Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கறுப்பு ஜுலை - ஒரு அனுபவப் பகிர்வு
#1
ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமைரீதியாகவும், மொழிரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.
தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் துாண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.
இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட து}ங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது.
அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.
ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் து}ண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறுாப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.
'தில்லீஸ் குறுாப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினுாடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது.
வஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.
மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.
'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
மாதக் கடைசி. கையில் பணமில்லை.
வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன்.
அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.
அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.
மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.
அந்த 'ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.
எனினும் என்ன பயன்?
எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.
அது திறக்கப்படவில்லை.
மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.
பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.
மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
அவர்களின் பின்னால் 'ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
இராணுவத்தினர் 'ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.
கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.
அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.
அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.
நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.
ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
ஓடினால் 'தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.
நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.
கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.
அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.
சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.
இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
இரவு எட்டு மணியிருக்கும்.
முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.
அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.
லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.
பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.
அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.
இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
பசித்தது.
துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."
அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.
.
Reply
#2
அந்தநேரம் நான் நிண்டிருந்தால் துவக்காலை எடுத்து சிங்களவனை சுட்டிருப்பன்.
Reply
#3
இனக்கலவரத்தின் அவலங்களின் சாட்சியாகப் பதிந்து வைக்கப் பட வேண்டியதொரு நினைவுப் பகிர்வு.
வாழ்த்துக்கள் சோழியான்.
வாசிக்கும் போது அப்போதைய பல கசப்பான நினைவுகள் மனதில் முட்டி மோதின.
Nadpudan
Chandravathanaa
Reply
#4
யுூலைக் கலவரம் பற்றிய எழுத்துப் பதிவுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே நான் அறிகிறேன்.
சோழியான்..! உங்களுக்கு இன்னும் இது போன்ற அனுபவங்கள் இருந்தால் பதியத் தவறாதீர்கள்.
Nadpudan
Chandravathanaa
Reply
#5
இதிலே மேலதிக பதிவுகள் என்று நான் பார்த்த பல அசிங்கங்களையும் கூறலாம்.. அதாவது அகதி முகாம் அசிங்கங்களை.. அதை ஏன் தற்போது கிளறுவான்.. மற்றும் நான் போக எத்தனித்த கல்கிசை தில்லீஸ் பீச் ஹோட்டலும் எரிக்கப்பட்டு.. அங்கிருந்த உல்லாசப் பிரயாணிகளின் உடமைகளும் சூறையாடப்பட்டதை குறிப்பிட மறந்துவிட்டேன்.. அந்தப் பிரயாணிகள் வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் தமது அவலங்களை கூறியதும் ஒரு பதிவுதான்..
.
Reply
#6
இத்தனை காலமாகியும் தமிழனம் ஒற்றுபடவில்லை என்பது வேதனைதரும் உண்மை. ஒவ்வோரு தமிழனுக்கும் கறுப்புஜூலை ஒரு பயங்கர அனுபவம். ஒரு காவியுடையின் பேயாட்டம் தான் ஆரம்பம். பொரளை புத்த கோயில் ஒன்றில் இருந்த ஒரு புத்த பிக்கு, இன வெறியர்களுக்கு தமிழர்களின் கடைகளை அடயாளம் காட்டக் காட்ட கடையர் கூட்டம் தமது வெறியாட்டத்ததை ஆரம்பித்தது. அடையாளம காட்ட பௌர்ணமி விசாக வெசாக் திருவிழாவுக்கு தமிழரின் பங்களிப்புகளை வாங்கிக் கொண்டு அவர்களுக்குக் கொடுத்த ரசீதுகள் உதவியது அடையாளம் காட்ட என்பது வேதனை தரும் விடயம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#7
மேல்வரும் அனுபவப் பகிர்வை வில்லிசையாக்கி, சுவிஸில் இடம்பெற்ற கறுப்பு ஜூலையில் பொருத்தமான பாடல்களுடனும் மாற்றங்களுடனும் மேடையேற்றி.. பெரும்பாலானவர்களின் பாராட்டைப் பெற்ற நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்ளுகிறேன்.
.
Reply
#8
தெமட்டகொடவில் இருந்து இராமகிருஷ்ண மிஷன் மண்டபம் வரை உங்களுடன் நானும் வந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருந்தது உங்கள் கட்டுரை.
Reply
#9
ஆனால் இது எனக்குள் நானே வெட்கப்பட்டுக்கொள்ளும் அனுபவப் பகிர்வுதான்.. தமிழர் கடைகளை அவர்கள் சூறையாடி, தீக்கிரையாக்கும்போது.. அதனுள்ளிருந்த 'பைலற்" குமிழ்முனைப் பேனாக்கள்.. இனிப்புகள் போன்றவற்றை எடுத்து சனங்களை நோக்கி வீசினார்கள்.. அதை சனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பொறுக்கினார்கள்.. நானும் என்னை அடையாளம் காட்டக்கூடாதென்பதற்காக அவர்களில் ஒருவனாக சிலவற்றை பொறுக்கிக் கொண்டேன்.. இப்படியான மனக் குறுகுறுப்புகளும் இல்லாமலில்லை.
.
Reply
#10
இதில் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது?உங்கள் விவேகத்தைப் பாவித்திருக்கிறீர்கள்.
உடனடியாக உணர்ச்சிகளைக் கொட்டியிருந்தால் இல்லாமல் போயிருப்பீர்கள்.
இப்படியான கட்டுரை எமக்கும் இல்லாது போயிருக்கும்.
சமயோசிதபுத்தி என்பார்களே, அது உங்களுக்கு தருணத்தில் வேலைசெய்திருக்கிறது.
Reply
#11
சிங்களவனை நொந்து பிரயோசனமில்லை...நீங்கள் கடைசியில் கூறிய இரு இளைஞர்களே அநத இனத்தின் பெரும்பான்மையாக ஒரு காலத்தில் இருந்திருப்பார்கள்.

நமது அரசியல்வாதிகளும் அவர்களது அரசியல்வாதிகளும் சேர்நது சொதபபியதைத்தான் இப்போதும் இரு இனங்களும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன..

இதெல்லாம் உலகமாகாயுத்தத்தின்போது கப்பல் பிடித்து மகாராணியாருக்கு தூது சென்றவர்கள் விட்ட பிழையால் வந்த வினைகள்!

சுhரியன் கொம்மில் 1977 கலவர
நிகழ்வு பற்றிய புத்தகம் தொடராகப்போகிறது.எல்லோரும் கட்டாயமாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.

நீலவண்ன் எழுதிய புத்தகம்..நீலவண்ணன் என்ற பெயரில் எழுதியவர் பிரபல ஈழத்து எழுத்தாளா ஒருவர்.அவர் அன்று அரச அதிபர் ஸ்தானத்தில் இருந்தமையால் அவரால் அன்று அந்தப்பெயால் எழுதமுடியவில்லை
.எனினும் பதிவாக்கிகொண்டார்.இன்று அன்று அவர் பதிவு செய்தமை மிக பெறுமதியாகவுள்ளது...
ஆழிக்கும் இநத எழுத்தாளருக்கு; சம்பந்தமுண்டு.
Reply
#12
அது சரி யாழ்.. தமிழாராய்ச்சி மகாநாட்டு சம்பவங்களையும் தாங்கி ஒரு புத்தகம் அப்போது வந்தது.. பெயர் நினைவுக்கு வருகுதில்லை.. ஆனந்தா புத்தகசாலை வெளியீடு என நினைக்கிறேன்.. எங்காவது கிடைக்குமா?
.
Reply
#13
நன்றி ஒரு நிமிடம் நான் விறைத்து நின்றுகொண்டேன்.
இறுதியில் கண்களில் நீர்வடியவும் கண்டேன். உண்மையில் அந்த கொடுமைகளை எண்ணியல்ல இறுதியாக உதவிய அந்த இளைஞர்களின் மனிதாபிமானத்தை எண்ணி ஆனந்தக்கண்ணீர். தமிழர்கள் நல்லவர்களும் இல்லை சிங்களவர்கள் கெட்டவர்களும் இல்லை. அகதிவாழ்வு வாழ்ந்தாலும் தம் சொகுசு வாழ்வை மறக்க முடியாத அந்த குடும்பம் தமிழர்களில் கெட்டவர்களிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

சாதாரண ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடனேயே சிங்கள மக்கள் சீறுவதும் சிதிலமடைவதும் தமிழர்களை கண்டால் முறைத்துக்கொள்வதுமான நிலையை நான் திருகோணமலையில் அனுபவித்ததுண்டு. அந்த நேரம் தனியாக அவர்கள் கைகளில் அகப்பட்டால் எனது நிலை என்னவாகும் என எண்ணி பீதியும்கொண்டதுண்டு. அதைவிட மோசமான ஒரு நிலையை நீங்கள் அனுபவித்து இருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் பதித்த இந்த பதிவு பாதுகாக்கப்படவேண்டிய ஒரு பொக்கிசம். எமது தேசத்தின் வரலாற்றில் ஓர் அங்கமாக்கNவுண்டிய முக்கிய பதிவு இது.
நன்றி சோழியன் அண்ணா
[b] ?
Reply
#14
ஆமாம் சோழியன்.
புத்தகத்தின் பெயர் எனதினிய யாழ்ப்பாணமே..
அதில் வரிவாக தமிழாராய்ச்சி சம்பவங்கள் கூறப்படுகின்றன..எப்படி அந்த நிகழ்வை யாழில் ஆரம்பிக்க முடிவுசெய்தார்கள்...சிவகுமாரன் போன்றவர்கள் அதில் தொண்டர்களாக இருந்தது...நிகழ்வை யாழில் வைக்க அன்றைய முதல்வர் துரையப்பா போன்றோர் விருப்பப்படாமை பின்னர் இந்தியாவிலிருந்து வந்து பேசியோரின் நிகழ்வுகள்.அதன்பின் எப்படி அந்த அனர்த்தங்கள் நடந்தேறியது என்ற முழுவிபரங்களுடன் விறுவிறுப்பாக அந்த சம்பவங்களை தந்திருந்தார்கள்.

முடிவில் அந்த கொலைகளை
விசாரித்த கமிசன் அறிக்கைகளையும் இட்டிருந்தார்கள்


புத்தகத்தை எழுதி வெளியிட்டவர் காந்தளகம் சச்சிதானந்தன்
அவரும் அந்த தமிழாராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்தவர்.

இன்ரம் இணையதளத்திற்கு சென்று
பதிப்பகங்கள் பகுதியினுள் காந்தளகத்தை தேடினால் அங்கு அங்கு அதன் விபரம் இருக்கும்
Reply
#15
மிக மிக நன்றிகள் யாழ்.. பரணீ.. நீங்கள் அடைந்த இன்னல்களுக்கும் மேலாகவா அனுபவித்தேன்.. இன்றைய இளைஞர்கள்தானே எழுத்திலடக்க முடியாத பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்..
.
Reply
#16
sOliyAn Wrote:மிக மிக நன்றிகள் யாழ்.. பரணீ.. நீங்கள் அடைந்த இன்னல்களுக்கும் மேலாகவா அனுபவித்தேன்.. இன்றைய இளைஞர்கள்தானே எழுத்திலடக்க முடியாத பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#17
:roll:
.
Reply
#18
Quote:hello,mr.rajan murugavel,I read a story in yarl.com,BLACK JULY,that was a real experience.I had the seme erperience on the same dayin july 1983.I was working in kundanmals ltd in main street as a wharf clerk,and living in bosswell place for 4 years,had the same experience,at last i was in bambalapitiya hindu college refuge camp and left k.k.s by lanka srimani a cargo ship.The captain of the ship is known for me because I used to go to ceylon shipping corprration and know him very well,and I used to go to the harbour evryday,on the day to leave to kks as a refugee I was in the line to board to the ship,many of them working in the harbour could not believe me as a refugee, after these incidents I lkeft to germany and presently livingin canada.Last week I received a magazine mann fromthis editor mr sivarajah,this is a good effort,butthe paper and composing in tamil are is very small letters.why didn't they make like indian magzine?is that so expensive or no facilities to print?. any how they do their best. kuganesan.k,mtl canada.
.
Reply
#19
நல்லா வெட்டி ஒட்டுங்கோ
Reply
#20
sethu Wrote:நல்லா வெட்டி ஒட்டுங்கோ
உங்களுக்கு.. இன்னும்.. வெட்டி.. ஒட்டத்..தெரியாதாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)