Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன அழிப்பு நோக்கி திரும்பியுள்ள சிங்கள அரசின் நிழல் யுத்தம்
#1
இன அழிப்பு நோக்கி திரும்பியுள்ள சிங்கள அரசின் நிழல் யுத்தம்
-ஜெயராஜ்-

யுத்த நிறுத்த மீறல் என்பது தற்பொழுது சிறிலங்கா இராணுவத்தரப்பிற்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்; யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரங்கள,; அனுமதிகள் என்பனவற்றிற்கும் அப்பால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை என்ற வடிவத் தினை முற்றுமுழுதாகப் பெற்றுக்கொண்டு விட்டது.

இவற்றிற்குத் தொடர்ச்சியான பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டமுடியும். அதாவது விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையிலான நிழல் யுத்தத்திற்கு அப்பால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன ஒடுக்குமுறைகள் அண்மைக்காலத்தில் மிகத் தீவிரம்பெற்று இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் தாயகப்பகுதியில் பெரும் அச்சமும், பீதியும் நிலவும் பெரும் பயங்கரச்சூழ்நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அதாவது யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னதான காலத்தில்- யுத்த காலத்தில்- தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீண்டும் தமிழர் தாயகத்தில் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன. இந்த வகையில்

1. ஆயுதப்படையினரால் கைது செய்யப்படு வோர் காணாமல் போதல்,

2. படுகொலை செய்யப்படுதல்,

3. கோரமான தாக்குதல்களும், சித்திரவதைகளும்,

4. பாலியல் பலாத்காரமும், படுகொலையும்.

என சிறிலங்கா ஆயுதப்படையின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இப்படுகொலை மற்றும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாததொரு நிலை உருவாகியுள்ளது என்பது வெளிப்படையானது. அதிலும் குறிப்பாக இச்சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எதனையுமே செய்யமுடியாதுள்ளது. இம்மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எந்தவித ஒத்துழைப்பையும் படைத்தரப்பு வழங்குவதாக இல்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப்பிரதிநிதிகளே கைவிரித்து விட்டனர்.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இவ்வொடுக்குமுறை நடவடிக்கையில் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்புடன் தமிழ்த் தேச விரோதக்குழுவினரும் இணைந்துள்ளனர் என்பது வெளிப்படையானது. ஆனால் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் தமிழினத்தேச விரோதக்குழுக்கள் மாறுபட்டவையாகவுள்ளன என்பதே வேறுபாடானது.

அதாவது மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் இத்தேசவிரோதக்குழுக்களாகச் செயற்படுபவர்களில் கருணா குழுவினர் முக்கிய பாத்திரத்தை பெற்றுள்ளனர் எனின் யாழ். குடாநாட்டில் ஈ.பி.டி.பி.யினர் அப்பாத்திரத்தை வகிக்கின்றனர். ஆனால் இவ்விரு குழுக்களும் பெயரளவில் வேறுபாடனவர்களேயொழிய அவர்களின் பணி ஒன்றேயாகும்.

இன்று தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் பல இலக்குகளையும், நோக்கங்களையும் கொண்டவையாகவுள்ளன. இப்படுகொலைகள் தமிழ்த் தேசியத்தின் பால் உறுதியான நிலைப்பாடு கொண்டவர்கள் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் முன்கொண்டு செல்ல முற்பட்டவர்கள் என முக்கிய நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வகையில் ஊடகவியலாளர்கள் ஜி.நடேசன், டி.சிவராம், விரிவுரையாளர் தம்பையா போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வகையில் இறுதியாக பாராளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை ஆர்வலருமான ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் படுகொலையும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு அடுத்தாகப் பழிதீர்ப்பது போன்ற தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுவது அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எடுத்துக்காட்டாக கருணா குழுவிலிருந்த இரு இளைஞர்கள் சிலரைச் சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளின் அமைப்பிடம் சரணடைந்த வேளை சரணடைந்த ஒருவரின் சகோதரிகள் மிலேச்சத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த வகையிலேயே ஆயுதப்படைத் தாக்குதலுக்குள்ளாகும் இடங்களில் வாழும் அன்றி அப்பகுதியூடாகப்பயணிக்கும் மக்களைத் தாக்குவதும், சிறிலங்காப் படைத்தரப்பு படுகொலை செய்ததுமுண்டு. இந்த வகையில் பலர் அண்மைக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றிக்கும் மேலாக அச்சம், சந்தேகம் என்பன காரணமாகச் சிறிலங்காப் படைத்தரப்பால் பல இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தி விடுவார்களோ என்ற அச்சம், விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக இப்படுகொலைகள் இடம் பெறுபவையாகவுள்ளன. இவை தவிர விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகம், ஐயப்பாடு என்பவற்றின் அடிப்படையிலும் பல படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையிலானதே இறுதியாக நேற்று முன்தினம் யாழ். மானிப்பாயிலும் தாயும், இரு மகள்மாரும் படுகொலை செய்யப்பட்டமையும், தகப்பனும், மகனும் படுகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டமையும் ஆகும்.

இவற்றிற்குப்புறம்பாக இனவெறித்தனத்தின் வெளிப்பாடாகவும், இனப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. இந்த வகையில் இடம்பெற்ற படுகொலைகளில் முக்கியமானதே திருமலையில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.

இப்படுகொலைகளுக்குச் சிங்கள ஆட்சியாளர்களின்;ஃ ஆயுதப் படைத்தரப்பின் இன வெறியைத்தவிர வேறு காரணங்கள் எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில் இப்படுகொலைகளுக்கு காரணிகள் எதுவுமில்லை. பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும், பல்கலைக்கழகங்கள் செல்லவுள்ள மாணவர்கள் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் இப்படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை தமிழ் மக்கள் மீதான இவ்வினப்படுகொலைகளுக்கு எத்தகைய காரணிகள் பின்னணியாக இருப்பினும் சிறிலங்கா அரசினதும், அதன் ஆயுதப்படைத்தரப்பினதும்- தீர்மானங்களே அடிப்படையானவையாகும். அதாவது இப்படுகொலைகள் சிறிலங்கா அரசினதும், ஆயுதப்படையினரதும் புலனாய்வுத்துறை உட்பட- அங்கீகாரம், அனுசரணையின்றி நடைபெறுபவையாக இல்லை என்பதே நிதர்சனமானதாகும்.

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, வடக்கு-கிழக்கைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கான வழிமுறையாக இனப் படுகொலையையே தனது மார்க்கமாகத் தெரிவு செய்துள்ளதை அவரது சில அறிவிப்புக்களே வெளிப்படுத்தப்போதுமானதாகும்.

குறிப்பாக தமிழ் மக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரியவர்கள் என்ற நிலைப்பாடும் தற்பாதுகாப்புப்பயிற்சி பெற்ற அனைவரும் விடுதலைப் புலிகளே என்பதும், சந்தேகத்திற்கிடமான அனைவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொள்ள இராணுவத்திற்கு அவர் வழங்கியுள்ள அனுமதியும், அவர் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பிற்கு இன அழிப்பிற்கான அனைத்து அங்கீகாரத்தை அளித்துள்ளார் என்றே கொள்ளக்கூடியதாகும்.

அத்தோடு யாழ். மாவட்ட சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குப் படைத்தரப்பு ஒத்துழைக்க மறுப்பதும் லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் தீர்மானத்தின் பாற்பட்டதொன்றாகவே இருக்க முடியும். அதாவது தமிழர் கைது காணாமற்போதல் தொடர்பாக படுகொலை தொடர்பாக எவருக்கும் காரணம் கூறவோ, விளக்கமளிக்கவோ வேண்டிய தேவையில்லை என்ற தீர்மானத்தின் அடிப்படையிலானதே அதுவாகும்.

இதைத்தவிர இனப்படுகொலைக்கு சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சில் இருந்து உத்தரவிடுவோர் சிலரும் இன்றுள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரும், தற்போதைய பாதுகாப்பமைச்சின் ஆலோசகருமான கொட்டகதெனிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ போன்றவர்களும் உள்ளனர்.

அண்மையில் திருமலையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு கொட்டகதெனியவின் உத்தரவே காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது கொட்டகதெனியவின் விசேட பணிப்பில் விசேடபொலிஸ் அதிரடிப்படைப்பிரிவே இப்படுகொலையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதேசமயம் இவ்வினவெறிக் கூட்டணி தமிழின விரோக்குழுக்களின் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் தமது ஒத்துழைப்பையும், அங்கீகாரத்தையும் அளிக்கத்தயாராக உள்ளன என்பதை அண்மைக்காலத்தில் இவ்வின விரோதச்சக்திகள் மேற்கொள்ளும் படுகொலைகளிலிருந்து ஏனைய அழிவு நடவடிக்கைகள் வரை வெளிப்படுத்துபவையாகவுள்ளன.

இந்த வகையில் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் தொடர்வது இனப்பிரச்சினைக்கு இனிப்பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவுள்ளது. அதாவது நோர்வேயின் அபிவிருத்தி மற்றும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அமைச்சரும், முன்னாள் விசேட தூதுவருமான எரிக்சூல் ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா அரசு இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தியுள்ளதானது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளத்தையே தகர்த்துவிடக்கூடியதாகும். வேறுவிதமாகக் கூறினால் பேச்சுவார்த்தைக்குப் போடும் முட்டுக்கட்டை ஆகும்.

அதாவது அண்மைக்காலம் வரை சமாதானப் பேச்சுவார்த்தைகளை எங்கு நடத்துவது? எதனைப்பற்றி முதலில் பேசுவது என்பது முக்கியப்பிரச்சினையாக இணக்கப்பாடு காணப்படவேண்டிய பிரச்சினையாக இருந்தது. ஆனால் தற்பொழுது நிலைமை மாற்றம் கண்டுள்ளது போல் உள்ளது. ஏனெனில் சிறிலங்கா ஆயுதப்படைதரப்பு மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுக்கள் புரியும் படுகொலைகள் பேசுவதற்கு முன்னர் படுகொலைகள் நிறுத்தப்படுவது குறித்த அரசின் உறுதிப்பாட்டைப்பெற வேண்டிய கட்டாயத்தைப் புலிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பித்த நிழல் யுத்தம் இன்று முற்றிலுமாக இனவழிப்பு நடவடிக்கையாக மாற்றம் கண்டுள்ளது. இதனை இன்று எவருமே மறுப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ முடியாது. அவ்வாறு யாராவது நிராகரிப்பவர்களாக இருப்பின் அவர்களும் இப்படுகொலைகளின் பங்குதாரிகளாகவே இருக்க முடியும்.

சிறிலங்கா அரசு நிழல் யுத்தம் ஒன்றை ஆரம்பித்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளும் நிழல்யுத்தம் ஒன்றை ஆரம்பித்தனர் என்று வைத்துக்கொண்டாலும்- அதாவது சிறிலங்கா அரசுதரப்பு கூறுவது போன்று சில தாக்குதலுக்கு புலிகளே காரணம் என வைத்துக்கொண்டாலும், இவை சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பு மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் குழுக்களுக்கும்-விடுதலைப் புலிகளுக்கும் இடையிலானதாகவே இருக்க முடியும்.

ஆனால் சிறிலங்கா அரசோ இன்;று இம்முறை முகப்போரைத் தமிழ் மக்களுக்கு எதிராகத்திருப்பியுள்ளது. இதன் விளைவானது அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் நடவடிக்கையாக விஸ்தரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை என்பது எத்தனை தூரம் சாத்தியப்பாடானதாக இருக்க முடியும்?.

சிறிலங்கா அரசு இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை இன அழிப்பு என்பதையே வழிமுறையாகக் கொண்டுள்ளதையே அதன் நடவடிக்கைகள் வெளிப்படுத்துவதாகவுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்களைப் பொறுமையுடன் தமிழ் மக்களின் தேசிய தலைமை இராணுவ ரீதியிலான சவால்கள் என ஏற்றுக்கொண்டாலும் இனப்படு கொலையைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள ஒருபோதும் அது தயாராக இருக்கமாட்டாது.

அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வாக இன்னமும் இன அழிப்பையே சிறிலங்கா அரசாங்கம் தெரிவு செய்வதாக இருக்கும் பட்சத்தில் யுத்த நிறுத்த உடன்பாடு பற்றியும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பற்றி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்தும் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியே இருக்கும். ஏனெனில், இனப்படுகொலைதான் தீர்வென உள்ளவர்களுடன் பேசிப் பயன் ஏதும் உண்டா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

நன்றி: ஈழநாதம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
இன அழிப்பு நோக்கி திரும்பியுள்ள சிங்கள அரசின் நிழல் யுத்தம் - by வினித் - 01-19-2006, 08:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)