Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசியத் தலைவர்- எரிக் சொல்ஹேம் சந்திப்பு
#13
ஜெனீவாவில் பேச்சு: பிரபாகரன்- எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு முடிவில் அறிவிப்பு! பேச்சுக் குழுவையும் அறிவித்தனர் புலிகள்!!
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் பெப்ரவரியில் சுவிஸ் தலைநகர் ஜெனீவாவில் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பேச்சுகளில் பங்கேற்கும் குழுவினரையும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சி சென்ற இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார்.

இயல்பு நிலையைத் தோற்றுவிக்காவிட்டால் பேச்சுவார்த்தையே நடக்காது: அன்ரன் பாலசிங்கம்

எரிக் சொல்ஹெய்மின் சந்திப்புக்குப் பின்னர் கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் பாலசிங்கம் கூறியதாவது:

தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்றைய சந்திப்பில் இயக்கத்தின் நிலைப்பாட்டை எடுத்து விளக்கினார். விடுதலைப் புலிகள் அன்றும் சரி இன்றும் சரி சமாதான இலட்சியத்தில் பற்றுறுதி கொண்டவர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன.

குறிப்பாக அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக படுகொலைகள், இராணுவ அட்டூழியங்கள் நடைபெற்று வருகின்றன.

போர் நிறுத்த உடன்பாட்டு விதிகள் செம்மையாக பேணப்படாத காரணத்தால் இந்த வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. போர் நிறுத்த உடன்பாட்டைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாராக உள்ளோம்.

இதுவரை காலமும் புலிகள்தான் பேச்சுவார்த்தையை நோர்வேயில் நடத்த வேண்டும் என்று கடுமையான நிலைப்பாடுடன் இருக்கிறார்கள் என்ற கருத்து நிலவி வந்தது.

ஐரோப்பாவில் நோர்வே கேட்டுக்கொண்டதற்கமைய ஐரோப்பிய நாடு ஒன்றான சுவிற்சர்லாந்தில் பேச்சுக்களை நடத்துவதற்கு இணங்கியுள்ளோம், முடிவெடுத்துள்ளோம் என்று தலைவர் தெரிவித்தார்.

ஆனால் தலைவர் அடுத்ததாக கூறினார்.... பேச்சுவார்த்தைகளானது முதல் கட்டமாக போர் நிறுத்த விதிகளின் அமுலாக்கம் பற்றியதாகவே அமைய வேண்டும் தவிர வேறு எது பற்றியும் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை என்றார்.

இன்று தமிழர் தாயகத்தில் நிலவும் பாராதூரமான பிரச்சினைகளுக்குக் காரணம் போர் நிறுத்தம் செம்மையாகக் கடைப்பிடிக்கப்படாமைதான். போர் நிறுத்த உடன்பாடு செம்மையாக கடைப்பிடிக்காமைக்கு புலிகள் காரணம் அல்ல. அரச படைகளும், படைகளுக்கு முண்டு கொடுத்து துணையாக நிற்கும் ஒட்டுப்படைகளும் தான் காரணம்.

ஆகவே பேச்சுவார்த்தைகள் விரைவாக நடைபெற வேண்டும். அதற்கு நாம் ஒத்துழைக்க தயாராக உள்ளோம். சுவிற்சலாந்தில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் தயாராவுள்ளோம். ஆனால் அதற்கு முன்பாக எங்கள் மக்கள் இராணுவ பயங்கரவாதத்திற்கு பயந்து தமிழர் தாயகத்தில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள். மக்களுக்கு முதலில் அமைதியான, நிம்மதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அதற்குப் பின்புதான் பேச்சு ஒழுங்காக நடத்த முடியும். சமாதான சூழலுக்கு ஏதுவான ஒரு புறநிலையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. அரசாங்கம் நினைத்தால், சிறிலங்கா அரச தலைவர் நினைத்தால் அரச படைகளுக்கு கடும் உத்தரவுகளை வழங்கி ஒட்டுப் படைகளின் அட்டூழியங்களை நிறுத்தி, கொலைகளை நிறுத்தி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்க முடியும் என தலைவர் வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தைகளுக்கு வரத் தயாராகவுள்ளோம். வெகு சீக்கிரத்தில் பேச்சுக்களில் பங்கு பற்ற தயாராகவுள்ளோம். ஆனால் உடனடியாக அப்பாவி தமிழ் மக்களுக்கெதிராக ஏவிவிடப்படும் அரச பயங்கரவாத வன்முறைகள் உடனே நிறுத்தப்படவேண்டும். ஒரு சுமூகமான நல்லெண்ண புறநிலை உருவாக்கப்படவேண்டும். இது அரசின் கையில்தான் உள்ளது என்றும் எமது தலைவர் கூறினார்.

முன்பும் இப்படிப் பல பேச்சுக்கள் நடைபெற்றன. பேச்சுக்கள் இடையில் முறிந்தமைக்கான காரணம் என்னவெனில், அப்பாவி தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்திய தாக்குதல்கள். இதன் காரணமாகத்தான் திம்பு பேச்சுவார்த்தை தொடக்கம் கடைசிப் பேச்சுவார்த்தைகள் வரைக்கும் பல பேச்சுவார்த்தைகள் முறிந்தன. ஆகவே பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக நடைபெற வேண்டுமாகயிருந்தால் அரச படைகள் ஒழுக்கமாக, கட்டுப்பாடாக வைக்கப்பட வேண்டும்.

கூலிப்படைகளின் அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் போர் நிறுத்த விதிகளைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றி நாம் முதல் கட்டப் பேச்சுகளில் கலந்துகொள்ள தயாராக உள்ளோம்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளும் பாலசிங்கம் பதில்களும்:

கேள்வி: பேச்சுக்கான புறநிலையை உருவாக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

பதில்: பேச்சுக்களில் பங்குபற்ற இப்போதும் தயார். இன்றும் தயார். ஆனால் நல்ல சூழ்நிலையிருக்க வேண்டும். நாளை நாங்கள் ஜெனீவாக்குச் செல்ல, கூலிப்பட்டாளங்கள் எமது மக்களை படுகொலை செய்ய அமைதியில்லாத சூழ்நிலை இங்கு நிலவ நாம் பேசமுடியாது. நாங்கள் பேச்சுக்களில் ஈடுபடுவதாகயிருந்தால் எமது மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழவேண்டும். அது தான் முதலாவது முக்கியமான விடயம்.

கேள்வி: புறச்சூழ்நிலை உருவாக்கப்பட்டால்தான் நேரடி பேச்சு இடம்பெறும் எனக் கூறுகிறீர்களா?

பதில்: நிபந்தனையாக விதிக்கவில்லை. அதாவது சமாதானப் பேச்சுக்கு சமதானச் சூழலை உருவாக்குங்கள் என்பதைத்தான் கூறுகிறோம்.

கேள்வி: அரச தரப்பிடமிருந்து ஏதாவது செய்தி எடுத்து வரப்பட்டதா?

பதில்: அரசாங்கம் தொடர்ந்து செய்திகளை அனுப்பி வருகிறது. அரசாங்கம் சமாதான கரங்களை நீட்டிக்கொண்டே கொலைகளுக்கும் அனுமதித்து வருகிறது. திருகோணமலையில் பத்திரிகையாளர் கொல்லப்படுகின்றார். யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்படுகின்றார். இன்னொரு பக்கம் மகிந்த ராஐபக்ச சமாதானக் கரங்களை நீட்டுகிறார். பத்திரிகைக்கு உருக்கமான அறிக்கை விடுகின்றார். சொன்னால் சொன்னதாக இருக்க வேண்டும். நடைமுறையில் காட்டவேண்டும். அறிக்கைளை விட்டு எமது மக்களை ஏமாற்ற முடியாது.

கேள்வி: அரசுக்கும், புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை எப்போது ஆரம்பமாகும்?

பதில்: முதலில் பேச்சுக்கு இணங்கியுள்ளோம். சீக்கிரமாக பேச்சுக்களை நடத்துமாறும் கோரியுள்ளோம். எரிக் சொல்ஹெய்மிடம் அரசிற்கு அனுப்பியுள்ள செய்தி, புலிகள் பேச்சுக்கு தயார். அதேவேளையில் உடனடியாக இடத்திற்கும் தயார். அரச படைகளின் அடாவடித்தனங்கள் நடக்கக்கூடாது. எங்கள் மக்களுக்கு எந்த துன்புறுத்தல்களும் நடக்கக்கூடாது. தேடுதல் என்று மக்களை வேட்டையாட அனுமதிக்க முடியாது. இரவு நேரங்களில் வீடுகளில் தட்டக் கூடாது.

அப்பாவி தமிழ் மக்களைக் கொலை செய்து கொண்டிருந்தால் நாம் பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியாது. எப்படி பேசுவது? எவ்வளவு காலத்திற்குப் பொறுப்பது? கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு தலைவர் நல்லெண்ண சமிக்கை விடுகின்றார். நாங்கள் கடும்போக்காளர்கள் அல்லர். யுத்த வெறியாளர்கள் அல்லர். ஒரு இறுதி சந்தர்ப்பமாக பேசுவதற்கு தயாராகவுள்ளோம். மக்கள் அவதிப்படுகின்றனர். எம்மால் எமது படைகளை அனுப்பி சிங்கள இராணுவத்தை அழித்து துவைத்து விடலாம். சர்வதேச உலகம் இன்னொரு முறை பேசும்படி சொல்கின்றது.

கேள்வி: பேச்சுவார்த்தைக்கு சென்றால் அரசியல் போராளிகள் சிறிலங்கா இராணுவப் பகுதிகளுக்கு செல்வார்களா?

பதில்: முக்கியமான விடயம். போர் நிறுத்த உடன்பாட்டின் படி எமது போராளிகள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்று அரசியல் பணி புரிவது முக்கியமான நிபந்தனை. ஆகவே, இந்தப் பேச்சுவார்த்தைகளில் அதுவும் முக்கியமாக எடுக்கப்படும். எமது போராளிகள் மீண்டும் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்று அரசியல் பணிகளைச் செய்ய வேண்டும். அகதிகளாக வந்திருக்கின்ற மக்கள் கூட திரும்பி தங்கள் இடத்துக்கு சென்று இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இப்படி பல விடயங்கள் பேச்சுவார்த்தையில் பேசப்பட வேண்டும்.

கேள்வி: அரசு இயல்பு நிலையை ஏற்படுத்த முன்வரும் என்று நினைக்கின்றீர்களா?

பதில்: முன்வரவேண்டும். இல்லாவிட்டால் பேச்சுவார்த்தையே நடைபெறாது. போர் நெருக்கடியைத் தணித்து இயல்பு வாழ்வை ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி: அரசு முன்வாராது விட்டால் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்: முன்வராது விட்டால் பின்னர் நீங்கள் வந்து கேட்க நான் சொல்வேன். இப்ப சொல்லமாட்டேன்.

கேள்வி: இன்றும் கூட மக்கள் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையில் இருந்தும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை உடனடியாக நிறுத்த ஏதாவது அழுத்தம் கொடுத்திருக்கின்றீர்களா?

பதில்: இடப்பெயர்வை நிறுத்துவதற்குத்தான் தலைவர் விட்டுக் கொடுத்து - நாம் நோர்வேயில் பேசவேண்டும் என இறுக்கமாக நின்றோம். நோர்வேயை இருதரப்பினரும் நம்பிக்கை வைத்து அனுசரணையாளர்களாக ஏற்றுக்கொண்டோம். ஏன் நோர்வேயில் பேச்சு நடத்த அரசு விரும்பவில்லை? விடுதலைப் புலிகளை ஐரோப்பாவில் இருந்து ஓரம்கட்டி ஒதுக்குவதற்கு தான் என்பது எமக்கு தெரியும். ஆனால், எங்கள் மக்கள் அவலநிலைக்கு ஆளாகி இடம்பெயர்ந்துகொண்டிருக்கின்றார்கள். கொலை செய்யப்படுகின்றார்கள். இது நிறுத்தப்படட வேண்டும். இது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் இறங்கி வந்து சுவிற்சலாந்தில் போர் நிறுத்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறுகின்றார். இதற்கு அரசாங்கம் இணங்கி இராணுவ அராஜகத்தை நிறுத்திக் கொண்டால் மக்களின் இடப்பெயர்வு நிறுத்தப்படும் அல்லவா?

கேள்வி: பேச்சு நடைபெறுவதாகயிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளில் யார் பங்குகொள்வார்கள்?

பதில்: அன்ரன் பாலசிங்கம், சு.ப.தமிழ்ச்செல்வன், பா.நடேசன், கேணல் ஜெயம், சமாதான செயலகத்தைச் சேர்ந்த இளந்திரையன், திருமதி பாலசிங்கம் செயலாளராகவும் கலந்துகொள்வார். அரசு தரப்பு பிரதிநிதிகளை அரசு தான் தீர்மானிக்கவேண்டும்.

கேள்வி: இராணுவத்தோடு சேர்ந்து இயங்குகின்ற ஒட்டுக்குழுக்கள் தான் யுத்த நிறுத்த நிலைமைகளை மோசமாக்குவதற்கு காரணம் என அமெரிக்க பிரதிநிதியான நிக்லஸ் பார்ன் கொழுப்பில் தெரிவித்துள்ளார். அவர் எரிக் சொல்ஹெய்முடனும் பேசியுள்ளார். அது தொடர்பான உறுதிமொழிகளை அரசு எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தங்களுக்கு தெரிவித்துள்ளதா?

பதில்: அப்படியில்லை. உண்மை என்னவெனில், ஒட்டுப்படைகள் குறிப்பாக அரச படைகளோடு குறிப்பாக அரச புலனாய்வுத்துறையோடு இணைந்து பல அட்டூழியங்களை செய்கின்றார்கள் என்பது தெரியும். தமிழ் மக்களுக்கும் தெரியும் சிங்கள மக்களுக்கும் தெரியும். அரசாங்கத்திற்கும் தெரியும். உலகத்திற்கும் தெரியும். இதனால் தான் இணைத் தலைமை நாடுகள் கூட இரண்டு முறை தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்கள். அதாவது ஒட்டுப்படைகளின் ஆயுதங்களைக் களையவேண்டும் என அரசாங்கத்திற்கே கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூட கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவும் கூட கோரிக்கை விடுத்துள்ளது என்றார் பாலசிங்கம்.

மகிந்த ராஜபக்ச மற்றும் பிரபாகரனுடன் பேசியது என்ன?: எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்புக்குப் பின்னர் கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியதாவது:

சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பின்னர் சிறிலங்கா அரச தலைவராகப் பொறுப்பேற்ற மகிந்த ராஜபக்சவை முதல் முறையாக நேற்று சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தோம். தென்னிலங்கையின் பல்வேறு அரசியல் கட்சியினரையும் 3 குழுவினராகச் சந்தித்து பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பேசினோம்.

அதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினோம். இச்சந்திப்பில் தமிழ்ச்செல்வன், நடேசன் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.

கொழும்பில் அரசாங்கத்துடன் விவாதித்த முக்கியப் பிரச்சனைகள் தொடர்பில் இங்கும் விவாதித்தோம். இருதரப்பினரும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் வலுவாக அமுல்படுத்துவது அவசியம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள போதும் அண்மைக்கால வன்முறைகளில் கிளைமோர்த் தாக்குதல்களில் சிங்கள இராணுவத்தினரும், தமிழ் துணை ஆயுதக் குழுக்களினால் விடுதலைப் புலிகளும் மீது தாக்குதல்களும், வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரானத் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களினால் இலங்கையில் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த இருதரப்பினரும் விவாதிக்க வேண்டிய வேண்டிய அவசியம் இருப்பதை நாங்கள் உணருகிறோம்.

இந்தப் பேச்சுகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுவிஸில் நடத்தலாம் என்று நேற்று சிறிலங்கா அரசாங்கத்திடமும் இன்று விடுதலைப் புலிகளிடமும் தெரிவித்திருந்தோம்.

இலங்கை அமைதி முயற்சிகளுக்கு சுவிஸ் அரசாங்கம் முழு ஆதரவளித்து வருகிறது. அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் சுவிஸ் அரசாங்கம் தயாராகவும் நெகிழ்வுதன்மையோடும் இருக்கிறது.

மூன்று தரப்பினரும் சுவிசில் பேச்சுக்களை நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சுவிசில் பேச்சுக்களை நடத்துவது தொடர்பான நடைமுறைகள் குறித்தும் விடுதலைப் புலிகளின் குழுவினர் சுவிஸ் செல்வது தொடர்பாகவும் சிறிலங்காவுக்கான சுவிஸ் தூதுவருடன் இன்று சந்தித்துப் பேச உள்ளோம். இன்று பிற்பகல் சிறிலங்கா அரச தலைவருடனும் இந்த முடிவுகள் குறித்து பேச உள்ளோம்.

இந்த ஒரு பேச்சின் மூலமே யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பிலான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. இதைத் தொடர்ந்து நடத்தப்படும் சந்திப்புக்கள் சுவிசிலோ அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ நடத்தப்படக் கூடும்.

இச்சந்திப்புக்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் சிறப்பாகச் செயற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும் வகையிலான அனைத்து வன்முறைகளுக்கும் முடிவு காணப்படும். இந்தச் சந்திப்புகள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும்.

மேலும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்புகள் தொடர்பாகவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் நாம் வலியுறுத்தினோம்.

கண்காணிப்புக் குழுவினர் இல்லாமல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவது என்பது மிக மிகக் கடினமானது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் மிகக் கடுமையான சூழலில் இலங்கை அமைதி முயற்சிகளைப் பாதுகாத்து வருகின்றனர். அக் குழுவினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆகக் கூடிய அளவில் மேற்கொள்ளுமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா இராணுவத்தினரை நாம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார் எரிக் சொல்ஹெய்ம்.

தமிழர் தாயகத்தில் தொடர்ந்து இராணுவ வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு சிறிலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை மேற்கொண்டது. இதையடுத்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர்.

இது தொடர்பிலான பேச்சுகளை அனுசரணையாளர் நாடாகிய நோர்வேயின் தலைநகரில் ஓஸ்லோ நடத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர்.

ஆனால் சர்வதேச சமூகத்துடனான விடுதலைப் புலிகள் உறவு வலுப்படுத்தப்பட்டுவிடும் என்பதால் இந்தப் பேச்சுகளை ஆசிய நாடு ஒன்றிலோ அல்லது கொழும்பிலோ நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கடும் போக்கை சிறிலங்கா அரசாங்கம் கடைபிடித்து வந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கு 3 நாள் பயணமாக கடந்த 23ஆம் நாள் எரிக் சொல்ஹெய்ம் வருகை தந்தார். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எரிக் சொல்ஹெய்ம் நேற்று சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது பேச்சுகளுக்கான இடம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது சுவிஸ் தலைநகரில் பேச்சுகள் நடத்தலாம் என்ற யோசனையை எரிக் சொல்ஹெய்ம் முன்வைத்தார். இதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து இன்று காலை சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சி சென்றடைந்த எரிக் சொல்ஹெய்ம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்தார்.

சுவிஸ் தலைநகரில் பேச்சுகள் நடத்தலாம் என்ற நோர்வேயின் பரிந்துரையையும், சிறிலங்கா அரசாங்கமும் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

இதையடுத்து விடுதலைப் புலிகளும் விட்டுக் கொடுத்து வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர யுத்த நிறுத்த அமலாக்கப் பேச்சுகளை நோர்வேயின் பரிந்துரைப்படி சுவிஸ் தலைநகர் ஜெனீவாவில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.


நன்றி புதினம்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:11 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:30 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:35 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:41 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 07:14 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 08:08 AM
[No subject] - by Mathan - 01-25-2006, 09:28 AM
[No subject] - by sinnakuddy - 01-25-2006, 10:02 AM
[No subject] - by adsharan - 01-25-2006, 10:20 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 10:25 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 10:33 AM
[No subject] - by sri - 01-25-2006, 12:59 PM
[No subject] - by adsharan - 01-25-2006, 01:53 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 03:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)