Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Tamil rebels 'coercing diaspora' -BBC
#5
புலம்பெயர் வாழ் மக்களின் உதவியும் ஆதரவுமே இலங்கையில் தமிழர்களை உயிர் வாழவைக்கிறது'

மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் குற்றச்சாட்டுக்கு தமிழ்ச்செல்வன் பதில்

இலங்கையிலிருந்து சென்று புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் ஆதரவும் உதவியுமே இன்று இங்கு தமிழ் மக்களை உயிர் வாழவைத்து வருவதாக விடுதலைப் புலி களின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம், `இறுதி ஈழப் போருக்கான நிதி' எனக் கூறி மிரட்டிப் பணம் பறித்து வருவதாக, வாஷிங்டனை தளமாகக் கொண்ட ` மனித உரிமை கண்காணிப்பு' அமைப்பான `ஹியூமன் ரைற்ஸ் வாச்' தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே தமிழ்ச்செல்வன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியில் மேலும் கூறியதாவது;

இந்த அறிக்கையைப் பார்த்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். இது முழுக்க முழுக்க, எமது போராட்டம் தொடர்பாகவும், எமது விடுதலை அமைப்பு தொடர்பாகவும், தமிழர்களது உரிமைப் போராட்டம் தொடர்பாகவும் அதனைப் பலவீனப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதொரு செய்தியாகவே இதனைப் பார்க்கிறோம்.

உண்மையிலேயே இந்த அமைப்பு விடுத்த அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் அளித்துவரும் உதவிகளால்தான் இங்கு எமது மக்கள் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச உதவிகளெல்லாம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் இலங்கை அரசு மிகக் கொடூரமாகவும் மிகக் கொடுமையாகவும் பொருளாதாரத் தடையையும் உணவுத் தடையையும் பெரும் நெருக்கடிகளையும் ஏற்படுத்திய போதெல்லாம், புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் உதவியும் ஆதரவுமே தமிழீழ மக்களை இங்கு உயிர் வாழ வைத்தது.

இன்றும் எமது மக்கள் பல்வேறு உதவி களையும் இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை தமிழீழ மக்கள் அனைவரும் அறிவர்.

இவற்றையெல்லாம் குழப்பும் நோக்கில் திட்டமிட்டு புலம்பெயர் நாடுகளில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்ட கட்டுக் கதைகளை வைத்துக் கொண்டுதான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றோம்.

எனினும், இந்த அறிக்கை குறித்து நாம் தீவிர அக்கறை செலுத்துகின்றோம். இது பற்றி ஆராயவுமுள்ளோம்.

இது மிகவும் கவலையும் அதிர்ச்சியும் தருகின்ற விடயமாகும். ஏனெனில், புலம் பெயர் நாடுகளில் இது சாத்தியப்படாததொன்று. அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்குட்பட்டே எமது மக்கள் வாழ்கின்றனர்.

அங்கு எவரும் போய் அச்சுறுத்தியோ அல்லது அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை மீறியோ எதுவுமே செய்ய முடியாது.

இந்த நாடுகளில் இவ்வாறான சட்ட திட்டங்களை மீறி பணம் சேர்ப்பதென்பதோ அல்லது அங்குள்ள மக்கள் மீது வன்முறைகளைத் திணிப்பதென்பதோ எவராலும் முடியாத காரியம்.

இந்த நாடுகளெல்லாம், இவர்கள் கூறுமளவிற்கு சட்டம் ஒழுங்கை பலவீனமாக வைத்துக் கொண்டிருப்பதாக நாங்கள் நம்பவில்லை. நாம் இவ்வாறான பல நாடுகளுக்கும் சென்று எமது மக்களை சந்தித்திருக்கின்றோம். அங்கு எம்மவர்கள் வாழும் வாழ்க்கை முறைகளையும் பார்த்திருக்கின்றோம். அந்தந்த நாடுகளின் சட்டம் ஒழுங்கை மதித்துத்தான் அவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால், புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களை அச்சுறுத்தியோ அல்லது மிரட்டியோ எதனையும் செய்ய முடியாதென்பதால் இந்தக் குற்றச்சாட்டு எமக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் மட்டுமல்லாது, ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேற்குலகில் கடுமையான சட்ட திட்டங்களிருக்கையில் அங்கு சென்று ஒருவரை மிரட்டுவதென்பது சிரமமென்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால், வெளிநாடுகளிலிருந்து தமிழர்கள் இலங்கை வரும் போது மிரட்டப்படுகிறார்கள் அல்லது இலங்கையிலுள்ள அவர்களது உறவினர்கள் மிரட்டப்படுகிறார்களென்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதே எனக் கேட்டபோது,

நிச்சயமாக அப்படியில்லை. நீங்கள் சுதந்திரப் பத்திரிகையாளர்கள். நீங்கள் வந்து எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் அல்லது எங்காவது சென்று எமது மக்களுடன் உரையாடலாம்.

எங்காவது அவர்களுக்கு வற்புறுத்தல்கள் அல்லது நெருக்கடிகள் எமது அமைப்பால் உருவாக்கப்படுகின்றதா என்பதை நீங்கள் நேரில் சென்று பார்க்கலாம். இது திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றதொரு பிரசாரமென்பதுடன் எங்கள் மீது கறை பூசுகின்ற பிரசாரமாகவும் தான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.

அங்கே திட்டமிட்டு சிலரை இதற்கெனத் தயார்படுத்தி அவர்கள் மூலம் இவ்வாறான முறைப்பாடுகளை உருவாக்கி இது பரப்பப் படுகிறது. இதனை நாம் முற்றாகக் கண்டிப்பதுடன் இது குறித்து நாம் பெரிதும் அதிர்ச்சியடைகின்றோம்.

இன்று நாம் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது எல்லா நாடுகளுடனும் மிகவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளோம். இவ்வாறான ஏதாவது பிரச்சினைகளிருக்குமானால் அந்தந்த நாட்டு வெளிவிவகார அமைச்சோ அல்லது பிரதிநிதிகளோ அல்லது வேறு அமைப்புகள் மூலமோ அவர்கள் எம் முடன் தொடர்பு கொள்வார்கள், இது பற்றி அறிவிப்பார்கள் நாமும் அது பற்றி உடனடிக் கவனம் செலுத்தி பரிசீலிப்போம்.

ஆனால், இவ்வாறான முறைப்பாடுகள் எதுவுமே எமக்கு வரவில்லை. இதனால் இந்த அறிக்கை குறித்து நாம் மிகவும் அதிர்ச்சியடைவதுடன் கவலையுமடைகிறோம்.

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் இந்த அறிக்கை வெளியிடப்பட முன்னால் இது குறித்த உண்மைத் தன்மையை அவர்கள் பார்த்திருக்க வேண்டும். எமது பெயர் குறிப்பிடப் பட்டபடியால் எமது தலைமைப் பீடத்துடன் அவர்கள் தொடர்பு கொண்டு இது குறித்து அவர்கள் உண்மை நிலையை பரிசீலித்த பின்னர் இது பற்றி முடிவெடுத்திருக்கலாம்.

ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாதது குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியுமடைகின்றோம். இவர்களுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுகின்றோம். எமது சமாதானச் செயலகத்துடன் அல்லது அரசியல் செயலகத்துடன் தொடர்பு கொண்டும் நேரில் வருகை தந்தும் இது பற்றி விவாதித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென்பது எமது விருப்பமாகும் என்கிறார். எனினும் இந்த அறிக்கையை அவர்கள் தயார் செய்த போது புலிகளின் பதிலையும் பெறவேண்டுமென்பதற்காக `மனித உரிமைகள் கண்காணிப்பு' அமைப்பு புலிகளுக்கு கடிதமெழுதியதாகவும் ஆனால், நீங்கள் பதிலெதுவும் தரவில்லையெனவும் கூறியுள்ளதே, இது பற்றி என்ன கூறுகிறீர்களெனக் கேட்ட போது,

எமக்கு அவ்வாறான கடிதமெதுவும் வரவில்லை, எவரூடாக அந்தக் கடிதத்தை அனுப்பினார்களெனவும் தெரியவில்லை. ஆனால், மனித உரிமை அமைப்புகளுடனும் சர்வதேச சமூகத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காகத்தான் பகிரங்கமாக எமது அரசியல் செயலகங்கள் இயங்குகின்றன.

குறிப்பாக, எமது சமாதானச் செயலகம் இயங்குகிறது. அவர்கள் இராஜதந்திர மட்டத்துடனும், மனித உரிமைகள் அமைப்புகளுடனும் நேரடியாகத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். எனினும், இவர்கள் கூறுவது போல் எமக்கு எவ்வித கடிதமும் வரவில்லையெனவும் தெரிவித்தார்.

http://www.thinakural.com/New%20web%20site...h/16/news-1.htm
Reply


Messages In This Thread
[No subject] - by Bond007 - 03-16-2006, 11:18 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-16-2006, 11:46 AM
[No subject] - by Bond007 - 03-16-2006, 01:05 PM
[No subject] - by narathar - 03-16-2006, 07:48 PM
[No subject] - by அருவி - 03-17-2006, 02:58 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-17-2006, 07:53 PM
[No subject] - by puthiravan - 03-18-2006, 12:18 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 10:59 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 11:03 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 04:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)