Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மா செய்த காரியம்!
#1
""அம்மா' என்று சற்று உரக்கவே கூப்பிட்டபடி வந்தான் வாசு.
""என்னடா, வர்றபோதே "அம்மா'ன்னு சத்தம் போட்டு கூப்பிட்டுண்டுவரே? அப்படி நீ கத்தறபடி என்ன செஞ்சுட்டேன்?'' என்றாள் அவன் அம்மா சாரதா.

""செய்யறதையும் செஞ்சுட்டு "என்னடா செஞ்சுட்டே'ன்னு வேற கேக்கறியேம்மா?''

""செய்யக் கூடாத எதை பெரிசா செஞ்சுட்டேன் நான்?'' என்று திருப்பிக் கேட்டாள் சாரதா.

""ஒரு பிள்ளை போய் ஒரு பெண்ணை பார்த்துட்டு வந்தப்பறம், சம்மதம் தெரிவித்தபுறம், மேற்கொண்டு பேச யார் வீட்டுக்கு யார் போகணும்?'' என்று கேட்டான் வாசு.

""பொதுவா பெண் வீட்டுக்காரா தான் பிள்ளை வீட்டுக்குப் போவா!'' என்றாள் சாரதா.

""அது தெரிஞ்ச ஏம்மா நீ பெண் வீட்டுக்குப் போய் பேசினே?''

""அது வந்து... அது வந்து...''

""சரி போனே, இந்தப் பாக்கம் ஒரு காரியமா வந்தேன், அப்படியே உங்கள, காவ்யாவை எல்லாம் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்னு சொல்லிட்டு கொடுக்கிற காபி, டிபனை சாப்பிட்டு வாயை மூடிண்டு வர வேண்டியது தானே?''

""என்னடா பேசிட்டேன் நான்?'' என்று நெஞ்சில் வலது கைய வைத்து கண்கள் கலங்கக் கேட்டாள் சாரதா.

""வரதட்சணை, சீர் செனத்தி அது இதுன்னு ஒண்ணும் நீங்கள் செய்ய வேண்டாம். உங்கள் பொண்ணு கொண்டு வந்து கொடுத்துத் தான் ரொம்பணும்ன்னு எண்ணம் எங்களுக்கில்லை. நீங்க கல்யாணத்துக்கு செலவழிக்கணும்ன்னு ஒரு தொகையை வைச்சிருப் பேல்லயா?... அதுலே பாதி செலவழிங்க போதும்ன்னு சொல்லிட்டு வந்திருக்கே!''

""ஆமாண்டா, வாசு'... அதனாலே என்ன இப்போ?'' என்று கேட்டாள் சாரதா.

கடந்த வாரம் வாசுவை அழைத்துக் கொண்டு காவ்யாவை பெண் பார்க்கச் சென்றிருந்தாள் சாரதா.

சும்மா சொல்லக் கூடாது. காவ்யா ஒரு காவியப் பெண் போல கொள்ளை அழகாக இருந்தாள். இயல்பாகவே அவள் சாதுவானவள் என்பதை அவளுடைய அப்பழுக்கில்லாத அமைதியான முகமே காட்டிற்று. பேசும் பொழுது அவள் வாய் திறந்ததேத் தெரியவில்லை. சிரிக்கும் பொழுது கன்னத்தில் குழி விழுந்தது என்றால் பற்கள் லேசா சிரிக்கும்பொழுது அழகுக்கு அழகை கூட்டுவது போல காவ்யாவின் வதனத்தை வசீகரமாக்கியது.
கூடவே இருந்தாள் காவ்யாவின் தங்கை பானு.

அவள் அக்காவைப் போல இல்லை. ரொம்ப சுமாராக இருந்தாள். காவ்யா அழகாக இருப்பது போல இல்லை பானு. கொஞ்சம் கருப்பாகவும், உடம்பில் கிள்ளக்கூட சதை இல்லாமலும், எலி வால் போன்ற பின்னலும், சற்றே பெரிதான உதடுகளுடனும் இருந்தாள்.

அப்படிப்பட்டவள் அருகிலிருப்பதால் தான் நான் உங்கள் கண்களுக்கு பிரமாத அழகியாக இருக்கிறேன் என்பது முற்றிலும் தவறு என்பது போல காவ்யா இயற்கையாவே அழகாகவும், பார்த்தவர் விரும்பும் வகையிலும் அழகாக இருந்ததை சாரதா கண்டுபிடித்து விட்டாள்.

காவ்யாவை மருமகளாக அடைய அவள் ஆசைப்பட்டது போல மகனும் அவளை மனைவியாக அடைய ஆசைப்படுகிறான் என்பதை அங்கே இருக்கிற போது ஒரு வினாடி காலத்தைக் கூட அங்கே இங்கே பார்த்து வீணடிக்காது வாசு, காவ்யாவையே பார்த்து தன்னுள் பரவசப்பட்டுக் கொண்டிருப்பதை அவன் முக விலாசத்திலிருந்து அறிந்து கொண்டாள் சாரதா.

மகனுக்கும், தனக்கும் காவ்யாவைப் பிடித்து விட்டதால், பெண் வீட்டார் மேற்கொண்டு பேச வருமுன்பே, தான் போய் பேசிவிட்டு வரலாமென்று காவ்யாவின் வீட்டிற்குச் சென்றாள் சாரதா.

வாங்கோ... வாங்கோ... நீங்கள் வந்ததிலே ரொம்ப சந்தோஷம்... நீங்கள் பெரிய இடமா இருக்கேளே, ரொம்ப அதிகமா எல்லாத்தையும் எதிர்ப்பார்ப்பேளோ என்னமோ, அதை நம்மாலே செய்ய முடியுமோ முடியாதோ என்கிற தயக்கத்திலே தான் நானே உங்கள் வீட்டிற்கு வர்றதை தள்ளிப் போட்டுண்டிருந்தேன்...' என்று தான் பேச வராததற்கு மன்னிப்பா கேட்கிற பாவனையில் பேசினார் சங்கரன்.


"நீங்கள் எப்போ லவுகீக விஷயம் பற்றி பேச வராம ரெண்டு மூணு நாளாயிடுத்தோ அப்பவே இது தான் காரணம் இருக்குமோன்னு நெனைச்சு நானே உங்கள்கிட்டே பேசிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்... வாசுவோட அப்பா வீடு, வாசல், நிலம், பணம், நகைன்னு நிறைய சேர்த்து வைச்சுட்டுத் தான் போயிருக்கார்... அதனாலே காவ்யா கொண்டு வந்து தான் எங்கள் கஷ்டம் தீரணும்ன்னோ, எங்க பெண்ணுக்கு கல்யாணம் பண்ணணும்னோ இல்லை... அதனாலே நீங்கள் காவ்யாவை கட்டின புடவையோட அனுப்பி வைச்சாலும் நாங்க அவளை ஏத்துக்க தயாரா இருக்கோம்!' என்றாள் சாரதா.

"நீங்கள் அப்படி சொன்னாலும் நாங்கள் அப்படி எல்லாம் செய்துட முடியுமா?... உங்க மனசு நல்ல தங்கமான மனசு... பொண்ணு வீட்டில முடிஞ்ச மட்டும் பிடுங்கிடணுன்ம்னு நெனைக்காத உயர்ந்த மனசு... இது எல்லோருக்கும் வாய்ச்சிடாது. இவ்வளவு நல்ல மனசு படைச்ச உங்களுக்கு மருமகளா வர எங்க காவ்யா ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும்...' என்றார் சங்கரன் குரல் தழுதழுக்க.

"அப்போ ஒண்ணு செய்யுங்கோ... நான் சொன்னபடியாய் நடந்தமாதிரியும் இருக்கும். நீங்க நினைக்கிறபடியும் நடந்ததா இருக்கும்... காவ்யா கல்யாணத்துக்கு எவ்வளவு செலவழிக்கணும்ன்னு நீங்கள் பட்ஜெட் போட்டிருக்கேளோ அதிலே பாதியை அவள் கல்யாணத்துக்கு செலவழியுங்கோ... மீதிப் பணத்தை உங்கள் ரெண்டாவது பெண் கல்யாணச் செலவுக்கு வைச்சுக்கற பணத்தோட சேத்து வைச்சுடுங்கோ... ரெண்டு மூணு வருஷம் கழிச்சு அவளுக்கு கல்யாணம் பண்ணறப்போ விலைவாசி எல்லாம் ஏறிடும்...' அப்போது காவ்யா கல்யாணத்திலே நீங்க மீதம் வைக்கிற பணமும் சேர்ந்து உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்...'' என்றாள் சாரதா.

காவ்யா, அவள் அப்பா, அம்மா, தங்கை எல்லாம் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக சாரதாவை கையெடுத்து கும்பிட்டனர்.

""அப்படி ஏம்மா பேசினே?''

""பேசினா என்னடா?... பிள்ளையை பெத்த ஒவ்வொரு அம்மா மாதிரி இருக்க நான் விரும்பலேடா... ஏழையான எங்கப்பா எனக்கு கல்யாணம் செய்து வைக்க பணத்தை புரட்ட பட்ட கஷ்டங்கøள் எல்லாம் எனக்கு நினைவிருக்குடா... அது மாதிரி என் பிள்ளைக்கு கல்யாணம்ன்னு வர்றப்போ பெண்ணோட அப்பா கஷ்டப்படற மாதிரி எதையும் கேட்கக்கூடாதுன்னு அப்பவே தீர்மானம் பண்ணிண்டவடா நான்... காவ்யா அப்பாக்கிட்டே அவள் கல்யாணத்துக்கு ஒண்ணுமே செய்ய வேண்டாம்ன்னு தான் மொதல்ல நான் சொன்னேன்.

""அப்பவே அவர் யோசிக்க ஆரம்பிச்சிடுவரேம்மா!'' என்றான் வாசு.

""என்னன்னு?...'' என்று கேட்டாள் சாரதா.

""பிள்ளைக்கு ஏதோ வியாதி இருக்கு. அதனாலே அவன் கல்யாணம் நடக்காமலிருக்கு. எப்படியாவது பிள்ளைக்கு கல்யாணமானா போதும்ன்னு நீ ஒண்ணுமே செய்ய வேண்டாம்ன்னு சொல்றேன்னு அவர் யோசிக்கலாமே அம்மா,'' என்றான் வாசு.

""யோசிக்க மாட்டார்டா வாசு?'' என்றாள் சாரதா.

""எப்படியம்மா சொல்றே?''

""அதுக்குத் தான் ஒரு சமரச திட்டம்மா காவ்யா கல்யாணத்துக்கு செலவழிக்கிற பணத்திலே பாதியை அவள் கல்யாணத்துக்கு வைச்சுண்டு மீதியை அடுத்தப் பொண்ணு கல்யாணத்துக்கு வைச்சுண்டிருக்கிற பணத்தோட சேர்த்து வைச்சு ரெண்டாம் பொண் கல்யாணத்துக்கு வைச்சுக்குங்கோன்னு நான் சொன்னேன். அதுக்கு காரணம் நான் சொன்ன மாதிரி ரெண்டு மூணு வருஷம் கழிச்சி சின்னப் பொண்ணுக்கு நீங்கள் கல்யாணம் செய்து வைக்கிறப்போ விலைவாசி எல்லாம் டபுள் மடங்காகியிடும். அப்போ நிறைய பணம் உங்களுக்கு வேண்டியிருக்கும்.

""சின்னப் பொண்ணு பானு, காவ்யா மாதிரி இல்லேடா வாசு... மார்க்கெட்டில் ஒரு பொருள் மோசமாவோ, சுமாராவோ இருந்தா அது குறைஞ்ச விலையில் கிடைக்கும். யார்கிட்டேயாவது தள்ளி விட்டுடலாம்... ஆனால், கல்யாண மார்க்கெட், சுமாரான பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கவே நிறைய பணத்தை விலையா கொடுக்கணும்... பானு மாதிரி எல்லா விதத்திலேயும் சுமார்லயும் சுமாரா இருக்கிற பெண்ணுக்கு பணத்தை வாரி இறைச்சாத் தான் கல்யாணம் பண்ணி வைக்க முடியும்.

""அதுக்காகத்தான் காவ்யா கல்யாணப் பணத்திலே பாதியை பானுவுடைய கல்யாணத்துக்கு வைச்சுக்குங்கோன்னு மனசுலே அப்படி வைச்சுண்டு பேசினேன். அதை காவ்யா அப்பா மட்டுமல்ல, அவள், அவள் அம்மா, தங்கை எல்லாம் நான் நல்ல மனசோடத்தான் பேசறேன் என்கிறதை புரிஞ்சுண்டுட்டாடா வாசு... நம்மளாலே காவ்யா கல்யாணம் நடக்கப் போற மாதிரி, நம்ம வேண்டாம்ன்னு சொன்ன பணத்தாலே அவளுடைய தங்கை பானுவோட கல்யாணமும் நடக்கப் போறதடா வாசு...'' என்றாள் சாரதா.

""அம்மா... யூ ஆர் கிரேட்!'' என்றபடி அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டான் வாசு.

by:Suganthi
ThanksBig Grininamalar
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
அம்மா செய்த காரியம்! - by SUNDHAL - 08-17-2005, 04:50 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)