Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்மானம்.
#1
ஜனாதிபதித் தேர்தல் முடிவை அடுத்து தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்மானம்.(இன்றைய உதயனின் ஆசிரியர் தலையங்கம்)


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளராகப் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தென்னிலங்கைச் சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகப் பேரினவாதக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றுடன் சேர்ந்து செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் அமைந்திருந்த முக்கிய அம்சங்களை தமிழர் விரோத நிலைப்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பகிரங்க அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டி உள்ளனர். இலங்கையின் ஒற்றை ஆட்சி முறையை உறுதிப்படுத்தல். அதிகாரப் பகிர்வு, சமஷ்டி முறை, சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளை அடியோடு நிராகரித்தல். தமிழ் பேசும் மக்களின் தாயகக் கோட்பாடு என்ற அம்சத்தை அங்கீகரிக்காமல் புறமொதுக்குதல். விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை முற்றாக நிராகரித்தல். ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மீள் கட்டுமானத்துக்கான பொதுக்கட்டமைப்புத் திட்டத்தை அடியோடு கைவிடுதல். யுத்த நிறுத்த உடன்பாட்டை முற்றாக மாற்றி அமைத்தல். இலங்கை அமைதி முயற்சிகளில் நோர்வே அரசு, அனுசரணையாளர்களாகப் பணியாற்றுவது குறித்து மீள்பரிசீலனை செய்தல். இப்படி எழுத்து மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி அளித்திருப்பதை அடுத்து, தென்னிலங்கைச் சிங்களத்தில் அவருக்குப் பேராதரவு கிட்டியிருப்பதாகத் தென்னிலங்கையில் பேசப்படுகின்றது. சரி, இவ்வளவு உறுதி மொழிகளையும் வழங்கியவர், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் என்ன நடக்கும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியமை போன்று சமாதான முயற்சிகளுக்குக்கான கதவு நிரந்தரமாகவே அடைபட்டுப்போகும்.


தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதிவழியில் சமாதான முறையில் இணக்கத் தீர்வுகாணும் வாய்ப்பு அடிபட்டுப் போகும். நவம்பர் 17ஆம் திகதி நடைபெறும் தென்னிலங்கை ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவில் தங்கிநிற்கும் ஒருவர் ஜனாதிபதியானால், இப்போது விரக்தியின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழர்கள் அதன்பின் தங்களின் இருப்புக்காக விடிவுக்காக கௌரவமான வாழ்வுக்காக நியாயமான உரிமைகளைப் பெறுவதற்காக தமது சுயநிர்ணயப் போராட்டத்தை முழுமூச்சில் மீண்டும் முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச சமூகத்துக்கு ஏற்கனவே விளக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளார்கள். நவம்பர் 17ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் தென்னிலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் என்ற வானளவு உயர்ந்த அதி காரங்களோடு ஜனாதிபதிக் கதிரையில் அமரப்போகின்றவர் யார், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான தங்களின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகின்ற பிரகிருதி எவர் என்ப தெல்லாம் அத்திகதியில் தீர்மானமாகும் என்ற காரணத்தால் அது அவர்களுக்கு முக்கியமானதாக அமைகிறது.

அதேபோன்று அந்தத் தேர்தல் முடிவு ஈழத் தமிழர்களுக்கும் முக்கியமானதாகத்தான் அமையப் போகின்றது. ஆனால், அந்த முடிவின் விளைவு பெறுபேறு என்னவென்பதை அறிய ஈழத்தமிழர்களும் ஏன் முழு உலகமுமே மேலும் பத்து நாள்கள் காத்திருக்கவேண்டிவரும். அவ்வளவுதான். மீண்டும் பேரினவாதம் தென்னிலங்கையில் பீறிட்டு வலுவடைவதற்கு அங்குள்ள அரசியல் தலைமைகள் வழிசமைத் துள்ள நிலையில், அத்தகைய பேரினவாத சக்திகளின் ஆதரவுக் கரங்களில் இலங்கையின் அரசியல் தலைவிதியை எழுதும் அதிகாரப் பொறுப்பு விழுமானால், அதற்குப் பதிலீடாகத் தமிழர் தரப்பு எடுக்கக்கூடிய எடுக்கப் போகின்ற நடவடிக்கை என்ன, மார்க்கம் என்ன என்பவையெல்லாம் நவம்பர் 27ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்து பத்து நாள்கள் கழிந்து தமிழ்த் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவீரர் தின உரையின் ஊடாக சர்வ தேசத்துக்கும் வெளிப்படுத்தப்படும் என்பது திண்ணம்.

ஒரு புறம் பேரினவாதத்தின் குறியீடுடாகத் தன்னை முன்னிறுத்தி இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. மறுபுறம் அமைதித் தீர்வு, சமாதான முயற்சி, அதிகாரப் பகிர்வு, சமஷ்டி முறை ஏற்பாடு என்பன பற்றியெல்லாம் அதிகம் பேசிக்கொண்டு, அதேசமயம் ஈழத் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஏற்றுக்கொள்ளப்படாத தென்னிலங்கை அரசு முறைமைக்கு அடிப்படையான அரசமைப்புக்குள்ளும் அதன் சட்ட, நீதி முறைகளுக்குள்ளும் சிக்கிக் கொண்டு, அதற்கு வெளியே வரமுடியாமல், வரத்திராணியில்லாமல் கதை அளக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வல்லாதிக்கநாடுகளின் ஆதரவுடன் சர்வதேச வலைப்பின்னல் ஒன்றைப் பின்னி, அதில் புலிகளை மாட்டவைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவுசெய்யாமல் அவர்களின் எதிர்பார்ப்புகளை முறியடித்து விடலாம் என்று ரணில் கனவு காணுகிறார்.

இந்த இருவரில் யார் அடுத்த ஜனாதிபதியாக வந்தாலும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயமான தீர்வு கிட்டாது என்பது தமிழர்களுக்குத் தெளிவாகியுள்ள இன்றைய நிலையில், தமது இறுதி இலட்சியத்தை அடைவதற்குத் தமிழர்கள் நாடப்போகும் வழிதான் என்ன? தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை இம்முறை அதனைத் தெளிவாகக் கோடிட்டு வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். சிங்களத்தின் ஜனாதிபதித் தேர்தல் முடிவு வந்த கையோடு வெளிவரப்போகும் மாவீரர் தின உரை விடுதலைப் புலிகளின் தலைவரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை விளக்கம் பற்றிய வருடாந்த உரை இம்முறை எதிர்காலம் பற்றிய பல கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில் தரும் என நம்பலாம்.
.
Reply


Messages In This Thread
தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்மானம். - by vasanthan - 09-25-2005, 01:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)