Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
SBS தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பான விவரணம்
#11
[size=18]ஒஸ்ரேலியத் தொலைக்காட்சியில் இலங்கைக் கண்ணோட்டம். 19.04.2006 அன்று இரவு ஒன்பது மணிக்கு SBS தொலைக்காட்சி அலைவரிசையில் "DateLine" எனப்படும் நிகழ்ச்சியில் இலங்கை பற்றிய கண்ணோட்டம் இடம்பெற்றது.
சிரமமெடுத்துப் பலவிசயங்களை அத்தொகுப்பிற் கொண்டுவந்திருந்தார் தொகுப்பாளர். இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதே அதன் சாராம்சம்.

அரசதரப்பில் பாதுகாப்புச் செயலர் 'கொட்டாபாய ராஜபக்ஷ' அவர்களிடமும், விடுதலைப்புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களிடமும் விளக்கங்கள் கேட்கப்பட்டன. முக்கிய பிரச்சினையான 'ஒட்டுப்படைகள்' என்று புலிகளாற் 'செல்லமாக' அழைக்கப்படும் paramilitaries பற்றியதாகவே இருந்தது.

கருணா குழுவென்று கருதப்படுவோரால் கொல்லப்பட்ட முன்னாட் போராளியொருவரின் மனைவியிடமிருந்து நிகழ்ச்சி தொடங்குகிறது.
அரச பாதுகாப்புச் செயலர், அப்படியேதும் குழுக்கள் இல்லையென்று தொடக்கத்திலேயே மறுத்துவிட்டார். ஆனால் தொகுப்பாளர் கருணா குழு என்று தங்களை அழைத்துக்கொள்ளபவர்களின் முகாமுக்கே சென்று தகவல்களை ஆவணப்படுத்திக்கொண்டு வந்திருந்தார்.

"கருணா குழு முகாமைக் கண்டடைவது அப்படியொன்றும் கடினமான காரியமில்லை" என்று அத்தொகுப்பாளர் சொல்கிறார்.
கருணா குழுவினரின் முகாமுக்கு அவர் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு பலரைக் காணுகிறார். அக்குழுவின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பிரதீப் என்பவர் கருத்துத் தெரிவிக்கிறார். தங்களுக்குச் சிறிலங்கா அரசோ இந்திய அரசோ எந்த வெளிநாட்டுச் சக்திகளோ ஆதரவளிப்பதில்லை என்று மறுக்கிறார். புலிகளிடமிருந்து சரணடைந்தவர்களென்று இருவரை முன்னிறுத்துகிறார்கள். இரண்டு நாட்களின் முன்பே இது நடந்திருந்தாலும் தனக்கு முன்னால் ஆயுதங்களை ஒப்படைப்பது போன்று செய்துகாட்டியதை தான் காட்சிப்படுத்தியதாகவும் தொகுப்பாளர் தெரிவிக்கிறார். அவ்விருவரின் கருத்துக்களையும் தொகுத்துள்ளார்.

ராஜபக்ஷ துணை இராணுவக்குழுக்கள் செயற்படுவதை மறுத்தபோது, தான் அவர்களைச் சந்தித்ததாக தொகுப்பாளர் சொன்னார். மேலும் 'தாங்கள் 1500 பேர் இருப்பதாக' அவர்களின் அரசியற்பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்ததையும் சொன்னார்.
அப்போது ராஜபக்ஷ,

"நீங்கள் அவர்களைப் பார்த்தீர்களா?"
"ஆம். நான் பார்த்தேன்"
"எத்தனை பேரைப் பார்த்தீர்கள்?"
"கிட்டத்தட்ட 30 வரையானவர்களைப் பார்த்தேன். ஆயுதங்களுடன் பார்த்தேன்." (என்றுவிட்டு சில ஆயுதங்களையும் சொல்கிறார்)
"அப்ப நீங்கள் புலிகளைத்தான் பார்த்திருக்கிறீர்கள் போல. இதுவொரு சிக்கலான விசயம். அவர்கள் தங்களைக் கருணா குழுவென்று சொல்லிக்கொள்கிறார்கள். புலிகளே தங்கள் முகாமுக்கு அழைத்துச் சென்று, 'இந்தா பார். கருணா குழு' என்று உங்ளுக்குக் காட்டியிருக்கலாம்" என்றார் ராஜபக்ஷ.

கருணா குழுவைச் சந்தித்த முகாம், சூனியப் பிரதேசத்துள் இருப்பதாக தொகுப்பாளர் சொல்கிறார். முகாமிலிருந்து வரும்போது பதையைக் காட்சிப்படுத்திக்கொண்டு வருகிறார். அப்பாதை நேரே பிரதான வீதியில் வந்து சேர்கிறது. (வெலிக்கந்தை வழியாகச் செல்லும் பொலநறுவைப்பாதை?) அந்தச் சந்தியில் இராணுவக் காவலரண் காணப்படுவதோடு வீதியில் இராணுவத்தினரும் நிற்கிறார்கள். அப்பதையிலிருந்து 100 மீற்றர்வரை கருணாகுழுப் பொறுப்பாளரொருவர் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகிறார்.

கருணா குழு முகாமிருப்பது சூனியப்பிரதேசமாகத் தெரியவில்லை. காரணம், அம்முகாமிலிருந்து பிரதான் வீதிக்கு வரும்வரையிலும் இராணுவத்தினரின் முன்னணிக் காவலரணைக் கடக்கவில்லை. வீதியிலிருப்பதோ இராணுவ முன்னணிக் காவலரணில்லை. மேலும் வீதியில் நிற்கும் இராணுவத்தினர் தெளிவாகப்பார்க்குமளவுக்கு வெட்டையான பாதையில் நூறுமீற்றர்கள் வரை கருணாகுழுவினர் வந்து செய்தியாளரை வழியனுப்பிவிட்டுப் போகிறார்கள்.
கருணா குழுவினரின் முகாமில் அக்குழுவினரையும் ஆயுதங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார் தொகுப்பாளர். அதில் நவீன சிறுரக ஆயுதங்களை விட 120 mm எறிகணை செலுத்தியொன்றையும் காட்டுகிறார்கள். (இது இப்போதைய குழுவின் காட்சியென்றே நான் புரிந்துகொண்டேன். அது பழைய காட்சியென்றால் இப்பந்தி தவறென்று கொள்க)ஆக, இவர்கள் மறைந்துவாழும் குழுவன்று. மறைந்துவாழும் குழு இப்படியான பீரங்கியை வைத்திருக்க முடியாது. வீதிகளையும் வாகனத்தையும் பாவிக்காமல் அதை நகர்த்தித் திரிய முடியாது. புலிகளிடமிருந்து ஓடும்போது அதைக்கொண்டு வந்திருந்தார்கள் என்று ஒருபேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும், வெலிக்கந்தை வரை எப்படி அந்த உருப்படியைக் கொண்டுவந்தார்கள்?

பின் இளங்கோவன் என்ற தன்னார்வலரையும் அவர் நடத்தும் ஆதரவற்ற பெண்கள் அமைப்பையும் பற்றிய சிறுதொகுப்பொன்று வந்தது. புலிகளால் வயதுகுறைந்தோர் என்று விடுவிக்கப்பட்டோருக்கான புனர்வாழ்வுக்கு உதவிகள் கிடைக்காததையும், வெளிநாட்டு நிறுவனங்கள்கூட அசட்டையாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார் அவர்.

புலிகளின் படைப்பலப் பெருக்கத்தைப் பற்றியும் தொகுப்பு இருந்தது. ராஜபக்ஷ புலிகளின் படைப்பெருக்கத்தைக் குறித்த விசனத்தைத் தெரிவித்தபோது, "அரசதரப்பும் படைப்பலத்தைப் பெருக்குகிறதே?" என்று தொகுப்பாளர் ராஜபக்ஷவைக் கேட்டார்.

மேலும், துணைஇராணுவக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதைப்பற்றிக் கதை வந்தபோது, ராஜபக்ஷ
"நாங்கள் ஆயுதுங்களைக் களைய முற்படும்போது அப்படியான குழுக்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா? களைய முற்பட்டால் சண்டை வருமல்லவா? நாங்கள் சமாதானத்தையல்லாவ பேண முயல்கிறோம்?"
என்று பதிலளித்தார்.

ஆனால் தொகுப்பாளர், "சந்தேகமேயில்லாமல் இக்குழுக்கள் சமாதானத்தைச் சீர்குலைக்கின்றன" என்று தன் தொகுப்பிற் குறிப்பிடுகிறார்.

"அப்போ ஏன் ஆயுதங்களைக் களைவதாக ஜெனீவாவில் ஒத்துக்கொண்டீர்கள்?" என்று தொகுப்பாளர் திருப்பிக் கேட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

அதையும்விட,
"ஏன் புலிகள் தேவையில்லாத விசயங்களைப்பற்றிக் கதைக்கிறார்கள்? முக்கியத்துவமற்ற விவாதங்களை முக்கியத்துவப்படுத்துகிறார்கள்?" என்று ராஜபக்ஷ கேட்கிறார்.
துணைக்குழுக்களின் நடவடிக்கையும், கொலைகளும் முக்கியத்துவமற்றவையாகக் கருதப்படுகிறது.
********************************

கருணா குழுவின் அரசியற்பொறுப்பாளர் என்று கூறிக்கொண்ட பிரதீப், புலிகள் மீதான சில தாக்குதல்களைத் தாம்தான் செய்ததாகச் சொன்னார். அவையனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்தவை. அரசகட்டுப்பாட்டுப் பகுதித் தாக்குதல்களைப் பற்றி அவரிடம் கேட்டிருக்கலாம். குறிப்பாக பரராசசிங்கம், விக்னேஸ்வரன் உட்பட்ட படுகொலைகளை. தமிழர் புனர்வாழ்வுக் கழக அங்கத்தினரின் கடத்தல் பற்றிக் கேட்டிருக்கலாம். உண்மையான பதில்கள் வராவிட்டாலும்கூட அக்கேள்விகள் முக்கியமானவை.
********************************

இப்படியான ஊடகக் கவனங்கள் இடையிடையே வருவது திருப்தியளிக்கிறது. எழுந்தமானத்துக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கிடையில், நேரே களத்திலிறங்கி பிரச்சினையை அதன் உண்மையான வடிவத்தோடு அம்பலப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஓரளவு திருப்தி தருகின்றன.

ஏற்கனவே கருணாகுழு முகாம் கொழும்புப் பத்திரிகையொன்றின் மூலமாக முதன்முதலில் அம்பலத்துக்கு வந்தது. அவர்கள் படங்களுடன், செய்தி வெளியிட்டதுடன், அது இராணுவக்கட்டுப்பாட்டு்ப் பகுதிக்குள் இருப்பதையும் வெளிப்படுத்தினர். அதன்பின் பல சம்பவங்கள் நடந்தாலும் வெளிநாட்டுச் செய்திநிறுவனமொன்று அவர்களின் முகாமுக்கே சென்று காட்சிப்படுத்தலோடு அவர்களைச் செவ்வி கண்டது இதுவே முதல்முறையென்று நினைக்கிறேன்.

ஏற்கனவே போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு அவர்களைச் சந்தித்துள்ளதைப் பகிரங்கப்படுத்தியிருந்தது. இந்த நிகழ்ச்சித் தொகுப்பிலும்
"அவர்கள் யார் தயவில் இயங்குகிறார்கள் என்று எம்மால் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், அவர்கள் இயங்குவது மறுக்க முடியாத உண்மை" என்று கண்காணிப்புக்குழு சொல்கிறது.

நிகழ்ச்சித் தொகுப்பாளரும்,
"அவர்கள் அரச தயவில் இயங்குகிறார்களென்று உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், அரசுக்கும் அவர்களுக்கும் புலிகள் பொது எதிரியென்பதை யாரும் மறுக்க முடியாது" என்று சொல்கிறார்.
********************************

தொகுப்பாளரின் சில தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. 2500 கரும்புலிகள் உள்ளார்கள் என்ற தகவல் அப்படிப்பட்டதொன்று. '2500 வரையானவர்கள் கரும்புலிகளாகச் செல்வதற்குரிய மனநிலையோடு உள்ளார்கள்' என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதைவிட 'அம்மான்' என்ற சொல்லுக்கு அவர் கொடுக்கும் விளக்கமும் அப்படிப்பட்டதே. ஒருநேரத்தில் இயக்கத்தில் பலரையும் 'அம்மான்' என்று சொல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. இன்றும் மூத்த தளபதிகளல்லாதவர்கள்கூட அவர்களின் பெயர்களுடன் அம்மான் என்று சொல்லப்படும் தன்மையைக் காணலாம். மூத்த உறுப்பினர்களின் பெயர்களே அதிகளவில் வெளிவந்ததால் அவர்களுக்கு மட்டும் அம்மான் என்ற அடைமொழி இருப்பதான தோற்றப்பாடுண்டு. இதையும்தாண்டி சிலர், 'அம்மான்' என்பது புலிகள் இயக்கத்தில் வழங்கப்படும் பட்டம் என்ற விதத்தில் கதையளந்துகொண்டு திரிவதையும் பார்க்க முடிகிறது.

இது மக்களின் சாதாரண பேச்சுவழக்கிலிருந்து தோன்றியது. இன்றும் மக்களிடத்தில் ஒருவரை அழைக்கப் பாவிக்கப்படும் சொல்தான் அம்மான். எங்கள் ஊரில் என் குறிச்சியில் மட்டுமே நாலைந்து அம்மான்கள் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். இன்றும்கூட இளைஞரிடத்தில் சகதோழனை அம்மான் என்றழைக்கும் வழக்கம் இருந்துகொண்டேயிருக்கிறது.

நான்கூட ஓர் அம்மான் தான் தெரியுமோ? என்ர முந்தின பதிவொண்டில என்னை ஒருத்தர் "அம்மான், ஒரு மின்னஞ்சல் போடுங்கோ" எண்டு சொல்லியிருந்தார் ஞாபகமிருக்கோ? இவ்வளவு சாதாரணமான அம்மானை, இராணுவப்பதவியென்ற அளவுக்குச் சிலாகிப்பவர்களையும், 'which can mean priest, or god' என்று சொல்பவர்களையும் பற்றி என்ன சொல்வது? முன்னவர்கள் அறிந்திருந்தும் வண்டில்விடும் மண்ணின் மைந்தர்கள். பின்னவர் அறியாமல் ஊடகங்களின் தாக்கத்தாற் சொல்பவர்.
(கருணா அம்மானின் போர்த்திறத்தையோ சாதனையையோ குறைப்பதன்று என்நோக்கம். அம்மான் என்ற சொல்லுக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென்பதே நான்சொல்ல வந்தது.)

இந்நிகழ்ச்சித் தொகுப்பின் எழுத்துவடிவத்தையும் 23 நிமிட தொலைக்காட்சி ஒளித்தொகுப்பையும் அத்தொலைக்காட்சி வலைத்தளத்தில் பார்க்கலாம்.
http://www.vasanthanin.blogspot.com/
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:54 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:56 AM
[No subject] - by அருவி - 04-20-2006, 09:33 AM
[No subject] - by iruvizhi - 04-20-2006, 10:14 AM
[No subject] - by அருவி - 04-20-2006, 10:19 AM
[No subject] - by iruvizhi - 04-20-2006, 10:27 AM
[No subject] - by Subiththiran - 04-20-2006, 10:46 AM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 12:43 AM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 03:07 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 03:25 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 04:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)