01-13-2006, 01:31 AM
<span style='font-size:22pt;line-height:100%'><b>தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள்</b>
பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தமிழ்ப் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களையும் சிரேஷ்ட செய்தியாளர்களையும் தனது அமைச்சுக்கு அழைத்து சிரேஷ்ட பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து ஆராய வேண்டிய அளவுக்கு அந்த விவகாரம் உயர்மட்டத்துக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் ஊடகவியலாளர்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் யாப்பாவுக்கு விளக்கியதையடுத்து, எதிர்காலத்தில் அத்தகைய துரதிர்ஷடவசமான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்திருக்கிறார். தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில் பொலிஸார் அல்லது படையினர் தரப்பில் அதிகார துஷ்பிரயோகம் அல்லது அத்துமீறல்கள் இடம்பெறுமானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் காலங் கடந்தென்றாலும், இந்தளவுக்கு அக்கறை காட்ட முன்வந்தமைக்காக அமைச்சர் யாப்பாவுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
தேடுதல் வேட்டைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்களுடன் பொலிஸார் மற்றும் படையினர் நடந்து கொள்வதில் காண்பிக்கின்ற ஒரு விசித்திரமான போக்கை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. தலைநகரில் உள்ள முக்கியமான ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் சகலருக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பிரத்தியேக அடையாள அட்டைகள் (Media Accreditation) வழங்கப்பட்டிருக்கின்றன. சோதனை நிலையங்களில் அல்லது தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் அந்த பிரத்தியேக அடையாள அட்டைகளை காண்பிக்கும் போது அவற்றை பொலிஸாரும் படையினரும் அலட்சியம் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது. பொலிஸாரினதும் படையினரினதும் தொப்பிகளில் அல்லது சீருடைகளில் காணப்படுகின்ற அதே அரசாங்க இலச்சினை ஊடகவியலாளர்களின் அட்டைகளிலும் இருப்பதைக் கூட அவர்கள் பொருட் படுத்தாத பல சந்தர்ப்பங்கள் குறித்து தமிழ் ஊடகவியலாளர்கள் முறையிட்டிருக்கின்றார்கள். அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரின் கையொப்பத்துடனான அந்த அடையாள அட்டைகளையே படையினர் நம்பகத்தன்மையுடன் நோக்கத் தயாரில்லை என்றால் தமிழ் ஊடகவியலாளர்கள் என்ன செய்ய முடியும்?
தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டைகளின் மாதிரிகளை பொலிஸாருக்கும் படையினருக்கும் காண்பித்து அவர்கள் ஊடகவியலாளர்களை எளிதில் இனங் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் யாப்பாவுடனான தமிழ் ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு வருடாந்தம் ஊடகவியலாளர்களுக்கு தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற இந்த பிரத்தியேக அடையாள அட்டைகளை தலைநகரில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸாரிலும் படையினரிலும் பெருமளவானோர் அறியாமல் இருப்பது மிகவும் விசித்திரமான ஒன்றாகும். இந்த அடையாள அட்டைகளை காண்பிக்கும் பட்சத்தில் ஊடகவியலாளர்களை உரிய முறையில் இனங்கண்டு அவர்கள் தங்கள் கடமைகளை இடையூறின்றித் தொடருவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை இனிமேலாவது தாமதமின்றி அமைச்சர் யாப்பாவும் உயர் பொலிஸ் மற்றும் படையதிகாரிகளும் எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் ஊடகவியலாளர் எதிர் நொக்குகின்ற இத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள் உட்பட பொதுவில் ஊடகவியலாளர்களுக்கு நேருகின்ற இன்னல்களைக் கண்டித்து இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பேரணியொன்று நடைபெறவிருக்கிறது சுதந்திர ஊடக இயக்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருக்கும் இந்தப் பேரணியில் ஊடக சமூகத்தவர்களும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் மீதான கெடுபிடிகளை முடிவுக்குக் கொண்டுவரப் போராடும் ஊடகவியலாளர்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
-தினக்குரல்</span>