Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலையகத்தில் புலிகளின் ஊடுருவல்?
#1
மலையகத்தில் புலிகளின் ஊடுருவல்?

* சிங்கள ஊடகங்கள் கிளப்பும் புரளி சந்தேகத்துடன் பார்க்கும் பொலிஸார்

எஸ்.நயனகணேசன்

இன்று இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் புலிகளாவார்கள். தென்னிலங்கையில் வாழும் மக்கள் பொலிஸாரால் தாக்குதலுக்கிலக்காகும் பொழுது பொலிஸார் குண்டர்களாவார்கள். அதேவேளை வடக்கு, கிழக்கு மக்கள் தாக்கப்படும் பொழுது அப்பொலிஸார் தேசாபிமானிகளாவார்கள். தெற்கில் மக்கள் கொல்லப்படும் பொழுது அம் மக்கள் சாதாரண பொதுமக்களாவார்கள். வடக்கில் கொல்லப்படும் பொழுது அம் மக்கள் புலிகளாவார்கள். இதுதான் இன்றைய சிங்கள நாளேடுகளின் ஊடக ஒழுக்கநெறியாக அமைந்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி திங்கட்கிழமை திருகோணமலை பீச் ரோட்டில் இடம்பெற்ற படுகொலையின்போது கொல்லப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரித்திருந்த விதம் மிகவும் வேதனைக்குரிய வகையிலும் விசனப்படக்கூடிய வகையிலும் இருந்தமை மிகவும் கவலைக்குரிய விடயமாகவுள்ளது.

அந்த வகையில் கடந்த 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரசுரமான `சத்தின' என்ற சிங்கள வாரப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்றும் தவறான செய்தி வழங்கும் வகையிலே பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் தம் வசமிருந்த குண்டொன்று வெடித்ததனாலேயே உயிரிழந்ததாக செய்தியறிக்கையிடப்பட்டிருந்தமை எவ்வளவு பெரிய குற்றம்!

அனைத்து சிங்கள நாளேடுகளும் தமது செய்தியறிக்கையினூடாக இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகிய இரண்டையுமே தமது செய்திக்கு மூலமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. அதில் எந்தவொரு பத்திரிகையும் அயலவர்களின் தகவல்களைப் பெற்று அத்தகவல்களை உள்ளடக்கி செய்திகளை பிரசுரித்திருக்கவில்லை.

இலங்கையின் அதிகளவு ஊழல் நிறைந்த இடமாக இந்நாட்டு மக்களால் நம்பப்படும் பொலிஸ் தகவல் மூலம்மீது மட்டும் தங்கியிருக்கும் பத்திரிகைகளை எந்தளவு தூரம் நம்பிக்கை கொள்ள முடியும்.

சம்பவ தினத்திற்கு மறுதினம் இவ்விளைவுகளின் மரண விசாரணையினை மேற்கொண்ட நீதிபதி இவ் ஐந்து படுகொலைகளும் துப்பாக்கிச் சூட்டினாலேயே நிகழ்ந்துள்ளது என தீர்மானித்தார். ஆனால் இச்செய்தியினை மறுநாள் எந்தவொரு சிங்களப் பத்திரிகையும் பிரசுரிப்பதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (லங்காதீப பத்திரிகையைத் தவிர.)

இச்சம்பவம் தொடர்பாக "சத்தின" பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததாவது:

"திருகோணமலை நகரம் புலிகள் இயக்கத்தின் கொடூரத்திற்குட்பட்ட மற்றுமொரு நகரமாகும். அவர்களது பிரதான நோக்கம் சிங்கள மக்களை நகரத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, முழுப் பிரதேசத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும். அந்நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடந்த வார காலப்பகுதிகளில் திருகோணமலை நகர் முழுவதும் பாரிய வன்செயல்களை புலிகள் மேற்கொண்டனர்.

புலிகளின் தேவையானது எந்த வகையிலாவது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை பீதியடையச் செய்து நகரத்திலிருந்து விரட்டியடித்து நகரத்தின் வியாபார வலயமைப்பை தம் வசம் எடுத்துக் கொள்வதாகும். அவ்வாறு நகரத்திலிருந்து இவர்கள் விரட்டியடிக்கப்பட்டால் புலிகளின் நோக்கம் இலகுவில் நிறைவேறிவிடும்.

இக்கட்டுரையாளரின் கூற்றுக்கு ஏற்ப திருகோணமலையில் சிங்களவர்களின் வருகையும் அம்மக்களின் ஆதிக்கமும் எவ்வாறு வேரூண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடுதல் முக்கியமாகும்.

கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் திருகோணமலை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலம் திட்டமிட்ட வகையில் செயற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களினால் இத்தலையெழுத்துக்கு இரையான இனங்கள் இன்று இனங்கண்டு கொள்ள முடியாத வகையில் மாற்றமடைந்துள்ள மாவட்டமாகும். இன்று திருகோணமலையின் ஆதிக்கத்தின் பாரிய அரசியல் குரலாக அமைந்துள்ள ஜே.வி.பி. அந்நிலைமையினை எட்டுவதற்கும் இக்குடியேற்ற திட்டமே காரணம் என்பதனையும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.

1824 ஆம் ஆண்டு திருகோணமலையில் தமிழ் இனத்தின் சனத்தொகை வீதம் 76.5% மாகவும், 1901 ஆம் ஆண்டளவில் 60% மாக அது வீழ்ச்சி கண்டது. 1981 ஆம் ஆண்டளவில் 37% மான நிலையினை அடைந்தது. சிங்கள மக்களின் தொகை 1901 இல் 5% மாகவும் 1981 இல் 33% மாகவும் அதிகரித்துள்ளது. தமிழ் மக்களின் தாயக பூமி எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டது என்பதனை சுட்டிக்காட்டுவதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

இச்சந்தர்ப்பத்தில் 1950 ஆண்டு காலப்பகுதியில் இக்குடியேற்ற மக்களிடம் டி.எஸ்.சேனாநாயக்க கூறிய விடயமொன்றினை இங்கு குறிப்பிடுதல் முக்கியமானதாகும். "இன்று நீங்கள் இங்கு அழைத்து வரப்பட்டு உங்களுக்கு காணித்துண்டொன்று வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களின் கிராமங்களிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் சமுத்திரத்தில் மிதக்கும் மரக்கட்டையைப் போலானவர்களாவீர்கள். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் முழு நாடும் உங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும், சிங்கள மக்களுக்காக நடக்கும் இறுதிப் போராட்டம் பதவியா சமதரையிலேயே இடம்பெறும்... இந்நாட்டை பிரிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் உங்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு ஏற்படும். நீங்கள் தான் சிங்களவர்களின் இறுதி பாதுகாப்பு அரணாவீர்கள்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வகையிலேயே சிங்களவர்களின் ஆதிக்கம் திருகோணமலையில் தடம்பதிக்கப்பட்டது. இன்றைய சிங்கள சமூகம் இதனை உணர மறுக்கின்றது. அதனை சிங்கள ஊடகங்கள் மறைமுகமாக வரவேற்கின்றன.

இக்கட்டுரையினை நோக்கும் பொழுது பக்கச் சார்பான முறையில் சிங்கள சமூகத்தினருக்கு தவறான செய்தியினை வழங்கியுள்ளதுடன் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை மாணவர்கள் என குறிப்பிடுவதற்கு மாறாக புலிகளென்றே சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் இடம்பெறும் அனைத்து வன்முறைகளுக்கும் புலிகளை குற்றஞ்சாட்டுவதும், அனைத்து தமிழர்களையும் புலிகள் என முத்திரை குத்துவதனையும் இவ் ஊடகங்கள் தவிர்த்து ஒழுக்க நெறிசார்ந்த ஊடகவியலைக் கொண்டு சிங்கள சமூகத்தினருக்கு சரியான தகவல்களை வழங்குவதற்கு வழி சமைப்பதன் மூலம் நாட்டில் ஏற்படும் பதற்றங்களை தவிர்க்க முடியும் என்பதனை பணிவுடன் இவ் ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

புலிகள் இயக்கத்திற்கு மலையகத்திலிருந்து இரண்டாயிரம் பேர்....

கடந்த 6 ஆம் திகதி பிரசுரமான `லக்பிம' பத்திரிகை தமது தலைப்புச் செய்தியினை "புலிகள் அமைப்பிற்கு தோட்டப் பகுதிகளிலிருந்து இரண்டாயிரம் பேர்" என தீட்டியிருந்தது.

உப தலைப்புச் செய்தியாக இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு தலைவர்கள் மலையகத்திற்கு வருகை தந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

அச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மலையக தோட்டப் பகுதிகளிலிருந்து புலிகள் அமைப்பில் இரண்டாயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்காக அவ்வியக்கத்தின் ஆயுதப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்ட குழுவொன்று இத்தினங்களில் தோட்டப்பகுதிகளுக்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தோட்டப் பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவரொருவர் தோட்டப் பகுதியிலிருந்து இரண்டாயிரம் இளைஞர், யுவதிகளை புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

தோட்டப் பகுதியிலிருந்து வடக்கிற்கு மற்றும் கிழக்கிற்கு சென்று அங்கு புலிகளின் முகாம்களில் பயிற்சி பெற்ற இளைஞர், யுவதிகள் இப்புலிகளின் பிரமுகர்களுடன் மீண்டும் தோட்டப் பகுதிகளுக்கு வந்துள்ளதுடன் இச் செயற்பாட்டினை மேற்கொள்வதாகவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. சிங்கள இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதாயின் விசேட வரப்பிரசாதங்கள் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு புலிகள் அமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில் "அப்படி ஒரு விடயமும் இங்கு இல்லை. சிங்களப் பத்திரிகைகள் தமது வழமையான செய்திப் போக்கினை கொண்டு பொய்யான செய்தியொன்றினை பிரசுரித்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இச் செய்தி தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் ஆர்.யோகராஜன் கருத்து தெரிவிக்கையில், `இச் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது. இதுவொரு வதந்தி. தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை நசுக்கி ஆழ்வதற்காக செயற்பாடும் இனவாத அமைப்புகளின் செயற்படுகளே இச் செய்தியின் பின்னணி. அத்துடன், எல்லாத் தமிழர்களும் புலிகள் அல்ல. தமிழர்களை சிறுபான்மையென நினைத்து அடிமைப்படுத்துவதற்கு மேற்கொண்ட விளைவினாலேயே வடக்கில் இன்ற ஆயுத போராட்டம் உருவானது. இந்நாட்டின் இந்திய வம்சாவளி சமூகம் மட்டுமே ஆயுதம் ஏந்தாத சமூகம். இச்சமூகத்தினரையும் ஆயுதம் ஏந்துவதற்கு வழிசமைக்க வேண்டாமென இனவாத அரசியல் வாதிகளை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இச் செய்தி தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத பதுளை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில், "இன்று தோட்டப் பகுதிகளிலிருக்கும் அதிகளவு இளைஞர்கள் தமது வீட்டில் கொழும்புக்கு வேலைக்குப் போவதாக கூறிவிட்டுச் செல்கின்றனர். அதனால் எமக்கு சந்தேகம். இவர்கள் எங்கு செல்கிறார்கள் என எமக்குத் தெரியாது. இவ்வாறு வந்துள்ளார்கள் என எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. தாம் எவ்வேளையிலும் அவதானத்துடனேயே இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

இச் செய்தியறிக்கை எவ்வித மூலதாரங்களையும் உறுதியாகவும், தெளிவாகவும் வாசகர்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டன. அது மட்டுமன்றி, இச் செய்தியின் காரணமாக மலையக மக்கள் மத்தியில் பல அச்சங்கள் தோன்றியுள்ளன.

ஊடகத்தின் கடப்பாடுகளில் ஒன்றுதான் பதற்றத்தைக் தணிப்பது. ஆனால் லக்பிம பத்திரிகை இக்கடப்பாட்டினை மீறியுள்ளதனை காணக்கூடியதாயுள்ளது.

பத்திரிகைகள் பிழையற்ற தன்மை மற்றும் தொழில் நேர்மை, அத்துடன் பொது நலனுக்காக புலனாய்வு பத்திரிகைத் தொழிலின் தலைசிறந்த பண்பாடுகளை பேணுவதற்காகப் பத்திரிகைகள் சளைக்காது முயற்சியெடுத்தல் வேண்டும்.

இச் செய்தி இலங்கை பத்திரிகைப் புகார்கள் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கைச் செய்தி ஆசிரியர்களுக்கான தொழில் நடைமுறைக்கோவையில் 5.3 இல் குறிப்பிட்டுள்ளதாவது, ஊடகவியலாளர் ஒருவர் தாம் அறிந்தும் அல்லது வேண்டுமென்றே சமய ஒற்றுமை இன்மையை அல்லது வன்செயல்களை தூண்டலாகாது என்பது. இச் செய்திக்கு ஏற்ப இப்பத்திரிகை ஆசிரியர் இந்நெறியினையும் மீறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நன்றி:தினக்குரல்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
மலையகத்தில் புலிகளின் ஊடுருவல்? - by வினித் - 01-15-2006, 12:25 PM
[No subject] - by ஊமை - 01-15-2006, 12:59 PM
[No subject] - by வினித் - 01-15-2006, 01:15 PM
[No subject] - by ஊமை - 01-15-2006, 02:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)