Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எழுத முடியாத காவியங்கள்
#1
ஒட்டி உலர்ந்து எலும்புக்கூடாகிப் போனாள் அந்தத் தாய் இந்த வாட்டமெல்லாம் அவனுடைய சாவுக்குப் பிறகு தான்
அம்மாவின் சந்தோசம், நிம்மதி, கல கலப்பு....... அனைத்துமே அவன் தான், அவன் போனதோடு எல்லாமே போய்விட்டது.

இருக்காதா என்ன.......?
வறுமையோடு போராடிய அந்தக் குடும்பத்தை வாழ வைக்க, இரும்போடு போராட அவன் கம்மாலைக்குப் போன மறக்கமுடியாத அந்த நாட்கள் - அம்மாவின் மனசை ஆக்கிரமித்துள்ளது.

அப்போது பத்தே வயதுடைய குழந்தை அவன். அம்மாவுக்கு அவன் தான் மூத்தவன். அவனுக்குப் பிறகு ஐந்து பேர் பச்சைக் குழந்தைகள். எல்லோருடைய துன்பங்களையும் தானே அனுபவித்தான். எல்லாக் கஸ்டங்களையும் தானே சுமந்தான்.
அந்தக் குடும்பத்தின் உயிராக அவந்தான் இயங்கினான். ஆனால், அவனுடைய உயிர் அம்மாவிலேதான் இருந்தது

7மைல் தொலைவில் இருந்த அந்தப் பட்டறைக்கு, பிஞ்சுக்கால்கள் கொப்பளிக்க ஒவ்வொரு நாளும் நடந்தே போய்வந்தான். அம்மாவுக்கு உயிர் துடிக்கும். இதயத்தில் இரத்தம் வடியும். பின்னேரங்களில் சோர்ந்து வருகிறபிள்ளையை ஓடிச்சென்று அள்ளி எடுத்து, கண்ணிர் கரையக் கட்டியணைப்பாள் அந்தத்தாய்.

"அவந்தான் எனக்குப் பிள்ளை" என்கிறாள் அம்மா.

ஓடி அலந்து வந்து ஓய்ந்திருக்குமொரு பொழுதிலும், அடுப்படியில் அல்லல்படும் அம்மாவுக்குத் துணையாக நெருப்போடு போர் தொடுப்பான் பிள்ளை. அம்மாவுக்கு துயரம் நெஞ்சை அடைக்கும்.

தன்னையே உருக்கி வார்த்து தங்கச்சிக்காக ஆசையோடு அவன் சங்கிலி ஒன்று செய்து வந்தபோது, அடக்க முடியாமல் அம்மா அழுதே விட்டாள். அந்த சின்ன வயதில் அவன் கஸ்டப்பட்டதைப் போல் வேறெ எவரும் பட்டிருக்கமாட்டார்களாம் - அம்மா சொல்கிறாள்.

இருள் கவிழ்ந்த அந்த வீட்டுக்கு விளக்கேற்றியவன் அவன் தான்.

இந்தியர்கள் வந்து அம்மாவையும் பிள்ளையையும் பிரித்தார்கள். அவன் இயக்கத்திற்குப் போய்விட்டான்.

இப்போது அவனொரு கரும்புலி வீரனாகி - `புலிகளை அழிக்கக் கங்கணம் கட்டி நின்ற ஒரு இலக்கை அழிக்கத் தயாராகி நின்றான் .

பகைவனின் பிரதான தெருவொன்றில் அந்த இலக்கு, சரிவந்து பொருந்திய ஒரு இளவேனில் காலையில்
-தாக்குதலின் இரகசியத்தன்மையும், அதன் தேவையும் தெளிவாகப் புரிந்துணர்ந்திருந்த அந்த விடுதலை வீரன் - கூடவே வந்து நின்று, கட்டியணைத்து வழியனுப்பி வைத்த அந்தத் தளத்தின் அதிபதியிடம் காதோடு சொல்லிவிட்டுப் போனானாம்.

" அம்மாவிடம் மட்டும் சொல்லிவிடுங்கோ............ அவா ஒருத்தருக்கும் சொல்லமாட்டா......... "



நன்றி உயிராயுதம் பாகம் 1
" "
Reply


Messages In This Thread
எழுத முடியாத காவியங்கள் - by sri - 10-19-2005, 10:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)