Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெனீவா பேச்சு வார்த்தைகளுக்கு புதிய வடிவத்தில் முட்டுக்கட்டை
#1
[size=24]ஜெனீவா பேச்சு வார்த்தைகளுக்கு புதிய வடிவத்தில் முட்டுக்கட்டை
ஜெனீவா பேச்சுகளுக்கு புதிய வடிவில் தடைபோடப்படுகிறதா? இந்தப் பேச்சுகளுக்கு முன்னர், பேச்சுக்கான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையிலும், மோதல்களுக்கான புறச்சூழலே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கருணா குழுவென்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளின் பின்னாலும் அரசும், இராணுவமுமே இருப்பதாக தமிழ்த் தரப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், அரசும் இராணுவமும் இவற்றை மறுத்தாலும் கிழக்கில் நடைபெற்றுவரும் ஒவ்வொரு நிகழ்வும், அரசும் படையினரும் கூறுவது பொய்யென்றே உணர்த்துகின்றன.

எவ்வேளையிலும் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் வெடிக்கலாமென்ற சூழ்நிலையில் நோர்வேயின் தலையீட்டால் பேச்சுகளுக்குச் செல்ல அரசும், புலிகளும் சம்மதித்தன. இந்தப் பேச்சுக்கான புறச் சூழலை ஏற்படுத்துவதற்காக உடனடியாக வன்முறைகள் அனைத்தையும் நிறுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் வடக்கில் அசம்பாவிதங்கள் படிப்படியாகக் குறைவடைய கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் வன்முறைகள் தலைதூக்கியுள்ளன. கருணா குழுவென்ற பெயரில் அங்கு தினமும் பல்வேறு வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

ஜெனீவாப் பேச்சுக்கு அரசும், புலிகளும் சம்மதம் தெரிவித்த மறுநாள், மட்டக்களப்பு - பொலனறுவை எல்லையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வடமுனைக்குள் ஊடுருவியோர் நடத்திய தாக்குதலில் புலிகளின் வடமுனை இராணுவப் பொறுப்பாளர் மேஜர் கபிலன் உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலை கருணா குழுவே நடத்தியதாக படைத்தரப்பு கூறியபோதும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும், கருணா குழுவும் இணைந்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக புலிகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தினர். இந்தத் தாக்குதலுக்கு அரசும், இராணுவத் தரப்பும் மட்டுமல்லாது தெற்கில் அரச மற்றும் சிங்கள ஆங்கில ஊடகங்களும் பெரும் முக்கியத்துவமளித்தன.

போர்நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கல் குறித்தே ஜெனீவாப் பேச்சுகள் நடைபெறவுள்ளன. இதில் மூன்று முக்கிய விடயங்களை, போர்நிறுத்த உடன்பாட்டிலுள்ளது போல் அமுல்படுத்துமாறு புலிகள் கடும் அழுத்தம் கொடுக்கவுள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து படையினர் வாபஸ் பெறப்படவேண்டும், மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும், அரச படைகளுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவை வடக்கு - கிழக்கு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்பவையே அவையாகும்.

இந்த மூன்றையும் அரசோ, படைத்தரப்போ எவ்விதத்திலும் நிறைவேற்றப்போவதில்லையென்பது வெளிப்படை. கடந்த நான்கு வருடமாகியும் இதுவரை போர்நிறுத்த உடன்பாடு அமுல்படுத்தப்படவில்லை. ஐ.தே.க. ஆட்சியில் நடைபெற்ற பேச்சுகளில் உடன்பாடு எட்டப்பட்ட எவையுமே அமுல்படுத்தப்படாததாலேயே அப்போதைய பேச்சுகள் ஐந்து சுற்றுகளுடன் முறிந்து போனது.

இந்தச் சூழ்நிலையில் ஜெனீவா பேச்சுகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. போர்நிறுத்த உடன்பாட்டை இரு தரப்பும் உடனடியாக முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென சர்வதேச சமூகம் மிகக் கடுமையாக அழுத்தம் கொடுத்து வருவதால், இந்த உடன்பாட்டின் அமுலாக்கலுக்கு தடையாக இருப்பவர்கள் யாரென ஜெனீவாப் பேச்சுகள் அம்பலப்படுத்தப் போகின்றன.

அதேநேரம், ஒஸ்லோவில் மட்டுமே பேசுவோமென திரும்பத் திரும்பக் கூறிவந்த விடுதலைப் புலிகள், எதுவித ஆட்சேபனையுமின்றி ஜெனீவாப் பேச்சுகளுக்கு சம்மதம் தெரிவித்ததன் மூலம், அவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றார்களென்றதொரு தோற்றப்பாட்டை அரசுக்கும் படைத்தரப்புக்கும் ஏற்படுத்திவிட்டது. இதனால் அவர்களுடன் வேறுவிதத்தில் சீண்டும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன.

இங்குதான் கருணா குழுவைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கவும் அரசும், படைத்தரப்பும் முயல்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதற்கேற்ப அரச ஊடகங்களும், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் கருணா குழு குறித்த மாயை ஒன்றை ஏற்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஜெனீவா பேச்சுகளுக்கு சம்மதம் தெரிவித்து அனைத்து வன்முறைகளையும் நிறுத்த அரசும், விடுதலைப் புலிகளும் இணங்கியபோது, மட்டக்களப்பு வடமுனையில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித் தாக்கி, தாங்களும் இருக்கின்றோம் எனக் காட்ட கருணா குழு முயன்றது.

படையினரும், புலிகளும் வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்த பின்னர் நடைபெற்ற தாக்குதல் இதுவென்பதால் இந்தத் தாக்குதலுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. இந்த முக்கியத்துவம் மூலம் இந்தத் தாக்குதலை நடத்திய கருணா குழுவுக்கும் முக்கியத்துவமளிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் இடம்பெற்று இரண்டாம் நாள், விடுதலைப் புலிகளுடன் ஒருதலைப் பட்சமாக யுத்தநிறுத்தத்தை அறிவிப்பதாக கருணா தெரிவித்துள்ளதாக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியை அரச மற்றும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கின. கருணா குழுவுக்கு இதன் மூலம் மிகுந்த முக்கியத்துவமளிக்க தென்னிலங்கை முற்படுவது மிகத் தெளிவாகத் தெரிந்தது.

படையினரும், புலிகளும் வன்முறையை கைவிட இணங்கிய மறுநாள் திடீர்த் தாக்குதலொன்றை நடத்திவிட்டு அதன் பின்னர் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்ததன் மூலம், கருணா குழுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசும், படைத்தரப்பும் முயல்வது மிகத் தெளிவானது.

கருணா குழு ஏதோ தனியாக இயங்கி இதுவரை புலிகளுடன் யுத்தம் புரிந்ததுபோன்றும், அது இப்போது புலிகளுடன் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவிப்பது போன்றும் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டதுடன், இந்த அரசியலுக்குப் பின்னால் வேறு நோக்கங்களிருப்பதும் தெளிவாகத் தெரிந்தது.

அதாவது, ஜெனீவா பேச்சுகளில் புலிகளின் அழுத்தம் கடுமையாக இருக்குமென்பதால் அவர்களுக்கு கொளுக்கி போட கருணா குழுவைப் பயன்படுத்த அரசும், படைத்தரப்பும் முயல்வது தெளிவானது.

போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவதற்கு, அரசும் புலிகளும் மட்டும் பேசினால் போதாது, அதற்கப்பால் கிழக்கில் கருணா குழுவும் வலுவாகவுள்ளது. அங்கு நிலைமைகளை மோசமடையச் செய்யக்கூடிய அளவிற்கு அது பலமுள்ளதாயிருப்பதால், போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் அவர்களது உதவியும் தேவையெனக் காட்டும் முயற்சிகள் தற்போது திரைமறைவில் அரங்கேறுகின்றன.

தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களை கருணா குழுவே கடத்தியுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக சகல ஊடகங்களிலும் இதுவே முக்கிய செய்தியாகிவிட்டது. கடத்தப்பட்ட பத்துப் பேரில் இதுவரை மூவர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களும் விடுவிக்கப்படலாமென்பது இதன் மூலம் தெரியவரும் அதேநேரம், பத்துப் பேரையும் ஒன்றாக விடுவிப்பதைவிட ஒவ்வொருநாளும் ஒருவர் அல்லது இருவராக விடுவதன் மூலம், ஜெனீவாப் பேச்சுக்களுக்கு முன் கருணா குழு குறித்த செய்திகளுக்கு தினமும் முக்கியத்துவமளிக்கப்படுகிறது.

கருணா குழுவுக்கு முக்கியமளித்து, போர்நிறுத்த உடன்பாடு அமுலாக்கல் தொடர்பான பேச்சுகளில் அவர்களையும் செருகிவிடுவதன் மூலம் புலிகளுக்கு எரிச்சலூட்டுவதுடன், இதனைப் பயன்படுத்தி எவ்வளவோ செய்துவிடலாமென்ற நப்பாசையும் அரசுக்கிருப்பது தெளிவாகியுள்ளது.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தமிழ்த் தரப்புகளும் கோருவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை ஏற்படுத்த இவர்கள் முயலும் அதேநேரம், கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவே உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென கண்காணிப்புக் குழுவை சர்வதேச சமூகம் கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி கண்காணிப்புக் குழு கேட்கப்பட்டால், அவர்கள் கடத்தல்காரர்களுடன், அதாவது கருணா குழுவுடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவை ஏற்படும். இதைத்தான் கருணா குழுவும் இன்று எதிர்பார்த்துள்ளது.

கருணா குழுவை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளாத கண்காணிப்புக் குழு இதுவரை காலமும் அவர்களுடன் எதுவித தொடர்புகளையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால், புனர்வாழ்வுக் கழகத்தை சேர்ந்தவர்களை விடுவிப்பதாயின் அவர்களுடன் பேசுங்களென சர்வதேச சமூகம் கோரினால் அதனை கண்காணிப்புக் குழு செய்யவேண்டியிருக்கும்.

இதன் மூலம் கருணா குழுவுக்கு மேலும் முக்கியத்துவம் கிடைப்பதுடன் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் போது அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுப்பதற்காக கண்காணிப்புக் குழு தொடர்ந்தும் அவர்களுடன் பேசவேண்டிய தேவையேற்படுமென்பதால் கிழக்கில் சுமுக நிலையை ஏற்படுத்த இராணுவத்துடனும், புலிகளுடனும் மட்டுமல்லாது, கருணா குழுவுடனும் பேசவேண்டுமென்ற தொரு நிலைமையை உருவாக்குவதே இந்த திரைமறைவுத் திட்டங்களாகும்.

இதேநேரம், தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களை கடத்தியதிலும் பெரும் பின்னணி இருப்பதாகவே கருதப்படுகிறது. கடல்கோள் அனர்த்தத்தின்போதும், அதன் பின்னரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றிய பணிகள் உலகளாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் பெற்றன. இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் கொழும்பில், தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளரையும் நேரில் சந்திக்குமளவிற்கு அதன் புகழ் விரிவடைந்துள்ளது.

இது, தென்னிலங்கை அரசியல்வாதிகளிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிராக மிக மோசமான பிரசாரங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இலங்கை அரசால் பொதுக்கட்டமைப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமூடாக உதவிகளை வழங்க பல நாடுகளும் முன்வந்தன.

இதனால் வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இதன் செயற்பாட்டை முடக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு கட்டமே மட்டக்களப்பில் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களின் கடத்தலாகும். இந்த மிரட்டல் மூலம் அதில் பணிபுரிபவர்களை விலகச் செய்வதும் கடத்தலின் நோக்கமாகும்.

இதிலும், இனவாதிகள் கருணா குழுவைப் பயன்படுத்தியுள்ளனர். வெலிக்கந்தையில் இராணுவ சோதனை நிலையத்திற்கு அருகில் இந்தக் கடத்தல்கள் இடம்பெற்றபோதும் இவை பற்றித் தங்களுக்கு எதுவுமே தெரியாதென படையினர் கூறுவது பெரும் ஆச்சரியமளித்துள்ளது.

ஏற்கனவே இந்தப் பகுதியில்தான் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன், கருணா குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டார். பல்வேறு சம்பவங்களும் இந்தப் பகுதியில்தான் இடம்பெற்றன. மட்டக்களப்பிலிருந்து வடக்கே செல்பவர்கள் வெலிக்கந்தை ஊடாகவே செல்லவேண்டுமென்பதால் இவர்களுக்கு இவை வாய்ப்பாகிவிட்டன.

ஜெனீவா பேச்சுகளிலும் அதன் பின்னால் ஏதாவது பேச்சுகள் நடைபெறுமானால் அவற்றிலும் கருணா குழுவுக்கு முக்கியத்துவமளிக்கும் முயற்சிகள் துரிதமடைந்துள்ளன. நிழல் யுத்தம் வடக்கேயும் பரவி, வடக்கு -கிழக்கில் தமிழ் மக்களை மிகமோசமாக அச்சுறுத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வந்த நிலையில் தமிழ்க் குழுக்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் துரிதமடைந்துள்ளன.

வடக்கில் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் ஒருவித தாக்குதல்கள் மூலம் மக்கள் அச்சுறுத்தப்படும் அதேநேரம், கிழக்கில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் வேறுவிதமான தாக்குதல்கள் மூலம் மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இவற்றிலெல்லாம் தமிழ்க் குழுக்களே முக்கிய இடம் வகிக்கின்றன.

தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி போர்நிறுத்த காலத்தில் புலிகளுக்கு எரிச்சலூட்டும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்பதை தற்போது உலகம் அறிந்து வருகிறது. ஆனாலும், சுயநலன்களுக்காக அவர்களும் மௌனம் சாதிப்பதால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களிடமே தள்ளப்பட்டுள்ளது.

ஜெனீவா பேச்சுகளுக்கு நாள் குறிக்கும் நிலையிலும் கிழக்கில் மிகமோசமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இந்த மோசமான புறச் சூழல் ஜெனீவாப் பேச்சுகளுக்கான வாய்ப்பைக் குறைக்கின்றபோதும், போர்நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்தத் தவறுபவர்கள் யார்? அந்த உடன்பாட்டிற்கு குந்தகமாக இருப்பவர்கள் யாரென்பதையெல்லாம் வெளியுலகுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென்பதால் இப்பேச்சுகளில் விடுதலைப் புலிகள் கலந்துகொள்வர். ஆனாலும், அதற்கு முன்னான சூழல்கள் பேச்சுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிடுமோ என்ற சந்தேகத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

- தினக்குரல்
Reply


Messages In This Thread
ஜெனீவா பேச்சு வார்த்தைகளுக்கு புதிய வடிவத்தில் முட்டுக்கட்டை - by கந்தப்பு - 02-06-2006, 12:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)