Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணீயம் இந்துத்துவா மனுஸ்மிருதி..
#5
பிராமணீய கோட்பாட்டிற்கு எதிரான உண்மையான போராட்டத்தைத் திராவிட இயக்கம் கைவிட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. நிலைசெய்ய உதவாத உதிய மரத்தைப் போன்றதுதான் அவர்களின் இன்றைய வர்ணாசிரம எதிர்ப்பு. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் திராவிட இயக்கத்தால், வர்ணாசிரம சாதீய வெறிக்கு எதிரான திசையில் தமிழ்ச்சமூகத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஓட்டு வங்கிகளின் அடிப்படையிலான அணுகுமுறையும், அதனடிப்படையிலான சாதீய சமரசங்களுமே அதற்குக் காரணம். அதன் விளைவுதான் இன்னும் தமிழகத்தின் பல லட்சம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை அனைத்து வடிவங்களிலும் நிலைபெற்றுள்ளது. மேலவளவு முதல் திண்ணியம் வரை பல நிகழ்வுகளைப் பார்த்தப்பிறகும் இவர்களால் பதட்டப்படாமல், பெருமிதத்தோடு ஆட்சி நடத்த முடிகிறது.



கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், பாப்பாபட்டியில் இருபெரும் திராவிட இயக்கத்தின் ஆட்சிக் காலத்திலும் தேர்தல் நடத்தி தலித்தைப் பஞ்சாயத்துத் தலைவராக்க முடியவில்லை. அதைவிடப் பெரிய கொடுமை அங்கு நிலவும் சாதிவெறியை ஒரு பிரச்சனையாகக் கூட இரண்டு கட்சிகளும் இன்று வரை பேசுவதில்லை

.

பிராமணீயம், அக்கிரகாரத்தில் மட்டுமல்ல, அடுத்தவேலை கஞ்சிக்கு வழியில்லாத கீரிப்பட்டியின் ஓலைக்குடிசை வரை கொடிகட்டிப் பறக்கிறது. இடைநிலை சாதிகளின் வாக்கு வங்கிகளே இவர்களுக்கு பிராதான இலக்காக இருப்பதால் அதன் சிந்தனையில் ஏற்றப்பட்டுள்ள சாதீய வெறித்தனத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் கொள்கைத்திறனை இவர்கள் இழந்துவிட்டனர்.

அதுமட்டுமல்ல, இவர்கள் எந்த வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்க நினைக்கிறார்களோ, அந்த வர்க்கத்திற்கு இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்றவேண்டிய அவசியம் ஏதுமில்லை. மாறாக இந்த ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதென்பது, ஒடுக்கப்பட்டவர்கள் வர்க்கரீதியாக திரண்டுவிடாதபடி தடுக்கும் வலுமிகுந்த கேடயமாகும். எனவேதான் அந்த கேடயத்தை இவர்கள் இறுகப்பற்றிக்கொண்டு நிற்கின்றனர்.




வெண்மணி நெருப்பு பற்றி எறிந்தபொழுது இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை வரலாறு மறந்துவிடாது. வெண்மணி என்பது வெறும் கூலிக்கான போராட்டம் மட்டுமல்ல, தலித்களின் சுயமரியாதைக்குமான போராட்டமும்தான். ஆனால் அப்பொழுது இந்த சுயமரியாதைச் சிங்கங்கள் எங்கே போயின? இவர்கள் பேசும் வர்ணாசிரம எதிர்ப்பு என்பது இவர்களின் வர்க்கநலனுக்கு உட்பட்டதுதான் என்பதை வரலாறெங்கும் நம்மால் பார்க்கமுடியும்.




கம்யூனிஸ்ட் இயக்கத்தை வசைபாடுவதையே பிறப்புரிமையாக நினைத்துக் கொண்டிருப்பவரும், திராவிட இயக்கம் தமிழகத்தைப் பொன்விளையும் பூமியாக மாற்றிவிட்டது எனப் புகழ்மாலைபொழிந்து கொண்டிருப்பவருமான மலையாள எழுத்தாளர் சக்கரியா ஜுன் மாத காலச்சுவடு இதழில் எழுதுகிறார் ‘ஒரு பஞ்சாயத்தில் தலித் வேட்பாளர் வெற்றி பெறுகிறார். ஆனால் ஐந்தே நிமிடத்தில் உயர் வருணர்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்கிறார். மதுரைக்கு அருகில் கீழவளவு கிராமத்தில் பாண்டியம்மாள் என்ற தலித் இனப்பெண்ணை மேல் சாதியினர் ஆடுமேய்க்க அனுமதிப்பதில்லை.



பகிரமங்கமாகவும், சட்டத்துக்கு அறைகூவல் விடுத்தும் தலித் இனத்தவரை ஒடுக்கும் சம்பவங்களைப் பற்றியும் இதுபோன்ற பல செய்திகளை வாசித்தேன். மலையாளியின் தற்புகழ்ச்சியுடன் இதைச்சொல்கிறேன் - இது கேரளத்தில் நடக்காது. இந்த ஒரு செயலுக்காக கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் (அதற்கும் முன்னதாக நாராயண குருவுக்கும், அய்யன் காளிக்கும்) இந்த தீராத களங்கம் முடிவடைகிற அன்றுதான் தமிழ்நாட்டின் உண்மையான பாய்ச்சல் தொடங்கும்’ என்கிறார்.



இந்த தீராத களங்கத்தை மகிழ்ச்சியோடு தூக்கிச்சுமக்கும் சமூகமாக தமிழகம் இன்று இருப்பதற்கு காரணம், தென்னிந்தியாவிலே மிகக்கொடுமையான ஜாதிய ஒடுக்குமுறை இருந்த கேரளத்துடன் ஒப்பிட்டு நாம் இழிவுபடுத்தப்படும் நிலை உருவானதற்குக் காரணம், பிராமணீய கோட்பாடு தமிழகத்தில் எதிர்கொள்ளப்பட்ட விதத்தில் இருந்த ஊனமே. இந்த ஊனத்தின் தொடர்ச்சிதான், எந்த கூச்சமுமின்றி இந்துத்துவாவின் இளைய பங்காளிகளாக இருபெரும் திராவிட இயக்கமும் தயக்கமின்றி எளிதில் கைகோர்க்க முடிந்ததென்பது.




உண்மை இப்படியிருக்க அசோகமித்திரன் அய்யோ, அப்பா எல்லாம் போய்விட்டது என்று பூச்சாண்டி காட்டுவதும், பிராமணரல்லாதோர் இயக்கத்தால் பிராமண இனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது என்று, சங்கரச்சாரி கைதை மட்டும் மையப்படுத்தி பேசுவதென்பதும் பெரும் அபத்தமாகும் ‘மாலுமி சரியில்லை என்பதற்காக கப்பலை அழிக்கக்கூடாது, காப்பாற்ற வேண்டும்’ என்று சங்கரமடத்தைக் காப்பாற்ற அசோகமித்திரனை விட தீவிரமான குரல் திராவிட கோட்டைக்குள் இருந்து தான் வந்தது என்பதை அவருக்கு நினைவுபடுத்துவோம்.



ஏகாதிபத்தியம் உருவாக்கியுள்ள நவீன உலகமயச்சூழல், தாராளமயக் கோட்பாடுகள், பெரும் முதலாளிகளின் லாப வேட்கை எல்லாம் சேர்ந்து இந்தியாவைச் சூறையாடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு விளைவுதான் வேலையின்மை. அடிமாட்டு விலைக்கு மனித உழைப்பு கிடைக்கும்பொழுது அரசு உத்தியோகம் எனச்சொல்லி அதிக சம்பளத்தோடு தத்தெடுத்தக்கொள்ளும் முட்டாள்தனத்தை இனிநாங்கள் செய்யமாட்டோம் என்று இந்தியாவின் ஆளும் வர்க்கம் உரக்க கத்துகிறது. நியாயமாக அதை நோக்கிப் பாய வேண்டிய கோபத்தைப் பிராமணரல்லாதோர் இயக்கம்தான் காரணம் என்று திசை திருப்புவது வேலையின்மை என்ற கொடுமையை நிலைநிறுத்தவே உதவி செய்யும்.



அதுமட்டுமல்ல, பிராமணர்களுக்கு மட்டும்தான் அரசாங்க வேலை இல்லை என்றும் இதர சாதிக்காரர்களுக்கு தட்டுத்தாம்பாளத்தோடு தலைமை செயலகத்தில் இருந்து உத்தரவுகள் வந்து கொண்டிருப்பதைப் போலவும் அவர் பேசுவது என்பது சாதீய கண்ணோட்டத்தின் உச்சமாகும்.



கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரத்தில் சாதி சங்கமொன்றின் தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்ததைச் சிறிது நேரம் (தேனீர் குடிக்கும்வரை) கேட்க நேரிட்டது ‘நம்மாளுகளுக்காகத்தான் நான் தொடர்ச்சியா போராடுறேன். என் மேல 18 கேசு இருக்கு அதுல 3 கேசு கொலக்கேசு. ஆனாலும் நான் விடமாட்டேன் என்று சொல்லி பெருமிதத்துடனும் ஆக்ரோசத்துடனும் அந்த நபர் பேசிக் கொண்டிருந்தபொழுது அந்த சிறு கூட்டம் வெறியின் உச்சத்திற்கு இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தனது சாதிக்காக இவ்வளவு வெறித்தனத்தோடு வேறு யாராலும் பேச முடியாது என் எனக்கு தோன்றியது. ஏப்ரல்11ம் தேதி அவுட்லுக் இதழைப் படித்தப்பின் எனது முந்தைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.



ஜெயகாந்தனின் இந்த நிலையை வெளிப்படையாக எதிர்க்காமல் மௌனம் சாதிப்பதன் மூலம் சிலர் மறைமுக ஆதரவை அவருக்கு அளிப்பதென்பதையும், அசோகமித்திரனை வெளிப்படையாக சிலர் ஆதரிப்பதென்பதையும் நாம் பார்க்கிறோம். வழக்கம் போல் ஜெயமோகன் ‘இலக்கிய வாசகன் இவ்விசயத்தில் ஒரு குறைந்த பட்ச தெளிவைக் கொண்டிருக்க வேண்டும்’ என்று பீடிகை போட்டு தனது விஷத்தைக் கக்கியுள்ளார். ‘அசோகமித்திரன் சொல்வது போல தமிழ்நாட்டு பிராமணர்கள் இன ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனரா திடமான பதிலை சொல்வது சிரமம்’ எனச் சொல்லுவது போல் சொல்லி அசோகமித்திரனின் கருத்தை ஆமோதித்துள்ளார்.



‘ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல, ஒரு விஞ்ஞானியின் கூர்மையுடனும் நாணயத்துடனும் அவர் விசயத்தைப் பதிவு செய்கிறார்,’ என்று சமீபத்திய இந்திய டுடேயில் அசோகமித்திரன் எழுதியதற்கு கச்சிதமான கைமாறு ஜெயமோகன் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. இது ஆபத்தான கொள்கை கூட்டணி (பார்க்க : அறுவை சிகிச்சைக்குக் கடப்பாரை, ஈ.வே.ரா.வின் அணுகுமுறை என்ற ஜெயமோகனின் கட்டுரை).



அசோகமித்திரனின் பேட்டி குறித்து தீம்தரிகிடவில் ஞானியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ‘இதுவரை அவரது கதைகளிலோ, நேரடி நடவடிக்கைகளிலோ ஜாதி வெறியையோ, ஜாதி வெறுப்பையோ வெளிப்படுத்தும் எதையும் கண்டதில்லை’ என்கிறார். இப்பொழுது இதைச் சொல்லுவதன் நோக்கம் என்ன? இதுவரை இப்படிப்பட்ட சிந்தனையே இல்லாதவருக்கு ஏப்ரல் 10ம் தேதி இரவு தான் இந்த சிந்தனையே வந்துள்ளது என்கிறாரா ஞானி?



ஐம்பது வருடமாக அவர் இப்படித்தான் உள்ளார் என்பதை அவரது பேட்டியே சொல்கிறது. அசோகமித்திரனின் இந்த நிலைபாடு புதிதல்ல என்பதை அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் அறிவார்கள் (ஞானியைத் தவிர) பி.ஜே.பி. முதன் முறையாக ஆட்சிக்கு வந்த போது அதை வெளிப்படையாக வரவேற்ற தமிழ் எழுத்தாளர் இவர் தான். உண்மை இவ்வாறு இருக்கும் போது கடந்த காலத்தில் அவர் அப்படிப்பட்டவரல்ல என்ற நற்சான்றிதழை ஞானி ஏன் கொடுப்பானேன்?



ஆடு, கோழி பலியிடல் தடைச்சட்டம் என்பது ஆகம கோட்பாட்டுக்குள் சிறு தெய்வ வழிபாட்டை கொண்டு வரும் முயற்சி எனச்சொல்லி கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்த பொழுது கோபம் கொப்பளித்து ‘இடது சாரி பூசாரிகள்’ என எழுதிய ஞானி, அசோகமித்திரன் எனும் ஆஷ்டான பூபதி அம்மணமாய் நிற்கும் பொழுது அதற்கு எதிராக வர வேண்டிய நியாயமான கோபத்தைப் புதைத்துவிட்டு, வேதனையையும், வருத்தத்தையும் மட்டும் சடங்கு பூர்வமாகத் தெரிவித்து விட்டு தப்பித்துக் கொள்வதென்பது பகுத்தறிவுக்கோ, பத்திரிக்கைத் தொழிலுக்கோ வழங்கும் நீதியல்ல.
Reply


Messages In This Thread
[No subject] - by அகிலன் - 09-18-2005, 05:58 PM
[No subject] - by preethi - 09-18-2005, 06:05 PM
[No subject] - by stalin - 09-18-2005, 06:08 PM
[No subject] - by narathar - 09-18-2005, 06:22 PM
[No subject] - by narathar - 09-18-2005, 06:28 PM
[No subject] - by Thala - 09-18-2005, 06:41 PM
[No subject] - by preethi - 09-18-2005, 06:54 PM
[No subject] - by narathar - 09-18-2005, 06:58 PM
[No subject] - by Thala - 09-18-2005, 07:04 PM
[No subject] - by narathar - 09-18-2005, 07:16 PM
[No subject] - by narathar - 09-18-2005, 07:18 PM
[No subject] - by narathar - 09-18-2005, 08:46 PM
[No subject] - by preethi - 09-19-2005, 02:23 AM
[No subject] - by Thala - 09-19-2005, 09:12 AM
[No subject] - by Rasikai - 09-19-2005, 04:13 PM
[No subject] - by narathar - 09-19-2005, 04:24 PM
[No subject] - by Rasikai - 09-19-2005, 04:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)