Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு காதல் கதை
#1
இது உங்களில் பலரும் முன்பே படித்திருக்கக்கூடிய என்னுடைய ஒரு தொடர்கதையென்றாலும் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய எழுத்துலக ஆரம்பத்தொடர்கதையானதால் உங்களின் விமரிசனங்களுக்காக மீண்டும் தருகிறேன். முன்பே படித்த அன்பர்களும் அவர்களுடைய விமர்சனங்களை தரலாம்.

இதுவும் என்னுடைய கற்பனை பாதியும் நிஜம் மீதியும் கலந்த ஒரு கதைதான்.

------------------------

பளீரென்று அவள் கன்னத்தில் அறைந்து என் வாழ்நாளில் என்றுமே சொல்லியிராத ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி அவளைத் திட்டினேன். பிறகு, "மரியாதையா நடந்துக்கோ, தெரிஞ்சத மட்டும் பேசு" என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தேன்.

ராத்திரி முழுக்க தூக்கம் வரவில்லை; அன்றைய நாளின் ஞாபகங்கள் மீண்டும், மீண்டும் வந்து கழுத்தை நெரித்தது. கோடை விடுமுறையின் கடைசி பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட நான் அன்றைய தலைப்பில் மிக அருமையாகப் பேசி, காந்தி, பாரதி, கண்ணதாசன், பாரதிதாசன் இவர்களின் கருத்துக்களையும் இடையிடையே இட்டு, 'என் சிறுநீரைக் குடித்தால் உனக்கு விடுதலை தருகிறேன்' என்று சொன்ன அமெரிக்க சார்பு பொலிவிய அரசிடம், 'என் தலை மயிறு கூட அந்த சுதந்திரத்தை ஏற்காது' என்று சொல்லி இறந்து போன செகுவாராவின் கருத்துக்களைச் சொல்லி முடிக்கும் பொழுது அரங்கம் அதிரும் கரவொலி.

ஆனால் பின்னால் வந்து பேசிய அவளை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை, பெரும்பாலும் கல்லூரிக்கிடையிலோ அல்லது பள்ளிகளுக்கிடையிலோ நடக்கும் பேச்சுப்போட்டிகளில் மிகவும் தெரிந்த நண்பர்களே பங்குகொள்வார்கள். ஆனால் இந்தப் பேச்சுப்போட்டி எல்லோருக்கும் உரியது. அதாவது யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். நான் பேசி முடித்தபின் மேடையேறிய அவள் முதல் வரியிலேயே, "முன்னால் பேசிவிட்டு போனாரே ஒருவர், அவரை நேற்று ஒரு பெட்டிக்கடையருகில் கையில் சிகரெட்டுடன் பார்த்தேன், இவரும் இவர் நண்பர்களும் சேர்ந்து அங்கு போகும் பெண்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள், இப்படிப்பட்ட இவருக்கு செகுவாராவைப் பற்றி பேச அருகதையே இல்லை!" என்று சொல்ல, பேச்சுப்போட்டி நடந்த இடம் ஒரு பெண்கள் கல்லூரியாதலால் பலத்த கரகோஷம், அதன் பின்பு அவள் தலைப்பிலும் பேசினாள்.

அவள் பேசிவிட்டு மேடையை விட்டுக் கீழிறங்கும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பெண்களை மதிக்கும் நான், எப்படி அப்படி நடந்து கொண்டேன் என்றே தெரியவில்லை.

காலையில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன், அவளும் அங்கே வந்தாள், நேரே அவளிடம் போனேன்.

"உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்."

நான் சொன்னதும், கொஞ்ச தூரம் நகர்ந்து வந்த அவள், "ம்ம்ம்ஸ் சொல்லுங்கள்."

"என்னை மன்னிச்சிருங்க, நேத்து கோபத்திலே திட்டிட்டேன், அந்த வார்த்தை சொல்லி திட்டியிருக்க கூடாதுதான், ஆனால் சொல்லிட்டேன், தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!" என்று சொல்லிவிட்டு அவளையே பார்த்தேன்.

"நேத்திக்கு நீங்க என்னவோ திட்டினீர்கள் என்று தெரியும், ஆனா சத்தத்துல என்ன சொன்னீங்கன்னு கேட்கலை, பரவாயில்லை, எம்மேலையும் தப்பிருக்கிறது, நீங்க சாதாரணமா எடுத்துப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க கோபமாய்ட்டீங்க, ஆமா உங்களுக்குத்தான் முதல் பரிசு கொடுத்தாங்க, ஆனா வாங்க நீங்க வரலையே?" என்று கேட்டாள்.

"இல்லை மனசு சரியில்லை, அதான் வாங்கலை, அது ஒன்னும் பிரச்சனையில்லை, தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க!" என்று சொல்லிவிட்டு அவளைவிட்டு நகர்ந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் எங்கள் கல்லூரிப்பேருந்து வந்து நின்றது, நாங்கள் ஏறி அமர்ந்து கொண்ட சிறிது நேரத்தில் அவளும் வந்து அமர்ந்தாள். என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை, உடனே சார்லஸிடம், 'டேய் யார்ரா அவ? நம்ம காலேஜா?'

'யாருக்குத் தெரியும், ஃபர்ஸ்ட் இயரா இருக்கும், நம்ம பஸ்ல ஏற்றான்னா நம்ம காலேஜாத்தான் இருக்கும்.'

அய்யோ இந்த விஷயம் இத்தோடு முடிஞ்சிரும்ன்னு பார்த்தா முடியாது போலிருக்கே, இன்னும் ஒரு வருஷம் இவளோட குப்பை கொட்டணுமான்னு நான் நினைச்சேன். ஆனால் வாழ்க்கை வேறு விதமாக நினைச்சிருச்சு.

தொடரும்...
Reply


Messages In This Thread
ஒரு காதல் கதை - by mohandoss - 12-15-2005, 02:30 PM
[No subject] - by mohandoss - 12-16-2005, 09:19 AM
[No subject] - by Rasikai - 12-16-2005, 02:09 PM
[No subject] - by suddykgirl - 12-16-2005, 05:08 PM
[No subject] - by ப்ரியசகி - 12-16-2005, 07:34 PM
[No subject] - by shobana - 12-16-2005, 08:12 PM
[No subject] - by tamilini - 12-16-2005, 08:48 PM
[No subject] - by shanmuhi - 12-16-2005, 08:55 PM
[No subject] - by mohandoss - 12-17-2005, 03:05 PM
[No subject] - by kuruvikal - 12-17-2005, 05:28 PM
[No subject] - by mohandoss - 12-17-2005, 06:25 PM
[No subject] - by kuruvikal - 12-17-2005, 06:35 PM
[No subject] - by mohandoss - 12-18-2005, 10:18 AM
[No subject] - by mohandoss - 12-19-2005, 02:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)