Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரே
#4
<b>ஓரு சிறந்த இந்தியத்திரைப்படம் </b>
<img src='http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b1/SatyajitRay.gif' border='0' alt='user posted image'>
சமீபத்திய ஆனந்தவிகடனில் எழுத்தாளர் சுஜாதா தான் எழுதுகிற 'கற்றதும் பெற்றதும்' தொடரில் சத்யஜித்ரேயின் 'பதேர் பாஞ்சாலி' படத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்தப் பதிவு, அந்தப்படத்தின் பற்றின மலரும் நினைவுகளை எழுப்பியது.

அப்போது எனக்கு வயது 20 இருக்கலாம். சத்யஜித்ரே என்ற பெயரை மட்டுமே கணையாழி போன்ற பத்திரிகைகளின் மூலமாக அறிந்திருக்கிறேனே ஒழிய அவரின் எந்தவொரு படத்தையும் பார்த்ததில்லை. சத்யஜித்ரே உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தருணமது. வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டதும், இந்திய அரசும் தனது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி அந்த விருதை பெருமைப்படுத்தியது. ஆஸ்கார் விருது வழங்குவிழாவில் அவர் கலந்து கொள்ள இயலாமல் தன்னுடைய நன்றியுரையை வீடியோவில் அனுப்பி வைக்க, அந்த விழாவில் அது ஒளிபரப்பப்பட்ட போது ஆலிவுட் மகாஜனங்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். படுக்கையில் படுத்தபடி அவர் சோர்வாக பேசுவதைக் காண நெகிழ்ச்சியாக இருந்தது.

அந்த சமயத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசையில் அவரது சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து இரவு நேரங்களில் ஒளிபரப்பியது. அப்போது பார்த்ததுதான் பதேர் பாஞ்சாலி. இந்தப்படம் என்னுள் பலத்த பாதிப்பை எழுதியது. படம் முடிந்த கையோடு அந்த பாதிப்புகளையெல்லாம் கண்ணீருடன் டைரியில் 10 பக்கத்திற்கு எழுதி வைத்தேன். அந்த டைரி தொலைந்து போனதை ஒரு பெரிய இழப்பாகவே கருதுகிறேன்.

பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை ரே மிகுந்த சிரமத்திற்கிடையில்தான் உருவாக்கினார். தன் சொத்துக்களை கொஞ்ச கொஞ்சமாக விற்றுத்தான் இந்தப்படத்தை தயாரித்தார். இனிமேலும் படம் தொடர முடியாத நிலையில் மேற்கு வங்க அரசின் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தது. இது சாத்தியமாகியிருக்காவிட்டால் இந்திய சினிமா ஒரு சிறந்த திரைப்படத்தையும், கலைஞனையும் இழந்திருக்கக்கூடும்.

'இந்தப்படத்தை பார்க்காதவர்கள் வாழ்வில் நிறைவு பெறாதவர்கள்' என்று சுஜாதா கூறியதை நானும் வழிமொழிகிறேன். காட்சிகளை அமைப்பதில் நாடகங்களின் பாதிப்பிலிருந்து மீளாத சினிமாவை தன்னுடைய கேமராவின் வழியாக பார்வையாளர்களை ஒரு புது உலகத்திற்கு அழைத்துச் சென்றார். திரைக்கதையை எப்படி விஷீவலாக சொல்ல வேண்டும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரிந்து இருந்தது. படத்தின் பல காட்சிகள், சிறந்த ஓவியங்களின் சலனமாக தோன்றும். சப்-டைட்டில் இல்லாமல் கூட இந்தப்படத்தை ரசிக்க முடியும் என்பதே இந்தப் படத்தின் பலம்.

இந்தப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்குகிற போது 'இந்தியாவின் வறுமையை வெளிநாட்டிற்கு காட்டி பணம் சம்பாதித்துவிட்டார்' என்கிற மாதிரி பல சர்ச்சைகள் விமர்சகர்களிமிடமிருந்து எழுந்தது. எந்தவொரு கலைஞனின் படைப்பும் அவன் வாழ்கிற சூழ்நிலையை, கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இன்றைய தமிழ்த்திரைப்படங்களைப் பார்க்கும் எந்தவொரு வெளிநாட்டுப் பார்வையாளருக்கும் நம் கலாச்சாரத்தைப் பற்றின தெளிவான பார்வை கிடைக்குமா என்றால் இல்லை.

O

ரேவின் படங்களிலேயே சிறந்ததாக நான் கருதுவது 'சாருலதா'. ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதை ஒன்றை திரைப்படமாக்கியிருந்தார் ரே. அண்ணிக்கும், மச்சினனுக்கும் ஏற்படும் நட்பு ஒரு சூழ்நிலையில் அடுத்த கட்டத்திற்கு போவதற்கு முன்னால் அந்த உறவு முறிந்து போகும் கதை. 'பிட்டு' போடுகிற மலையாளப் படங்களுக்கு பிடித்த சப்ஜெக்டான இந்தப் பிளாட்டை எந்தவொரு விரசமுமில்லாமல் மிக கவனமாக படமாக்கியிருந்தார்.

இம்மாதிரியான கலைப்படங்களின் (இந்த வார்த்தை சரியானதுதானா?) மீது சிலருக்கு ஒருவகையான அவர்ஷன் இருப்பதை பார்க்கிறேன். ஒருவர் பீடி புகைப்பதை அரைமணிநேரமும், ஒருவர் நடந்து போவதையே முக்கால் மணிநேரமுமாக காண்பிப்பார்கள் என்று கேலி பேசுவதை கண்டிருக்கிறேன். அம்மாதிரியானவர்களுக்கு ரேவின் திரைப்படங்களை தைரியமாக என்னால் சிபாரிசு செய்ய முடியும். அடிப்படையான கலையுணர்ச்சி இருந்தால் போதுமானது. அவருடைய ஒவ்வொரு படங்களும் வேறு வேறு கதைக்களன்களையும், அடிப்படைகளையும் கொண்டது.
http://pitchaipathiram.blogspot.com/2004/1...og-post_05.html
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 12-01-2005, 01:17 AM
[No subject] - by stalin - 12-01-2005, 10:54 AM
[No subject] - by AJeevan - 12-01-2005, 10:37 PM
[No subject] - by Nellaiyan - 12-03-2005, 01:12 AM
[No subject] - by AJeevan - 12-03-2005, 04:14 PM
[No subject] - by sinnakuddy - 12-03-2005, 06:49 PM
[No subject] - by Netfriend - 12-03-2005, 07:01 PM
[No subject] - by AJeevan - 12-03-2005, 09:15 PM
[No subject] - by sinnakuddy - 12-07-2005, 11:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)