Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிக்குகளின் பேரினவாத பசி
#1
தமிழ் மக்களின் பிரச்சினை மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கும் இன்று சிக்கல் நிறைந்து காணப்படுவதற்கும் பௌத்த மத மேலான்மை வாதமும், அரசியலில் பிக்குகளின் கலப்பும் ஒரு பிரதான காரணமாகக் காணப்படுகின்றது.

பண்டா - செல்வா ஒப்பந்தம் தொடக்கம் சுனாமிக் கட்டமைப்பு வரை சிறிலங்காவின் அரசியலை ஆட்டிப் படைக்கின்ற மிகப் பெரும் சக்தியாக பௌத்த பிக்குமார் வலுவூன்றி நிற்கின்றனர். பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது பிக்குகள் கண்டி நோக்கி பாத யாத்திரை செய்தனர். பிக்குகளின் மோசமான தலையீடு, உடன்படிக்கை கிழித்தெறியப்படுவதற்குக் காரணமாய் அமைந்தது.

அதன் பின்னர் சமாதானத்திற்கான முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிக்குகளின் இனவாத வெறி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறைகளுக்கு பெரும் தடைக்கற்களாக அமைந்துள்ளன எனலாம். போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது முழுமையாக அதனை எதிர்த்த பிக்குகள் நோர்வே தூதரகம் வரைச் சென்று ஆர்ப்பாட்ட கலவரத்தில் ஈடுபட்டதுடன் மட்டுமன்றி நோர்வே கொடியையும் எரித்து தமது ஆவேசத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி அரசை வீட்டுக்கு அனுப்பவும், சமாதான நடவடிக்கைகளை முடக்கும் வகையிலும் திருமலை, குரங்குபாஞ்சான் விவகாரத்தை மிகப்பெரியதொரு விவகாரமாக்கி அப்பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைவதற்கான முயற்சியையும் மேற்கொண்டனர்.

பின்னர் சுனாமிக்கட்டமைப்பினை நிறுவி ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற பகுதிகளை புனரமைப்புச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட சுனாமிப் பொதுக்கட்டமைப்பினை நிறுவி செயற்படுத்தாதளவிற்கு பிக்குகளின் நடவடிக்கைகள் கனதியாகக் காணப்பட்டது. இவ்வாறான ஒரு கட்டமைப்பு நிறுவப்படுமானால் சிறிலங்காவின் ஜனாதிபதி மீது சங்க ஆணையைப் பிறப்பிக்கப் போவதாக மகா சங்கத்தினர் எச்சரித்திருந்தனர். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மகாசங்கங்களின் அனுமதியின்றி இவ்வாறான கட்டமைப்பை நிறுவமாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பேரினவாத சக்திகளின் கூட்டுச் சதி முயற்சியின் காரணமாக சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் கட்டமைப்பிற்கு இடைக்காலத்தடை உத்தரவிடப்பட்டது. அதனோடு கதை முடிவடைந்து விட்டது. இப்போது ஜனாதிபதி தேர்தலிலும், வெற்றியை தோல்வியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக பிக்குகளும், மகா சங்கங்களும் வலுவூன்றி நிற்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியினால் நாட்டைப் பிரித்து கொடுத்து விடுவாரென்ற பிரசாரம் தென்னிலங்கையில் மக்களுக்கு பரப்புரை செய்யப்படுகின்றது. இதில் மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற ஹெல உறுமய பிக்குகள் பௌத்தமத மேலாண்மையை முதன்மைப்படுத்தி பிரசாரக் களத்தில் இனவாதப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கையில் எந்தவொரு அமைப்பு, அல்லது சங்கங்களை அவதானிக்குமிடத்து அதில் பேரினவாதத்தின் தீவிரபோக்கும் பிக்குகளின் ஆதிக்கமும் அதிகரித்திருப்பதைக் காணலாம். இதனைவிட அரசியலில் இன்று பிக்குகள் களமிறங்கியிருப்பது சமாதான வழிமுறைகளுக்கு பாதகமான தன்மையையே கொண்டிருக்கின்றன.

பிக்குகள் புத்தமதத்தையும், சிங்கள தேசத்தையும் சிங்கள தீப என முதன்மைப்படுத்தும்போது தமிழ் தேசியப் பற்றும், தமிழீழத்திற்கான தாகமும், தமிழ் மக்களிடமிருப்பது நியாயமான இல்லையா? ஆனால் பிக்குகள் இதனை விரோத மனப்பான்மையுடன் நோக்குகின்றனர். சிங்களத் தலை மைகளின் அடக்குமுறை ஆட்சிக்குள் சதா காலமும் தமிழினம் கையேந்தி அடிமை வாழ்வு வாழவேண்டும். அதற்காகவே ஒற்றையாட்சி என்ற வாதத்தை விட்டு அவர்கள் துளியளவும் விலகவில்லை.

ஆனால் நாடு பிளவுபடக்கூடாது என பிக்குகள் எண்ணிக் கொண்டிருக்க மறுமுனையில் இலங்கைத்தீவில் இரு நாடுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பௌத்த பேரினவாதம் எந்தளவிற்கு மேலோங்குகின்றதோ, அதற்கு எதிர்மறையாகத் தமிழ் தேசியம் வலுப்பெற்று விடுதலை இலக்கின் இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை புத்தரின் பரம்பரையினர் புரிதல் வேண்டும்.

-மட்டு ஈழநாதம்-
.

.
Reply


Messages In This Thread
பிக்குகளின் பேரினவாத பசி - by Birundan - 10-24-2005, 06:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)