Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு காதல் கதை
#9
அடுத்த நாள் காலையில் பஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும் பொழுது, கனிமொழியும், அகிலாவும் ஒன்றாக வந்து கொண்ருந்தார்கள். ஆகா கனிமொழிகிட்ட மாட்டிக்க கூடாதுன்னு நினைச்சு பக்கத்தில் இருந்த ஒரு டீக்கடையில் நுழைந்தேன். பெண்கள் டீக்கடையில் டீ குடிப்பதில்லை. ஆனால் காலேஜ் பஸ்ஸில் உட்கார்ந்ததும் மாட்டிக் கொண்டேன்.

கனிமொழி, "சார்லஸ், நீங்க முன்னாடி ஸீட்டில் உட்காருங்களேன்" என்று சார்லஸை எழுப்பிவிட்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

"என்னம்மா சொல்றா உன் பிரண்ட்?" நானே ஆரம்பித்தேன்.

"ஆனாலும் அண்ணே, நீங்க பண்ணினது சரியில்லை!"

"எதைச் சொல்ற?..."

"அகிலா நேத்திக்கு பூரா ஒரே அழுகை, நான் பயந்திட்டேன் யாராவது நான் இல்லைன்னு ரேகிங் ஏதும் பண்ணிட்டாங்களோன்னு. ஆனா நம்ம காலேஜூல ரேகிங் கிடையாதுங்கறதால, ஏண்டி அழறேன்னு கேட்டா உங்க பேரைச் சொல்றா, சின்னப் புள்ளையை இப்படியா பயமுறுத்துறது?"

"இதென்னாடி ஒம்பாயிருக்கு, நான் என்னா பண்ணினேன் உன் ஃபிரண்டை, கூப்பிடு அவளையே கேட்கிறேன்!"

"ம்... இங்கப் பாருங்க, நான் சொன்னேன்னு சொன்ன பின்னாடியும் நோட்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களாமே."

"ஏய் இங்கப் பாரு அவ உங்கிட்ட எதையோ மறைக்கிறான்னு நினைக்கிறேன், அவளை காலேஜூல பார்க்கிறதுக்கு முன்னாடி ஒரு பேச்சுப்போட்டியில பார்த்தேன், என்னைப் பத்தி தப்பா பேசினா, அடிச்சிட்டேன், பின்னாடி தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பும் கேட்டுட்டேன். நீயே சொல்லு அவளோ பர்ஸ்ட் இயர், என்கிட்ட நேரா வந்து நோட்ஸ் கொடுன்னா எப்பிடு கொடுப்பேன், அவ முதல்ல உன் பேரைச் சொல்லவே இல்லை, சொன்ன பின்னாடி கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்"

"ஆகா, இவ்வளவு நடந்திருக்கா. கள்ளி சொல்லவேயில்லை, ஆமா ஒரு நாள் வந்து உம்முன்னு உட்கார்ந்திருந்தா, அப்பிடியிருக்க மாட்டாளேன்னு, என்னாடின்னு கேட்டேன். ஒன்னுமில்லைன்னுட்டா, சரி யாரோ ஒரு பையனை சாக்கா வச்சு சொன்னீங்களாம் நோட்ஸ் தரேன்னு, அதை ஏன் என்கிட்ட நேரே சொல்லலைன்னுதான் ஒரே அழுகை." பின்னர் குரலை குறைத்து, "அண்ணே, அவளுக்கு அம்மா கிடையாது, அப்பா புரோகிதம் அதனால காசு கிடையாது. +2வில நல்ல மார்க் ஆனாலும் இங்க நம்ம காலேஜூல தான் சீட் கிடைத்தது. அது மட்டுமில்லாம ரொம்ப வெகுளிப் பொண்ணு, ஊரு, ஒலகத்தப்பத்தி ஒண்ணுமே தெரியாது. அவங்கப்பா என்கிட்ட வந்து நீதாம்மா பார்த்துக்கணும்னு சொல்லி விட்டுட்டு போயிருக்காரு, இப்பக்கூட எங்கவீட்டுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்னு ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேங்கிறா; அப்பா இவளை தனியா அனுப்ப முடியாது. வேணுமின்னா நீயும் ஹாஸ்டல்ல தங்கிப் படீங்கிறார். இவளால நானும் இப்ப ஹாஸ்டல்ல தங்கணும்." மூஞ்சை சோகமாக வைத்துக் கொண்டாள்.

"சரி நான் ஏதாவது சொல்லணுமா உன் ஃப்ரெண்ட்டுகிட்ட?"

"அண்ணே, அவ அப்படியே உங்கள மாதிரி தான், நல்லா படிப்பா, நல்லா பேசுவா, நல்லா ஓவியம் கூட வரைவா, நான் நினைச்சேன் நம்ம கூட அவளையும் சேர்த்துக்கிலாம்னு, நீங்கத்தான் உங்களுக்கு ஒத்து வராதவுங்க கூட பழகமாட்டீங்க. இவளோட எல்லாமும் ஒத்துவரும்னாலும் அதுக்காட்டியும் சண்டை போட்டு, அடிச்சுவேறபுட்டீங்க. நான் சொல்றத சொல்லிட்டேன் இனிமே உங்க விருப்பம்." என்று சொல்லிவிட்டு திரும்ப போய் அகிலாவிடம் உட்கார்ந்து கொண்டாள்.

பிறகு அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள், சிறிது நேரத்தில் அகிலா மீண்டும் அழத் தொடங்கினாள்.

அய்யோ இதென்னடா பெரும் தலை வேதனையாப்போச்சேன்னு நினைச்சுக்கிட்டே கண்ணை மூடினேன்.




----------------------------


அன்றைக்கெல்லாம் நிறைய வேலை இருந்ததால் வேறு எதைப்பற்றிய நினைவும் வரவே இல்லை. கனி மொழி சாப்பிடும் நேரத்தில் என்னைப் பார்க்க வந்திருந்தாள், அவளிடம் அகிலா கேட்ட நோட்ஸ்களைக் கொடுத்து விட்டு, "இங்கப்பாரு உன் ஃபிரண்ட்கிட்ட சொல்லு, அவ உட்கார்ந்து காப்பி எடுப்பாளோ, இல்லை ஜெராக்ஸ் எடுப்பாளோ எனக்குத் தெரியாது, இரண்டு நாள்ல எனக்கு நோட்ஸ் திரும்ப வேண்டும். உனக்காகத்தான் அவளுக்கு நோட்ஸ் கொடுக்கிறேன். எனக்கு ரொம்ப வேலையிருக்கு இன்னொருநாள் உட்கார்ந்து பேசுவோம்" என்று சொன்னதும் அவள் சென்றுவிட்டாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை, கல்லூரி கிடையாது என்பதால் வீட்டில் ஆஸ்திரேலியா விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெளியே யாரோ கூப்பிடுற மாதிரி சத்தம் கேட்டது, ரூம் ஜன்னலிலிருந்து பார்த்தால் அகிலா நின்று கொண்டிருந்தாள்.

"அத்தே..."

எங்கம்மாவையா கூப்பிடுறா பாவின்னு, வெளிய வரலாம்னு பார்த்தால் போட்டுக்கிட்டிருந்த ட்ரெஸ் பத்தலை, அதனால மேல்சட்டையைத் தேடி போட்டுக் கொள்வதற்குள், அம்மா கதவைத் திறந்துவிட்டார்கள்.

"யாரும்மா நீ?"

"அத்தே, இது மோகன் வீடு தானே, நான் அவரைப் பார்க்கணும்..."

"அவன் வீடுதான் நீயாரும்மா?"

"நான் அவர் கூடப் படிக்கிற பொண்ணு, சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தே!" என்று பட்டென்று எங்கம்மா காலில் விழுந்துவிட்டாள்.

அம்மா உடனே பதற்றமாகி, "என்ன பொண்ணும்மா நீ, கால்ல எல்லாம் விழுந்துட்டு. கூப்பிடுறேன் பேசிக்கிட்டிரு, நான் உனக்கு காப்பி கொண்டு வரேன்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ள வந்து என்னிடம் "டேய், உன்னைப் பார்க்க யாரோ பொண்ணு வந்திருக்கு, போய்ப்பாரு" அப்பிடின்னு சொல்லிவிட்டு அடுப்பாங்கரைக்குள்ள போயிட்டாங்க.

நான் நேரா அவளிடம் போய், "யேய், இங்க எதுக்கு வந்த?"

"ஏங்க, அந்த சுவற்றில இருக்கிறது நீங்க வரைஞ்சதா, சூப்பராயிருக்கு"

"இத சொல்லறதுக்குத்தான் வந்தியா?"

"இல்ல, நீங்கத்தான் கனி அக்காகிட்ட நோட்ஸ் சீக்கிரம் வேண்டும்னு கேட்டீங்களாம். அதான், ஜெராக்ஸ் எடுத்துட்டு அப்பிடியே உங்க வீட்டிலேயே திரும்பி கொடுத்துட்டு வந்திரலாம்னு வந்தேன்."

அடுத்தக் கேள்வி கேட்குறதுக்குள்ள அம்மா காபி டம்பளருடன் திரும்பி வந்து, "கனி அக்காவா அது யாரு? தம்பி, நம்ம கனிமொழியா""

"ம்ம்ம்... நம்ம கனிமொழிதான், இவ அவளோட தங்கச்சி முறை, அகிலாண்டேஸ்வரின்னு பேரு, நம்ப காலேஜூலத்தான் படிக்குது!"

"அப்பிடியா, நீ பேசிட்டிரு நான் கடைவரைக்கும் போய்ட்டு வந்திர்ரேன்"

அம்மா போனபிறகு, "அதுக்காக, வீட்டுக்கா கொண்டு வரச்சொன்னது? திங்கட்கிழமை காலேஜூல கொடுக்க வேண்டியதுதானே?"

"ஏன் நான் வீட்டுக்கு வரக்கூடாதா?" திரும்பவும் கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்தது.

"சரி கொடுத்துட்டேல்ல, கிளம்புறது"

"என்னை துரத்துறதிலேயே இருக்கீங்க..."

"சரி, என்னாத்தான் பண்ணனும்"

"எனக்கு இங்கிருக்கிற லைப்பிரரியில, மெம்பராகணும். கனி அக்காதான் சொன்னாங்க நீங்க மெம்பருன்னு; நான் மெம்பராகணும்னா, ஏற்கனையே இருக்கிற மெம்பர் யாராவது கையெழுத்து போடணுமாம். அதான் நீங்க போடுவீங்களான்னு கேட்க வந்தேன்."

"நாளைக்கு காலையில வந்து கையெழுத்து போடுறேன், இப்ப கிளம்புறியா?"

"அத்த வந்ததும் சொல்லிட்டு போறேன்"

இன்னிக்கு எனக்கு உதை வாங்கித்தராம போக மாட்டா போலிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு, "அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ கிளம்பு!" என்று சொல்லி அவளை அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு.

அம்மா வந்தவுடன் முதல் வேலையா என்கிட்ட வந்து, "என்னடா அவ அத்தைங்கிறா, எனக்கெங்கையோ உதைக்கிற மாதிரி இருக்குதே?!" ன்னு ஒரு மாதிரி முகத்தை வைச்சுக்கிட்டு கேட்டாங்க.

"எல்லாம் என் தலையெழுத்து வேற என்னா", என்று சொல்லிட்டு மீண்டும் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினேன்.

--------------------

ஞாயிற்றுக் கிழமை, காலையில் எழுந்ததும் சன் டிவியில் உள்ள நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ச்சியாகப் பார்த்துவிட்டு நிமிர்ந்தால் மதியம் ஒரு மணி, தலைவருடைய தளபதி படம் போட்டு இருந்தான். நான், அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் ஞாபகம் வந்தது அவளிடம் நான் லைப்பரரிக்கு வருவதாகச் சொன்னது. உடனே நான் அவசரமாக கிளம்ப, அம்மா, "தம்பி, இருடா நைனா பால் வாங்கிட்டு வந்திரும். காப்பி குடிச்சுட்டு போ!" என்றாள்.

அம்மா பேச்சு தட்ட முடியாமல் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பும் போது மணி ஐந்து; அந்த லைப்ரரி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆறு மணிக்கெல்லாம் சாத்திவிடும். எனக்கென்னமோ அவள் வந்தி ருக்கமாட்டாள் என்று எண்ணம் ஓடினாலும், அவளைப் பார்ப்பதற்காக இல்லாவிடினும் புத்தகம் மாற்றவாவது போகலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கே சென்றேன்.

லைப்பரரிக்குள் பார்த்தாள், உள்ளே உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். ஆகா காலையிலேயே வந்திருப்பாள் போலிருக்கிறது, இன்றைக்கு மாட்டிக்கொள்ளாமல் நாளைக்கு கல்லுரிக்கு வந்து வேறு ஏதாவது சாக்கு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து நான் திரும்பியிருப்பேன், பின்னால் யாரோ வேகமாக என்னை நோக்கி நகர்ந்து வருவதைப்போல் தோன்றியது. நான் திரும்பிப் பார்த்த பொழுது என் எதிரே நின்று கொண்டிருந்தாள்.

"இல்லை சாரி, மறந்துட்டேன். அடுத்தவாரம் வந்து பண்ணிக்கலாமே?"

"காலையிலேர்ந்து வையிட் பண்ணுறேன், இப்பத்தான் வந்தீங்க. என்னைப் பார்த்ததும் ஏதோ பேயைப் பார்த்ததை போல ஓடுறீங்க?"

"அதான் சாரி கேட்டேன்ல..."

"பண்ணறதை எல்லாம் பண்ணீற்ரது, அப்புறம் சாரி கேட்கிறது," வேறு எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள்.

"what do you mean?"

"I mean, what I mean!"

"சரி இப்ப என்ன பண்ணனுங்ற?"

"என்னைக் காக்க வைச்சதுக்குப் பரிகாரமா, காபி ஷாப் கூட்டிட்டு போகணும்"

என்னடா இது தைரியம் அதிகம் வந்திருச்சி போலிருக்கேன்னு நினைச்சு, "எதுக்கு?" என்றேன்.

"காபி ஷாப் எதுக்கு போவாங்க, காப்பி சாப்பிடத்தான்" சொல்லிச் சிரிச்சாள்.

காபி ஷாப் வந்து சேர்ந்தோம். பேரர் வந்ததும் இரண்டு நெஸ்கஃபே ஆர்டர் செய்துவிட்டு என்னையே பார்த்தாள்.

"என்னா?"

"இல்ல உங்ககிட்ட பர்ஸனலா கொஞ்சம் பேசணும்."

"எதைப்பத்தி?"

"உங்களைப்பத்தி..."

"என்னைப் பற்றி என்னா?"

"சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு..."

"தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போற?"

"இல்ல சும்மாத்தான், அக்கா உங்களைப் பத்தி நிறைய சொல்லுவாங்க."

"என்ன சொல்லுவா?"

"நீங்க நல்லா படிப்பீங்க, நிறைய ட்ராயிங்க் வரைவீங்க, தனியா ப்ராஜக்ட்டெல்லாம் எடுத்துப் பண்றீங்கன்னு, நான் கூட வரைவேன்..."

"ம்ம்ம், தெரியும். அதுக்கென்ன?"

"இல்ல, நான் வெறும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், நீங்க என்னெல்லாம் பண்ணுவீங்க?"

"நானும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், அதுக்கென்ன?"

"இல்ல, நான் அப்ஸரா 4B பென்சில் தான் உபயோகிக்கிறேன். நீங்க?"

"ஏய் உனக்கு என்ன கேட்கணும் நேரா கேளு?"

"நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?" கேட்டுவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள்.

"ஆமாம் காதலிக்கிறேன், என் சொந்தக்கார பொண்ணு ஒன்னை."

அதற்குப்பிறகு அவள் எதுவும் பேசவேயில்லை, நான் காபிக்கு காசு கொடுத்துவிட்டு, "கொஞ்சம் வேலையிருக்கு வர்றேன்" என்று சொல்லிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

அப்பா நிம்மதி, இனிமே தொந்தரவு பண்ண மாட்டாள் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாள் இடி இறங்கியது.


-------------------------------




அடுத்த நாள் காலையில் நான் ஃப்ரெண்ட் வண்டியில் கல்லுரிக்கு வந்தேன். அகிலாவைப் பார்க்கவேண்டாம் என்பது தான் முக்கிய காரணம். ஆனால் கல்லூரி பஸ் வந்த கொஞ்ச நேரத்திலேயே, கனிமொழி நேராக என் கிளாசிற்கு வந்து என் அருகில் அமைதியாக நின்றாள். அப்படியிருக்கும் பழக்கமில்லாதவள் ஆகையால் நானே தொடங்கினேன்.

"என்ன கனிமொழி?"

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..."

"ம்ம்ம், சொல்லு. என்ன விஷயம்."

"இல்லண்ணே, தனியாத்தான் சொல்லணும்."

"சரி வா, கேன்டீனுக்கு போகலாம்" என்று சொல்லி கேன்டீனுக்கு அழைத்து வந்தேன். அங்கே வந்தும் பேசாமல் இருந்தாள்.

"என்னம்மா சொல்லு, எதைப்பத்தி பேசணும் உன் பிரண்ட்டப் பத்தியா, பரவாயில்லை சொல்லு..."

"ஆமா அவளைப்பத்தி தான்..."

"என்ன விஷயம்"

"அண்ணே சொல்ரணேண்னு தப்பா நினைச்சுக்க கூடாது, அவ உங்களைக் காதலிக்கிறாளாம். இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்லணும்னு ஒரே அடம். நான் எவ்வளவோ சொல்லிட்டேன கேட்கவே மாட்டேங்குறா."

"என்னாடி இது வம்பாயிருக்கு, அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து விளையாடுறீங்களா, நேத்திக்கு அவ என்னன்னா வீட்டுக்கு வந்து அத்த என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு எங்கம்மா கால்ல விழுறாள். நீ என்னடான்னா இன்னிக்கு வந்து அவள் காதலிக்கிறான்னு சொல்றே. என்னம்மா இது. அவதான் சின்ன பிள்ளை உளருறான்னா நீயுமா? அதுசரி நேத்திக்கு தான் நான் அவகிட்ட என் சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னேனே. அப்புறமும் ஏன் இப்படி சொன்னாள்."

"நான் அவகிட்ட சொல்லியிருக்கேன், உங்க அக்கா, அம்மாவுக்கு பிறகு ஒரு பெண்ணுக்கிட்ட பேசுறீங்கன்னா அது நான் தான்னு. அதனால நீங்க சொன்னத அவ சுத்தமா நம்பவேயில்லை, இதிலே கொடுமையென்னன்னா என்கிட்டையே நீ அவரை காதலிக்கிறீயான்னு கேட்டா, ஒரே அறை, ஆனா வாங்கிட்டு சிரிக்கிறா. நான் அவகிட்ட அதுக்குப்பிறகு பேசவேயில்லை, ஆனா ராத்திரி முழுக்க தூங்காம ஒரே அழுகை, பார்க்க சகிக்கலை. அதான், உங்ககிட்ட சொல்லிட்டேன், இனி நீங்களாச்சு, உங்க காதலியாச்சு"

"அக்கா, தங்கச்சி ரெண்டுபேரும் உதை வாங்கப் போறீங்க, நீ போய் உடனே நான் அவளைப் பார்க்கணும் சொன்னேன்னு சொல்லு."

கால் மணிநேரத்தில் அவள் கேன்டீனுக்கு வந்தாள்.

"ஏய், கனிமொழிக்கிட்ட என்னடி சொன்ன?"

மௌனமாக நின்றாள்.

"கேட்கிறேன்ல, சொல்லமாட்டே, இங்கப்பாரு உனக்கு ஒரு பதினாரு இல்லை பதினேளு வயசிருக்குமா, அதுக்குள்ள உனக்கு காதலா. நீ எப்பிடியோ போ, ஆனா என்னை ஏன் பிரச்சனையில் மாட்டிவிடுற. எனக்கு எத்தனையோ கனவு இருக்கு, உன்னைப்போல யாருண்ணே தெரியாத பெண்ணை- பெண்ணை என்ன பெண்ணை- குழந்தையையெல்லாம் காதலிக்க முடியாது. அதுமட்டுமில்லாம நான் காதலிக்கிறதுக்காக இங்க வரலை. இதனாலத் தான் நான் பொண்ணுங்க கூட பழகுறதேயில்லை. இப்பப் பாரு கனிமொழிக்கு எனக்கும் இருக்கிற உறவையே நீ சந்தேகப்படுற. இதுதான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே இதைப்பத்தி நீயோ இல்லை யாராவதோ என்கிட்ட பேசினா, நான் உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன். அதே மாதிரி என் பின்னாடியே சுத்தறது, என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிறது, எல்லாத்தையும் நிறுத்தணும் இல்லைன்னா நான் இந்த காலேஜ் விட்டே நின்னுடுவேன். என்ன புரியுதா?"

தலையை மட்டும் ஆட்டினாள்.

"வாயத்திறந்து பதில் சொல்லு..."

"சரி, ஆனா ஒரே ஒரு சந்தேகம். நீங்க என்கிட்ட சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னது உண்மையா? பொய்யா?"

"அதெதுக்கு உனக்கு?"

"நான்தான் நீங்க கேட்டதுக்கு சரின்னுட்டேன்ல, சொல்லுங்க?"

"சரி பொய், அதுக்கென்ன?"

"அது போதும்," என்று என் தாடையைத் தொட்டு அவள் உதட்டில் வைத்து "உம்மா.............." என்று சொல்லிவிட்டு ஓடிப்போய்விட்டாள்.

நான் தலையில் அடித்துக் கொள்ள, கேன்டீனில் டீ விற்கும் கிழவி என்னைப் பார்த்து சிரித்தாள்.

--------------------

தொடரும்...
Reply


Messages In This Thread
[No subject] - by mohandoss - 12-16-2005, 09:19 AM
[No subject] - by Rasikai - 12-16-2005, 02:09 PM
[No subject] - by suddykgirl - 12-16-2005, 05:08 PM
[No subject] - by ப்ரியசகி - 12-16-2005, 07:34 PM
[No subject] - by shobana - 12-16-2005, 08:12 PM
[No subject] - by tamilini - 12-16-2005, 08:48 PM
[No subject] - by shanmuhi - 12-16-2005, 08:55 PM
[No subject] - by mohandoss - 12-17-2005, 03:05 PM
[No subject] - by kuruvikal - 12-17-2005, 05:28 PM
[No subject] - by mohandoss - 12-17-2005, 06:25 PM
[No subject] - by kuruvikal - 12-17-2005, 06:35 PM
[No subject] - by mohandoss - 12-18-2005, 10:18 AM
[No subject] - by mohandoss - 12-19-2005, 02:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)