Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட வரலாறு
#2
<b>தமிழ் திரைப்பட வரலாறு</b>
- எஸ். தியடோர் பாஸ்கரன்

அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்தினம், பல்லவி, அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது. 1980 ஆம் ஆண்டில் மற்றொரு அம்சம் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா தனது காந்த நடிப்பால் தமிழத்;திரையுலகில் கோலோச்சியதும் இந்த ஆண்டுகளில்தான். 1987இல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரது மனைவியும் நடிகையுமான வி.என். ஜானகி தமிழக முதல்வரானார். பின்னர் 1991இல் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜெயலலிதா முதலமைச்சரானது நிகழ்கால வரலாறு.

1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக உருவெடுத்தது. மணிரத்தினத்தின் சகோதரரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஸ்வரன் ஜி.வி.பிலிம்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை துவங்கினார்.

1990 ஆம் ஆண்டு கே.எஸ் சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம் இந்தியாவின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர். விக்கிரமனின் புது வசந்தம், ரவிக்குமாரின் புரியாத புதிர் போன்ற படங்கள் வெளிவந்தன. தொடர்ந்த வருடங்களில், கிராமப்புறக் கதைகளைக் கொண்ட சின்ன கவுண்டர் (1992) உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வர, பல தயாரிப்பாளர்கள் அதே மாதிரி கதைகளை நாடிப் போயினர். ஜாதிப் பெயரைக் கொண்ட படங்களும், நிலப் பிரபுத்துவத்தை போற்றும் வகையில் அமைந்த கதைகளும் (நாட்டாமை-1994) வர ஆரம்பித்தன. இந்த ஆண்டுகளில் வந்த ஜெயபாரதி இயக்கிய உச்சி வெய்யில் (1990) இந்த கலாச்சார சூழலிலும் சீரிய திரைப்படம் மலர முடியும் என்பதை நிரூபித்தது. இது கல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும், கனடா நாட்டில் டோரோன்டோ நகரில் நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விமர்சன ரீதியில் புகழ்ப்பெற்றது. மணிரத்தினத்தின் செல்வாக்கு அகில இந்திய அளவில் பரவ ஆரம்பித்ததும் இந்த ஆண்டுகளில்தான். ரோஜா (1992) காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை. இதைத் தொடர்ந்து இந்து-முஸ்லீம் உறவு பற்றிய கதையைக் கொண்ட பம்பாய் (1995) பல தடைகளையும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டாலும், வெற்றிபடமாக அமைந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை இதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ரகுமானின் புகழ் அகில இந்திய அளவில் வெளிப்பட துவங்கியது.

இந்த ஆண்டுகளின் முக்கிய அம்சம் ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்தும் அவரது படங்களின் வர்த்தக வெற்றியும்தான். அவரது நட்சத்திர அந்தஸ்த்து பாட்ஷா (1995) போன்ற படங்கள் மூலம் பன்மடங்கு உயர்ந்தது. அவரது ரசிகர் மன்றங்களுக்கு அரசியல் பலம் உண்டு என்று தலைவர்கள் பலர் நம்பினார்கள். 1996ம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பல தேசிய விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்தன. சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், அகத்தியனுக்கு சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த நடிகராக கமலஹாசனுக்கு வெள்ளித் தாமரை விருதும், எஸ்பி.பாலசுப்பிரமணியனுக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகி விருதும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான விருது காதல் கோட்டைக்கும், திரைப்படம் குறித்த சிறந்த நூல் எழுதியமைக்காக தியடோர் பாஸ்கரனுக்கு தங்கத் தாமரை விருது என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

ஆயினும், தமிழ் திரைப்படத்தின் உள்ளடக்கம், ஆரம்ப வருடங்களில் இருந்த அளவிலேயேதான் உள்ளது. சித்தாந்தம் மற்றும் தர ரீதியில் வளர்ச்சியில்லை. இயக்குநர்கள் அனைவரும் பாட்டு, குழு நடனம், துரத்தல் சண்டை, பாலியல் கிளுகிளுப்பு இவைகளையே ஒரு ஜனரஞ்சகமான கேளிக்கை சாதனமாக செயல்படுத்தினர். வியாபாரத்தனமே முக்கிய அம்சமாக நிலைத்தது. இந்த நூற்றாண்டின் இறுதியில் விரிந்து பரவிய தொலைக்காட்சி தமிழ் திரைப்படத்துறையின் மற்றொரு விரிவாக்கமாக உறைந்து விட்டது. படமாக்கப்பட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் போல தமிழ் திரைப்படங்கள் உருவெடுத்தன. இன்றும் அதே பாணியில் தொடருகின்றன. திரைப்படத்தின் பிற பரிணாமங்களான விவரணப்படங்கள், கார்டூன் படங்கள், செய்திப் படங்கள் போன்றவை உருவாகவில்லை.

ஐயாயிரம் படங்களுக்கு மேல் தயாரித்தும், அகில அளவில், திரைப்பட விழாக்களில் தமிழ் திரைப்படங்கள் கவனிக்கப்படுவதில்லை. விமர்சன ரீதியில் வெகு சில படங்களே விவாதிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் திரைப்பட ரசனை மக்களிடையே வளராததுதான். சங்கீதத்தைப்பற்றி விமர்சிக்கவோ, நடனத்தைப் பற்றி எழுதவோ அந்தக் கலை வடிவத்தின் குணாதிசயங்கள் பற்றி பரிச்சயம் தேவை என்பது நமக்குத் தெரிகிறது. இந்த மரியாதையை நாம் திரைப்படத்திற்கு தருவதில்லை.

தமிழ்த் திரைப்படம் பற்றிய ஆய்வில் இங்குள்ள பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. (சில தமிழ் துறைகளில் திரைப்படம் குறித்த ஆய்வு நடக்கிறது). திரைப்படத்தின் தனிப்பண்புகள் மற்றும் குணாதிசயங்கள் பற்றிய பரிச்சயம் மக்களிடையே ஏற்படவில்லை. எந்தக் கலைவடிவமும், கேளிக்கை சாதனமும் மக்கள் வாழ்விற்கு செறிவும், வளமும் ஊட்டுவதாக அமைய வேண்டும். தமிழ் திரைப்படம் அவ்வாறு உருவாவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.

- தகவல்கள்- மனோரமா இயர்புக் 2000
- நன்றி - ராமன் - துணையாசிரியர்
- தமிழ் சினிமா
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 11-29-2005, 12:59 PM
[No subject] - by Vasampu - 11-30-2005, 08:53 AM
[No subject] - by AJeevan - 11-30-2005, 11:38 PM
[No subject] - by கந்தப்பு - 12-01-2005, 12:39 AM
[No subject] - by கந்தப்பு - 12-01-2005, 12:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)