Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடா
#1
<b>கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு.</b>

வடஅமெரிக்கா கண்டத்தின் ஜந்தில் இரண்டு பங்கினை இந்த நாடு கொண்டுள்ளது. கனடாவின் கிழக்கெல்லையான அத்லாந்திக் கடற் கரைக்கும் மேற்கெல்லையான பசுபிக் கடற்கரைக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் 5 மணித்தியாலங்கள் என்பதில் இருந்து கனடா எவ்வளவு பெரிய நாடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். கனடா கிழக்கில் இருந்து மேற்கே சுமார் 5,380 கிலோ மீட்டர் வரை நீண்டும் வடக்கில் இருந்து தெற்கே சுமார் 4600 கிலோ மீட்டர் அகன்றும் இருக்கிறது.

கனடாவின் விஸ்தீரணம் 9,970,610 சதுர கிலோ மீட்டர்கள் வடக்கே துருவ மாகடல், தெற்கே ஜக்கிய அமெரிக்கா, கிழக்கே அத்லாந்திக் மாகடல், மேற்கே பசுபிக் மாகடலும் ஜக்கிய அமெரிக்க மாநிலமான அலாஸ்காவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2001ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்படி கனடாவின் சனத்தொகை 31 மில்லியனாக இருந்தது. இந்தத் சனத்தொகையில் 3 சதவீதத்தினர் பூர்வீக குடிகளாவர். இரண்டாவது உலகப் போர் ஆரம்பமாவதற்கு முன் கனடா வந்த குடிவரவாளர்களில் பெரும்பாலனவர்கள் பிரித்தானியா அல்லது கிழக்கு ஜரோப்பாவில் இருந்தே வந்தார்கள். 1945ம் ஆண்டின் பின் தெற்கு ஜரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் குடிவரவாளர்கள் கனடா வர ஆரம்பித்தார்கள்.

<b>பெயர் வந்த விதம்? </b>
கனடா ஒரு இளைய நாடுதான். ஆனால் அது பழமையில் வேர் ஊன்றியுள்ளது. கனடா என்ற பெயர் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பூர்விக குடிகளில் இருந்து பெறப்பட்டதாக ஆராய்ச்சியாளர்களில் பலர் கருதுகின்றார்கள். 1535 - 36 காலப் பகுதியில் பிரெஞ்சுக்காரரான ஐக்குயிஸ் கார்டியர் என்பவர் சென்ட் லாறன்ஸ் நதிக்கு வடக்கே இருந்த பிரதேசத்திற்குச் சூட்டிய பெயரே கனடா. அந்தப் பகுதியில் வாழ்ந்த பூர்வ குடிகள் சிலரிடம் அவர்களின் இருப்பிடத்தைக் காட்டும்படி காட்டியர் கேட்டுள்ளார். அவர்களுடைய மொழியில் கிராமம் என்பதை "kanata" என்று அழைப்பது வழக்கம். தொலைவில் இருந்த தங்கள் கிராமத்தை அவர்கள் சுட்டிக்காட்டி அதுதான் தங்கள் கனடா என்று கூறியதை தவறாகப் புரிந்து கொண்ட கார்டியர் அந்தப் பிரதேசம் முழுவதற்கும் கனடா என்று பெயரிட்டுவிட்டார். ஜரோப்பிய தேச பட வரைஞர்கள் "kanata" என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டை "Canada" என குறிப்பிட ஆரம்பித்தார்கள்.

எனினும் கனடா என்ற பெயர் எப்படி வந்தது என்பது இன்னும் கூட சர்ச்சைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஆய்வாளர்கள் சிலர் பொருள் தேடும் சாக்கில் புதிய இடங்களைத் தேடித்திருந்த ஜரோப்பியர் இந்த நாட்டிற்கு வைத்த பெயரே கனடா என்கிறார்கள். கனடாவில் பொன்னும் மணியும் குவிந்து கிடக்கின்றன என்ற நம்பிக்கையில் வந்த ஸ்பானியர் அல்லது போர்த்துக்கேயர் அவர்கள் எதிர்பார்த்து வந்த எதுவும் இங்கு கிடைக்காததால் நாட்டை அகா கனடா (aca Canata) அல்லது க"னடா (Ca"nada) என்று திட்டித் தீர்த்தார்கள். அகா கனடா அல்லது க"னடா என்பதற்கு இங்கு ஒரு மண்ணும் கிடையாது என்று ஸ்பானிய அல்லது போர்த்துக்கேய மொழியில் அர்த்தப்படுவதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இன்னும் சில ஆய்வாளர்கள் கனடா என்ற பெயர் சமஷ்கிருதம் அல்லது இத்தாலிய மொழியில் இருந்து வந்தது என்கிறார்கள். ஆக கனடா என்று ஏன் இந்த நாடு அழைக்கப்படுகின்றது என்பதற்கு சரியான விடை இன்னும் கண்டறியப்படவில்லை.

<b>இரண்டு மில்லியன் நன்னீர் ஏரிகள் </b>
கனடாவின் நிலவமைப்பை பல பகுதிகளாகப் பிரிக்கலாம். ஹட்சன் குடாவை மையமாகக் கொண்ட வடிகால் பகுதி, கனடியன் ஷீல்ட் என்று அழைக்கப்படும் பகுதி, உள்நாட்டு சமவெளி, பெரிய ஏரிகள், சென்ட் லாறன்ஸ் தாழ்நிலங்கள், மலைத் தொடர்கள் என்று கனடாவின் இயற்கை அமைப்பு பிரிக்கப்படுகின்றது. ஹட்சன் விரிகுடாவைச் சுற்றியிருக்கும் மிகப் பெரிய பாறை அமைப்பு மார்புக் கவசம் போன்று இருப்பதாலேயே அது கனடியன் ஷீல்ட் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவின் சுமார் 8 சத வீதமான நிலமே விவசாயம் செய்வதற்கும் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகின்றது. இருந்த போதிலும் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலத்தின் விஸ்தீரணம் 738,000 சதுர கிலோ மீட்டர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சென்ட் லாறன்ஸ் நதிக்கும் பெரிய ஏரிகளுக்கும் இடையில் சிறந்த விவசாய பூமி அமைந்துள்ளது. கனடியன் ஷீல்டுக்கும் ரோக்கி மலைகளுக்கும் இடையில் தட்டையான பரந்த வெளி உண்டு. இது பிரேயரீஸ் என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் முதல்தரமான கோதுமை விளைகின்றது. கோதுமை இங்கு பெருமளவில் உற்பத்தியாவதால் கனடா கோதுமை உற்பத்தியில் உலக நாடுகளிடையே முன்னணியில் நிற்கின்றது.

மரங்கள் குறைவான பரந்த புல்வெளிக்கும் பசுபிக் சமுத்திரத்திற்கும் இடையில் பிரசித்தி பெற்ற மலைகள் இருக்கின்றன. இவையே ரோக்கி (rocky) மலைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மலைகளே கனடாவின் அதி உயர்ந்த மலைகளாகும். அவற்றுள் மிகவும் உயரமான மலைச்சிகரம் லோகன். இதன் உயரம் 5,951 மீட்டர்கள். கனடாவின் வடபகுதிக்குச் செல்லச் செல்ல மரங்கள் குட்டையாகவும் குறைவாகவும் இருப்பதைக் காணலாம். மரங்கள் தென்படும் பகுதிக்கு அப்பால் உள்ள வடபுலத்தில் மிகவும் குளிர் என்பதால் அங்கு மரங்கள் வளர்வதில்லை. வடதுருவ சமுத்திரம் வரை மரங்களற்ற மிகவும் குளிரான பிரதேசமாகும்.

மக்கென்ஸி கனடாவின் மிகப் பெரிய நதி. அதன் நீளம் 4241 கிலோ மீட்டர். உலகில் உள்ள நன்னீரில் சுமார் பத்தில் ஒரு பங்கு கனடாவில் இருக்கின்றது.
கனடாவில் ஏறக்குறைய 2 மில்லியன் வாவிகள் இருக்கின்றன. நாட்டின் 7.6 சதவீத நிலப் பகுதியில் அவை அமைந்துள்ளன. ஜந்தில் இரண்டு பகுதி காடாகும்.

கனடா மக்களில் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தென்பகுதியில் வசிக்கிறார்கள். தென்கனடாவின் தட்பவெப்ப நிலை அதிக குளிரானதும் அல்ல, அதிக வெப்பமானதும் அல்ல. மிதமான ஒன்று. இதுவே கனடியர்களில் அதிகமானவர்கள் தென் பகுதியில் வசிப்பதற்கான முக்கிய காரணம். கனடாவில் வசந்தம், கோடை, இலை உதிர்காலம், குளிர்காலம் என நான்கு பருவ காலங்கள் உண்டு. இந்த பருவகாலங்கள் ஏறக்குறைய ஒரே அளவான கால அளவினைக் கொண்டவையாகும். இது நாட்டின் தென் பகுதியில்தான். வடபுலத்தில் அல்ல. அங்கு குளிர் காலம் நீண்டதாகவும் மிகவும் குளிரானதாகவும் இருக்கும். ஏனைய மூன்று பருவகாலங்களும் குறைந்த கால அளவினைக் கொண்டதாகவிருக்கும். ஹட்சன் விரிகுடா, சென்ட் லோறன்ஸ் நதி ஆகிய இரண்டு பிரதான நீர்வழிகள் இருக்கின்றன. இவற்றின் ஊடாக உலகத்தில் எந்தப்பகுதியிலிருந்தும் கப்பல்கள் நாட்டின் நடுப்பகுதி வரை வரமுடியும். கனடாவின் சரித்திரத்தில் நீர்வழிகள் முக்கியமான இடத்தை வகித்துள்ளன. வீதிகள், புகையிரத பாதைகள், விமானங்கள் உதயமாவதற்கு முன் மக்கள் பிரயாணம் செய்யவும் பொருட்களைக் கொண்டு செல்லவும் நீர்வழிகள் தான் உதவின. சமுத்திரத்தினூடகப் பிரயாணம் செய்யும் கப்பல்கள் இந்த நீர்வழிகள் மூலம் வந்து சென்றன. சென்ட் லோறன்ஸ், மக்கென்ஸி, பிராஸர், சஸ்காட்சேவன், ஒட்டாவா, சென்ட் ஜோன் ஆகிய நதிகள் முக்கிய நீர்வழிகளாகச் செயல்பட்டன. பிரயாணம் செய்யவும் பொருட்களைக் கொண்டு செல்லவும் ஆறுகள் உதவியதால் கனடியர்கள் அவற்றின் கரைகளை அண்டியே வாழத்தொடங்கினார்கள். 75 சதவீத கனடியர்கள் நகரப் புறங்களில் வசிக்கிறார்கள். சுமார் 30 சதவீதமானவர்கள் டொரோண்டோ , மொன்றியல், வன்கூவர் ஆகிய மூன்று நகரங்களிலும் அவற்றைச் சுற்றியும் வசிக்கிறார்கள்.

<b>ஒட்டாவா-பல்கலாசாரத் தலைநகர் </b>
கனடாவின் தலைநகரான ஒட்டாவா (Ottawa) ஒண்டாரியோ மாகாணத்தின் தென்கிழக்கெல்லையில் அமைந்துள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் அதிக அளவில் பேசப்பட்ட போதிலும் முழுக் கனடாவையும் பிரதிபலிக்கும் வகையில் பல்கலாசார மையமாக அது திகழ்கின்றது. ஒட்டாவா, காட்டினேயூ, ரிடியூ என்ற மூன்று ஆறுகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள ஒட்டாவாவின் நகரப் பகுதி ஒண்டாரியோ - கியூபெக் மாகாண எல்லையையும் கடந்து செல்கின்றது. நகரின் விஸ்தீரணம் 4660 சதுர கிலோ மீட்டர்கள். ஒண்டாரியோவில் இருக்கும் பகுதியின் விஸ்தீரணம் 2720 சதுர கிலோ மீட்டர்கள். கியூபெக்கில் இருப்பது 1940 சதுர கிலோ மீட்டர்கள்.
15ம் 16ம் நூற்றாண்டு காலப் பகுதியில் ஆறுகள் மூலமாகவே போக்குவரத்து பிரதானமாக இடம் பெற்று வந்தது. புதிய இடங்களைக் கண்டு பிடிக்கும் ஆர்வலர்கள் மற்றும் விலங்கின் மென்மயிர் தோல் வர்த்தகர்கள் ஆறுகள் மூலமாகவே பிரயாணம் செய்தார்கள். பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் இடம் பெற்ற நெப்போலிய யுத்தத்தின் போது கப்பல் கட்டும் மரங்கள் இங்கிலாந்திற்கு அதிக அளவில் தேவைப்பட்டது. அப்பொழுது ஒட்டாவா பள்ளத்தாக்கில் இருந்து தேவையான மரங்கள் ஒட்டாவா நதி மூலமாகவே அனுப்பப்பட்டன. 1812ம் ஆண்டு பிரிட்டனுக்கும் ஜக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ரிடியூ நதி மூலம் போக்குவரத்து செய்வதே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது.

நதிகள் மூலமான போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாக ஒட்டாவா துரித கதியில் வளர்ச்சி அடைந்தது. 1848ம் ஆண்டு ஒண்டாரியோவும் கியூபெக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டன. அந்தச் சமயம் இணைக்கப்பட்ட கனடாவின் தலைநகராக எது இருக்க வேண்டும் என்ற சிக்கல் ஏற்பட்டது. பிரேஞ்சுக்காரர் பெரும்பான்மையாக வசித்த கியூபெக் மாகாணத் தலைவர்கள் தமது மாகாணத் தலைநகரான கியூபெக் சிட்டியே கனடாவின் தலைநகராக வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆங்கிலேயரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஒண்டாரியோ மாகாணத் தலைவர்களோ தங்கள் மாகாணத் தலைநகரான டொரோண்டோவே கனடாவின் தலைநகராக வரவேண்டும் என்றார்கள். இரு பகுதியினரும் விட்டுக் கொடுக்காத நிலையில் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் அல்லது ஒண்டாரியோவில் உள்ள கிங்ஸ்டன் கனடாவின் தலைநகராக வரவேண்டும் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. இறுதியில் இரு பகுதியினரும் இங்கிலாந்தின் அரசியான விக்டோ ரியாவிடம் விண்ணப்பித்தார்கள். அவர் பிறப்பித்த பிரகடணத்தின் மூலம் 1857ம் ஆண்டு ஒட்டாவா கனடாவின் தலைநகராக வந்தது. கனடா கூட்டரசாக 1867ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட போதும் ஒட்டாவாவே தலைநகராக இருத்தல் வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது. உலகில் உள்ள நகரங்களில் மிகவும் அழகானது ஒட்டாவா. மிகவும் சுத்தமானதும் கூட. பழமையும் புதுமையும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதை ஒட்டாவாவின் எந்தப் பகுதியிலும் காணலாம்.

<b>மாகாணங்களும் பிரதேசங்களும்</b>
கனடாவில் 10 மாகாணங்களும் 3 பிரதேசங்களும் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான தலைநகருண்டு.

மாகாணம்: அல்பேர்டா (Alberta)
தலைநகர்: எட்மன்டன் (Edmonton)

மாகாணம்: பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia)
தலைநகர்: விக்டோ ரியா (Victoria)

மாகாணம்: பிரின்ஸ் எட்வேர்ட் ஜலண்ட் (Prince Edward Island)
தலைநகர்: சார்லட்டவுன் (Charlottetown)

மாகாணம்: மணிடோபா (Manitoba)
தலைநகர்: வினிப்பெக் (Winnipeg)

மாகாணம்: நியூ பிரன்ஸ்விக் (New Brunswick)
தலைநகர்: பிரடெரிக்டன் (Fredericton)

மாகாணம்:நோவோ ஸ்கோஷியா (Nova Scotia)
தலைநகர்: ஹாலிபாக்ஸ் (Halifax)

மாகாணம்: ஒண்டாரியோ (Ontario)
தலைநகர்: டொரோண்டோ (Toronto)

மாகாணம்: கியூபேக் (Quebec)
தலைநகர்:கியூபேக் சிட்டி (Quebec City)

மாகாணம்: ஸாஸ்காட்சேவன் (Saskatchewan)
தலைநகர்: ரெஜைனா (Regina)

மாகாணம்: நியூபெளவுன்லாந்து (Newfoundland)
தலைநகர்: சென்ட் ஜோன்ஸ் (St.Johns)

பிரதேசம்: நோர்வெஸ்ட் டெரிட்டரீஸ் (Northwest Territories)
தலைநகர்: ஐலோநைவ் (Yellow Knife)

பிரதேசம்: யூகோன் டெரிட்டரீஸ் (Yukon)
தலைநகர்: வைட்ஹோர்ஸ் (White Horse)

பிரதேசம்: நுனாவுட் (Nunavut)
தலைநகர்: இக்வாலுயிட் (Igaluit)
கனடாவுக்கே உரித்தான மூஸ் (Moose)
பலதரப்பட்ட வன விலங்குகள் கனடாவில் காணப்படுகின்றன. கனடாவிற்கே உரித்தான மூஸ் என்று அழைக்கப்படும் மான்வகை விலங்கு, பீவர் (Beaver) என்று அழைக்கப்படும் நில நீர்வாழ் எலி உருவ விலங்கு, கனடா லிங்ஸ் (Canadian lynx) என்று அழைக்கப்படும் பூனை போன்ற மிருகம் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

<b>மூலவளம் நிறைநாடு </b>
செம்பு, நிக்கல், துத்தநாகம், காட்மியம், நிலக்கரி, பேற்றோலியம், இயற்கை வாயு, யூரேனியம், தங்கம். இரும்பு, ஈயம், மரம், நீர் ஆகியன பிரதான மூலப் பொருட்களாகும். மோட்டார் வாகனங்கள், அவற்றின் உதிரிப் பாகங்கள், இயந்திரவகைகள், உயர் தொழில் நுட்பத்துறைப் பொருட்கள், எண்ணெய், இயற்கை வாயு, வனம் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் ஆகியன கனடாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.

தித்திப்பான பாணி தரும் மேப்பில் மரத்தின் இலை தேசிய இலட்சனை
நீண்டகாலமாக மேப்பில் இலை (Maple) கனடாவுடன் தொடர்பு கொண்டுள்ளது. 1868ம் ஆண்டு ஒண்டாரியோ மற்றும் கியூபேக் மாகாணங்களின் மரபுரிமைச் சின்னமாக மேப்பில் இலை வந்தது. இரண்டாம் உலக மகா யுத்தங்களின் போது மேப்பில் இலை கனடிய படைகளின் சிறப்புக்குறீயிடுகளில் இடம் பெற்றது. 1965ம் ஆண்டு கொடியில் இடம் பெற்றதை அடுத்து மேப்பில் இலை கனடாவின் மிக்கிய சின்னமாக வந்துள்ளது.



நன்றி கனடாமுரசு
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
கனடா - by Rasikai - 10-20-2005, 08:54 PM
[No subject] - by Rasikai - 10-20-2005, 08:59 PM
[No subject] - by Rasikai - 10-20-2005, 09:05 PM
[No subject] - by sathiri - 10-20-2005, 10:32 PM
[No subject] - by Mathan - 10-21-2005, 07:46 AM
[No subject] - by sabi - 10-21-2005, 03:29 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 03:40 PM
[No subject] - by Rasikai - 10-21-2005, 09:37 PM
[No subject] - by Saniyan - 10-21-2005, 11:54 PM
[No subject] - by KATPUKKARASAN - 10-22-2005, 02:21 AM
[No subject] - by Rasikai - 10-22-2005, 09:00 PM
[No subject] - by Vishnu - 10-22-2005, 09:04 PM
[No subject] - by adithadi - 10-22-2005, 09:22 PM
[No subject] - by kurukaalapoovan - 10-22-2005, 09:30 PM
[No subject] - by Rasikai - 10-22-2005, 09:55 PM
[No subject] - by Rasikai - 10-22-2005, 09:56 PM
[No subject] - by Rasikai - 10-22-2005, 10:51 PM
[No subject] - by Rasikai - 03-26-2006, 03:36 AM
[No subject] - by Sabesh - 03-26-2006, 04:43 AM
[No subject] - by Rasikai - 03-27-2006, 05:53 PM
[No subject] - by Aravinthan - 03-28-2006, 12:35 AM
[No subject] - by Rasikai - 03-28-2006, 09:16 PM
[No subject] - by TRAITOR - 03-28-2006, 09:48 PM
[No subject] - by Rasikai - 03-30-2006, 08:13 PM
[No subject] - by Rasikai - 03-31-2006, 04:57 PM
[No subject] - by Rasikai - 03-31-2006, 07:42 PM
[No subject] - by sinnakuddy - 04-08-2006, 05:47 PM
[No subject] - by மின்னல் - 04-08-2006, 06:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)