04-10-2006, 07:30 AM
தூயவன் Wrote:திரவிடக் கொள்கைகள் வெறுமனே இந்து மத்தை வசைபாடுவதற்கு மட்டுமே சுருங்கிப் போனது வேதனை. பெரியார் அவர்களின் கொள்கைளில் முழுமையான யதாரத்தம் இல்லை.
நடக்கவில்லை நாம்: நடத்தப்படுகிறோம்!
எழுதியவர் "சிந்தனைச் செல்வர்" எழிலன்
கடவுள் இல்லை என்று வாதிடும் பகுத்தறிவுக் கொள்கையின் பின்னணியில்...
மதங்களின் நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் வளர்த்துவிடப்பட்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான அறிவுக்குதவாத மூடநம்பிக்கைகளின் மேலான ஆத்திரமும் மக்களை அவற்றின் அடிப்படையிலே மட்டுமே சிந்திக்க வைப்பதன் மூலம் தன்னம்பிக்கையை பலவீனப்படுத்த முயலும் பிழையான அணுகு முறைக்கு எதிராக எழுகின்ற கோபமும் சமுதாயத்தைச் சுதந்திரமாக சிந்தித்து நடக்கவிடாமல் திட்டமிட்டவிதத்தில் விஷமிகளின் பிழையான முறை கெட்ட வழிகாட்டல்களினால் மக்கள் வெறும் பெட்டிப் பாம்புகளாக பணிந்து கிடக்கும்படி அடக்கியொடுக்கப்படுவதன் கொடுமையைப் பொறுத்துக் கொள்ளமுடியாத நியாயமான தர்மம் சார்ந்த ஆத்திரமும், படிப்பறிவே இல்லாதவனும்கூட, எல்லாம் தெரிந்தவனாக வேடம் போடவும் மக்களை ஏய்க்கவும் இந்த இறை நம்பிக்கை துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் எழும் வெறுப்புணர்வும், அரசியலும் நாடுகளும் அநியாயமாக மதங்களின் பெயரால் நிம்மதிக் குறைவுகளுக்கு உட்பட்டு இருப்பதனை அவதானித்து, அதனால் எழும் நியாயமான கோபமும், மக்களின் சிந்தனைப் பலவீனத்தினால் எழக்கூடிய எதிர்காலம் பற்றிய அக்கறையுமே அவர்களை எல்லா அநீதிகளுக்கும் அடிப்படையாக இந்த நம்பிக்கையே இருப்பதாக எண்ண வைக்கின்றது. இதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.
“கடவுளை மற ; மனிதனை நினை” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகள் வெறும் நாத்திகமான, குதர்க்கமான வார்த்தைகள் அல்ல. அவை சத்தியத்தின் சுத்தமான வெளிப்பாடுகள்.
“கடவுளே, கடவுளே!” என்று ஓடுகின்றவன் “தனக்கு, தனக்கு” என்ற சுயநலத்தோடேதான் ஓடுகிறான். அதுவே அவனைக் கடவுளை விட்டுத் துரத்தும் நடவடிக்கையும் கூட.
ஆனால் எதுவித கைம்மாறும் கருதாமல், மனிதாபிமானத்தை நினைத்து வாழ்ந்தால் அதுதான் சரியான வழிபாடும் செபமும் மந்திரமும் ஆகும்.
ஏசுக்கிறிஸ்து சொன்னார்: “பிதாவே! பிதாவே என்று உரக்கக் கத்தி செபிப்பவர்கள் என் தந்தையின் இராட்சியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. அவரது சித்தத்தை நிறைவேற்றுபவர்களே பிரவேசிப்பார்கள்” இதற்கும் தந்தை பெரியாரின் வார்த்தைகளுக்கும் அடிப்படையில் கருத்து வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லையே! அவர் கடவுளே! கடவுளே! என்று கத்திக் கொண்டு தமது கடமையை அலட்சியப்படுத்தும் மனிதர்களைச் சாடுவதில் எந்தத் தவறுமே இல்லையே!
ஆண்டவனே! ஆண்டவனே! என்று சொல்லி மட்டும் காட்டுபவனை நீதிமான் என நம்பும் மூடத்தனத்துக்கு பதிலாகத்தான் தற்போதைய ஆத்திக ஆதிக்க மண்டலங்களின் வண்டவாளங்கள் பல இடங்களிலும் தண்டவாளம் ஏறிக் கொண்டிருக்கின்றனவே!
இத்தகைய நல்ல வார்த்தைகளை ஒரு நாத்திகவாதி சொல்லிவிட்டார். அதனால் அதைக் கேட்காதே என்று சொல்பவன் பச்சை சுயநலவாதியாக மட்டுமே இருப்பான்; இருக்க முடியும். அல்லவா?
நானறிந்த எத்தனையோ தங்கமான மனிதர்கள் உலகின் கண்ணுக்கு நாத்திகர்கள் என்றாலும் நான் கண்ட பல பக்தர்களில் பெரும்பான்மையானோர் பொய் முகத்தினராகவே இருந்திருக்கின்றார்கள்.
உண்மையான பக்தர்களையும் நான் கண்டிருக்கிறேன். மனதார மற்றவர்களுக்குத் தீங்கே நினைக்காத நல்ல நாத்திக இதயங்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.
அதே சமயம் மனதார தீமையை மட்டுமே நினைப்பவர்களாகவும் மேலுக்கு பக்திப் பூச்சு என்ற வண்ணத்தைப் பூசிக் கொண்டு, இறைவன் பெயரில் ஏமாற்றித் திரிபவர்களாகவும் அலையும் நடமாடும் பசாசுகளையும் பலரை நான் நேரிலேயே கண்டு, பழகி அனுபவப்பட்டிருக்கிறேன். அங்கும்தான். இங்கும்தான்.
இக்கட்டுரையை அவர்களில் சிலர் வாசிக்க நேரலாம். அப்போது அவர்கள் என்னைத் திட்டவும் கூடும. ஆனால் அதற்காக நான் உண்மையை விட்டு அகல்வது சரியாகாதே!
உண்மையாக நான் இறைவனின் உதவியைக் கேட்டு நின்றதுண்டு. தன்னந்தனியனாக மனதால் அழுததும் உண்டு. என் மனதார நான் கேட்ட காரியங்கள் நடந்ததாக உணர்ந்தபோது, அவற்றை இறைவனின் சித்தப்படி எனக்கு நடப்பதாகவே நான் எடுத்துக் கொண்டேன்.
இதில் புதுமை என்பதாய்ச் சொல்ல எதுவுமே இல்லை. ஆனால் நமக்காக என்ன நடக்கவுள்ளதோ அது நமக்காக நடக்கத்தான் செய்யும் என்றும் எதுவும் நடப்பது நமது நன்மைக்காகத்தான் என்றும் நான் நம்பிக் கொள்வேன்.
இந்த எண்ணத்தில் இனந்தெரியாதவொரு நிம்மதியை நான் உணர்ந்ததுண்டு. எனக்கு நடந்தவற்றையும் நடக்கின்றவற்றையும் நானே அவதானித்தபோது, நான் அனுபவபூர்வமாகக் கண்ட உண்மை என்னவெனில் நாம் நாமாக நடக்கவில்லை; நம்மையுமே அறியாத விதத்தில் ஒரு சக்தியால் வழிநடத்தப்படுகின்றோம் என்பதுதான்.
வெறுமனே விதண்டாவாதமாகப் பேசுவதில் பொழுது போகலாம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பேசுவதில்தான் பொழுதுகள் அர்த்தம் பெறத்தக்கனவாகின்றன.
<b>ஆழ்ந்த சிந்தனையில் எழும் நாத்திகவாதம் பொய் சொல்வதில்லை. அது சத்தியமாகத் தான் கண்டதை உரைப்பதனால்தான் அது தீமை எனத் தான் உணர்வதைச் சாடுவதற்குத் தயங்குவதில்லை. அதனால்தான் அச்சமின்மையை அது உண்மையாகவே பிரதிபலிக்கின்றது</b>.
நன்றி - தமிழமுதம்.கொம்
!
-
-

