Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருகோணமலையும் ஆக்கிரமிப்பும்
#1
திருகோணமலையும் ஆக்கிரமிப்பும்!
தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவத்தை நிலை கொள்ளச் செய்தல், திருகோணமலை நகர்ப்பகுதியிலும் நகரை அண்டியிருக்கும் பகுதிகளிலும் மேலும் சிங்கள ஆக்கிரமிப்பை விஸ்தரித்தல். இவையே புத்தர் சிலையின் பின்னாலுள்ள கபட அரசியலாகும் சமீபத்தில் திருகோணமலை சென்றிருந்தபோது அங்கு சில விடயங்களை அவதானிக்கவும் நிலைமைகள் குறித்து சிலருடன் உரையாடவும் முடிந்தது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுடன் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டுக் கோபுரத்தின் அருகில் திடீரென புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை திருகோணமலையின் இயல்பு நிலை சீராக இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றமும் ஒருவகையான அச்சமுமே காணப்படுகிறது எனலாம். புத்தர் சிலை விவகாரத்திற்கு, தமிழ் மக்கள் தமது சாத்வீகரீதியான எதிர்ப்பைத் தெரிவித்தபோதும் சிங்கள ஆளும்வர்க்கம் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக சிறிலங்கா அரசு, புத்தர் சிலையை அடிப்படையாகக் கொண்டு திருகோணமலை நகரையும் நகரை அண்டிய பகுதிகளையும் இராணுவ நிர்வாகத்திற்கு உட்படுத்தியது. இந்த இராணுவத்தினரை அகற்றும்படியும், இராணுவத்தினர் தமது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றனர் எனக்கூறி தமிழ் மக்கள் பல தடவை தமது சாத்வீக ரீதியான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர் என்பதும் இந்த இடத்தில் நோக்கற்பாலது. உண்மையில் இன்று நகர்ப்பகுதிவாழ் தமிழ் மக்கள் ஒரு இராணுவ மேலாதிக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். அதன் உச்சக் கட்டமாகவே ஐந்து அப்பாவி மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது.

திருகோணமலையைப் பொறுத்தவரையில் திருகோணமலையின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பிற்கு நெடிய வரலாறுண்டு. கடந்த அரை நூற்றாண்டுகளாக திருகோணமலை தமிழ் மக்களின் பாரம்பரிய இருப்பை பலவீனப்படுத்தும் வகையில் சிங்கள ஆளும்வர்க்கம் திட்மிட்டவகையில் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஆக்கிரமிப்புக்களை சிங்கள குடியேற்றம் என்ற நிலையில் நாம் ஆராய முற்படுவோமாயின் நமது கணிப்பு பிழைத்துப் போய்விடும். இது குறித்து மாகாணசபை நிர்வாக அதிகாரி ஒருவருடன் உரையாடும்போது அவரது அவதானம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரிந்தது. அவர் கூறிய கருத்துக்களை அப்படியே பதிவு செய்கிறேன். நாம் குடியேற்றம் என்னும் நோக்கில் பார்த்தால் சேருவாவில், மொறவேவா போன்ற சில குடியேற்றங்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடியும். அப்படியானால் மற்றைய சிங்களவர்கள் எவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்? அவர்களது குடியமர்வு வர்த்தமானியில் அறிக்கையிடப்படாத குடியமர்வுகளாகும். இது எவ்வாறு சாத்தியப்பட்டது. எனவே திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பை நாம் திட்டமிட்ட சிங்கள ஊடுருவல் என்ற கருத்துருவாக்கத்தின் ஊடாகவே அணுக வேண்டியிருக்கிறது. இத்தகைய ஊடுருவலின் பின்னால் சிங்கள இராணுவம், சிங்கள தனியார் துறையினர், சிங்கள பௌத்த மதபீடம், ஆகிய மூன்று பிரிவினரினதும் கூட்டுச் சேர்க்கையான பங்களிப்பு இருக்கிறது. முதலில் ஒரு சோதனைச்சாவடியை உருவாக்குதல் பின்னர் அதில் உள்ளவர்களின் உறவினர்களை குடியமர்த்தல் பின்னர் அதிலுள்ள ஒருவரை ஊர்க்காவல் படையில் சேர்த்தல். இவ்வாறு படிப்படியாக ஆட்களின் எண்ணிக்கையை அதிகரித்தல். சாதாரணமாகப் பார்க்கும்ேபாது இதனைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். ஆனால் இவ்வாறு குடியமர்ந்தவர்கள்தான் இன்று நகர்ப்பகுதியை ஆக்கிரமித்திருக்கின்றனர். இதனை அரசு கண்டும்காணாமல் விடுவதன் மூலம் அரசு இவ் ஊடுருவலுக்கு உதவிவருகிறது. குடியேற்றம் என்பது குறிப்பிட்ட தொகையான குடும்பங்களை ஒரு குறிப்பிட்ட எல்லைப் பரப்பினுள் ஒரேயடியாக குடியமர்த்துவதாகும் என்றார் அந்த அதிகாரி. ஒரு தகவலுக்காகவே இதனைப் பதிவு செய்தேன். இது விரிந்த ஆய்வுக்கும் கணிப்புக்கும் உரியதாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது தொடர்பான ஆய்வுகளோ தகவல்களோ போதியளவு இல்லை. இராணுவமும் சிங்கள பௌத்த மதபீடத்தினரும் திருகோணமலையை முழுமையாக சிங்கள மேலாதிக்கத்தின் பிடியில் தக்கவைத்து வருவதன் நீட்சியாகவே இன்றைய நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில் திருகோணமலையில் இரவோடு இரவாக புத்தர் சிலையை வைத்ததன் பின்னால் இருந்த நிழல் நோக்கம் மதத்தை அடித்தளமாகக் கொண்ட இராணுவ மேலாதிக்கமாகும். இராணுவத்தினரை திருகோணமலையில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் நிலைகொள்ளச் செய்வதற்கான ஒரு நிழல் கருவியே புத்தர் சிலை. இங்கு மிகவும் திட்டமிட்டவகையில் சிங்கள ஆளும்வர்க்கம் தொழிற்பட்டிருக்கிறது. முதலில் புத்தர்சிலை பின்னர் சிலையை பாதுகாப்பதற்காக சிங்கள பௌத்த இராணுவம் நிலை கொள்ளல் என்றவகையிலேயே இத்தொழிற்பாடு அரங்கேறியிருக்கிறது. இங்கு சிங்கள இராணுவத்தினதும் சிங்கள பௌத்த மதபீடத்தினரதும் அவதானம் என்னவென்றால் மதத்தின் மீதான சிங்கள மக்களின் இயல்பான அபிமானத்தையும் விசுவாசத்தையும் அரசியலாக்குவதன் ஊடாக இராணுவக் குவிப்பைச் செய்வதாகும். புத்தர்சிலை விவகாரத்திற்கு முன்னரே அரசும் இனவாத ஊடகங்களும் விடுதலைப்புலிகள் திருகோணமலையை சுற்றிவளைத்திருக்கின்றனர், விடுதலைப்புலிகள் சம்பூர்பகுதியில் விமான ஓடுதளத்தை உருவாக்கிவருகின்றனர் போன்ற பிரசாரங்களை திட்டமிட்டவகையில் முடுக்கிவிட்டிருந்தன என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம். ஆகவே திருகோணமலையில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக் கொண்ட சிங்களப் படைத்துறை இறுதியில் மதத்தை துணைக்கழைத்தது. படைத்துறையின் இலக்கு இவ்வாறிருக்க திருகோணமலையில் இருக்கும் சிங்கள பௌத்த மதபீடமும் அதனுடன் கைகோர்த்து இயங்கும் இனவாத அமைப்புக்களும் புத்தர்சிலையை அடிப்படையாகக் கொண்டு நகர்ப்பகுதியில் அத்துமீறி குடியமர்ந்திருக்கும் சிங்களவர்களின் சனச்செறிவை மேலும் விஸ்தரிக்கும் திட்டத்தை வகுத்தனர். புத்தர் சிலை நிறுவப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி. இரவோடு இரவாக திருமலை இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் சிங்களவர்களை குடியமர்த்த முற்பட்டதும் பின்னர் தமிழ் மக்களின் எதிர்ப்பினால் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையும் நாம் புத்தர் சிலை விவகாரத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஏற்கனவே இராணுவம் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தலங்களில் ஒன்றான கோணேசர் ஆலயத்தை பௌத்தமயப்படுத்திவருகிறது. கோட்டைவாயிலுக்கு அருகிலேயே மிகப் பிரமாண்டமானதொரு விகாரை அமைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் நகரின் மையப்பகுதியான மணிக்கூண்டுக் கோபுரப்பகுயில் புத்தர் சிலை நிறுவுவதற்கான எந்தவிதமான வழிபாட்டியல் சார்ந்த காரணமும் கிடையாது. தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவத்தை நிலை கொள்ளச் செய்தல், திருகோணமைல நகர்ப்பகுதியிலும் நகரை அண்டியிருக்கும் பகுதிகளிலும் மேலும் சிங்கள ஆக்கிரமிப்பை விஸ்தரித்தல். இவையே புத்தர் சிலையின் பின்னாலுள்ள கபட அரசியலாகும்.

தமிழர் தாயகக் கோட்பாட்டை புவியியல் ரீதியாக பலவீனப்படுத்தும் வகையிலேயே சிங்கள ஆளும்வர்க்கம் இவ்வாறான திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும் ஊடுருவல்களையும் மேற்கொண்டு வந்திருக்கிறது. இதனடிப்படையிலேயே வடக்கு,கிழக்கு இணைந்த தமிழர்களின் அரசியலைச் சிதைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டவகையில் குடியேற்றங்களை நிறுவி சிங்கள மக்களின் சனச் செறிவை அதிகரித்தது. 1949ஆம் ஆண்டு பட்டிப்பளை என்னும் தமிழ் மக்களின் பாரம்பரிய இடம் கல்லோயா எனப் பெயர் மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்கிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்கள ஆக்கிரமிப்பின் மையப்பகுதியாக திருகோணமலையே இருந்துவருகிறது. உண்மையில் தமிழர் தாயகக் கோட்பாட்டின் அரசியலை புவியியல்ரீதியாக பலவீனப்படுத்துவதற்கு சிங்கள ஆளும்வர்க்கம் திருகோணமலையையே தமது தெரிவாக வைத்திருக்கிறது என்பதே எனது துணிபு. இன்றுவரையான நிலைமைகள் அதைத்தான் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. 1048 சதுரமைல் பரப்பைக் கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் 574 சதுரமைல் நிலப்பகுதியை உள்ளடக்கியவாறு சேருவெல தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 1977இல் தமிழ் மக்களின் பாரம்பரிய இடத்திலிருந்து ஒரு சிங்களவர் பாராளுமன்றம் செல்லக் கூடிய வாய்ப்பு உருவாகியது. தவிர திருகோணமலையின் எல்லைப்பகுதியிலுள்ள சில இடங்களை சிங்கள நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளுடன் இணைப்பதனூடாகவும் திருகோணமலையின் தமிழர் அரசியலை பலவீனப்படுத்தவும் சிங்கள ஆளும் வர்க்கம் முயன்று வருகிறது. திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளை அனுராதபுர மாவட்டத்துடன் இணைத்து அனுராதபுர அரச அதிபர் ஊடாக காணிக்கச்சேரிகளை நடத்துவதன் மூலம் சிங்கள மக்களுக்கு சட்டரீதியாக காணிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கியது. அதேவேளை சில அரச ஸ்தாபனங்களையும் பிற சிங்கள நிர்வாகப் பிரிவிற்குள் அடக்குவதன் மூலமும் திருகோணமலை தமிழ் மக்கள் மீது ஆக்கிரமிப்பைத் தொடர்கிறது. சமீபத்தில் திருகோணமலை மின்சார சபை நிர்வாகத்தை அனுராதபுரத்திற்கு மாற்றியதும் அவ்வாறானதொரு ஆக்கிரமிப்பு அரசியல் நோக்கத்தினைக் கொண்ட முயற்சியே. இன்று திருகோணமலையிலுள்ள லைட்போஸ்ட் ஒன்றிற்கு லைட் மாற்றுவதானாலும் தமிழ் மக்கள் அனுராதபுரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. இன்று திருகோணமலைவாழ் தமிழ் மக்கள் குறிப்பாக நகரையும் நகரையண்டிய பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் ஒரு சிங்கள சிறைக்கூடத்தினுள் வாழ்கின்றனர் என ஒருவர் கூறினால் அது மிகையானதொரு கணிப்பல்ல. இன்று திருமலை நகர்ப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் அத்துமீறிக் குடியமர்ந்த சிங்களவர்களால் சூழப்பட்டிருக்கின்றனர். நாளை ஒரு யுத்தம் வெடிக்குமாக இருந்தால் இவர்களது இருப்பு மிகுந்த கேள்விக்குள்ளாகும். இவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் தமிழ்த் தேசிய சக்திகள் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில்தான் ஒரு ஒடுக்கும் தேசத்தினது ஆக்கிரமிப்பிற்கு துணைபோகும் மக்களுக்கும், ஒடுக்கும் இராணுவத்திற்குமான தொடர்பு பற்றிக் கூறவேண்டியிருக்கிறது. இன்று திருகோணமலையில் திட்டமிட்ட குடியேற்றம், திட்டமிட்ட சிங்கள ஊடுருவல் என்பவற்றின் மூலம் தமிழ் மக்களைச் சூழ்ந்து ஆக்கிரமித்திருக்கும் சிங்கள மக்களும் ஒரு வகையில் இராணுவத் தொழிற்பாட்டை ஆற்றுபவர்கள்தான். மாக்கியவல்லியின் வார்த்தையில் சொல்வதானால் இவர்கள்தான் நிரந்தர இராணுவத்தினர். (Strengthen military) இவ்வாறு ஒடுக்கும் அரசானது ஒடுக்கப்படும் தேசத்தின் நிலப்பரப்பினுள் தனது விசுவாசத்திற்குரிய மக்களை ஆக்கிரமிக்க வழிசமைப்பதன் ஊடாக இரண்டு தொழிபாடுகளை நிறைவு செய்துகொள்ள முயல்கிறது. ஒன்று ஒடுக்கும் தேசத்தின் அரசியலை பலவீனப்படுத்தல். மற்றையது ஒடுக்கும் இராணுவத்திற்கான சமூக பலத்தை உருவாக்குதல். ஒடுக்கும் இராணுவத்திற்கு விசுவாசமான மக்களை மாக்கியவல்லி நிரந்தர இராணுவத்தினர் எனக் கூறுவது இந்த அடிப்படையில்தான்.

ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு ஒடுக்கும் அரசுகள் வரலாறு நெடுகிலும் நில ஆக்கிரமிப்பை ஒரு முக்கிய கருவியாகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. சிங்கள ஆளும்வர்க்கமும் தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் நில ஆக்கிரமிப்பையும் ஒரு முக்கிய கருவியாகக் கைக்கொண்டு வருகிறது. சிறிலங்கா அரசினது காணிக் கொள்கையும் நில ஆக்கரமிப்பை மேற்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருப்பதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னொருவகையில் பார்த்தால் சிறிலங்கா அரசு இன்று கைக்கொண்டுவரும் காணிக்கொள்கை பிரித்தானிய காலனித்துவ ஆக்கிரமிப்பு காலத்தில் பிரித்தானிய நிர்வாகத்தினரால் வகுக்கப்பட்ட கொள்கையாகும். 1815இல் கண்டி நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1840இல் மக்களின் குடியிருப்புக்குள்ளாகாத காணிகள் அனைத்தையும் முடிக்குரிய காணிகளாக பிரகடனப்படுத்தி, அதில் அத்துமீறி குடியமரும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தினர். இச் சட்டநடைமுறையின் முக்கிய நோக்கம் அப்போது கண்டி, வெல்லச மாகாணங்களில் காணப்பட்ட விடுதலைப் போராளிகளின் கிராமியப் பொருளாதாரத்தை சிதைப்பதும், அவர்களின் புகலிடமாக விளங்கிய மத்திய மலைநாட்டினுள் ஊடுருவுவதுமாகும். இன்றுவரை சிறிலங்கா அரசினது காணிக்கொள்கையும் காலனித்துவக் காணிக் கொள்கையினது நீட்சியாகவே தொடர்கிறது. 1985ஆம் ஆண்டு அப்போது சிறிலங்காவின் சனாதிபதியாக இருந்த ஜீலியட் ரிச்சட் ஜெயவர்த்தன திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பாக பின்வருமாறு கூறியிருக்கிறார். நாம் எல்லைகளில் குடியேறா விடின் எல்லைகள் எம்மை நோக்கி நகரும் (If we do not occupy the border, the border will come to us) இன்றுவரை தமிழ் மக்களின் எல்லைகளை சிதைப்பதையே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினதும், ஊடுருவல்களினதும் நோக்கங்களாக இருந்துவருகிறது. இத் தொழிற்பாட்டில் அரசயந்திரங்கள் அனைத்தும் ஒரு நேர் கோட்டில் சந்தித்துக் கொள்கின்றன. ஒடுக்கும் அரசு, அதனைப் பாதுகாக்கும் ஒடுக்கும் இராணுவம், அதற்கான

சித்தாந்த பலத்தை வழங்கிவரும் சிங்கள பௌத்த மதபீடம் ஆகிய மூன்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய நில ஆக்கிரமிப்பின் பின்னணியில் கைகோர்த்து நிற்கின்றன. இன்று திருகோணமலையில் மேற்படி மூன்று தரப்பினரது இணைவையும் நாம் தெளிவாகவே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு என்ற தலைப்பானது மிகவும் விரிவானதொரு ஆய்வுக்குரிய விடயமாகும். எனினும் திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், சிங்கள ஊடுருவல்கள், அவற்றின் தாக்கம் தொடர்பாக ஒரு சிறு அவதானத்தையே இங்கு பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். இது குறித்து விரிவானதொரு பார்வை நமக்குத் தேவையாகும்.
http://www.thinakural.com/New%20web%20site...2/Article-6.htm
Reply


Messages In This Thread
திருகோணமலையும் ஆக்கிரமிப்பும் - by adsharan - 01-22-2006, 04:42 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 04:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)