Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியா மேற்கொள்ள வேண்டிய பணி என்ன?
#1
சிறிலங்கா அரசும், சிங்களப் படைகளும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை விவகாரத்தில் சமீப காலமாக இந்தியா தமது கவனத்தைச் செலுத்தியுள்ள போதிலும், சிறிலங்கா அரசின் தேசவிரோத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது தமிழ் மக்களுக்குக் கவலையளிக்கின்றது.

ஜெனீவாப் பேச்சுக்களுக்கான வாயிலை மூடியிருக்கும் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஜே.ஆர். பிரேமதாஸா, விஜயதுங்கா, சந்திரிகா காலத்தை விட மகிந்தரின் ஆட்சியில் குறிப்பிட்ட நாட்களுக்கு தமிழ் மக்கள் அதிகளவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அண்டை நாடு என்ற வகையிலும், தொப்புள்கொடி உறவு என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டியது இந்தியாவின் கடப்பாடாகும்.

இருதரப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கையைச் செம்மையாகவும், நேர்மையாகவும் கடைப்பிடித்துப் பேச்சுக்குத் தயாராகுமாறு இந்தியா விடுத்திருக்கும் அறிக்கை சுட்டிக் காட்டிய போதும் போர் நிறுத்தத்தை அமுலாக்கும் விடயத்தில் அல்லது பேச்சுக்களுக்கு செல்வதற்கான சூழலுக்கு ஒரு போதும் விடுதலைப் புலிகள் தடையில்லை.

ஜெனீவாப் பேச்சுக்களை முடக்குவதன் மூலம் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுலாக்கம் செய்யாது காலம் கடத்துவது சிறிலங்கா அரசின் திட்டமாகும். இதனையே தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் சுற்றுப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயத்தை அமுல்படுத்தத் தவறியிருக்கும் சிறிலங்கா அரசு இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடைபெறுமாகவிருந்தால் முதல் சுற்றில் இணக்கம் காணப்பட்ட விடயத்தை அமுல்படுத்தாததற்கான நியாயமான காரணத்தைத் தெரிவிக்க முடியாத சூழலில் ஒரே வழி பேச்சுவார்த்தைக் கதவுகளை இழுத்து தாழ்பாழ் பூட்டுவதுதான். அதுவே தற்போது அரங்கேறி வருகின்றது.

விடுதலைப் புலிகளின் தென் தமிழீழத் தளபதிகள் கிளிநொச்சி செல்வதற்கான வழிமுறைகளை மூடியிருப்பதால்தான் தற்போதைய பேச்சுக்கான காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமாதான வழிமுறைக்குள் சிறிலங்கா அரசாங்கத்தைக் கொண்டு வரவேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவிற்குள்ளது. எனவே தற்போது அதிகளவிலான வன்முறைகள் வடக்குக் கிழக்கில் இடம் பெற்று வருகின்றன.

வர்த்தகர்கள், முச்சக்கர வண்டிச் சாரதிகள் எனத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் அதற்குப் பங்களிப்புச் செய்து கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 83ம் ஆண்டுக்குப் பின்னர் எவ்வாறு சிங்கள இனவெறி இராணுவம் தமிழ் மக்களைச் சுட்டுக் கொன்றதோ அதே பணியை மகிந்தர் தற்போது பயன்படுத்தி வருகின்றார். பொறுமை காப்பதாகச் சர்வதேச சமூகத்துக்குக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்யும் விபரீத நடவடிக்கைகள் தொடர்கின்றன.

திருமலை மாவட்டத்தில் நிலைமை மிகக் கவலைக்குரியதாகவுள்ளது. சிங்கள இராணுவமும், சிங்கள காடையர்கள் பலராலும் தமிழின அழிப்பு அரங்கேறியதுடன், அங்கு மக்கள் மிகவும் பீதியும், அச்சமும் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கித் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அங்கு இயல்பு நிலைமைகள் சீர்குலைந்து மோசமான சூழலிலுள்ளது. ஆனால் இந்தியா விடுத்திருக்கும் அறிக்கையில் வன்முறைகள் ஏற்பட்ட இடங்களில் இயல்பு நிலையைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதுடன், பொறுமை காப்பதாக இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. ஆனால் இதில் எந்தவித உண்மையுமில்லை என்பதை பகிரங்கப்படுத்துகின்றோம்.

எனவே வடக்குக் கிழக்கில் தற்போது மிக மோசமான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் தமிழினம் போர் நிறுத்தம் என்ற பொறிக்குள் கட்டுப்பட்டு நின்று தமது விடுதலையை மழுங்கடிக்க விரும்பவில்லை. சர்வதேச சமூகம் சரியான கண்ணோட்டத்தில் சம்பவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் அண்டை நாடு என்ற வகையில் நடைபெறுகின்ற தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மீளவும் ஒரு அமைதிச் சூழலை உருவாக்க முயல வேண்டும். மாறாக இனவாதம் மேலும் தமிழினத்தை அழிக்க முற்பட்டால் தமிழினம் எல்லாப் பலத்தையும் பயன்படுத்திப் போராடுவதைத் தவிர வழியில்லை. அந்த நேரத்தில் இந்தியா எமது விடுதலையை அங்கீகரிப்பதே ஒரே வழி.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம் (ஆசிரியர் தலையங்கம் - 26.04.06)
Reply


Messages In This Thread
இந்தியா மேற்கொள்ள வேண்டிய பணி என்ன? - by yarlmohan - 04-27-2006, 04:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)