Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதிர்காமரின் மரணமும் மர்மமும்
#1
கதிர்காமரின் மரணமும் மர்மமும்

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டு மூன்று வாரங்களாகின்றன. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இனவாதம், உள்நாட்டுப் போர், அரசியல் கொலைகள் ஆகியவற்றால் ஜனநாயக அமைப்பு மிகவும் வலுக்குறைந்துபோன அத்தீவில் அமைதி திரும்ப வேண்டும் என உளமார விருப்பம் கொண்டிருப்பவர்களுக்கு அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அரசியல் படுகொலைகள் அதிர்ச்சி தருகின்றன.

ஜனாதிபதி சந்திரிகா 13.08.2005 அன்று விடுத்த அறிக்கை, "சண்டைகளை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை நிலைநாட்டுவதையும், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வைப் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டுவதையும் எதிர்க்கின்ற அரசியல் எதிரிகளாலேயே அந்தப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக்" கூறியது குறிப்பிடத்தக்கது. சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யின் குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் "விடுதலைப் புலிகள் மீது எப்படி நான் பழி சுமத்த முடியும்? நான் இந்த நாட்டின் ஜனாதிபதி. எனக்குச் சில ஆதாரங்கள் கிடைத்தால்தானே அப்படிச் சொல்ல முடியும்" என்று சந்திரிகா கூறியதாக முன்னணி நாளேடான `சண்டை டைம்ஸ்' கூறியது. ஆனால், அவரே அடுத்த நாளிலிருந்து `சிங்களப் பெரும்பான்மை' அபிப்பிராயத்தை எதிரொலிக்கும் வகையில் புலிகளே அந்தக் கொலைக்குக் காரணம் எனக் கூறத் தொடங்கினார். சிங்கள இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் இதே குற்றச்சாட்டுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தூக்கியெறிந்து விட வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றன. அதாவது போரை மீண்டும் தொடங்குமாறு சந்திரிகா அரசாங்கத்தை வற்புறுத்துகின்றன.

தமது அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதைத் துல்லியமாகத் திட்டமிட்டு நிறைவேற்றுவதில் வல்லவர்கள் என விடுதலைப் புலிகள் பெயரெடுத்திருப்பதால் கதிர்காமர் கொலைக்கும் அவர்கள்தான் காரணம் என்ற `பெரும்பான்மைக் கருத்தொற்றுமை'யை உருவாக்குவது கடினமானதல்ல. அந்தக் கொலையைத் தாங்கள் செய்யவில்லை என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கூறியுள்ளபோதிலும் அவர்களது கூற்று ஏற்கப்படாமலிருப்பதும் வியப்பில்லை. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் சேர்க்கவும் அவர்கள் அங்கிருந்து நிதி திரட்டுவதற்குச் சிக்கல்கள் ஏற்படுத்தவும் கதிர்காமர் செய்த முயற்சி பெரும் வெற்றி பெற்றதால் அவர்களது சினத்திற்கு ஆளானார் என்ற பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துக்கும் அடிப்படை இல்லாமலில்லை. ஆயினும், இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கையெழுத்திட்டுள்ள கடல்கோள் நிவாரணக் கூட்டுத் திட்டம் கதிர்காமரின் ஒத்துழைப்பின்றி உருவாகியிராது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருபவர்கள் மேற்சொன்ன சிங்கள இனவாதக் கட்சிகள் மட்டுமல்ல; இராணுவத்திலுள்ள சக்தி வாய்ந்த ஒரு பிரிவினரும்தான். எடுத்துக்காட்டாக, சென்ற ஜூன் மாதம் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள திருகோணமலையிலுள்ள ஒரு பொது இடத்தில் ஒரு புத்தர் சிலையை நட்டு வைத்து இனப்பூசலுக்கு வித்திட முனைந்த சிங்கள தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு காட்டிய இலங்கை கப்பற்படைத் தளபதி சரத் வீரசேகரவைக் கிழக்குப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்தார் சந்திரிகா. கடந்த மாதத் தொடக்கத்தில் பெனுவ என்னுமிடத்தில் பயிற்சி முடித்த கப்பற்படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பின் பேசிய சரத், "யுத்தத்தின் மூலமாவது சமாதானத்தை உருவாக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு மூத்த இராணுவ அதிகாரியால் இப்படிப் பகிரங்கமாகப் பேச முடிகிறது என்பதே இலங்கையில் இராணுவம் அரசியலுக்கு மேலான சக்தியைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது.

கதிர்காமர் கொல்லப்பட்ட அவரது வீட்டு நீச்சல் குளத்திற்கும் கொலையாளி இருந்த இடத்திற்குமிடையிலான தூரம் 35 மீட்டர்தான். இவ்வளவு அருகிலுள்ள ஒரு வீடு, புலிகளின் சினத்திற்கு ஆளானவராகக் கூறப்படுகிற ஒருவருக்கு வேண்டிய உறுதியான பாதுகாப்புக் கருதி ஏன் ஒருபோதும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவில்லை என்ற கேள்விக்கு காவல் துறையினரின் பதில் "அண்டை வீட்டுக்காரர்களுக்குத் தொல்லை தரக்கூடாது" என்பதுதான். விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான ஒரு பெரும் தொழிலதிபருடன் கதிர்காமர் எப்போதாவது பேசுவதுண்டு என்றும், அவர் அமைச்சர் பதவியில் இருக்கும்வரை அவர் மீது விடுதலைப் புலிகள் குறி வைக்க மாட்டார்கள் என அந்தத் தொழிலதிபர் வாக்குறுதி தந்ததாகவும் அதை நம்பிய கதிர்காமர் தனது பாதுகாப்பு விடயத்தில் கோட்டை விட்டு விட்டார் என்றும் `சண்டே டைம்ஸ்' கூறுகிறது. ஆனால், விடுதலைப் புலிகள் அல்லாத வேறு சக்திகளால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சாத்தியப்பாட்டைக் குறித்து மௌனம் சாதிக்கிறது. இலங்கை ஜனாதிபதிக்கு அடுத்த படியாக மிக உயரளவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானவர் என்று கருதப்பட்ட ஒருவரது வீட்டினருகில் வாகனங்கள் சென்றாலோ மனிதர்கள் நடமாடினாலோ உடனுக்குடன் சோதனை செய்யப்பட வேண்டும் என்பது பாதுகாப்பு குறித்த அரிச்சுவடி. ஆனால், கதிர்காமர் கொலை செய்யப்பட்ட அன்று இப்படிப்பட்ட சோதனைகள் ஏதும் நடத்தப்படவில்லை.

கதிர்காமர் கொலை செய்யப்பட்டவுடன் அவரது மெய்க் காப்பாளர்களில் ஒருவர் கூட உடனடியாகத் துப்பாக்கிக் குண்டுகள் வந்த இடத்திற்குச் சென்று கொலையாளியைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை. அவர் சுடப்பட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் கொழும்பிலுள்ள வீதிகள் அடைக்கப்பட்டுத் `தேடுதல் வேட்டை' தொடங்கப்பட்டது. அண்டை வீட்டின் உரிமையாளரான லக்ஷ்மன் தளையசிங்கம் என்பவரை விசாரணை செய்வதற்கு அழைத்துச் செல்வதற்காக அவர் வீட்டிற்கு இரண்டு மணி நேரம் கழித்தே காவல் துறையினர் சென்றனர். விசாரணைக்குப் பிறகு காவல் துறையினர் அவரை விட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மனைவி படுத்த படுக்கையாக இருப்பதால் வீட்டின் கீழ்த் தளத்தை மட்டுமே தான் பயன்படுத்தி வந்ததாகவும், மேல் தளத்தைப் பயன்படுத்தவோ, கண்காணிக்கவோ கதிர்காமரின் பாதுகாப்புப் படைக் குழுவினர் கேட்டிருந்தால் அதை அவர்களிடம் ஒப்படைக்கத் தனக்குத் தயக்கமேதும் இருந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். சந்தேகத்தின் பேரில் இதுவரை கிட்டத்தட்ட நூறு தமிழர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள போதிலும் ஒருவர் மீதும் இது தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

கதிர்காமரைக் கொலை செய்தவர் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் `ஸ்னைபர் ரைஃபிள்' என்னும் சிறப்பு ரகத் துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்ட காலித் தோட்டாக்கள் இருந்ததாகக் காவல் துறையினர் முதலில் அறிக்கை விடுத்தனர். ஆனால், நீதிமன்றத்தில் அவர்கள் காட்டியதோ இயந்திரத் துப்பாக்கித் தோட்டாக்கள்தான். இலங்கை அரசாங்கத்தின் உடைமையிலுள்ள `சண்டே ஒப்சவர்' என்னும் நாளேடு "இந்த ரகத் துப்பாக்கி ஒன்று இராணுவக் கிடங்கிலிருந்து திருடப்பட்டிருக்கலாம். அல்லது ஓர் ஆயுத வணிகரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கலாம்" என்று எழுதியுள்ளது. இலங்கை காவல் துறைத் தலைமை அதிகாரியும் இராணுவத்தின் பேச்சாளரும் புலிகள்தான் கொலை செய்தனர் என்று அறுதியிடும் போதிலும் இதுவரை அதற்கான ஒரு தடயமும் ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

கதிர்காமரின் மரணத்தைக் காரணம் காட்டி சந்திரிகா அரசாங்கம் அறிவித்துள்ள நெருக்கடி நிலையை எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை. பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்துவதில் எந்தக் கட்சிக்கும் ஆர்வம் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு கட்சியும் தனக்கு இப்போதுள்ள ஆதரவும் கூடப் போய்விடும் என்று அஞ்சுவதாகத் தோன்றுகின்றது.

-தினமணி
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
கதிர்காமரின் மரணமும் மர்மமும் - by வினித் - 09-05-2005, 10:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)