Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
#8
கோதண்டம் ஏந்திக் குவலயத்தைக் காக்க மானுட வடிவில் வந்த இராமனும், உலகமுய்ய வந்துதித்த ஒரு திருமுருகனும், வென்றிலங்கு கதிராழி விசயதரன் என உதித்த குலோத்துங்கனும் ஒரே சுருதியில் புலவர்களால் போற்றப் படுவதும் கவனிக்கத் தக்கதே.

இரண்டாவதாக, தலையாய வர்க்கத்தினராக - உடையராக இருந்த வேளாளரை எடுத்துக் கொள்வோம். சோழர் காலத்திலே வேளாளரைப் பற்றிய தெய்வீகக் கதைகள் வேகமாக உருப்பெறலாயின. "சிவன் பார்வதி முயற்சியால், நிலத்திலிருந்து மனிதத் தன்மையும் தெய்வத் தன்மையும் சேரப் பொருந்திய ஒருவன் தோன்றினான். அவன் கையில் கலப்பையும் கழுத்தில் மலர் மாலைகளும் காணப்பட்டன. அவன் வழியினரே வேளாளர்" என்னுங் கருத்து உருவாகியது.43 சோழர் காலத்திலே உயர்நிலை எய்திய புதிய நிலப்பிரபுத்துவம் நிர்வாக வர்க்கம் மிகக் குறுகிய காலத்திலே தம்மைப்பற்றிய புராதன மரபுக்கதைகளைச் சிருட்டித்துக் கொண்டது என்பதுபற்றி வரலாற்றாசிரியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.44

மன்னரும் பிரபுக்களும் சிவப்பேறுடையவராய் - தெய்வாம்சம் பொருந்தியவராய் இருந்தனர். என்று நயம்பட்ட அந்நிலையில் தென். தமிழ்நாடு சிவலோகமாய்க் காட்சியளித்தது. தூய்மையான சிவலோகத்தில் யாவரும் வாழ்வதுபோன்ற ஒரு பொய்மை (Illusion) உண்டாக்கப்பட்டது. இதன் தத்துவார்த்த வெளிப்பாடே சிந்தாந்தமாகும். மேற்கூறிய பொய்மையினை உண்மையே எனக் கொள்பவர்கள் இன்றும் நம் மத்தியில் உள்ளனர்.

"சிவஞானப் பேற்றில் பேரார்வமும், சிவத்தொண்டில் பேரூக்கமும், திருத்தொண்டர் வரலாற்றில் பேரன்பும் மக்களிடையே பெருகின; நாட்டில் எவ்விடத்தும் சிவன்கோயில்; எவர் நெஞ்சிலும் சிவஞானம்; எவர் மொழியிலும் சிவநாமம்; எவர் மேனியிலும் சிவவேடம்; எவர்பணியும் சிவப்பணி; எங்கும் எல்லாம் சிவமேயாய்ச் சிறந்து நின்றமையின், தென் தமிழ் நாடு சிவலோக மயமாய்க் காட்சியளித்து."45

சிவலோக மயமாய்க் காட்சியளித்தது சமயம் சிருட்டித்த பிரமை என்றே கொள்ளல் வேண்டும்.

ஒவ்வொரு நாகரிக நிலையிலும் மனிதன் தான் வழிபடும் தெய்வங்களுக்குத் தனது கால வாழ்க்கை முறை, அரசியல் அமைப்பு, சமுதாய ஒழுங்கு ஆகியவற்றினைப் பிரதிபலிக்கும் பண்புகளைப் பொருத்தி வழிபடுகிறான். இதன் காரணமாகவே சில காலங்களிலே பெரு வழக்கமாக இருக்கம் தெய்வங்கள் வேறு சில காலங்களிலே இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள். ஆசிரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காலப் பகுதியிலே இந்திரன், பிரசாபதி போன்ற வீரமும் தீரமும் நிறைந்த தெய்வங்களை வழிபட்டனர். வச்சிராயுதம் ஏந்திய வேதகால ஆரியக்கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடப்பதுபோல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடும்.46 ஆனால் வேதகாலத்துக்குப் பிற்பட்ட இந்து சமய வளர்ச்சியிலே வேதகாலக் கடவுளர்கள் முக்கியத்துவமிழந்து விடுகின்றனர். சிவன், விட்டுணு, பிரம்மா முதலிய புதிய தெய்வங்கள் முன்வரிசையிற் காணப்படுகின்றனர். அதைப்போலவே புராதனத் தமிழகத்திலே வணங்கப்பட்ட கொற்றவை பிற்காலத்திலே வேறு வடிவமும் குணமும் பெற்றுவிட்டாள். அதைப்போலவே சிவ வழிபாடும் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமே நிலப்பிரபுத்துவத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இந்தியா எங்கணும் சைவம் பெருநிலக்கிழார்களின் ஒழுகலாறாகவும், சிவன் அவர்களின் தனிப்பெரும் இட்ட தெய்வமாகவும் அமைந்தமை கவனிக்கத்தக்கது.47 சோழர் ஆட்சியில் இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்த சைவ சமயாசாரியாருக்கும், சைவ சமய நிறுவனங்களுக்கும், தமிழகத்தில் இருந்த பெரியாருக்கும் நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு நிலவியது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.48

சோழர் காலத்திலே காணப்பட்ட சமுதாய அமைப்பும் அரசியல் முறையும் வாழ்க்கை ஒழுக்கம் சித்தாந்தம் காட்டும் இறைவனில் சிவனில் - பதியில் - தமது சாயலைப் பொறித்துள்ளன என்று நாம் நிரூபிக்க முடியுமாயின் பேரரசுக்கும் பெருந்தத்துவத்திற்குமுள்ள தொடர்பு மேலும் தெளிவாகுமல்லவா? அறிந்தோ அறியாமலோ திராவிடமாபாடிய கர்த்தராகிய சிவஞானசுவாமிகள் நமக்கு இத்துறையில் வழிகாட்டியுள்ளனர். மெய்கண்டாருடைய சிவஞானபோதச் சூத்திரங்களுக்கு ஈடிணையற்ற மாபாடியம் எழுதியவர் மூல நூலை அனுசரித்துப் பலவிடங்களில் இறைவனையும், ஆன்மாவையும் விளங்குவதற்கு அரசனையும் அவனைச் சார்ந்தோரையும் உருவகப்படுத்தியிருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. எட்டாஞ் சூத்திர உரையிலே மேல்வருமாறு கூறியுள்ளார்.49

"வெண்கொற்றக் குடையும், நவமணி முடியும், சிங்காதனமும் மன்னவர்கேயுரிய சிறப்படையாளமாம். அதுபோலப், பிரபஞ்சமெல்ல வற்றிற்கும் மூல காரணமாகிய ஒருபெரு வெண்கொற்றக் குடையும் எவற்றையும் ஒருங்கே ஓரியல்பான் அறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ்சுடர் முடியும், எவற்றினையும் அங்கங்கே உயிர்க்குயிராய் நின்று செலுத்துமியல்பாகிய ஒரு பெருஞ் சிங்காதனமும் பிறர்க்கின்றித் தனக்கே உரிமையாகச் சிறந்தமை பற்றிப் பசுக்களுக்குப் பாசங்களை அரித்தலான் அரனென்னுந் திருப்பெயருடைய முதல்வனை மன்னவனாகவும், அம்முதல்வனது பேரானந்தப் பெருஞ் செல்வமுழுந் தனதேயாகக் கொண்டு, அனுபவிக்குஞ் சுதந்தர முடைமையுஞ் சித்தெனப்படுஞ் சாதியொப்புடையும் பற்றி ஆன்மாவை மன்னவ குமாரனாகவும், அவ்வான்மாவை அறிவுப் பெருஞ்செல்வம் முழுவதும் ஆறலைத்து இழி தொழிலில் நிற்பித்தலுமாகிய இயல்பு பற்றி ஐம்பொறிகளை வேடராகவும் உருவகஞ் செய்தார். இஃதே கதேசவுருவகம்."

மெய்கண்டார் சூத்திரங்களுக்கு மூலத்தையொட்டி நின்று விரிவுரைகூறும் சிவஞானமுனிவர் கூற்றுக் கவனிக்கத்தக்கது. 'உருவகஞ் செய்தார்' என்னும்பொழுது மெய்கண்டார், 'காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூறுகின்றார்.' என்றே உரைகாரார் உரைக்கின்றார். ஆனால் முதனூலாசிரியர் கண்ட உலகம் எது? அதிலேதான் காணப்படாத பொருளின் தன்மையும் தங்கியுள்ளது. ஒட்டக்கூத்தரும், கம்பரும், செயங்கொண்டாரும், சேக்கிழாரும் வாழ்ந்த அதே ஏகாதிபத்தியப் பேரரசின் பண்புகளைக் கொண்டே வேளாளராகிய மெய் கண்டார் மெய்ப்பொருளுண்மைகளை விளக்குகிறார் என்னும் உண்மையினை நாம் இலகுவில் மறுத்தல் இயலாது. சங்க காலத் தமிழகத்திற் காணப்பட்ட சின்னஞ்சிறு நிலப் பரப்புகளை ஆண்ட "குட்டி" மன்னர்களல்லர் சோழச் சக்கரவர்த்திகள். அவர்கள் அவனி முழுதுமாண்டவர்கள்; திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்று தம்மைத் தாமே, தமது கல்வெட்டுக்களிற் குறிப்பிட்டுக் கொண்டவர்கள். அவர்களைப் பெரும்பாலான மக்கள் தெய்வமாகவே தொழுதவர்கள். அத்தகைய சூழலில் மெய்கண்டார் தெய்வத்தை விளக்குதற்குச் சோழமன்னரை உருவகஞ் செய்தது பொருத்தமானதன்றோ. பல்லவர் காலக் கவிஞர் சிற்றின்ப உறவுகளின் வடிவத்திலே பேரின்பக் குருத்துக்களைக் கூறி முடித்ததுபோல இதனை இன்னொரு வகையாகவும் நோக்கலாம். சாத்திர நூல்கள் முதல்வனாக இறைவனுக்குக் கூறும் பண்புகளைத் தலைமைபற்றி அவனுக்குள்ள இயல்பைக் கூறுவன. அக்கருத்துக்கள் மக்கள் நெஞ்சிலே, பொதுவாகத் தலைமை பற்றியும், நல்லெண்ணத்தையும் உண்டாக்குவன. எனவே அவ்வுணர்வு தலைவராக இருந்து நாடாண்டவருக்குச் சாதகமாக இருந்து உதவின. அரசனுடைய இல்லத்துக்கும் பெயர் கோயில்; தெய்வம் உறையும் ஆலயத்திற்கும் பெயர் கோயில்; எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்காசனமும் பெயர் கோயில்; எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்காசனமும் தேவாலயங்களும் பரஸ்பரம் ஒன்றிற்கொன்று உதவிசெய்து வாழ்ந்தன என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர் கூறுவதில் எத்துணை உண்மை பொதிந்துள்ளது! கோயிலின் இரட்டைத் தோற்றங்கள் எவ்வளவு பொருத்தமாயுள்ளன!!

மற்றோர் உதாரணத்தைப் பார்ப்போம். தலைவனுக்கு எண்குணங்களைக் கூறுகின்றன சைவாகம50 நூல்கள். எண் குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவுஇல் ஆற்றல் உடைமை, வரம்புஇல் இன்பம் உடைமை என இவை, ஆளும் வர்க்கத்தினருக்கு ஆற்றலும், அறிவும் இன்பமும் உடையவனாயிருத்தல் என்று சித்தாந்த சாத்திரங்கள் விதிக்கும்பொழுது, தலைமைப் பதவியிலிருந்து சமயச்சார்புடன் ஆட்சி புரிந்தவர்களுக்கு அச்சாத்திரத் தத்துவங்கள் தோன்றாத் துணையாக இருந்தன என்பதைக் கூறுவேண்டுமோ? சித்தாந்த சாத்திர நூல்களிலே பதியிலக்கணம் கூறப்படுமிடங்களில் அரசனை - பேரரசனை - மனத்திலிருத்திப் பார்ப்போமாயின் இவ்வுண்மை தெற்றெனப் புலனாகும்.

தலைவனை உயர்த்திய அச்சமுதாயம் சாதாரண ஏழை உழவர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்தது. இது அக்காலப் பொருளாதார முறையின் - சமூக உறவின் - பண்பு என்பதை முன்னர்க் கண்டோம். இதன் சாயல் தழுவிய முறையில் ஆன்மாக்களைப் பற்றிக் கூறியது சிவஞானபோதம். அதன் வழி நூல்களும் சார்பு நூல்களும் அதனையே மீட்டும் மீட்டும் வலியுறுத்தின. சுருங்கக் கூறின் பொருளாதாரத் துறையிலே காணப்பட்ட பிரதானவர்க்க வேறுபாட்டினையே - ஆண்டான் அடிமை உறவினையே - இறைவனுக்கு உயிருக்குமுன் உள்ள உறவாக வருணித்தது தத்துவம். சிற்றுரை மேல்வருமாறு கூறும்.51

"......முதல்வனது வியாபகத்தை நோக்கி வியாப்பியமாகலின், அப்பாசங்கள் உடைமையாம்; பசுக்களாகிய நாம், அடிமையாவேம் அம்முதல்வன் மாட்டு..."

இறைவனின் அடிமைகள் பசுக்களாகிய ஆன்மாக்கள் என்று சித்தாந்தம் தத்துவார்த்த விளக்கம் கொடுத்தது. நிலப்பிரபு தனது அடிமைகளை வைத்து வேலை வாங்க இத்தத்துவம் எத்துணை உதவியாயிருந்தது என்பதனை மேலும் எடுத்து விளக்கத் தேவையில்லை. ஆனால் அத்துடன் நின்றுவிடவில்லை சித்தாந்தம். அற்புதமான அதன் தருக்க இயல்பு ஆன்மாவின் சார்புத் தன்மையையும் அழுத்தத்திருத்தமாக வற்புறுத்தியது. விரும்பியோ விரும்பாமலோ உழவுத் தொழிலே உவமையாகக் கொள்ளப்பட்டுள்ளது.52 மீண்டும் சிவஞான யோகிகள் சொற்களையே துணைக்கொள்வோம்.

"....அற்றேல், அவ்வினையே பயனாக வருமெனவமையும், முதல்வன் ஏற்றுக்கெனின்:- உழவர் செய்யுந் தொழிற்குத் தக்கபயனை விளைநிலம் விளைவிப்பதன்றி அத்தொழிறானே விளைவிக்கமாட்டாதது போல, உணவும் வித்துமாய்த் தொன்றுதொட்டு வரும் அவ்வினைகளை வள்ளலாகிய முதல்வனே அவ்வுயிர்கட்குக் கூட்டுவன்; அவ்வாறன்றி வினைதானே உயிர்கட்குப் பயனாய் வந்து பொருத்தமாட்டாது வள்ளல் என்றார், தற்பயன் குறியாது வேண்டுவோர் வேண்டியவாறே நல்கும் அருளுடைமை நோக்கி... மேல் முதல்வனுக்கு வினைவேண்டப் படுமென்பதற்கு அரசனையுவமை கூறினார்; ஈண்டு வினைமுதல்வனை இன்றியமையாதென்பது உணர்த்துதற்கு உழவுத் தொழிலை யுவமை கூறினாரெனக் கொள்க."

அடிமையின் இயல்பினைக் கூறப் புகுந்தவர் அவனது செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் முடியாது. ஆண்டானால் கட்டுப்படுத்தப்பட்டவனுக்குத் தனது தொழிலின் இலாபத்தை அனுபவிக்கும் உரிமை கிடையாது. ஆண்டை கொடுப்பதைக் கண்டு கொள்ள வேண்டியதுதான். அவன் வள்ளல், என்று தலைமை பேசுகிறது பொருந்தமாட்டாது" என்று உரைகாரர் விளக்கந் தருவது கூர்ந்து நோக்கத்தக்கது. பல்லவர் காலப் பக்தியிலக்கம் 'புறச்சமயங்களான சமண-பௌத்தத்தை எதிர்த்தன என்பது யாவருமறிந்த உண்மை. சமணத் தத்துவமே தாக்கப்பட்டது. சமண தத்துவத்தின் அடிநிலைகளில் ஒன்று வினைப்பயனின் நிலைபேறுடைமை.53 முன்பே செய்துகொண்ட பழவினைப் பயன்களை ஒருங்கே நுகர்ந்து கழிப்பதாகிய அது வீடு பேறாகும் என்று கூறும் சமணம். 'ஊழ்வினை உருத்துவந் தூட்டும்' செய்தொழில் வினைகளுக்கேற்ப வாழ்வும் தாழ்வும் அமைகின்றன என்று சமுதாய நியதி கூறியது சமணம். சிவிகையைக் காவுவானைக் காவச் செய்தும் சிவிகையைச் செலுத்துவானைச் செலுத்த வைக்கும் சிறப்பைக் கொடுப்பதும் வினையே என்று காட்சியளவைக் கொண்டே சமுதாயநீதி வகுத்தது குறல் போன்ற சமணச் சார்புள்ள அறநூல். இந்தத் தத்துவ நியதியைத் துணையாகக் கொண்டு வணிகவர்க்கம் ஈன இரக்கமற்ற முன்னணியொன்று அமைத்து வணிக வர்க்கத்தினருக்கு எதிராக இயக்கம் நடத்திய நிலவுடைமையாளர் தத்துவத்துறையிலே வினைப்பயனுக்கு எதிரான மாற்றுத் தத்துவம் நிறுவினர். அவனருளாலே அவன்தாள் வணங்கி, வினைகெட்டு நற்கதியடையும் பக்திமார்க்கத்தைக் கடைபிடித்து, வினைப்பொறியிலிருந்து 'விடுபட' வழி கண்டனர் அரன் அடியார்கள். எனவே இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகியது ஊழ், வினைப்பயன் என்று கூறிய சமணத்துவமும், அடியார்கள் செய்த கொடிய வினைகளை யொழிக்கின்ற கால வெல்லையுமாய் நின்று அவ்வினைகளைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றியருள்பவன் இறைவன் என்று உரத்துக் கூறிய சிவஞானமும் எதிர் மறைகளாக இருந்தன. இன்னொரு விதத்திலே கூறுவதாயின், "அவரவர் வினைப்பயனுக்கு அமைந்ததே வாழ்வு" என்று கூறு இடமளித்த சமண சமயத் தத்துவத்தின் மத்தியில் பணக்காரன் மேலும் பணக்காரனான். ஏழை தலைவிதியை எண்ணி நொந்து கொண்டு வாளாவிருக்க வேண்டியிருந்தது. "அப்படி யொன்றுமில்லை, விதியும் வினையும், பிறப்பும் இறப்பும் இறைவனால் அருளப்படுவனவே, ஆகையால் வல்வினைப்பட்டு ஆழாமற் காப்பானை அடைந்துகொள்" என் நாயன்மார் இயக்கக் குரல் எழுப்பிய பொழுது வேடரிலிருந்து குயவர் வரை யாவரும் காதலாகிக் கசிந்தனர். சமணப் பிடியிலிருந்து, அதாவது வணிக வர்க்கத்தினரின் பொருளாதாரச் சுரண்டலிலிருந்து தப்பிச் செல்ல இதுவே உகந்த உபாயமாக இருந்தது. பக்தி இயக்கம் பொதுசன இயக்கமாகவும் புறச் சமயத்தவர்பால் வெம்மையும் வெறுப்பும் நிறைந்ததாகவும் இருந்ததன் உண்மையான காரணம் இதுவே. இவ்வாறு "யார் எல்லோரும் அரனடியார்கள்; சேரவாரும் செகத்தீரே" என்று பொதுமை பேசிய அதே சைவ உணர்வானது சிறிது காலத்தின் பின்னர், அதாவது சோழர் காலப்பகுதியிலே நிறுவன வடிவம் பெறத் தொடங்கிய போது பலரை அடிமைகளாகவே வைத்திருந்தது. நுணுகிப் பார்க்கும் போது இது நூதனமாகக் தோற்றாது. ஏனெனில் இயக்க இயல்விதியின் பண்பு அது. முரண்பாடு என்பது இயக்க இயலின் ஒரு முக்கியமான விதி. எதிரெதிரான சக்திகளிடை நடக்கும் போர்தான் பரிணாமம் என்பது; ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறுகிறது மட்டுமல்ல; அது தனது எதிர் மறையாகவும் தன்னை மாற்றிக் கொள்கிறது54 இதனையே எதிர் மறைகளின் ஒற்றுமை என்று மார்க்ஸ“ய தருக்கவியல் கூறும். இது சம்பந்தமாகவே ஏங்கெல்ஸ் ஒரு சந்தர்ப்பத்தில் மேல்வருமாறு கூறினார். "இன்று எதை உண்மை என்று கருதுகிறோமோ அதில் அதன் பொய் அம்சமும் அடங்கியுள்ளது. அந்தப் பொய் அம்சம் தன்னைப் பின்னால் வெளிப்படுத்திக் கொள்ளும்" சைவநெறி சோழர் காலத்திலே இப்பண்பினுக்கும் விதியினுக்கும் உட்பட்டுக் கொண்டிருந்தது.

பல்லவர் காலத்திலிருந்து கிடைத்த அருஞ் செல்வமாக பேணித் தத்துவத்தின் தூண்களில் ஒன்றாகச் சோழர் காலச் சித்தாந்திகள், இளைபணியினை அமைத்தனர். தமிழரின் பண்டைய அன்பு நெறியிலே முகிழ்த்த கனியே இக்கருத்து என்று எளிதில் உணர்த்தி விடலாம். அன்பினைந்திணையிலேயே இவ்வுணர்வு ஆரம்பித்து விட்டது என்பர் தமிழறிஞர்55

"நான் என்ற முறைப் பற்று, புனல் வழியோடும் மிதவைபோல, பால்வழி என்னும் இறைவன் வழியோடுவதே அன்பு என்பர் நக்கீரர். எல்லாவற்றையும் இயங்கம் ஆற்றலை எதிர்த்து நிற்காமல் முனைப்பற்றுத் திருவருள்வழி நிற்றலையே மெய்கண்டார் இறைபணி நிற்றல் என்பர். உமது இராச்சியம் வருவதாக (The Kingdom Come) என்ற கிறித்துவ வேண்டுகோளும் இதுவே. ஆம். திருவுந்தியாரும் திருக்களிற்றுப் படியாரும் பற்றத்தான் பற்றினைப் பற்றிப் பற்றறுப்பதனையும் சித்தாந்தக் கருத்துக்களாகப் பாடிச் செல்கின்றன."

நக்கீரர் காலத்திலிருந்தே இக்கருத்து வளர்ந்து வந்துள்ளது என்று நினைவுறுத்துகிறார் பேராசிரியர் தொ.பொ.மீ. ஆயினும் சித்தாந்தத்திலே இது தத்துவத்தின் தூண்களில் ஒன்றாக அமைந்துவிட்டது என்பதே நமது வாதமாகும். உள்ளது தான் வரும்; அது பெறும்வடிவமும் அழுத்தமுமே பிரதானமாகக் கவனிக்கப்படல் வேண்டும். சரி இனி இறைபணி பற்றிப் பார்ப்போம். சிவஞான போதத்திலே சிறப்பியல்பு - பயனியலில் அவனே தானே என்று தொடங்குஞ் சூத்திரத்திலே இத்தொடர் காணப்படுகின்றது. 56 அச் சூத்திரத்தினால் பெறப்படுவன இரண்டு, " உண்மைகள் முதலாவது ஆன்மா அரசனுடன் ஒன்றாகி நிற்க வேண்டும் என்பது; இரண்டாவது ஆன்மா தன் தொழிலெல்லாம் அரண்பணியென்று கொள்ள வேண்டும்57. சிற்றுரைகாரர் கூறுவதைப் பார்ப்போம்.

"தன் செய்திக்கு முதல்வன் செய்தியை இன்றியமையாத ஆன்மாச் செய்வனவெல்லாம் அவனருளின் வழி நின்று செய்யுமாகலின் மாயேயமுங்கன்மமும் ஏகனாகிநிற்றற்குத் தடையாய்வந்து தாக்கா ஆகலான், அவை தாக்காமைப் பொருட்டுச் செய்யப்படு முபாய மாதல் பற்றி இனி இறை பணி வழுவாது நிற்கவென மேற்கொண்டது.58

பாசநீக்கத்திற்கு இறை பணியேவழி என்று கூறப்படுகிறது. இறைபணியே இன்பம் பயப்பது; அதுவே சிவப்பேற்றில் கொண்டு உய்விக்கும்; என்றெல்லாம் உணர்த்தப்படுகின்றன. ஆனால் இவையாவும் அடிமையின் - ஆன்மாவின் - பசுவின் - பண்புகளாகக் கூறப்படுவதை நாம் நினைவிருத்தல் வேண்டும். இருத்தவே இறைபணி, திருவருட் சார்பு முதலிய தொடர்கள் ஆண்டான் அடிமை யதார்த்தத்திற்கு எத்துணை கருத்துவளம் அளிக்கின்றன என்பது புலனாகும். 'கொம்பரில்லாக் கொடிபோல் அலமந்தனன் கோமளமே' என்று மணிவாசகர் பாடும்போது திருவருட் சார்பின் இன்றியமையாமை உணர்த்தப்படுகின்ற தன்றோ. சுருங்கக் கூறின் சோழர் காலச் சமுதாயத்திலே பண்ணையடிமை என்ன நிலைமையிலிருந்தானோ, அந்நிலையின் இலட்சியமான சித்திரத்தைச் சாத்திரங்கள் ஆன்மாவுக்குரியனவாகக் கூறும் பண்புகளிற் காணலாம். மாபாடியகாரர் இதனை நன்கு விளக்கியுள்ளார்.59

".....அம்முதல்வனது உடைமையாகவே மல்லது சுதந்திரராகவே மல்லேம். தம்பால் அடைக்கலமெனச் சார்ந்தாரைக் காப்பது உத்தமராயினார்க்குக் கடமையாகலான், முதல்வன் தன்னைச் சார்ந்தவரையே பாது‘காப்போனாகியும் இது பற்றிக் கோட்ட முடையனல்லனாய்த் தன்னைச் சார்ந்து தன்னடிப் பணியின் நிற்கவல்ல அடியார் தானேயாய் நிற்குமாறு நிறுவி அவர்க்கு வரும் ஆகாமிய வினையைக் கொடுத்து, அது செய்யவல்லாத பிறர்க்கு வரும் ஆகாமிய வினையை அவர்க்குக் கொடுப்பாகலான் அவ்விருதிறத்தோர்க்கும் உணவாகி நுணுகி வந்து பொருந்தும் பிரார்த்த வினையும் அவ்வாறே செய்வோர் செய்திக்குத் தக்க பயனாய் இருவேற வகைப்படச் செய்வனென்க."

சித்தாந்த சாத்திரம் கூறுவதென்ன? அடைக்கலம் என வந்தடைந் தோரைக் காத்தல் உத்தமர் குணம்; தன்னைச் சார்ந்தவரையும் தன்னைச்சாராதவரை ஒப்பநோக்கி உத்தமரான தலைவர், அவரவர் உய்ய வழிகாட்டுவார் என்பதே இங்க வற்புறுத்தப்படுவது. அரசு நீதியின் சாயலை இவ்விடத்தில் நாம் எளிதிற்கண்டு கொள்ளலாமலலவா? மெய்கண்டாரும் பின்வந்த உரைகாரரும் பயன்படுத்துஞ் சொற்களையும், சொற்றொடர்களையும், பழமொழிகளையும் உற்று நோக்குபவருக்கு அவற்றின் மூலம் சமுதாயத்திலே காணப்பட்ட பௌதீக அடிப்படையே என்பது புலனாகாமற் போகாது, "சுதந்திரன்" "பரதந்திரன்" ஆகிய சொற்கள் சைவசித்தாந்த நூல்களில் பெருவழக்கமாக வருதல் காணலாம். உதாரணமாக "ஆன்மாப் பெத்தத்திற் பரதத்திரன், முத்தியிற் சுதந்திரன்" என்று வருதல் காண்க. சமூக உறவுகளின் அடிப்படையிலே - முரண்பாட்டின் அடியாகவே இத்தகைய கருத்துக்கள் தோன்றின என்பதை நாம் மீண்டும் நினைவு கூர்தல் தகும்.

இறுதியாக ஆன்மாவின் இயல்பு பற்றிச் சைவ சித்தாந்தம் கூறும் கருத்துக்களை நோக்குவோம். ஆன்மாச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் இயல்புடையன் என்று கூறப்படும். சைவசித்தாந்தி பிறமதத்தினருடன் மாறுபடும் கொள்கைகளுள் முக்தி பற்றியது முக்கியமானது. இதற்குக் காரணம் ஆன்மாபற்றிய அடிப்படைக் கருத்து வேறுபாடே. ஆன்மாவின் இயல்பை விளக்குவதற்க மெய்கண்ட தேவரும் பின்வந்த புடை நூலாசிரியரும், உரைகாரரும் பல உவமைகளைக் கையாண்டுள்ளனர். இவற்றுள் உமாபதி சிவாசாரி யார் கூறியது சுவை பயப்பது60 "இருள் ஒளி அலாக் கண் தன்மையதாம்" என்பதே அது. ஆன்மாவனது, இருளோடு கூடிய வழி இருளாகாமலும் ஒளியோடும், கூடிய வழி ஒளியாகாமலும், இவ்விரண்டின் வேறாய் நிற்குங் கண்ணின் தன்மையை ஒத்தது என்பதே குரவர் கூற்று. இதற்குத் தொடர்புடையதாய்ச் சைவ சித்தாந்தம் ஆன்மாவைப் பற்றிக் கூறுகையில், முத்திநிலையிற் கூட ஆன்மா தன் தனியியல்பை இழந்துவிடுவதில்லை என்று வாதாடும், பிறமதவாதிகளுடன் இது பற்றிச் சித்தாந்தி வன்மையாக வாதிடுவது, தருக்க நிறைவும் கருத்துவளமும் காட்டும் முயற்சியாகும். ஆன்மாக்களின் நித்தியத்துவத்தையும், தனித்துவத்தையும் ஒருங்கிணைத்து நிலைநாட்டும் வாதத்திற்குப் பின்னால் அன்றையப் பௌதீக அடிப்படையில் அமைந்த வாழ்நிலை இருந்தது என்று நாம் வாதாட முடியும்.

இதனை விளங்கிக் கொள்வதற்குச் சோழர்கால ஆட்சி முறையினையும் தனி மனிதனுக்கும் ஆட்சிப் பீடத்திற்கும் இருந்த உறவு முறையையும் ஒரு சிறிது நாம் அலசிப் பார்த்தல் வேண்டும். பல நாடுகளை வென்று பேரரசு நிறுவியவர் சோழ மன்னர், அந்நாடுகள் யாவற்றையும் சோழ இராச்சியம் எனப் பொதுப்படக் கூறினராயினும், ஆட்சி வசதிக்காகவும், நிர்வாகத் திறமைக்காகவும் இராச்சியத்தைப் பல மண்டலங்களாகப் பிரித்தனர். முதலாம் இராசராசன் ஆட்சித்துறையில் பல பல புதுமைகளை, அதாவது காலத்திற் கேற்ற மாற்றங்களைப் புகுத்தியவன். அவனே இராச்சியத்தை மண்டலங்களாகப் பிரிக்கும் முறையினையும் தொடக்கி வைத்தான். சோழப் பேரரசு எட்டு அல்லது ஒன்பது மண்டலங்களாகக் கொண்டதாயிருந்தது. ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல சதுர்வேதி மங்கலங்களாகவும் தனி ஊர்களாகவும், ஒவ்வொரு ஊரும் பல சிற்றூர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் தத்தம் அளவுக்கும் தகுதிக்கும் ஏற்ற ஆட்சி மன்றங்களைக் கொண்டியங்கி வந்தன. சோழர் ஆட்சியில் தலத்தாபனங்களின் - உள்ளூர் மன்றங்களின் செல்வாக்கும் கடமைகளும் மிக உன்னத நிலையிலிருந்தன என்பது வரலாற்றாசிரியர் யாவருக்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். இதுபற்றிச் சாத்திரியார் கூறியுள்ளதை மேற்கோள் காட்டுகிறேன்.61

"அக்காலத்துப் பதிவுச் சான்றுகளைப் படிக்குந்தோறும் மத்திய ஆட்சியின் கட்டுப்பாடும், தல ஆட்சியின் சுதந்திரமும் எவ்வித முரணுமின்றிச் சமநிலையவாய்ச் சென்றதைக் கண்டு வியப்படைகின்றோம். அத்தகைய சூழ்நிலையிலே தனிமனிதனுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித விரோதவுணர்வும் தோன்றவில்லை. இருதரப்பிற்கும் கடமைகள் தெளிவாயிருந்தன."

*இ.தொ.VALVUM6.MTF*

** VALVUM5.MTF. ன் தொடர்ச்சி **

பெரிய ஆட்சிப் பிரிவிற்குள்ளும் சிற்றூர் தனது சுயப்பண்பினையும் தனித் தன்மையையும் ஓரளவிற்குப் பெற்றிருந்ததைப் போலவே சமூக அமைப்பிலும் தொழில் வேற்றுமையின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படையிலோ மிகச் சிறிய சபைகளும், குழுக்களும், சமூகத்தின் அலகுகளாக (Units) இருந்தன. நீலகண்ட சாத்திரியாரின் கருத்தினைக் கேட்போம்.62

"ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு, வாழிடம், தொழில், சுயவிருப்பு முதலியவற்றிலும் எதனொன்றன் காரணமாகவே சமுதாயத்திலே ஒரு குழுவைச் சார்ந்தவனாயிருந்தான். கூட்டுறவு வாழ்க்கையிலீடு பட்டிருந்தன இக்குழுக்கள். (அதாவது தத்தம் பிரத்தியேக நலன்களைக் கவனித்துக் கொள்வனவாயிருந்தன) இக்குழுவிற்குள் தனிமனிதனது முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் போதிய வாய்ப்புகள் இல்லாமற் போகவில்லை."

அரசியலமைப்பில் மிகச் சிறிய ஆட்சி மன்றத்திற்கும் "சுதந்திரம்" இருந்தது. தனித்துவமிருந்தது. சமூக அமைப்பிலேதனி மனிதனுக்கும் ஒரிடம் இருந்தது; உழைக்க இடமிருந்தது. இது சோழர் கால அரசியலும் சமூக அமைப்பும் வளர்ந்துள்ள பண்பு. இதன் முக்கியத்துவத்தை எவ்வளவு வற்புறுத்திக் கூறினாலும் தகும். சித்தாந்தத்திலே ஆன்மாவிற்குக் கொடுத்த நித்தியமான தனித்தன்மையான - நிலையை விளக்கவும், அதே சமயத்தில் இறைவன் - ஆண்டான் - இல்லையேல் அவை பயனற்றவை என்ற உண்மையை விளக்கிக் கொள்ளவும் மேற்கூறிய யதார்த்த நிலைமைகள் உதவும் என்று கூறலாம்.
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 03-02-2006, 03:58 PM
[No subject] - by RaMa - 03-04-2006, 05:25 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:51 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:53 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:54 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:55 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:56 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:57 PM
[No subject] - by putthan - 03-11-2006, 03:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)