Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்-முஸ்லிம் நல்லுறவு பேணல் முயற்சிகள்
#5
<span style='color:green'><b>தமிழர் முஸ்லிம் சமரசம்</b>

சுமார் மூன்றரை மாதங்களின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம் பிரமுகர்களுக்கும் இடையிலான சமரச சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி இரு தரப்பு உறவை வலுவாக்கவும் இந்தச் சந்திப்பில் உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
இந்தச் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் முக்கியமான ஒரு விடயம் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
""இரு சமூகங்களுக்கும் இடையில் (தமிழர்-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில்) குறிப்பிட்ட சிலர் முரண்பாட்டாளர்களாகத் தொழில்படுவதை இனங்கண்டு அவர்களை சமூகங்களில் இருந்து புறந்தள்ளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.''- என்பதும் இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டதாகக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கிழக்கில்- தென் தமிழீழத்தில் - தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்வியலுக்கான பூகோளப் பிரதேச விடயத்தில் ஒன்றுபட்டு சீவிப்பவர்கள். அங்கு அவர்களின் பாரம்பரியத் தாயகப் பிரதேசத்தை நோக்குபவர்கள் "பிட்டும் தேங்காய்ப் பூவும் போல' அவர்கள் கலந்திருப்பதை உணர்வர்.

அது மாத்திரமல்ல. அவர்கள் தாங்கள் பின்பற்றும் மார்க்கத்தினால் வேறுபட்டவர்களானாலும் பேசும் மொழியில் ஒன்றுபட்டவர்கள். இலங்கையில் மொழி அடிப்படையில் எழுந்த இந்த இனப்பிரச்சினையில் தமிழ் இனம் சிறுபான்மையினராக அடக்கப்பட, பௌத்த, சிங்களப் பேரினம் பெரும்பான்மையினராகி அடக்குகின்றது.
அத்தகைய மேலாண்மைப் போக்குடைய பேரினவாதிகள் தமது அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டும் சிறுபான்மையினரை பலவீனப்படுத்துவதற்காக, அவர்களை (சிறுபான்மையினரை) மேலும் பல சிறுபான்மை இனங்களாக உடைத்து, அவற்றின் பலத்தைக் குன்றச் செய்யும் சதித் திட்டத்தை முன்னெடுத்தனர்.
அந்தச் சதித் திட்டத்தில் பலிக்கடாவான தமிழ் பேசும் சமூகம், "தமிழ் இனம்' என்றும், "முஸ்லிம் இனம்' என்றும் கூறுபோட்டு - கூறுகெட்டு - அவலப்படும் நிலைக்கு உள்ளாகியிருக்கின்றது.

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவை மேலும் மும்முரமடையச் செய்யும் கபடவேலையை இரண்டு தரப்பிலும் சில தீய சக்திகள் முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றன.
கிழக்கில் கருணா குழு என்ற வெளிப்பெயரை முன்நிறுத்திச் செயற்படும் ஒட்டுப்படைகள் தமிழர் தரப்பிலும்-
அரசுப் பதவிகளுக்காகக் குத்துக்கரணம் அடித்த சில அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் செயற்படும் சில சக்திகள் முஸ்லிம்கள் தரப்பிலும்-
இரு தரப்புகளினதும் பரஸ்பர உறவுக்கு வேட்டு வைத்து வருகின்றன.

அம்பாறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சமரச சந்திப்பில் இவை பற்றிப் பேசப்பட்டிருப்பதாகவும், இவ்வாறு சிறுபான்மை இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் சக்திகளையே இரு சமூகங்களில் இருந்தும் புறந்தள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அறியவருகின்றது.

மூன்றாம் தரப்பு, தனித் தரப்பு என்றெல்லாம் கூறி, பிரசாரம் செய்து , முஸ்லிம்களுக்கு உணர்ச்சி ஊட்டி, அவர்களையும், தமிழர்களையும் பிரித்து வைக்க எத்தனிக்கும் முஸ்லிம் தலைமைகள் குறித்தும் முஸ்லிம் மக்கள் கவனமாக இருப்பது நல்லது.
தமிழர்களும், முஸ்லிம்களும் பேச்சு மொழி காரணமாக தமிழ்ப் பேசும் மக்களே.

தற்போதைய இனப்பிரச்சினை மொழி அடிப்படையில்தான் முதலில் உருப்பெற்றது.
எனவே, மூன்றாம் தரப்புக்கு அல்லது தனித்தரப்புக்கான பேச்சும் கோரிக்கையும் முஸ்லிம் தரப்பிலிருந்து தெற்குக்கு எழுப்பப்படுவதைப் பார்க்கிலும் தமிழ்த் தலைமையை நோக்கி வலியுறுத்தப்படுவதே பொருத்தமானதும், நியாயமானதுமாகும்.
இதையே புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் "உதயன்' - "சுடர் ஒளி' நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில்
""பேச்சுக்களில் முஸ்லிம்களின் தனித் தரப்புக் குறித்து சில முஸ்லிம் தலைவர்கள் என்னுடன் பேசினார்கள். இது புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய விடயம். இதற்குள் தலையிட்டுக் குழப்பாதீர்கள் என்று அவர்களிடம் கூறிவிட்டேன். இயலுமானால் பிரபாகரனுடன் போய்ப் பேசுங்கள். அவருடன் ஒரு தரப்பாக வாருங்கள். அல்லது அரசுடன் இணைந்து வாருங்கள்''- என்று கூறியிருந்தார்.

ஆகவே, பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் முஸ்லிம் தலைவர்கள், கொழும்புக்குக் காவடி தூக்குவதை விடுத்து, தமிழ் பேசும் மக்கள் என்ற முறையில் தமிழர் தலைமையுடன் கலந்துரையாடி, உரிமைக்காக வாதிட்டு, இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள ஏன் முன்வரக் கூடாது? வலுவான தமிழ்த் தலைமையுடன் ஐக்கியப்பட்டுச் செயற்படுவதன் மூலம் நியாயமான உரிமைகளை ஈட்டும் தமது முயற்சிகளில் முஸ்லிம் தரப்பு கணிசமாக வெல்ல முடியும்.

தமிழர்களோடு போட்டிக்கு நிற்பதாக வீம்பு பண்ணிக் கொண்டு, சிங்களவர்களுக்கு ஆலவட்டம் பிடிப்பதை நிறுத்தி விட்டு, தமிழர் தரப்புடன் ஒன்றிணைந்து செயற்பட விழைவதே முஸ்லிம்களுக்கும் நல்லது. தமிழர்களுக்கும் நல்லது.
இதற்கான அழைப்பும் இணக்கமும் கூட இரண்டு தரப்பிலிருந்தும் வருவதும் காலத்தின் கட்டாயமாகும்.</span>

<i><b>ஆசிரியர் தலையங்கம்-உதயன் (07/02/06)</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 09:10 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 08:22 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:01 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)