<span style='color:red'>சார்பு நிலை இல்லா தன்மானத் தமிழ்மகள் ஒருவரின் தாயகப்பயணம்....
தாயகம் நோக்கிய எனது பயண அனுபவங்கள்
எட்டு வயதினில் எமது தாய் நாட்டை விட்டு பிரிந்து அகதி என்ற முத்திரை தரிக்கப்பட்டு சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற எனக்கு, பல வருடங்களுக்கு பின்பு நாட்டுக்கு திரும்பும் பாக்கியம் கிடைத்தது.
உயர்கல்வி கற்று பணம் சேகரித்து எனது பெற்றோர்கள் செய்து வரும் பண உதவியையே தொடர்ந்தால் போதும் , போரால் சீர் அழிந்து கிடக்கும் நாட்டுக்கு அதுதானே முக்கிய தேவை என்ற சிந்தனையோடும் எங்கும் வறுமை ஆளும் கோலம் கண்டு என் மனம் வேதனைப்படும் என்ற நினைவுகளுடனும் அங்கு சென்றேன். ஆனால் எம் தாய் மண்ணை மிதித்த பின் என் கற்பனைகளெல்லாம் சில மாற்றம் அடைந்தது.
கொழும்பு விமானநிலையத்தில் இறங்கியதும் உடனடியாக யாழ்பாணம் போக முடியாது என என்னை அழைத்து செல்ல வந்த நன்பர்கள் கூறியிருந்தார்கள் எனக்கு புரியாத புதிராக இருந்தது. ஏன், எதற்கு என்ற எனது கேள்விக்கெல்லாம் வவுனியா இராணுவ பரிசோதனை நிலையம் வந்ததும் பதில் கிடைத்தது. இரவு இரவாக பிரயாணம் செய்து காலைப்பனியில் பல மணித்தியாலங்கள் காத்திருந்து அன்னியனிடம் எமது நாட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு வேதனையை ஊட்டியது. அங்கும் அகதி இங்கும் அகதி இந்த சாபம் எங்களை விட்டுப் போகாதா என்ற ஏக்கத்துடனும், சமாதான நிலையிலேயே இப்படி என்றால் மற்ற நேரத்தில் எம் மக்கள் எத்தனை சிரமங்களை சந்தித்திருப்பார்கள் என்ற வேதனையோடும் என் பயணத்தை தொடர்ந்தேன். மாங்குளம் தாண்டியதும் பார்த்தேன் எனது ஏக்கத்திற்கு விடிவை. பல வருடங்கள் களித்து முதல் முறையாக எனது அகதி என்ற உடையை அவிழ்த்தேன். இங்கு எல்லாம் எனக்கு சொந்தம் என்ற உணர்வு என்னுள் எழுந்தது. அப்பொழுது உணர்ந்தேன் நாம் பல வருடங்களாக எந்த அன்னிய நாட்டில் வழ்ந்தாலும பிறந்து வளர்ந்தாலும் இந்த உரிமை இங்குமட்டும் தான் எமக்கு கிடைக்கும் என்று. கிளைகளாக நாம் எங்கு சென்றாலும் எமது வேர்கள் இங்கு தான் புதைந்து கிடக்கும்.
எமது தாய்மண்னை என் பாதங்கள் தொடத் தொட சந்தோசத்தில் மனம் துள்ளிக் குதித்தது. நான் அங்கு சென்றால் என்னை எதிரிக்குப் பயந்து ஓடிய ஒரு துரோகியைப் போல் பார்ப்பார்களே, கேலி செய்வார்களே என்கின்ற பயம் எனக்குள் இருந்தது, அதை எம் மக்கள் புன்னகையுடன் பாசத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து போகச்செய்தார்கள். ஆனால் அதே சமயத்தில் அடி மனதில் இருந்து ஒரு குற்ற உணர்வும் எழுந்தது.
இவ்வளவு நாளாக எனது நாட்டுக்காக நான் என்ன செய்தேன்? எமது நாட்டுக்காக உயிரைக் கொடுத்தவர்கள் அனுபவிக்காத இந்த இன்பத்தை அனுபவிக்க எனக்கு மட்டும் என்ன உரிமை?
எனக்கு தமிழன் என்ற அடையாளம் தந்த என் தாய்மண்ணுக்கு நான் ஒரு துரும்பு கூட செய்யவில்லையே என்று எனது மனம் தவித்தது.
அந்த வன்னி மாநிலம் உலக வரைபடத்தில் எமது ஈழம் இருந்தால் எப்படி இருக்கும் எனபதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளஙகியது.
அங்கு ஒரு கற்பிணித் தாயின் வயிற்றில் உள்ள கருவில் இருந்து, நடக்க முடியாமல் தடுமாறும் கால்களுக்கு பொல்லைத் துணைதேடும் முதியவர் வரை எல்லோருக்கும் பராமரிப்பு இருந்தது. இது தொடர நானும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உறுதி எற்பட்டது.
நான் கொடுக்கும் பணச் செல்வம் அவர்களுக்கு ஒர் இரண்டு நாட்கள் போதும் ஆனால் அங்கு சில இடங்களில் விஞ்ஞானத் துறையில் படிக்க விரும்பும் மாணவர்கள் கூட ஆசிரியர் பற்றாக்குறையினால் வேறு துறைகளில் படித்து வருகின்றார்கள் ஆகையினால் மாணவி ஆகிய நான் எனது கல்விச் செல்வத்தை அவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்குத் தேவையான செல்வத்தை அவர்களே சேகரித்துக் கொள்வார்கள் என்று கருத்தை எனது சகோதரர்கள் எனக்கு எடுத்து உணர்த்தினார்கள்.
இனி வருங்காலங்களில் நாம் எமது தாயகத்துக்குச் செல்லும்போது பணச் செல்வதுடன் எமது கல்விச் செல்வத்தையும் அவர்களுக்கு கொடுப்போம்.
ஈழத்தின் காவல்த்துறையைப் பார்த்து வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் ஒருவர் சொல்லியிருந்தார் தமிழீழக் காவல் துறையைப் போல் சிங்கள நாட்டிலும் ஒரு காவல் துறை இருந்தால் இலங்கைத்தீவில் குற்றம் என்பதே இருக்காமல் போய்விடும் என்று, அவரது கருத்து சரியாகத்தான் இருந்தது.
ஒரு தும்பால் ஒரு பொருளை கட்டி இழுப்பதைவிட பல தும்புகள் இணைந்த ஒரு கயிற்றால் இழுப்பது அந்தப் பொருளை வெகுவிரைவில் வேண்டிய இடத்தில் சேர்த்துவிடும் அல்லவா?
நாம் தமிழர்கள் இணைந்து இழுத்தால் எமது ஈழம் வெகு விரைவில் எங்களை அடைந்து விடும்.
ஒரு நாடு மட்டும் இருந்தால் போதாது அது உலகரீதியில் எல்லா துறையிலும் உச்சக்கட்டத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எமது போராட்டம் முழுமையடையும் என்பது எனது கருத்தாகும்.
அந்த வகையில் வன்னியில் உள்ள பல இல்லங்களையும் நான் செனறு பார்வையிட்டேன் அவை எனது மனதில் ஏற்படுத்திய கேள்விகளும் எம் அனைவருக்கும் உள்ள கடமைகளையும் உணர்த்தும் நினைவுகளாக அந்த இல்லங்களும் அங்கு நான் சந்தித்த மனிதர்களும் என்றும் என்னுடன் கூடவிருப்பார்கள். </span>
www.stso.ch
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>