றிய திரைப்படத்தை இயக்கியவர். இவர் கறுப்பின மக்களுக்கான விடுதலையை முன்வைக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவரது திரைப்படங்கள் ஹாலிவுட்டின் வெகுஜனத் திரைப்படங்களுக்குள் அடங்காதவை. கறுப்பின மக்களின் கல்வி மற்றும் குடும்ப உறவுகள் பற்றியதே இவரது திரைப்படங்கள். "எதிர்கால அமெரிக்க சினிமாவில் ஸ்பைக் லீ மாபெரும் சக்தியாக இருப்பார்" என்கிறார் ஸ்பீல்பெர்க்.

பள்ளிப்படிப்பை பாதியில் முடித்துவிட்டு, ஐந்து ஆண்டு காலம் ஒரு வீடியோ கடையில் வாடிக்கையாளர்களுக்கு கேசட் எடுத்து தரும் பணியாளராக வேலை செய்த குவென்டின் டெரான்டினோ, இன்று ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனராக உருக்கொண்டிருக்கிறார். 1963 ஆம் ஆண்டு டென்னசி பகுதியில் பிறந்த டெரான்டினோ இத்தாலிய வம்சாவழியைச் சார்ந்தவர். இரண்டு வயதில் இருந்தே இவரைத் தான் செல்லும் திரைப்படங்கள் அத்தனைக்கும் அவரது அம்மா அழைத்து சென்றிருக்கிறார். அதனால் சினிமாவைப் பற்றிய கனவுகள் சிறுவயதிலே அவருக்குள் முளைவிடத் துவங்கின. தனது இருபது வயதில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு வீடியோ கடையில் நாள் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்ற குவென்டின் டெரான்டினோ, அங்கு தினமும் பத்து திரைப்படங்களையாவது பார்க்கக் கூடியவராக மாறியிருந்தார். அவரோடு அதே கடையில் வேலை செய்த ரோஜர் அவாரியோவும் சேர்ந்து கொள்வார். இருவரும் மணிக்கணக்கில் தாங்கள் பார்த்த படங்களைப் பற்றி வாய் ஓயாமல் பேசித் தீர்த்திருக்கிறார்கள். சிறுவயது முதலே காமிக்ஸ் வாசிப்பதில் மிக ஆர்வம் கொண்டிருந்த டெரான்டினோ சாகசப்படங்களை மிகவும் ரசித்து பார்த்து வந்தார். வீடியோ கடையில் பார்த்த படங்களில் உள்ள சிறந்த காட்சிகளை தனித்தனியாக எடுத்து, அதை ஒன்றாகச் சேர்த்து ஒரே படமாக அமைத்துப் பார்க்கும் விருப்பம் கொண்டவராக இருந்தார். இதனால் ஹிட்ச்காக்கில் இருந்து ஒரு காட்சி, <b>கான் வித் த விண்ட்</b>டில் இருந்து இரண்டு காட்சிகள், கோடார்ட் படத்திலிருந்து இரண்டு காட்சிகள், பிரைன் டி பால்மா படத்திலிருந்து நான்கு காட்சிகள் என்று ஒன்று கலந்த ஒரு கலவையாக இவர் உருவாக்கிய துண்டுப் படங்களை, வீடியோ கடையில் பலரும் ரசித்து பார்த்தனர்.

ஹாலிவுட் சினிமாவிற்குள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற தடைகளிருந்தால், குவென்டின், தானே ஒரு திரைக்கதையை எழுதி வீடியோ கடை வாடிக்கையாளர்கள் சிலரையும் தன் நண்பர்களையும் ஒன்று சேர்த்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். ஆனால் அது பெரிய தோல்வியடைந்தது. அதன் பிறகு My Best Friend's Birthday என்ற திரைக்கதையை எழுதி அதை பல ஸ்டுடியோகளுக்கு அனுப்பி திரைப்படமாக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நண்பரின் உதவியால் True Romance என்ற திரைக்கதையை முக்கிய திரைப்பட நிறுவனம் ஒன்றிற்கு விற்க முடிந்தது. அதுதான் குவென்டின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. அந்தப் படம் சிறப்பாகப் பேசப்பட்டது. Natural Born Killers என்ற அவரது அடுத்த கதையை ஆலிவர் ஸ்டோன் இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் சரியான மண உறவு அமையாத ஒரு கணவனும் மனைவியும், தங்களது மனச்சோர்வை போக்கிக்கொள்ள தொடர்ந்து கொலை செய்யத் துவங்குகிறார்கள். ஒரு காரில் பயணம் செய்தபடியே அவர்கள் காரணமற்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சம்பிரதாயமான ஹாலிவுட் படங்களில் இருந்து, வந்த மூன்றடுக்கு திரைக்கதை முறையை தூரத் தள்ளிவிட்டு, இப்படம் நீண்ட காட்சிகளும் எதிர்பாராத வன்முறை வெடித்தலுமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வகை படங்களுக்கு முன் உதாரணமாக இருந்தது போனி அண்ட் கிளைடு. இப்படம், குற்றத்திற்கு பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை என்று வெளிப்படையாக உணர்த்தியதால் அதன் பாதையில் இன்னொரு பயணத்தை மேற்கொண்டது குவென்டினின் திரைப்படம்.

இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை உருவாக்காத போதும் குவென்டின் திரைக்கதையில் இருந்த புதிய உத்திகளும் உரையாடல்களும் பெரிதும் பேசப்பட்டன. Reservoir Dogs என்ற குவென்டினின் அடுத்த படம் குற்றவாளிகளின் உலகினை இன்னொரு கோணத்தில் ஆய்வு செய்வதாக அமைந்தது. நகைக்கடை ஒன்றினை கொள்ளையடிப்பதற்காகத் திட்டமிடும் குழு ஒன்றில், போலீஸ்காரன் ஒருவன் வேறு அடையாளங்களுடன் சேர்ந்து கொள்கிறான். அது அவர்களுக்குத் தெரிந்து விடுகிறது. யார் அந்த போலீஸ் உளவாளி என்று ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் மீது சந்தேகம் உருவாகிறது. இந்த மனச்சிக்கலில் அவர்கள் தங்களையே குற்றவாளிகளாக நினைத்து குழம்பிக் கொள்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக அவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிவிட்டு ஆளுக்கு ஒரு நிறத்தின் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். அதன்படி ஒருவன் நீலம், மற்றவன் மஞ்சள், அடுத்தவன் ஆரஞ்சு என்று பல்வேறு வர்ணங்களாக தங்களை அடையாளம் சொல்லிக் கொள்கிறார்கள். சுய அடையாளம் அழிந்து, தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒற்றை வர்ணத்தோடு அவர்கள் உருமாற்றம் கொள்வது படத்திற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது.

தொடருகிறது..........................</span>

நன்றி:எஸ்.ராமகிருஸ்ணன் (தீராநதி)
Reply


Messages In This Thread
அயல் சினிமா - by AJeevan - 04-27-2006, 09:18 PM
[No subject] - by AJeevan - 04-27-2006, 10:06 PM
[No subject] - by AJeevan - 04-27-2006, 10:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)