Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறிவுமதியின் ''நீலம்'' குறும்படம்
#4
தமிழன், தமிழ் மண், தொன்மம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி: பாரதிராஜா புகழாரம்
[வியாழக்கிழமை, 13 ஒக்ரொபர் 2005, 18:35 ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழின எழுச்சிக் கவிஞர் அறிவுமதி இயக்கிய குறும்படமான நீலம் திரைப்பட பாராட்டு விழா சென்னையில் கொட்டும் மழைக்கிடையில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் இராசாராம் தலைமை வகித்தார்.

இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:

இவன் அறிவுமதி என் நண்பன் என்று சொல்வதா என் சீடன் என்று சொல்வதா?.

இந்த உலகில் தனக்குத்தானே அழுது கொண்டு, சிரித்துக்கொண்டு தனக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பிறருக்காக வருத்தப்படுவான், தேடுவான், வாழ்வான்...இப்படி பிறருக்காக வாழ்கிறவர்கள் இந்த ஆறரை கோடி தமிழரில் நான் உட்பட எவருக்கும் தகுதி இல்லை. என் அறிவுமதிக்கு மட்டுமே அந்த முழுத் தகுதி உண்டு.

அவன் வாங்கிய அடிகளில் சுயத்தன்மையோடு சுயம்புவாக எழுந்து நிற்கிறவன். குழந்தைகால மனதில் அவன் மனதில் தமிழன் என்ற உணர்வும் தொன்ம உணர்வும் எப்படி பதிவானதோ அப்படியே இருக்கிறான் இன்னமும். அவன் சுத்தமான மனிதன். அவனுக்கு பாடல் எழுதத் தோன்றினால்தான் எழுதுவான்.

இந்த நீலம் படம் கூட அவனுக்குள் இருந்த அரிப்பின் வெளிப்பாடு. பிறரது சோகத்தைச் சொல்ல வேண்டும் என்கிற அரிப்பின் வெளிப்பாடு.

இந்தப் படத்தில் அந்தச் சிறுவன் கடல் அலை அடிக்க அடிக்க ஓடி ஓடிச் சென்று நண்டைத் தோண்டி எடுத்து பேசுகிறான்...என் அம்மாவைப் பார்த்தாயா? என்று.

அந்தச் சிறுவன் நண்டுக்காகத் தோண்டும் போது இந்த கடலுக்குள்ளே உன்னைப் போல் தான் அவர்களும் என் மக்களும் போனார்கள். நீ மட்டும் உயிரோடு உள்ளாய். என் மக்கள் இல்லையே என்று சொல்வதைப் போல் கவிதையாக்கியிருக்கிறான் அறிவுமதி.

என்னிடம் அவன் ஆசானாக பழகியதை விட தாயின் பரிவுடன்தான் இப்போதும் என்னைப் பார்க்கிறான்.

தமிழன், தமிழ் மண், தொன்மம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி.

நீலம் குறும்படத்தை கவிதையாய் சொல்லி இருக்கிறான். 10 தமிழர்கள் கூடி நின்று சப்தமாகத் தமிழைப் பற்றி பேசுவது கூட இங்கே பிரச்சனையாக்கப்படுகிறது.

தங்கர்பச்சான் அமைதியாகப் பேசி இருந்திருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு விட்டான். அவனுக்கிருந்த கலைவெறியில் பேசியிருக்கிறான். அந்த 20 நாட்கள் நான் இங்கு இல்லை. இருந்திருந்தால் தங்கரை சட்டையைப் பிடித்து அறைந்திருப்பேன்? எங்கே போய் என்ன செய்து விட்டு வந்தாய் என்று?

யாரை எங்கே நிறுத்துகிறார்கள்? உன்னை மன்னிப்புக் கேட்க வைத்த நிகழ்ச்சி தமிழ்த் திரை உலக வரலாற்றின் கறை. அது அழியவே அழியாது. அழிக்கவும் முடியாது. துடைக்கவும் முடியாது.

மதம் என்பது போதை. பஞ்ச பூதங்களைத்தான் அனைவரும் உச்ச சக்தியாக வணங்கி வருகிறார்கள். இந்த நாட்டின் மத்திய அமைச்சர்களாகட்டும், மாநில அமைச்சர்களாகட்டும் அனைவரும் பொதுமனிதர்கள். சட்டப்பேரவை உறுப்பினர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை அனைவரும் ஏன் குடியரசுத் தலைவர் வரை அவர்கள் பதவி வகிக்கும் 5 ஆண்டுகாலத்தில் பொதுமனிதனாக இந்த சமூகத்தால் அவன் தரித்திருக்கிற அனைத்து அடையாளங்களையும் அவன் வின்சென்ட்டாக இருந்தாலும், அகமதாக இருந்தாலும், சின்னச்சாமியாக இருந்தாலும் அதை கழற்றிவிட்டு பொதுமனிதனாக வாழ வேண்டும். அதற்கான கட்டாய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார் பாரதிராஜா.

திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு:

தம்பி அறிவுமதி நல்ல தமிழ் உணர்வாளன். சத்தியகீர்த்தி. எந்த காலகட்டத்திலும் அவன் சத்யகீர்த்தியாகவே வாழ்கிறான். உள்ளே அய்யா என்ற படமெடுப்பதாக சொன்னான். ஆனால் அந்தப் படம் எடுப்பதாகத் தெரியவில்லை. தனக்காக முதலீடு செய்த அற்புதம் என்ற அற்புதமான மனிதருக்காக இன்னமும் காத்திருக்கிறான். இது குறித்து கேட்டபோது, அண்ணே, இந்தப் படத்துக்கான 6 பாடல்களையும் பதிவு செய்துவிட்டேன். அதை முடித்துவிட்டு உங்களுக்குப் படம் செய்து தருகிறேன் என்றான். தொப்புள்கொடி என்ற படத்தை செய்துதருவதாக சொன்னான். படத்தின் பெயரைப் பதிவு செய்து 2ஆண்டுகாலமாகிவிட்டது. இன்னமும் அவன் செய்து தரவில்லை.

சிறைச்சாலை என்ற படத்தை உயிர்பித்த சிற்பி. எதிரியின் நரம்புகளால் கொடியேற்றுவோம் என்று எழுதியவன்.

20 கோடி ரூபாயை ஆளவந்தான் படத்தில் முதலீடு செய்து ஒரு தூரோகத்துக்குப் பால் வார்த்தேன். இந்த சத்யகீர்த்திக்கு நீர் ஊற்றிட நீ என்னிடம் விரைந்துவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரைப்படத் தொகுப்பாளர் ஜெயம் மோகன்:

திரையரங்குகளில் செய்திப் படம் போடுவதைப் போல் சில நிமிடங்கள் குறும்படங்களைத் திரையிட வேண்டும். இந்தக் குறும்படங்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி குறும்படங்களின் நோக்கம் வெற்றி பெறும்.

இயக்குநர்-நடிகர் தங்கர்பச்சான்:

உயர்ந்த பண்பாளராக, நினைத்ததைப் பேசக்கூடிய சிறந்த மனிதராக, கலையாளனாக அண்ணன் அறிவுமதி இருக்கிறார். என் தமிழின உணர்வுக்கு உரமாக இருந்தவர். என் பண்புகளை மாற்றியவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இருந்த சிந்தனைகள் வேறு. தமிழ், தமிழர் என்று இப்போது நான் பேசிவரும் சிந்தனைகளுக்குத் தூண்டுகோலாக இருக்கிறவர் அண்ணன் அறிவுமதி.

புரஜெக்டர்கள் எனப்படுகிற படம்காட்டும் கருவி மூலம் பல பாவச்செயல்களை செய்து வரும் திரையரங்குகளில் இந்தக் குறும்படங்களும் ஒளிபரப்பப்பட வேண்டும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

தன் பொருளாதர நிலை தாழ்ந்து இருந்தாலும் உணர்வுகளில் தாழ்ந்துபோகாத இந்தக் கலைஞன் அறிவுமதி நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம்?

ஏற்புரையில் இயக்குநர்-கவிஞர் அறிவுமதி:

பேராசிரியராக வேலைக்குப் போக வேண்டியவனை கெடுத்தவர் 16 வயதினிலே படம் எடுத்த என் ஆண் தாய்.

இரும்புச் சுவருக்குள் இருந்த திரை உலகத்தை எங்கிருந்து வந்தாலும் எந்த சேரியிலும் இருந்து வந்தாலும் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று எங்கள் கைகளை பற்றியவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும்.

அதனால்தான் பாரதிராஜா, இளையராஜா மீது ஒரு துரும்பு விழுந்தாலும் ஆவேசத்தோடு தடுக்கிற முதல் தமிழனாக நேற்று மட்டுமல்ல-இன்றும் நாளையும் இருப்பேன்.

தாமிரபரணி நதிக்கரையில் மீன்கள் கடிக்க கடிக்க என் ஆண்தாய் முதுகில் அழுக்குத் தேய்த்திருக்கிறேன். விடுடா, விடுடா எங்கம்மா நினைவு வருகிறது என்று அவர் சொல்வார்.

நான் அவர் முதுகின் அழுக்கு துடைத்தேன். அவர் தமிழ்த் திரை உலகின் அழுக்குகளைத் துடைத்தவர்.

இன்று அவரையும் பின்தள்ளுகிறார்கள். ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் தமிழ் அடையாளம் இல்லை. குறும்படங்கள்தான் சமூகப் பணியாற்ற வேண்டும்.

கிழக்குச் சீமையில் படத்தில் நான் பணிபுரிந்ததைப் பார்த்த சிறைச்சாலை படத்தின் உரையாடல்-பாடல் நீதான் எழுத வேண்டும்- என்ன சொல்கிறாய் என்று சொல்லிவிட்டு ஒரு புன்னகையோடு முழுப்படத்துக்கும் என்னை பொறுப்பாக்கியவர்.

இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரிடம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு இயக்குநராக உருவாக இருந்த என்னை சிறைச்சாலை படம் மூலம் பாடல்களை எழுத வைத்தவர் கலைப்புலி தாணு அண்ணன்.

ஏ.ஆர். ரகுமானிடம் அழைத்துச் சென்று இவனை பரிந்துரைக்கிறேன் என்பதற்காக வாய்ப்புக் கொடுக்காதே..மெட்டுக்குப் பாட்டெழுதட்டும். மெட்டு கொடு என்று சொன்னார்.

நான் இதுவரை 120-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறேன். எந்தத் தயாரிப்பாளரிடமும் எந்த இசையமைப்பாளரிடமும் போய் வாய்ப்புக்காக எப்போதும் நான் கேட்டதே இல்லை.

தொப்புள்கொடி திரைப்படம் குறித்து அண்ணன் தாணு கூறினார்.

அது மொரீசியசிலிருந்து தமிழ் அடையாளத்தை தேடி வரும் பெண்ணின் கதை அது.

என் ஆசான் பாரதிராஜா, தங்கர்பச்சான், தம்பி சீமான் உள்ளிட்ட பலரது கூட்டு முயற்சியில் அது விரைவில் உருவாக்கப்படும். அதை தாணு அண்ணன் மிக விரைவில் பெற்றுக்கொள்வார் என்று உறுதியளிக்கிறேன் என்றார் அறிவுமதி.

இந்த நிகழ்வில் தளிர் ஒன்று சருகானது, டிசம்பர் 6 ஆகிய இரு குறும்படங்களும் நீலம் குறும்படமும் திரையிடப்பட்டது.

குறும்படப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தளிர் ஒன்று சருகானது பெண் சிசுக் கொலை தொடர்புடையது. டிசம்பர் 6 திரைப்படம் பாபர் மசூதி இடிப்பை மையமாகக் கொண்டது.

நிகழ்வில் மதுரா பாலன், இராசாராம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நீலம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

புதினம்.கொம்
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 10-13-2005, 07:33 PM
[No subject] - by அனிதா - 10-13-2005, 08:09 PM
[No subject] - by வதனா - 10-13-2005, 09:30 PM
[No subject] - by RaMa - 10-14-2005, 04:51 AM
[No subject] - by Nanban - 10-14-2005, 03:25 PM
[No subject] - by shanmuhi - 10-14-2005, 06:30 PM
[No subject] - by Nanban - 10-14-2005, 06:47 PM
[No subject] - by tamilini - 10-14-2005, 08:35 PM
[No subject] - by AJeevan - 10-15-2005, 01:17 PM
[No subject] - by Muthukumaran - 10-15-2005, 01:57 PM
[No subject] - by AJeevan - 10-15-2005, 10:03 PM
[No subject] - by sathiri - 10-15-2005, 11:25 PM
[No subject] - by KULAKADDAN - 10-15-2005, 11:38 PM
[No subject] - by vasisutha - 10-16-2005, 01:42 AM
[No subject] - by தூயவன் - 10-16-2005, 03:13 AM
[No subject] - by RaMa - 10-16-2005, 03:25 AM
[No subject] - by தூயவன் - 10-16-2005, 03:29 AM
[No subject] - by RaMa - 10-16-2005, 03:30 AM
[No subject] - by AJeevan - 10-16-2005, 12:19 PM
[No subject] - by sathiri - 10-16-2005, 02:53 PM
[No subject] - by hari - 10-16-2005, 03:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)