Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்வதேச மகளிர் தினம்
#11
ஆண்- பெண் சமவுரிமை காண்போம்

சொ. அமிர்தலிங்கம்

(நேற்றைய தொடர்ச்சி)

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

ஆண்டாண்டு காலமாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு ஒரு சுகபோகப் பொருளாகவே ஆண்களால் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் பாலியல் துஷ்பிரயோகம், வரதட்சணைக் கொடுமை, விபசாரம், வறுமை, வேலைவாய்ப்பின்மை என்பன முக்கிய பிரச்சினைகளாகும். இதிகாசங்களில் கூட பெண்கள் பட்ட அவஸ்தையை நாம் அறிவோம். இராமாயணத்தில் பிறர் மனைவியான சீதையை அபகரிக்க முனைந்தான் இராவணன். இதனால் கடல் கடந்து இந்தியா சென்று சீதையைக் கடத்தி இலங்கைக்கு கொண்டு வந்தான் இராவணன். பாரதத்தில் பஞ்சாலியின் துயிலை உரிந்து சபை முன் நிறுத்த முற்பட்டான் துச்சாதனன். இப்படியாக ஆதிகாலத்திலிருந்து பெண்கள் பிரச்சினைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்தியா- பாகிஸ்தான் போர், பாகிஸ்தான்- பங்களாதேஷ் போர், ஆப்கானிஸ்தான் போர், ஈராக் போர் போன்றவற்றில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டும், பலியாகியுமுள்ளனர். பெண்கள் பல பிரச்சினைகளை தம் சிரமேல் கொண்டுள்ளனர். கணவனின் கொடுமைகள், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பயம், தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்கள், மனக்கசப்புகள், செக்ஸ் அதிருப்தி, ஆடம்பர, டாம்பீக வாழ்வு, கணவரின் சந்தேகம், பணமோகம், வறுமை, மனஅழுத்தம், போதைவஸ்துகள், வீட்டுச்சுமையும் வேலைச் சுமையும் போன்றன அவர்களது வாழ்வைச் சீரழிக்க முனைகின்றன. எனவே பெண்களை பாலியல் வன்முறைகள் உடல் ரீதியாக, உள ரீதியாகப் பாதித்துள்ளன. இலங்கையில் 1995 க்கும் 2005 க்கும் இடையில் பதினொரு வருடங்களில் 12,000 பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் முறைப்பாடுகள் புலப்படுத்துகின்றன. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட 35 சதவீதத்தினர் முறைப்பாடு செய்வதில்லை. அதற்குக் காரணம் பயம், வெட்கம், ஏழ்மை, சமுதாய இழி சொல், அச்சுறுத்தல் என்பனவாகும். 2004 இல் மாத்திரம் 1432 பாலியல் சம்பவங்கள் பொலிஸில் பதியப்பட்டுள்ளன. ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு 1995 இல் 542 முறைப்பாடுகளே இருந்தன. இலங்கையில் தினமும் 4 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பாலியல் வல்லுறடு என்பது ஒன்றைப் பொறுவதற்காக இன்னொன்றை இழத்தல், பலாத்காரமாக ஈடுபடுதல் என்பனவற்றால் ஏற்படும் உடலுறவாகும். இந்திய நீதிமன்றம் 1997 ஆம் ஆண்டு பீகார் இராஜஸ்தான் வழக்கு ஒன்றில் பாலியல் இம்சைகளை பின்வருமாறு கூறுகிறது. "உடல் ரீதியான செயல்கள், துன்புறுத்தல்கள், கோரிக்கைகள், பாலியல் இணக்கத்தன்மைக்கான வேண்டுகோள்கள், பாலியல் தன்மைகொண்ட குறிப்புகள், வரவேற்கத்தகாத உடல், வாய்மூலமான அல்லது மூலமற்ற நடத்தைகள் என்பன பாலியல் தொல்லைகளாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலும் 1995 ஆம் தண்டைனக் கோவை திருத்தச்சட்டத்தின் 22 ஆம் இலக்க 345 ஆவது பிரிவு இதை விளக்குகிறது. இதன்படி பாலியல் ரீதியான தொல்லை தருபவர்களைப் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டால் அவர்களுக்கு தண்டனைப் பணமாகவோ அல்லது இல்லாமலோ 5 வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் பணிக்கலாம். மேலும் 1998 ஆம் ஆண்டில் 20 ஆம் இலக்க 3 ஆவது பிரிவின் படியும் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு ஏற்படும் பகிடிவதை போன்றவை பாரிய குற்றங்களாகக் கருதப்பட்டு 7 வருடம் தொடக்கம் 20 வருடம் வரை கடூழியச்சிறைத்தண்டனை, நஷ்டஈடு என்பனவும் தண்டனையாக இறுக்கப்படும். மேலும் வேலைக்கு போகும் பெண்கள் வழிகளிலும், வேலைத்தளங்களிலும் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். இதனால் பெண்கள் மன உளைச்சல், உபாதைக்குள்ளாகின்றனர். எனவே இவற்றிற்கு விழிப்புணர்ச்சிக் கருத்தரங்குகள் ஏற்படுத்தப்பட்டு தற்காப்பு நடவடிக்கைகளைப் புகட்ட வேண்டும். அறிவூட்ட வேண்டும்.

கல்வியறிவுமூலமும், வேலைவாய்ப்புமூலமும், சொத்துரிமைகள் மூலமும் ஆண்கள் ஆதிகத்திலிருந்து பெண்கள் விடுதலை பெற முடியும் என்பதை இது உணர்த்துகிறது. அடிமை வாழ்வில் ஏற்பட்ட சலிப்பும், விரக்தியும் விடுதலைக்கு வித்திட்டன. பெண் விடுதலையின் பயனாக விவாகரத்தும், மறுமணம் செய்யும் உரிமையும் பலநாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளன. கற்கும் உரிமை, உயர்கல்விபெறும் உரிமை என்பனவும் உண்டு. உயர்கல்வி பெற்றோர் வேலைவாய்ப்புப் பெறச் சந்தர்ப்பங்களுமுண்டு. கணவனைத் தெரிந்தெடுக்கும் உரிமையும் இவர்களுக்குண்டு. பெண்களின் வேலைகளில் ஆண்களும் பகிர்ந்து செய்ய முடியும். வீட்டிற்கூட ஒத்துழைப்புக் கொடுக்கலாம். இது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்த விடயமாகும். 1995 ஆம் ஆண்டு தண்டனை கோவைத்திருத்தச்சட்டத்தில் ஒரு மனைவியை அவரது விருப்பமின்றி கணவன் பாலியல் உறவில் ஈடுபடுத்த முயன்றால் கடுமையான தண்டனை உண்டு. கர்ப்ப காலத்தில் தாக்கப்பட்டால் இரண்டு வருட சிறைத்தண்டனையை கணவன் அனுபவிக்க வேண்டும். மேலும் ஆளொருவர் தாக்குதலின்மூலமாக அல்லது பாரபட்சமான முறையில் அதிகாரத்தைப் பிரயோகிப்பதோ, இன்னொருவர் மீது பாலியல் இம்சைகள் புரிதலோ, வார்த்தைப் பிரயோகம் மூலம் பாலியல் சேஷ்டைகள் புரிவதோ, பாலியல் இம்சைகளாக கருதப்பட்டு சிறைத்தண்டனை அல்லது விதிப்பணம், நட்டஈடு என்பவற்றை செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். இவையாவும் பெண் விடுதலைக் கோஷங்களால், உருவானவை. போராட்டங்களால் ஏற்பட்ட சட்டமாக்கப்பட்ட பாதுகாப்புக்களாகும். 1870 ஆம் ஆண்டு உலகில் முதன் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு நியூசிலாந்து. இதனைத் தொடர்ந்து இன்று பல நாடுகளிலும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் கூட அடுத்த தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க உத்தேசித்துள்ளார்கள். குவைத் நாட்டில் முதன்முதலாக பெண்களுக்கு 2006 ஆம் ஆண்டில் தான் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்பு

பெண் விடுதலைக்காக இன்று சர்வதேச ரீதியில் பல அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன. கனேடிய சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையத்தில் சக்தி, பால் சமத்துவ செயற்றிட்டம் இன்று பிரதானமான ஒன்றாகும். இது பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றும் பொருட்டு ஏற்பட்ட உடன்படிக்கையாகும். சீடோ (THE CONVENTION ON THE ELIMINATION OF ALL FORMS OF DISCRIMINATION AGAINST WOMEN) என்னும் ஆராய்வாளர் மீது பொறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தீர்மானம் 1979 டிசெம்பர் 18 ஆம் திகதி எடுக்கப்பட்டது. இது சர்வதேச உடன்படிக்கையாக 1981 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதி செய்யப்பட்டது. 1981 ஒக்டோபர் 5 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பெண்களுக்கெதிரான துன்புறுத்தல்களுக்கு பல பாதுகாப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மகளிர் அந்தஸ்து பற்றி ஐக்கிய நாடுகள் ஆணையம் 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவர்கள் மகளிர் நிலைமையை கண்காணிப்பதும், உரிமைகளை மேம்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் வேற்றுமை காட்டலை ஒழிக்கும் சாசனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பெண்களை பாதுகாக்க விசேட அறிக்கையை வெளியிட்டது. 1975 ஆம் ஆண்டு மெக்சிக்கோ நகரில் மகளிருக்கான ஐக்கிய நாட்டு மகாநாடு நடைபெற்று தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டன. 1995 பீஜிங் மாநாடு நடைபெற்றது. 2005 ஆகஸ்ட் 29 ஆம் திகதியும் பீஜிங் மாகாநாடு நடைபெற்றது. எனவே இப்படியாக ஐக்கிய நாடுகள் சபையினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெறுமனே தீர்மானங்களாக இராது அதன் அங்கத்துவ நாடுகளில் அமுல்படுத்த அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் பெண்கள் இயக்கம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட, 1922 ஆம் ஆண்டைய பெண்கள் வாக்குரிமைச் சங்கம் முதலாவது இயக்கமாகும். இது பெண்களின் வாக்குரிமை சுதந்திரத்திற்காகப் போராடியது. இதனாலன்றோ இலங்கையில் 1931 இல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. இதன் பின்னர் பெண்கள் அரசியல் ஒன்றியம், இலங்கைப் பெண்கள் அமையம் என்பன உருவாகின. 1946 இல் இலங்கை ஐக்கிய பெண்கள் முன்னணி உருவாகியது. இது சோஷலிச பெண்கள் அணியாகவும் இருந்தது. 1978 இல் இலங்கையில் பெண்கள் பணியகம் உருவாகியது. 1983 இல் பெண்கள் விவகார அமைச்சு ஏற்படுத்தப்பட்டது. 1988 ஆம் ஆண்டு ஆண் பெண் பால் நிலை சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பால் நிலை சமத்துவ கருத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 1993 இல் அமைச்சரவையில் பெண்கள் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படியாக காலத்திற்குக் காலம் பெண்கள் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க பல செயல்முறைகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் இலங்கையில் பெண்கள் பாதுகாப்பிற்காகப் பல சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்க மூன்று முக்கிய துறைகளில் பெண்கள் பங்களிப்பு 75 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கிறது. வெளிநாடுகளில் தொழில்புரிவோர், ஆடை ஏற்றுமதிக் கைத்தொழிலில் ஈடுபடுவோர், பெருந்தோட்ட தேயிலை ஏற்றுமதியில் ஈடுபடுவோர் என்போரே அந்த மூன்று பிரிவினராகும். 2003 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலையில் ஈடுபட்டோர் 208,803 அதில் 64.5 சதவீதத்தினர் பெண்களாவர். 2003 ஆம் ஆண்டில் 164,235 பேர் வெளிநாட்டில் வேலை செய்தனர். இதில் 113,316 பேர் பெண்கள். மத்திய கிழக்கில் உழைக்கும் பெண்கள் வருடத்திற்கு 80 மில்லியன் ரூபா அந்நியச் செலாவணியாகப் பெற்றுத் தருகின்றனர். 1988- 1995 இல் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்ற 422,416 பேரில் 70 சதவீதத்தினர் பெண்களாவர். 1995 இன் ஆய்வுகளின்படி 41.5 சதவீத பெண்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஆடைத் தொழிற்சாலையில் தொழில்புரிவோரில் 90 சதவீதத்தினர் பெண்களாவர், மேலும் பெண்கள் கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சிறு கைத்தொழில்கள் என்பவற்றிலும் ஈடுபட்டுமுள்ளனர். பெண்கள் சுயதொழில் திறன்மூலம் தமது குடும்பங்களின் வருமானத்தை பெருக்க முனைந்துள்ளனர். இப்படியான ஆற்றல், திறமையுள்ள பெண்களை எப்படி நாம் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் எனக் கூற முடியும்?

(தொடரும்)


http://www.thinakural.com/New%20web%20site...9/Article-2.htm
Reply


Messages In This Thread
[No subject] - by stalin - 03-08-2006, 11:00 AM
[No subject] - by RaMa - 03-08-2006, 03:29 PM
[No subject] - by sankeeth - 03-08-2006, 07:27 PM
[No subject] - by கறுப்பி - 03-08-2006, 07:41 PM
[No subject] - by aswini2005 - 03-08-2006, 07:54 PM
[No subject] - by sathiri - 03-08-2006, 09:31 PM
[No subject] - by சுடர் - 03-09-2006, 02:21 AM
[No subject] - by sathiri - 03-09-2006, 08:42 AM
[No subject] - by kurukaalapoovan - 03-09-2006, 10:08 AM
[No subject] - by stalin - 03-09-2006, 10:21 AM
[No subject] - by sankeeth - 03-09-2006, 11:01 AM
[No subject] - by kuruvikal - 03-09-2006, 02:20 PM
[No subject] - by aswini2005 - 03-09-2006, 09:04 PM
[No subject] - by stalin - 03-10-2006, 11:11 AM
[No subject] - by kuruvikal - 03-10-2006, 02:41 PM
[No subject] - by stalin - 03-10-2006, 02:48 PM
[No subject] - by stalin - 03-13-2006, 01:19 PM
[No subject] - by KULAKADDAN - 03-26-2006, 08:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)