Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு
#1
இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு என்னும் அடிப்படை நிலை மாற்றம் எற்பட்டுள்ளதா?
கீழே உள்ள கட்டுரையில் குறிபிட்டுள்ளது போல் கைய்யறு நிலயால் உருவான கொள்கை மாற்றம் நிகழ்கிறதா?எமக்குச் சாதகமான நிலமை உருவாகிறதா?இந்திய, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் எதிர்வினை எவ்வாறு அமயப் போகிறது? நாம் அதனை எவ்வாறு பயன் படுத்தப் போகிறோம்?

பாகிஸ்த்தானை ,அமெரிக்காவா சீனாவா வழி நடத்துகிறது?அல்லது பாகிஸ்த்தான் இந்த முரணை தனக்குச் சாதகமாகப் பாவிக்கிறதா?
அல்லது சிறி லங்கா அரசு இந்தியாவிற்கும், சீனா,பாகிஸ்த்தானுக்கும் இடயே ஆன முரணைப் பாவிக்க முற்படுகிறதா?

சிறிலங்கா, சீனா, பாகிஸ்தான் கூட்டணியானது இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்கும்: மு.திருநாவுக்கரசு
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 06:50 ஈழம்] [ம.சேரமான்]
சீனா, பாகிஸ்தானுடனான சிறிலங்காவின் கூட்டணியானது இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்கும் என்று தமிழீழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு விளக்கம் அளித்துள்ளார்.


விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் மு.திருநாவுக்கரசு கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.04.06) ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினுடைய பாகிஸ்தானிய பயணத்தையொட்டி சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கைப் போக்கை நாம் சற்று ஆராய வேண்டியது அவசியமாகும்.

சிறிலங்கா இப்போது மிகவும் ஊசலாடுகின்ற ஒரு நிலையற்ற வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் அடிப்படையில் சிறிலங்காவுக்கு என்று தவிர்க்க முடியாத ஒரு வெளியுறவுக் கொள்கை நிர்ணயம் நிகழ முடியும். இந்த அடிப்படையில்தான் இப்போது இந்த விவகாரத்தை நாம் நோக்க வேண்டியிருக்கின்றது.

சிறிலங்கா அரச தலைவர் தான் பதவியேற்றதும் தனது முதலாவது பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டார். அப்பொழுது அவர் இந்தியாவை தன்பக்கம் வளைத்தெடுக்கின்ற முயற்சியை பெரிதும் கைக்கொள்ள முற்பட்டார். ஆனாலும்கூட அவர் எதிர்பார்த்த அளவிற்கு அந்த முயற்சி அவருக்கு கைகூடத் தவறியது. இதன் பின்பு அவருக்கு இருக்கக்கூடிய வேறு தெரிவுகளின்பால் அவர் தன் நாட்டங்களை செலுத்தத் தொடங்கினார்.

இந்த வகையில் அவரது முதலாவது கொள்கை வகுப்பானது ஒரு தெளிவான, தீர்க்கதரிசனம் மிகுந்த பார்வையின் அடிப்படையில் நிகழத் தவறியது என்பதையே நாம் காண முடிகிறது. இப்போது அவருடைய இன்னொரு வாய்ப்பான ஒரு தெரிவுபற்றி அவர் சிந்திக்கின்றார் போல் தெரிகிறது.

அதாவது அவர் பாகிஸ்தானுக்கு சென்றதும் பாகிஸ்தானால் உலகப் பெருவல்லரசான அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஸ்சுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விடவும் ஒரு மிகவும் குட்டித்தீவான சிறிலங்கா அரச தலைவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பெரிதாக இருப்பதை அரசியல் விமர்சகர்களும் இராஜதந்திரிகளும் இப்பொழுது சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு இன்று ஒரு தெளிவான, திட்டவட்டமான பின்னணி இருக்கவே செய்கின்றது.

இப்படி சிறிலங்காவை பாகிஸ்தான் வளைக்க விரும்புவது இப் பிராந்தியத்தில் இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்க அது உதவுமே தவிர சிறிலங்கா அரசிற்கு அது பெருவெற்றியைக் கொடுக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் இதில் ஒரு விடயத்தை அடிப்படையாக நோக்க வேண்டியிருக்கின்றது.

சிங்கள அரசானது இலங்கைக்குள் தமிழ் மக்களுடன் தன்னுடைய பிரச்சனையை தீர்க்கத் தயாரில்லை என்பதனைத்தான் அதனுடைய இன்றைய பாகிஸ்தானிய பயணத்தின் போதான நகர்வுகள் எமக்கு தெளிவாக காட்டுகின்றன.

முதலாவதாக பாகிஸ்தானிய அரசுடன் சிறிலங்கா அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோதாவில் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. அப்படியென்றால் நிச்சயமாக இலங்கை எல்லைக்குள் அல்லது இலங்கையின் எல்லைக்கு வெளியே இனப்பிரச்சனைக்கான தீர்வை சிறிலங்கா அரசு நாடுகின்றது என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது.

எனவே இலங்கைத்தீவிற்கு வெளியேதான் சிறிலங்கா அரசு தீர்வைத் தேடுகின்றது என்பதிலிருந்து அது இனப்பிரச்சனைக்கு உள்நாட்டில் அதாவது தமிழ் மக்களுடன் சேர்ந்து, தமிழ் மக்களுடன் பேசி அப்பிரச்சனையைத் தீர்க்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் தனிப்பெரும் சக்தியாக இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக அது உலக சக்திகளுடன் அது இணைந்து இப்பிரச்சனையை ஒடுக்க வேண்டும் என்பதிலேயே சிறிலங்கா அரசு அக்கறை செலுத்துகின்றது என்பது இப்போது தெளிவாக இருக்கிறது.

இவற்றை நாம் அரசியல் ரீதியாக கூர்ந்து அவதானிக்க வேண்டும்.

அதாவது அரசியல் ரீதியான தீர்விற்குப்பதிலாக இராணுவ ரீதியான கண்ணோட்டத்தில் தான் பாகிஸ்தானுடனான அதனுடைய உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. பயங்கரவாத எதிர்ப்பு என்கின்ற அதனுடைய கண்ணோட்டமானது இராணுவ ரீதியான உதவியைப் பாகிஸ்தானிடமிருந்து பெறுவதையே மையமாகக் கொண்டது.

இது விடயத்தில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக அடையாளம் காணவேண்டும்.

பாகிஸ்தானானது இலங்கை விவகாரத்தை மையமாகக்கொண்டு இந்தியாவுடன் மோதத் தயாரில்லை. இது ஒருபோதும் நிகழப் போவதில்லை. ஆனால் இதில் ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கின்றது.

இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தான் ஆயுத உதவிகளை வழங்குவதனையோ அல்லது நிபுணத்துவ உதவிகளை வழங்குவதனையோ இந்தியா பொறுத்துக் கொள்ளும். சிலவேளைகளில் ஆயுத உதவிகளைக்கூட இந்தியா விரும்பவும்கூடும். ஆனால் அதற்கு மேல் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகள் நீளுமாயின் இந்தியாவினால் அதனை சகிக்கவோ பொறுக்கவோ நிச்சயம் முடியாது. இது பாகிஸ்தானுக்கும் நிச்சயம் தெரியும்.

எனவே இந்த வட்டத்தில் நின்று பார்க்கும் போது பாகிஸ்தானுடனான உறவு ஒரு மட்டத்திற்கு உட்பட்டது என்பதை பாகிஸ்தான் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறது. 2,500 ஆண்டுகால அரசியல் இராஜதந்திர பாரம்பரியத்தைக் கொண்ட சிறிலங்கா அரசானது இதனை புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்று நாம் கூறமுடியாது.

ஆனால் ராஜபக்சவிற்கு இருக்கக்கூடிய இன்றைய தெரிவுகளில் இதுதான் அவருக்கு கைக்கெட்டியதாகக் காணப்படுகின்றது. அப்படியெனில் ஒருவகையில் அது ஒரு கையறு நிலை என்றே நாம் கூறவேண்டும். ஏனெனில் இது ஒரு ஆபத்தான தெரிவு என்று தெரிந்தும் கூட அதனைத்தான் அவர் தெரிவு செய்ய வேண்டும் எனில் அது நிச்சயமாக ஒரு கையறு நிலைதான்.

இதில் உள்ள இரண்டாவது பரிமாணத்தைப்பார்ப்போம்.

பாகிஸ்தான் தனித்து இந்தியாவுடன் மோதுவதற்கு தயாராக இருக்க முடியாது. அப்படியெனில் இரண்டாவது தெரிவில் ஒரு விநோதமான பின்னணி இருக்க முடியும். எப்படியெனில் கொழும்பு, இஸ்லாமபாத், பீஜிங்க் என்கின்ற ஒரு அச்சின்கீழ் ஒரு நல்லுறவு உருவாகி இனப்பிரச்சனையை எதிர்கொள்வதற்கான ஒரு சிந்தனைப்போக்கு தோன்றுவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கவே செய்கின்றது.

இதில் நாம் ஒரு பின்னணியை நோக்க வேண்டும்.

இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சியாயினும் சரி, சுதந்திரக் கட்சியாயினும் சரி, ஜே.வி.பி. ஆயினும் சரி எது பதவிக்கு வரினும் அதற்கு ஒரே மாதிரியாகவே அது அமையும்.

எனவே இலங்கை விவகாரத்தில் எந்த சிங்கள ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் பாகிஸ்தானின் தெரிவு ஒன்றுதான். அது அரசின் பக்கம் என்பதுதான். எனவே அது அரசாங்கத்தைப் பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை. எந்த அரசாங்கங்கள் மாறினாலும் பாகிஸ்தான், சிங்கள அரசின் பக்கம் என்பதில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. ஆனால் சீனாவைப் பொறுத்த வரையில் இதில் வித்தியாசங்கள் உண்டு.

சீனாவின் முதலாவது தெரிவு ஜே.வி.பியினர்தான். அதாவது அவர்கள் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாளர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது ஆதரவாக இருந்தாலும் கூட அவர்களுடைய முதலாவது தெரிவு ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்காது.

சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது அவர்கள் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்தாலும் அவர்களுடைய ஆதரவு இரண்டாவது தெரிவாகவே சுதந்திரக் கட்சிக்கு இருக்கும். சுதந்திரக் கட்சிக்கு அப்பால் ஜே.வி.பி. பதவியேற்பதனை அவர்கள் விரும்புவார்கள். எனவே அவர்களுடைய முதலாவது தெரிவு ஜே.வி.பி.யினர்தான். ஆனால் இங்கேதான் பிரச்சனை உள்ளது. அவர்கள் சிங்கள அரசிற்கு ஆதரவானவர்கள். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் இந்த மூன்று கட்சிகளில் மூன்றாவதான ஜே.வி.பிக்குத்தான் ஆதரவாளர்கள்.

ஆனால் ஜே.வி.பி. பதவிக்கு வரமுடியாத நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளது அல்லது ஆட்சி அதிகாரத்தில் சவாலிட முடியாத அளவிற்கு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பின்தள்ளப்பட்டிருக்கின்றது என்கின்ற பின்னணியில் இப்போது பீஜிங்கிற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு தெரிவு மகிந்த ராஜபக்சதான். ஆகையால் மகிந்த ராஜபக்சவை நூறு வீதம் பலப்படுத்துவதைத் தவிர பீஜிங்கிற்கு மாற்றுத்தீர்வு எதுவுமே இல்லை.

எனவே இலங்கை விவகாரத்தில் பீஜிங்கும், இஸ்லாமபாத்தும் ராஜபக்சவிற்கு ஆதரிப்பதில் எவ்விதமான கிலேசமும் அற்ற ஒரேவிதமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு சூழல் காணப்படுகின்றது.

இது மிகவும் ஆபத்தான ஒன்று. ஒருவகையில் மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமானது. எவ்வாறு எனில் ஜே.வி.பி.க்கு பீஜிங் ஆதரவளித்து விடுமோ அல்லது மகிந்த ராஜபக்சவை வெட்டி அது முன்னணிக்கு கொண்டுவந்து விடுமோ என்ற அச்சம் மகிந்த ராஜபக்சவிற்கு இருக்கவே செய்தது. இப்போது மகிந்த ராஜபக்சவிடம் நிச்சயமாக இருக்க மாட்டாது.

ஆனபடியினால் இனி பீஜிங்கினுடைய ஆதரவு, இஸ்லாமபாத்தினுடைய ஆதரவு நிச்சயமாக கொழும்பில் இருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு நூறு வீதமானதாகவே இருக்கும். அப்படியாயின் பீஜிங்க், இஸ்லாமபாத், கொழும்பு என்கின்ற ஒரு முக்கூட்டு அச்சு என்பது இப்போது நூறு வீதம் ஸ்தாபிதமடைந்து விட்டது.

இந்த நிலையில் இந்த முக்கூட்டு அச்சுக்கு எதிராக இந்தியாவின் அணுகுமுறை என்பது எதிர்வினையாக அமையப் போகின்றது. இதில் இந்தியாவும் தனக்கு என ஒரு அச்சை அமைக்கும். ஆனால் இதில் ஒரு விடயம் மிகவும் தெளிவானது. இலங்கையை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்கின்ற விருப்பம் இந்தியாவிற்கு எப்போதும் உண்டு. ஆனபடியினால் இலங்கை விவகாரத்தில் இந்தியாக கடந்தகாலம் முழுவதும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றி வந்திருக்கின்றது. அது எப்படியெனில் சிறிலங்கா அரசாங்கத்தை அணைத்து நடத்துவதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் எவர் பதவிக்கு வரினும் அதனை அணைத்து நடத்துவதன் மூலம் இலங்கைத் தீவை செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்கவே இந்தியா விரும்பியது. இப்போதும் அதனையே விரும்புகின்றது.

ஆனால் இந்தியாவிற்கு எதிரான அணியோடு சிறிலங்காவின் அச்சு அமையுமேயானால் அந்த செல்வாக்கு மண்டல கொள்கையில் இந்தியா மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். ஒருவகையில் 1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, இந்தியாவினுடைய வெளியுறவுக் கொள்கைக்கு முரணான ஒரு நிலையெடுத்த போதுதான் இந்தியா தனது புஜபல பராக்கிரமத்தை காட்டி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசிற்கு அச்சமூட்டி ஒரு ஒப்பந்தத்திற்கு பணியவைத்த போதிலும் இறுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினுடைய வழிக்கு இந்தியா துணைபோவதாகவே அது மாறிச் சென்றது.

எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்தியாவினுடைய கடந்தகால அணுகுமுறை என்பது எப்போதுமே இலங்கையை அணைத்துப் போவது என்கின்ற ஒரு கொள்கை கொண்டதாகவே இருக்கின்றது. ஆனால் இப்போது மகிந்த ராஜபக்சவினுடைய கொள்கை, இலங்கையை அணைத்துச் செல்ல முடியுமா என்கின்ற கேள்வியை இந்திய கொள்கை வகுப்பாளர்களின் மனங்களில் ஏற்படுத்த வல்லதாய் மாறியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாக இலங்கையின் கள அரசியலில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் இந்த வாரத்திலிருந்து அடையாளம் காண வேண்டியிருக்கின்றது. எனவே இது இப்போது எமக்கு ஒரு புதிய தளமும் ஆகும். ஆனபடியினால் எமக்கு இப்போது சற்று வித்தியாசமான ஆனால் விறுவிறுப்பான அணுகுமுறைகள் மிகவும் அவசியப்படுகின்ற ஒரு காலகட்டத்திற்குள் நாம் நுழைந்துவிட்டோம் என்றே கூற வேண்டியிருக்கின்றது.

இறுதி அர்த்தத்தில் அரசியல் ஒரு பொதுப் போக்கின் முடிவுக்குத்தான் உட்படுமேயாயினும் அவ்வப்போது அரசியல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பான நுட்பம் சார் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது நாம் சிந்திக்க வேண்டியது அவ்வப்போதைய நுட்பம் சார் அரசியல் மாற்றங்களைப் பற்றியே தான். எனவே பொதுப்போக்கு தொடர்பான விடயம் எமக்கு பிரச்சனையானதாக இல்லை. அது எப்போதும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது.

ஆனால் இந்த நுட்பம் சார்ந்த அரசியல் என்ன? இது எப்படி அமையப் போகின்றது என்பதே எம்முடைய அடுத்தகட்டப் பிரச்சனையாகும்.

மொத்தமாக பார்க்கின்ற போது இப்போது இருக்கின்ற இன்றைய அரசியல் சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இத்தகைய போக்கானது ஒரு விடயத்திற்கு சவால் விடுவதாக இருக்கின்றது.

இலங்கையினுடைய வெளியுறவுக் கொள்கை என்பது இலங்கையைப் பொறுத்த வரையில் அது இந்திய, அமெரிக்க கோட்டுக்கு வெளியே தாண்டமுடியாத ஒரு நிர்ப்பந்தத்தை கொண்டுள்ளதாகும். இன்னொரு வகையில் கூறுவதனால் இலங்கைக்கு சர்வதேசம் என்பது இந்தியாவும், அமெரிக்காவும் தான். ஆனால் இலங்கை இப்போது அதற்கு வெளியே ஒரு பரீட்சார்த்தத்தில் ஈடுபட்டிருக்கின்றது. இந்த பரீட்சார்த்தத்தினைத்தான் நாம் நுட்ப அரசியல் என்று கூறப் போகின்றோம்.

ஏனெனில் ஒரு பொதுப்போக்கான அரசியலிலிருந்து நகர்ந்து அது ஒரு புதிய மிகவும் நுட்பமான ஒரு இராஜதந்திர அரசியல் கோட்டிற்கு அது நகர்ந்து செல்கின்றது. இந்த நகர்வை இந்தியா எவ்வாறு கையாளப் போகின்றது? இதில் அமெரிக்காவின் பொறுப்பு எப்படி இருக்கப் போகின்றது? இதில் விடுதலைப் புலிகளின் நகர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன? இனி கொழும்புப் பத்திரிகைளும், கொழும்பு சார் அரசியல் நிபுணர்களும் எவ்வாறான தீர்மானங்களை கருத்துக்களை முன்வைக்கப் போகின்றார்கள் என்பதிலிருந்து இதனுடைய கட்டுமானத்தை நாம் நோக்கலாம்.

ஆனால் ஒருவிடயத்தை கொழும்பு சார்ந்து நாம் தெளிவாகக்கூற முடியும். கொழும்புசார் அரசியல் நிபுணர்களுடைய இராஜதந்திரியினுடைய கண்ணோட்டம் எப்போதும் இந்தியாவிற்கு எதிரானதாகவும், தமிழீழ மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது. எனவே இயல்பாக அவர்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் சார்ந்து சிந்திப்பது அவர்களை அறியாமலேயே அவர்களுக்கு நிகழ்ந்து விடும்.

ஆனபடியினால் அவர்களுடைய நிபுணத்துவம் என்பது அறிவுசார்ந்ததாக இல்லாமல் உணர்ச்சி சார்ந்ததாக மாறுகின்ற ஒரு துர்ப்பாக்கியம் அவர்களுக்கு உண்டு. இந்த நிலையில் அவர்களுடைய உணர்ச்சி சார்ந்த தீர்மானங்களுக்கு வெளியே நாம் ஒரு அறிவுசார்ந்த களத்தில் நுழையக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த அறிவுசார்ந்த ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை எடுப்பார்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றார் அவர்.


http://www.eelampage.com/?cn=25284
Reply


Messages In This Thread
இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு - by narathar - 04-05-2006, 09:34 AM
[No subject] - by Thala - 04-05-2006, 09:46 AM
[No subject] - by Thala - 04-05-2006, 10:18 AM
[No subject] - by sinnakuddy - 04-05-2006, 10:59 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)