Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்வதேச மகளிர் தினம்
#2
ஆண்- பெண் சமவுரிமை காண்போம்

சொ. அமிர்தலிங்கம்

மனிதன் ஆரம்பகாலத்தில் வேட்டையாடித் திரிந்த வேளையில் பெண்களையும் வேட்டைக்கு அழைத்துச் சென்றான். ஆணுக்கு ஆதரவாகப் பெண் இருந்தாள். பெண்ணுக்குப் பாதுகாப்பாக ஆண் இருந்தான். ஆனால், வேட்டையாடியோர் நாட்கணக்காக காடுகளில் இருக்க வேண்டிய நிலையும் வனவிலங்குகளின் தாக்குதல்களும் இடம்பெறத் தொடங்கவே பெண்களை வீட்டினில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வேட்டைக்குச் செல்ல நேர்ந்தது. இது பின்னர் நாடோடிச் சமுதாயத்திலிருந்து இனக்குழுச் சமுதாயமாக மாறியது. இந்த வீட்டினுள் முடங்கிய நிலை தான் ஆரம்பத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தமாகும். வீட்டினுள் சுகபோகப் பொருளாகவும், சமையல் செய்பவராகவும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உரியவராகவும், முதியோரின் பராமரிப்பாளராகவும் உடைகள் சுத்தம் செய்பவராகவும், வீடு வளவு சுத்திகரிப்பவராகவும் மருந்து கொடுக்கும் மருத்துவராகவும், மனைவியாகவும், தாயாகவும், சகோதரியாகவும் வீட்டினுள் இருந்தவாறே பல சுமைகளைச் சுமக்க வேண்டிய நிலைக்குள்ளானாள். இப்படியாக வீட்டுச்சிறை அவர்களுக்கு விடுதலை உணர்வைத் தூண்டியது. இதனால் பெண் விடுதலை, புரட்சி எண்ணங்கள், மறுமலர்ச்சி, அங்கலாய்ப்பு என்பன பெண்களிடம் தோன்றின. பெண்கள் ஆண்களுக்கு சரி நிகரானவர்கள், சரிசமமானவர்கள் என்ற எண்ணமும் அவர்களிடையே தோன்றியது. இந்தச் சிறைக்கூடங்களான வீடுகளிலிருந்து வெளி உலகை நாடி விடுபட அவர்கள் முனைந்தனர். "உற்பத்தி சக்தி உள்ளவர்கள் ஏற்படுத்தும் உறவே சமுதாய நிருவாகம்" என கார்ல்மாக்ஸ் கூறியுள்ளார். ஆண்கள் உற்பத்திச் சக்தியைப் பெற்றதனால் வீட்டினுள் பெண்கள் அடைபட்டனர். இதனால் அடிமைத்தனம் உருவாகி அது விடுதலை வேட்கைக்கு வித்திட்டது. ஆண்டான், அடிமை என்ற சமுதாயம் உருவாகியது. ஆண் ஆள்பவனாகவும் பெண் அடிமையாகவும் கணிக்கப்பட்டாள். தமது கணவனின் சொத்துகளை பராமரிக்கத் தேவையான சக்தியைப் பெற்றுத்தரும் கருவியாக பெண் பயன்படுத்தப்பட்டதனால், அவளிடம் விடுதலை எண்ணம் உதயமானது. இரண்டாம் நிலையினராக ஆண்கள் பெண்களை கருதிய நிலையை மாற்றமுனைந்தனர்.

கிரகித்தல் தன்மையில், பதில் சொல்லும் ஆற்றலில் ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் திறமைசாலிகள் என ஆய்வுகள் கூறுகின்றன. கிரகித்தலிலும், சொல்லும் தன்மையிலும் ஆண்களின் மூளை ஒரு சத வீதமாக இயங்கும் போது பெண்களின் மூளை ஆறு சதவீதமாக இயங்குகிறது என்பர் ஆயவாளர்கள். எனவே, கிரகிக்கும் தன்மை, புரிந்துணரும் தன்மை, பொறுமை, உரிய பதில் கூறும் தன்மை, சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயலாற்றும் திறமை, பெண்களிடம் அதிகம் உண்டு. குடும்பமானது வறுமையில் துவளும் போது ஆண்கள் செய்வதறியாது இருக்கும் நிலையில், பெண்கள் இருப்பதைக் கொண்டே குடும்பத்தை நடத்தக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். இன்னல்களுக்குத் துவண்டு விடாது, புத்துணர்வூட்டி குடும்பத்தை பரிதவிக்க விடாது செலுத்துபவள் பெண்ணே. பெண்கள் வீட்டுக்காக மட்டுமல்ல நாட்டுக்காகவும் உழைத்துள்ளனர். தமிழகத்தில் மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் வீரவேங்கைகளாக இருந்து, பெண்கள் தமது பிள்ளைகளை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பியதை புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் கூறுகின்றன. சென்று வா மகனே! வென்றுவா! என தட்டிக் கொடுத்து அனுப்பும் பெண்கள் எம்மிடையே இருந்துள்ளனர். 15 ஆம் நூற்றாண்டிலே பிரான்சு பிரித்தானியாவின் அச்சுறுத்தலுக்குள்ளாகிய போது பிரான்சு நாட்டு மன்னன் சாள்ஸ் செய்வதறியாது மறைந்து வாழ முற்பட்டான். அப்போது வீரவேங்கையாக ஜோன் ஒப் ஆர்க் என்னும் பெண்மணி சாள்ஸ் மன்னனுக்கு உறுதுணையாக இருந்து ஆண் உடைதரித்து போராடி உயிர் துறந்தாள். இவர் வீரப்பெண்களின் முன்னோடி. இவள் ஆணுக்குச் சமனாக சமரில் ஈடுபட்டாள் என்பது வரலாறு தந்த உண்மை.

பெண் விடுதலை

18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் பெண்கள் விடுதலைக்காகப் போராட்டங்கள் வெடித்தன. 1792 ஆம் ஆண்டு மேரி வோல்ஸ்டன் கிராப்ட் எழுதிய "பெண்களது உரிமைகளினை நியாயப்படுத்தல்" (VINDICATION OF THE RIGHTS OF WOMEN) என்ற நூல் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களின் உரிமைகள் பல எடுத்து இயம்பப் பெற்றன. 1830 இல் அமெரிக்காவில் பெண் விடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. 1869 இல் இங்கிலாந்து தேசத்தவரான ஜான்ஸருவர்ட்மில் எழுதிய "பெண் அடிமை நிலை" என்னும் நூல் உணர்ச்சி பூர்வமான நூலாக அமைந்தது. 1848 ஆம் ஆண்டு நியுயோர்க் நகரில் பெண்களின் உரிமைக்காக ஒரு மகாநாடு நடைபெற்றது. அதில் அரசியலும், சொத்துரிமையும் தான் விடுதலைக்கு வழிவகுக்கும் என எடுத்து இயம்பப்பட்டது. இந்த மகாநாடுதான் நியுயோர்க்கில் செனிகாபோல்ஸ் நகரில் நடைபெற்ற பெண்ணிலைவாத முதலாவது மகாநாடாகும். இதில் பெண்ணிலைவாதிகள் பலர் கோரிக்கைகள் பல விடுத்தனர். திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, கல்வியில் அதிக வாய்ப்பு, தொழில், வணிகத்துறையில் வாய்ப்பு, சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சலுகைகள், அரசியல் பிரதிநிதித்தும், வேலை வாய்ப்புகள், கருச்சிதைவு உரிமை, குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்குரிய சலுகை, விவாகரத்து என்பன பிரேரிக்கப்பட்டன. இந்த மகாநாட்டின் பிரதிபலனாக அமெரிக்காவில் விவாகரத்து முதன்முதலாக சட்டமாக்கப்பட்டது. 1897 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பெண்களுக்காக வாதாடியவர் பாஸெட் அம்மையார். அடிமை முறையை ஒழிக்கப் பாடுபட்ட பெண்மணி எலிசபெத்ஸ்டான்டன் என்பவரையும் வரலாறு மறுக்க முடியாது. 1960 இல் அமெரிக்காவில் "தேசிய பெண்கள் அமைப்பு" (NATIONAL ORGANISATION OF WOMEN) ஏற்படுத்தப்பட்டது. இது பெண்களின் உரிமையைப் பெற்றுக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமாகும். பெண்ணியக் கொள்கைகள் இன்று சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன. பெண்மை என்பது பெண்களுக்குத்தான் உரியது என்றும், ஆண்மை என்பது ஆண்களுக்குத் தான் உரியது என்றும் உள்ள சித்தாந்தத்தை எதிர்க்கிறது. பெண்ணியம், கிரேக்க யுத்தத்திலே பெண்மைக்காகப் போராடிய லைஸிஸ்ராட்ட என்பவர் தனது நோக்கில் வெற்றி கண்டார். ஆணாதிக்கத்திற்கு எதிராக மட்டுமன்றி சம கூலி, சம வாய்ப்பு, சம உரிமை, மனித விடுதலை என்பவற்றிற்கும் போராடினார். ரேஸ்ரஸே என்பவர் 1860 தொடக்கம் 1890 வரை பெண் விடுதலைக்காக தன் வாழ்வினையே அர்ப்பணித்தார். "ஆசியாவிலே பெண்களும் கல்வி அபிவிருத்தியும்" என்னும் கிறேஸ் சி.எல்.மார்க் எழுதிய நூல் நியுயோர்க்கில் வெளியிடப்பட்டது. இந்த நூல் பெண்களின் கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், பொருளாதாரப் பங்களிப்பு என்பன பற்றி ஆராய்ந்துள்ளது. இதில் ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, தாய்வான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை என்னும் நாடுகளிலுள்ள பெண்களின் நிலை பற்றி ஆராய்ந்துள்ளது. பெண்களை உழைப்பிற்குப் பயன்படுத்துதலும், குறைந்த செலவில் உழைப்பைப் பெறுவதும் ஆசிய நாடுகளில் அதிகரித்துள்ளது என்பதை இந்நூல் விளக்கும். பெண்களுக்குரிய தனியான சில பண்புகள் தான் அவர்களை தாழ்வு மனப்பான்மைக்குட்படுத்தியுள்ளன. அவர்களது இளகிய மனம், அழகு, இரக்ககுணம், விட்டுக் கொடுக்கும் தன்மை, பயந்த சுபாவம், பரிதாபகுணம், மென்மை என்பன அவர்களது விழுக்காடுகளாகக் காணப்படுகின்றன. எனவே, அவர்களது அபிலாஷைகள், தேவைகள், உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பனவற்றை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கட்டாய பொறுப்பாகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் பெண்களுக்கு உரியவை. இவற்றிற்றான் பெண்மை பொதிந்துள்ளது. எனினும், அவள் வீரப்பெண் பரம்பரையைச் சேர்ந்தவள் என புராணங்கள் கூறுகின்றன.

பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம்

பெண்ணியம் என்பது பெண்ணிலை வாதமாகும். இது 1869 இல் செயற்படத் தொடங்கிய ஒரு அமைப்பாகும். பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது காலங்காலமாக அடிமைத்தளையில் வாழும் பெண்களுக்கு விடுதலை வேட்கை ஊட்டி, கல்வி அறிவு மூலம் விழிப்புணர்ச்சியடையச் செய்யும் முறையாகும். அத்துடன் ஆண்களுக்குச் சரி நிகரானவர்கள் பெண்கள் என்பதையும் இது வலியுறுத்துகின்றது. இது பெண்களின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. பெண்ணியமானது பெண்களின் சிக்கல்கள், பிரச்சினைகளைப் புரிந்து விடுபட எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். பெண்களை அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற அரசியல் பிரதிநிதித்துவம் பெற ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். எனவே, பெண்ணியம் என்பது பெண்களின் நிலைமை மாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமாகும். பெண்ணியம் மூலம் ஒரு சமூகத்தை நடாத்தும் ஆற்றல் பெறலாம். எனவே, விடுதலைக்கு உரிமைக்குரல் கொடுக்கும் இலக்கை அடிப்படையாகக் கொண்டதே பெண்ணியமாகும்.

பால் நிலைவாதம்

பால் நிலைவாதம் என்பது இருபாலாரான ஆண், பெண் ஆகியவர்களை இணைத்து நோக்கும் ஒரு பதமாகும். பால் நிலை என்பது உயிரியல் உருவாக்கமல்லாத சமூக உருவாக்கமாகும். பாலியல் என்பது உயிரியல் அடிப்படையாக ஆண், பெண் பால் வேறுபாட்டைக் குறிக்கும். ஆனால், பால் நிலைவாதத்தில் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தமானவை என வெவ்வேறு உருவாக்கங்களுண்டு. பெரும்பாலும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளமையே அதிலுள்ள குணவியல்பாகும். ஆண், பெண் என்போரின் தேவைகள், உரிமைகள், பொறுப்புகள், பங்களிப்பு என்பனவற்றை பால் நிலைவாதம் நோக்கமாகக் கொண்டது. எனவே, சமூகமானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைகளில் ஒன்று பால்நிலை வாதமாகும். பால் நிலைவாதத்தில் பெரும்பாலும் பெண்கள் ஆண்களில் தங்கியுள்ளனர். தீர்மானம் எடுத்தலில் ஆணின் முக்கியத்துவம் அதிகரித்துக் காணப்படும். எனவே, பால் நிலைவாதத்திலும் பார்க்க பெண்கள் சரிநிகராக வாழ பெண்ணியம் மூலமே முயற்சி செய்கின்றனர்.

மதக்கோட்பாடுகளும் பெண்களுக்கெதிராக ஆண்களுக்குச் சாதகமான கருத்துகளையே தெரிவிக்கின்றன. சகல மதங்களும் பெண்களை இரண்டாவது நிலையிலேயே கணிக்கிறது. ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர் கூட பெண்ணாயில்லை. முழுச்சீடர்களும் ஆண்களே. புத்தபிரான் இல்லறத்தில் மனைவியைத்துறந்து பௌத்தமத போதனையில் ஈடுபட்டார். இந்து சமயகுரவர்களான நால்வரும் ஆண்களே. இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு பள்ளிவாசல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்களை இரண்டாந்தர நிலைக்கு தள்ளிய மதக்கோட்பாடுகளை உடைத்தெறிந்து முன்னேற பெண்ணியவாதிகள் முனைந்துள்ளர். இஸ்லாம் மதத்தில் பெண் மொட்டாக்குடன் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டாள். சுதந்திரமாக அவள் வெளியே செல்ல முடியாதவாறு மதம் கட்டுப்படுத்தியது.

-தொடரும்.

--------------------------------------------------------------------------------
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-1.htm
Reply


Messages In This Thread
[No subject] - by stalin - 03-08-2006, 11:00 AM
[No subject] - by RaMa - 03-08-2006, 03:29 PM
[No subject] - by sankeeth - 03-08-2006, 07:27 PM
[No subject] - by கறுப்பி - 03-08-2006, 07:41 PM
[No subject] - by aswini2005 - 03-08-2006, 07:54 PM
[No subject] - by sathiri - 03-08-2006, 09:31 PM
[No subject] - by சுடர் - 03-09-2006, 02:21 AM
[No subject] - by sathiri - 03-09-2006, 08:42 AM
[No subject] - by kurukaalapoovan - 03-09-2006, 10:08 AM
[No subject] - by stalin - 03-09-2006, 10:21 AM
[No subject] - by sankeeth - 03-09-2006, 11:01 AM
[No subject] - by kuruvikal - 03-09-2006, 02:20 PM
[No subject] - by aswini2005 - 03-09-2006, 09:04 PM
[No subject] - by stalin - 03-10-2006, 11:11 AM
[No subject] - by kuruvikal - 03-10-2006, 02:41 PM
[No subject] - by stalin - 03-10-2006, 02:48 PM
[No subject] - by stalin - 03-13-2006, 01:19 PM
[No subject] - by KULAKADDAN - 03-26-2006, 08:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)