Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிழல்யுத்தம் அழிவடையும் தமிழ் ஆயுதக்குழுக்கள்
#1
அரசு ஆரம்பித்த நிழல் யுத்தத்தின் பலனாக அழிவடையும் தமிழ் ஆயுதக் குழுக்கள்

* `காந்தி'யின் படுகொலையுடன் இல்லாது போகும் ராசிக் குழு!

மட்டக்களப்பில் ராசிக் குழுவின் பொறுப்பாளர் காந்தியின் கொலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு பேரிடியாகியுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழ்க் குழுக்களின் மற்றொரு தலைவரின் கொலையால் ராசிக் குழுவின் எதிர்காலம் கேள்விக் குறியான அதேநேரம் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் தொடர்ந்தும் பலவீனமடைந்து வருகிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்திலிருந்து திசை மாறிய பல இயக்கங்கள் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கி வருகையில், புலிகளால் அவர்களில் பலர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதால் இந்தக் குழுக்கள் சின்னாபின்னமாகி சிதைவடைந்து போயுள்ளன.

1980 களின் பிற்பகுதியில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்தியப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான யுத்தத்தைத் தொடர்ந்து புலிகளுக்கெதிராக தமிழ் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பமானது. சில இயக்கங்கள் நேரடியாகவே புலிகளுக்கு எதிரான போரில் இந்தியப் படையுடன் இணைந்து குதித்தன.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பன இந்தியப் படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக நேரடியாகவே களமிறங்கின. ஆனால், அப்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இந்தியப் படையை கடுமையாக எதிர்த்த போதும் இந்தியப் படைக்கு எதிராக (மோதல்களில்) செயற்படவில்லை.

இந்தியப் படை இலங்கையை விட்டு வெளியேறிய போது, இவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் படையுடன் சேர்ந்து இந்தியாவுக்குச் சென்றுவிட்டனர். எனினும், குறிப்பிடத்தக்களவினர் இலங்கையில் தங்கிய அதேநேரம், அவர்கள் இராணுவத்துடன் துணைப் படைகளாக இணைந்து கொண்டனர்.

தங்கள், தங்கள் இயக்கங்களிலிருந்து பிரிந்த தமிழ் குழுக்களை 2 ஆவது ஈழப்போரில் இலங்கைப் படையினர் மிக விருப்பத்துடன் உள்வாங்கினர்.

1990 களின் ஆரம்பத்தில் இந்தத் தமிழ்க் குழுக்கள் கிழக்கிலேயே படையினருடன் இணைந்து கொண்டன. ஒவ்வொரு இயக்கத்திலிருந்தும் கிழக்கு மாகாணத்தை, குறிப்பாக மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களே தமிழ்க் குழுக்களாகப் பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைய, அவர்கள் இராணுவத்தில் தேசிய துணைப்படைகளாக்கப்பட்டு இராணுவத்தினரின் சம்பளப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இராணுவத்தினருக்கு வழங்கப்படுவது போன்று சம்பளமும் சலுகைகளும் வழங்கப்பட்டன.

புளொட்டிலிருந்து புளொட் மோகன் குழுவும், ஈ.பி.ஆர்.எல்.எவ். விலிருந்து ராசிக் குழுவும், ரெலோவிலிருந்து வரதன் குழுவும் பிரிந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கொண்டு, புலிகளுக்கெதிராகச் செயற்படுவதாகக் கூறி தமிழ் மக்களுக்கெதிராகச் செயற்பட்டன. கடந்த காலங்களில் இந்தக் குழுக்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறைப் பகுதிகளில் செய்த அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல.

பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படவும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகவும் காரணமாயிருந்த இவர்கள் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதிலும் பின்னிற்கவில்லை. சிங்களப் படையினருக்கு நிகராக, கிழக்கில் இவர்களும் பெரும் அட்டூழியங்களிலும் அடாவடித்தனங்களிலும் ஈடுபட்டதை கிழக்கு மக்கள் இன்றும் கதை, கதையாகச் சொல்லுவார்கள். அந்தளவிற்கு இவர்கள் கிழக்கை ஆட்டிப்படைத்திருந்தனர்.

இந்த அட்டூழியங்கள், அடாவடித்தனங்களூடாக விடுதலைப் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் இவர்கள் படையினருடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டனர். புலிகள் தொடர்பாகவும் தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்பாகவும் புலனாய்வுத் தகவல்களைப் பெற்று இராணுவத்திற்கு வழங்குவதே இவர்களது பிரதான வேலையாக இருந்தது. இதனால் இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் மிகவும் நெருங்கிச் செயற்பட்டனர்.

புலிகளின் கிழக்கு மாகாண நடவடிக்கைகள் குறித்து மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகளின் தென்பகுதி நடவடிக்கைகள் குறித்தும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு முக்கிய தகவல்களை வழங்கி வந்த அதேநேரம், புலிகளை இனங்காட்டுவதிலும் புலிகளின் ஆதரவாளர்களை இனங்காட்டுவதிலும் இவர்கள் பிரதானமாகச் செயற்பட்டனர்.

இதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் தென்பகுதியிலும் இவர்கள் உளவாளிகள் பலரையும் வைத்திருந்தனர். இதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவு பெருமளவு பணத்தைச் செலவிட்டது. பணத்திற்காகவும், பொருளுக்காகவும் புலிகளைக் காட்டிக் கொடுக்க முன் வந்தவர்களை இவர்கள் உளவாளிகளாக்கிக் கொண்டனர்.

இந்தத் தமிழ்க் குழுக்களையும் அவர்களது உளவாளிகளையும் விடுதலைப்புலிகள் காலத்திற்குக் காலம் இலக்கு வைத்தனர். பல உளவாளிகள் பிடிபடவே அவர்களுக்குப் பகிரங்க மரணதண்டனை வழங்கப்பட்டது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவும் புலிகள் இந்தத் தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்கள் பலரை இலக்கு வைத்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகளின் நடமாட்டங்கள் தொடர்பாக இந்த உளவாளிகள் மூலம் தகவல்கள் திரட்டும் தமிழ்க் குழுக்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் புலிகளின் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவி புலிகளின் முக்கியஸ்தர்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல்கள், கிளைமோர் தாக்குதல்களை நடத்தியதுடன் தேவைக்கேற்ப, தாக்குதல்களையும் மாற்றியமைத்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கண்ணிவெடிகள் மற்றும் கிளேமோர் குண்டுகளைக் கொண்டு செல்வதற்கு இந்தத் தமிழ் உளவாளிகளை இவர்கள் பயன்படுத்தினர். ஆழ ஊடுருவும் படையணியால் புலிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தனர். இதனை முறியடிப்பதில் பெரும் சவால்களையும் புலிகள் எதிர்கொண்டனர்.

இவ்வாறு தமிழ்க் குழுக்கள் புலிகளுக்கு சவால்விட்டு வந்த அதேநேரம், தமிழ்க் குழுக்களையும் புலிகள் தொடர்ந்தும் இலக்கு வைத்தே வந்தனர். 1990களின் முற்பகுதியிலிருந்து ராசிக் குழு புலிகளுக்கு மட்டக்களப்பில் பெரும் சவாலாகவிருந்தது. அதன் உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டாலும் அதன் தலைவர் ராசிக்கும் வேறு பலரும் தொடர்ந்தும் சவாலாகவேயிருந்தனர்.

இந்த நிலையில் தான் 1999 ஆம் ஆண்டு, அதி உயர் பாதுகாப்புமிக்க பகுதியில் படைமுகாம்களுடன் இணைந்திருந்த ராசிக் குழுவின் முகாம் முன்பாக ராசிக், தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானார். தமிழ்க் குழு ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்காக புலிகள் தற்கொலைக் குண்டுதாரியைப் பயன்படுத்தியது ராசிக்குக்குத் தான்.

இவரது கொலையுடன் இந்தக் குழு சற்று ஆட்டம் கண்டாலும், ராசிக் குழு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் காந்தி. இவரே பின்னர் ராசிக் குழுவை வழி நடத்தி வந்தார். இவரது காலத்திலும் ராசிக் குழு உறுப்பினர்கள் பலர் இலக்கு வைக்கப்பட இந்தக் குழு சற்று ஆட்டம் கண்டது.

இதேவேளை, புளொட் மோகன் குழுவும் ரெலோ வரதன் குழுவும் தீவிரமாகச் செயற்பட்ட போதும் அவர்களிலும் பலர் இலக்கு வைக்கப்பட மட்டக்களப்பில் புளொட் மோகனைச் சுற்றி வளைக்கும் புலிகளின் வியூகம் இறுகியது. இதையடுத்து, அவர் எவ்வேளையிலும் இலக்கு வைக்கப்படலாமென்பதால் அவர் தனது முக்கிய ஆட்கள் சிலருடன் கொழும்பு வந்து படைமுகாம்களில் தங்கியிருந்து செயற்படத் தொடங்கினார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி புலிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைப்பதை இராணுவ புலனாய்வுப் பிரிவு தீவிரப்படுத்தியது. அதில் தமிழ்க் குழுக்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாயிருந்தது. எனினும், இவர்களது நடவடிக்கைகளை முறியடிக்கும் திட்டங்களை வகுத்த புலிகள் வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாது, தெற்கிலும் பலரை இலக்கு வைத்தனர்.

இவ்வேளையில் தான் போர்நிறுத்த உடன்பாடு அமுலுக்கு வரவே, அத்துருகிரிய மிலேனியம் சிற்றியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆழ ஊடுருவும் படையணி இயங்கிய இரகசியமும் வெளியாகியது. இந்த இரகசியத்தை பொலிஸ் நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தியது.

இதையடுத்து, ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்தவர்கள் பற்றி பூரண விபரம் வெளியானது. இந்த அணியில் 20 முதல் 40 தமிழ்க் குழு உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

எனினும், போர் நிறுத்தக் காலப் பகுதியில் அடுத்தடுத்து, இவர்களில் பலர் தேடி அழிக்கப்படவே, இராணுவப் புலனாய்வுத் துறை எஞ்சியவர்களைப் பாதுகாக்கும் தீவிர முயற்சியில் இறங்கியது. தெற்கில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த போதும், துல்லியமான உளவறிதல் மூலம் இவர்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டனர்.

மிகக் குறுகிய காலத்தில் தமிழ்ப் புலனாய்வாளர்களும் உளவாளிகளுமென 20 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட இராணுவப் புலனாய்வுப் பிரிவு நிலை குலைந்தது.

மிக இரகசியமாகவும் பலத்த பாதுகாப்புடனும் வைக்கப்பட்ட இவர்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டு இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதைப் படைத்தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கையில், மேலும் பலர் இலக்கு வைக்கப்பட்டனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவே எலும்புக் கூடாகி விட்டதாக புலனாய்வுப் பிரிவு ஆதங்கப்படுமளவிற்கு தமிழ்ப் புலனாய்வாளர்களும் உளவாளிகளும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், ரெலோ வரதன் குழுவின் தலைவர் வரதன் மட்டக்களப்பில் கொல்லப்பட அந்தக் குழுவும் சிதறிப்போனது. எஞ்சியவர்களில் சிலர் நாட்டை விட்டுத் தப்பியோட மிகுதியாக இருந்தவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் நிரந்தரமாகினர். இந்தக் காலப் பகுதியில் ராசிக் குழுவின் எஞ்சிய பலரும் இலக்கு வைக்கப்பட அக்குழுவும் பெரிதும் நிலை குலைந்தது.

இதையடுத்து, தமிழ்க் குழுக்களின் முக்கியஸ்தர்களையும் உளவாளிகள் சிலரையும் வெளிநாடுகளுக்கனுப்பி பாதுகாக்க இராணுவத் தரப்பு தீர்மானித்து, சிலரை வெளிநாடுகளுக்கும் அனுப்பியது. புளொட் மோகனும் வெளிநாடு சென்றிருந்தார். இக்காலப்பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடு ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது.

இவ்வேளையில் தான் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிய, இராணுவப் புலனாய்வுப் பிரிவு துள்ளிக் குதித்தது. கருணாவின் பிரிவின் போது, கிழக்கு மாகாணம் இனி கருணா வசமெனவும் புலிகளால் கருணாவை ஒன்றும் செய்ய முடியாதெனவும் கருதிய இராணுவத் தரப்பு, கருணாவுக்கு கிழக்கில் ஆதரவளிப்பதன் மூலம் புலிகளை வடக்குடன் மட்டுப்படுத்தி விடலாமென மனப்பால் குடித்தது.

தென்னிலங்கை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கருணாவுக்கு ஆதரவை வழங்கின. கருணாவைப் பாதுகாக்க வேண்டுமெனவும் புலிகளை அழிக்க இது நல்ல சந்தர்ப்பமென்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

எனினும், எவருமே எதிர்பாராத வகையில் புலிகள் மேற்கொண்ட அதிரடியால் அவர்கள் கிழக்கைக் கைப்பற்றிய அதேநேரம், அதன் பின்னான துரித நடவடிக்கைகள் மூலம் கிழக்கை புலிகள் தம்வசப்படுத்தினர். இது இராணுவ தரப்புக்கு பேரிடியாகிய போதும், கருணாவைத் தங்களுடன் இணைத்த அவர்கள் கருணா குழுவைப் பயன்படுத்தி கிழக்கில் புலிகளுக்கெதிராக நிழல் யுத்தத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிழல் யுத்தம் மூலம் புலிகளை முறியடித்து விடலாமெனக் கருதினர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அரசியல் நடவடிக்கைக்கு வந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டனர். புலிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. புலிகள் தங்கள் அரசியல் பணிகளை முடக்கும் நிலை ஏற்பட, எல்லாத் தாக்குதல்களுக்கும் கருணா குழுவே பொறுப்பென இராணுவமும் அரசும் கூறிவந்தன.

கருணா குழுவின் பெயரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தங்களை இலக்கு வைப்பதை உணர்ந்த புலிகள் இதே பாணியில் பதிலளிக்கத் தொடங்கினர். கருணாவின் வலது கரங்களாகச் செயற்பட்ட பலர் அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்ட மிகச் சில மாதங்களில் கருணாவின் இராணுவத் தளபதியென வர்ணிக்கப்பட்ட அவரது சகோதரன் ரெஜி உட்பட 25 க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டனர்.

கருணா குழுவுக்குள் மிகச் சுலபமாக ஊடுருவிய புலிகள் பல சந்தர்ப்பங்களில், கருணா குழுவினரை அழிக்க கருணா குழு தள்ளாடிவிட்டது. மிகக் குறுகிய காலத்தில் கருணாவின் முக்கிய சகாக்கள் கொல்லப்பட அக்குழுவுக்கு தலைமை தாங்கி வழி நடத்த ஆளில்லாது போனது.

கருணா குழுவினர் மீதான புலிகளின் அதிரடி நடவடிக்கைகள் இராணுவத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கருணா குழுவைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிராக அதிரடித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட இராணுவம், கடைசியில் கருணா குழுவின் பெயரில் புலிகள் மீது தாங்களே தாக்குதல் நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இவ்வேளையில், தான் கருணா குழுவுக்குத் தலைமை தாங்கி தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக வெளிநாட்டில் பாதுகாப்பாகவிருந்த புளொட் மோகன் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார். மிக நீண்ட நாட்களாக புளொட் மோகனை இலக்கு வைத்தும் அகப்படாத நிலையில் கொழும்பில் புளொட் மோகன் மிகச் சுலபமாக புலிகளிடம் சிக்கினார்.

புளொட் மோகன் கொல்லப்பட்டது இராணுவ புலனாய்வுப் பிரிவை அப்படியே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. அவர்களால் இதனை ஜீரணிக்க முடியவில்லை.

தமிழ்க் குழுக்களையும் உளவாளிகளையும் பாதுகாக்க முடியாததொரு நிலை ஏற்பட்ட அதேநேரம், இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்தியங்கிய தமிழ்ப் புலனாய்வாளர்கள் பலர் கொல்லப்பட்டனர், ரெலோ வரதன் கொல்லப்பட அக்குழு அப்படியே அழிந்தது. புளொட் மோகன் கொல்லப்பட அந்தக் குழுவும் அழிந்து வருகிறது.

இந்நிலையில், ராசிக் குழுவின் காந்தியும் கொல்லப்பட, அதில் எஞ்சியிருக்கும் சிலருக்குள் அதற்குத் தலைமை தாங்க எவருமேயில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காந்தி கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் ராசிக் குழுவைச் சேர்ந்த நால்வர் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

இவ்வாறு தமிழ்க் குழுக்கள் பல அழிந்துவிட்ட நிலையிலும் கருணாவைத் தங்களுடன் மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு எஞ்சியவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, கருணா குழு என்ற பெயரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தை தொடர்கிறது.

இவர்களது நிலையை அறிந்த புலிகள் தற்போது தங்கள் உறுப்பினர்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

தமிழ்க் குழுக்களில் எஞ்சியிருப்பவர்களும் விரைவில் இலக்கு வைக்கப்பட்டு விடுவார்களெனப் புலிகள் கருதுகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் இல்லாததால் அவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துவிட்டன. இழப்புகளைத் தவிர்த்து எதிரிகளை இலக்கு வைப்பதில் புலிகள் ஆர்வம் காட்டுவதாக படைத்தரப்பு கருதுகிறது.

இந்த நிழல் யுத்தத்தில் புலிகள் சில இழப்புகளைச் சந்தித்த போதும் மிகப் பெருமளவில் தமிழ்ப் புலனாய்வாளர்களையும் உளவாளிகளையும் இலக்கு வைத்துவிட்டனர். ஒரு விதத்தில் இந்த நிழல் யுத்தமானது, தங்களால் இலக்கு வைக்க முடியாதிருந்த பலரை தங்கள் வலைக்குள் இலகுவாகச் சிக்க வைத்துவிட்டதாகவே புலிகள் கருதுகின்றனர்.

பெரும்பாலானவர்களை இழந்த நிலையில் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவைச் சந்தித்த கருணா குழு, இந்தச் சந்திப்பின் மூலம் தங்களுக்கொரு அங்கீகாரம் கிடைத்தால் அதனைப் பயன்படுத்தி போர்நிறுத்த உடன்படிக்கைக்குள் தாங்களும் வந்து அதன் மூலம் மோதலைத் தவிர்க்கலாமென்றும் அதன் பின் வெளிப்படையாக இயங்குவதன் மூலம் தங்களுக்கு ஆட்களைக் கூட திரட்டலாமெனவும் எண்ணியிருக்கக்கூடும்.

<span style='font-size:25pt;line-height:100%'>ஆனால், கருணா குழு யார், அவர்கள் எங்கிருந்து இயங்குகிறார்கள், நிழல் யுத்தத்தின் சூத்திரதாரிகள் யார் என்பதை இந்தச் சந்திப்பின் மூலம் கண்காணிப்புக்குழு தெளிவுபடுத்திவிட்டது</span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
நிழல்யுத்தம் அழிவடையும் தமிழ் ஆயுதக்குழுக்கள் - by வினித் - 09-18-2005, 12:52 PM
[No subject] - by இவோன் - 09-18-2005, 03:05 PM
[No subject] - by அகிலன் - 09-18-2005, 03:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)