Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மறுபிறவி மனிஷா: ஐந்து வயது சிறுமியின் முற்பிறவி நினைவுகள்
#1
<b>மறுபிறவி மனிஷா: ஐந்து வயது சிறுமியின் முற்பிறவி நினைவுகள் </b>

புதுடில்லி: மனிதனுக்கு மறுபிறவி உண்டு என்று ஆன்மீகவாதிகள் சொல்லி வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி தனது முன்பிறவியின் நினைவுகளை புட்டு, புட்டு வைப்பதால் மறுபிறவி என்ற எண்ணம் ராஜஸ்தான் மக்களிடம் தோன்றத் தொடங்கிவிட்டது.

டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள ஜாம்ருத்புர் என்ற இடத்தை சேர்ந்தவர் சவுத்ரி கமல் சிங். இவரது 15 வயது மகள் சுமன் 2000ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டு இறந்து விட்டார். அது முதல் கமல்சிங் வீட்டில் எப்போதும் சோகம் தான். மகளின் நினைவுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் கமல் சிங்கும் அவரது மனைவி சந்தோசும் தவித்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் உள்ள மிலாக்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ராம்பால். இவரது மனைவி கிள்ளி தேவி. இவர்களது ஐந்து வயது மகள் தான் மனிஷா. இந்த பெண்ணுக்குத் தான் முற்பிறவியின் நினைவுகள் தோற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிஷா இரண்டு வயதாக இருக்கும்போதே தனது பெயர் மனிஷா அல்ல சுமன் என்று பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். வயது கூடக்கூட அவளது முற்பிறவியின் நினைவுகளும் அதிகரித்து வருகின்றன. தனது தந்தை கமல் சிங், தாய் சந்தோஷ் என திரும்பத் திரும்ப, மனிஷா கூறி வந்தாள்.

சுமனின் திவசத்தன்று மனிஷா பொங்கி வெடித்து விட்டாள். தான் சுமன் தான், மனிஷா அல்ல என்று ஆணித்தரமாக கூறி விட்டாள். மேலும், சுமனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை புட்டுப் புட்டு வைக்கத் தொடங்கினாள்.

ஒரு கட்டத்தில் இரண்டு குடும்பத்தினரும் சந்தித்துக் கொண்டனர். துõரத்தில் இருந்தே கமல் சிங்கை அடையாளம் கண்டு கொண்ட மனிஷா ஓடி போய் அவரை கட்டிப்பிடித்து கொண்டார். யார் உதவியும் இல்லாமல் சந்தோஷையும் அடையாளம் கண்டு கொண்டு அவர் தான் தனது தாய் என்று கூறினாள். இரு குடும்பத்தினரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

முற்பிறவி நினைவுகள் குறித்து, மனிஷா பேச்சு மூலம் தெரிவிக்க விரும்பவில்லை. பென்சில், பேப்பர் இருந்தால் போதும் எழுதித் தள்ளிவிடுகிறாள்.

பிளஸ் 1 மாணவியான சுமன் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். எப்போதும் படிப்பு தான். பென்சில், பேப்பர் கொண்டு எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பார். அந்த பாதிப்பு மனிஷாவுக்கும் உள்ளது என்று அவளது முற்பிறவி மற்றும் தற்போதைய பெற்றோர்கள் கூறுகின்றனர்.

டில்லியில் புஷ்ப் விகார் பகுதியில் ஆந்திரா கல்வி நிலையத்தில் தான் சுமன் படித்தார். அதை கூட மனிஷா தெளிவாக எடுத்து கூறுகிறார். டில்லியில் உள்ள கமல் சிங் வீட்டுக்குச் சென்று சுமனின் பள்ளி சீருடையை மனிஷா சரியாக அடையாளம் காட்டினாள்.

சுமனின் பள்ளித்தோழிகள் பூஜா, பாப்டி ஆகியோர் குறித்தும், சுமன் வழக்கமாக செல்லும் மளிகைக்கடை, அந்தக் கடையின் தோற்றம் ஆகியவை குறித்தும் மனிஷா அடுக்கிக் கொண்டே போகிறாள். சுமனுக்கு சுகாதாரமான சூழல் தான் பிடிக்கும். அதே போன்ற கொள்கையே மனிஷாவிடம் உள்ளது. எப்போதும் தனிமையில் இருப்பது தான் சுமனுக்கு பிடிக்கும். மனிஷாவும் அப்படியே. இருவருக்கும் ஒரே விதமான இனிப்பு வகைகள் தான் பிடித்தவையாக உள்ளன.

இரு குடும்பத்தினருக்கும் இது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. என்ன சொல்வது என்று புரியாமல் ராம்பால் குடும்பத்தினரும், மகள் மறுபிறவி எடுத்து விட்டாள் என்ற சந்தோஷத்தில் கமல் சிங் குடும்பத்தினரும் உள்ளனர். மகளின் போட்டோவுக்கு போடப்பட்டிருந்த மாலையை கூட கமல்சிங் கழற்றி விட்டார். அந்த அளவுக்கு ஐந்து வயது சிறுமி மனிஷா அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டாள்.

ராஜஸ்தானில் மனிஷாவின் புகழ் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ராம்பால் வீட்டுக்கு ஏராளமான மக்கள் சென்று, மனிஷாவின் நடவடிக்கைகளை கவனித்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மறுபிறவி உண்டு என்று அவர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.

நன்றி: தினமலர்
Reply


Messages In This Thread
மறுபிறவி மனிஷா: ஐந்து வயது சிறுமியின் முற்பிறவி நினைவுகள் - by shanmuhi - 10-12-2005, 06:30 AM
[No subject] - by வெண்ணிலா - 10-12-2005, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)