Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சென்று வா மகளே சென்று வா
#1
Quote:சமõதான தேவதையாகத் தன்னை இனம் காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. அரசியலைவிட்டு ஒதுங்கி நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கியிருந்த அவர் இலங்கை திரும்பியதும் திடீரென அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டார். மிக விரைவிலேயே பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் ஆகிக் கொண்டார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தன்னை மக்களின் நெருங்கிய நண்பி போன்று காட்டிக் கொள்வதில் சந்திரிகா முழு மூச்சுடன் செயற்¬பட்டார். சூரிய கந்தையில் போய் நின்று புதைகுழி தோண்டினார். கிராமங்களிற்குள் இறங்கி மக்களைச் சந்தித்தார். அவற்றை அடித்தளமாக வைத்துக்கொண்டு சமாதானச் சாயத்தையும் பூசி ஜனாதிபதியானார்.
ஆட்சிபீடம் ஏறியதும், எல்லா அரசியல்வாதிகள் போன்று சந்திரிகாவும் நடந்துகொண்டார். மக்களை மறந்தார்; தான் ஓர் அரசி போன்று நடந்து¬கொண்டார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என நாட்டு மக்களுக்¬குச் சத்தியம் செய்த அவர், தனது 11 வருட பதவிக் காலத்தில் அந்தக் கதிரை தந்த சொகுசான கதகதப்பை முழுமையாக அனுபவித்தார். தன் வாக்குறுதியை மறந்துவிட்டுப் போகும்போது மற்றொருவரிடம் கையளித்துவிட்டும் போய்விட்டார்.
சந்திரிகா ஆட்சியிலிருந்தபோது அவர் பற்றிய கதைகளுக்கு எப்படிக் குறைவில்லையோ அதேபோன்று அவர் பதவி விலகிய பின்னும் செய்திகளுக்குக் குறைவில்லை. அந்த வகையில் ஆட்சியிலிருந்த சந்திரிகா பற்றிய தொடர் இது.
சந்திரிகா அரசியலுக்குள் மீள நுழைந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்து, அவரது வெற்றிக்கு வழிவகுத்தவர்ளில் ஒருவர் விக்டர் ஐவன். பிரபல அரசியல் ஆய்வாளரும், "ராவய' வார இதழின் ஆசிரியருமான அவர் ஒரு காலத்தில் சந்திரிகாவுக்கு உற்ற நண்பர்.
கருத்து முரண்பாடுகளால் பின்னர் சந்திரிகாவிடமிருந்து விலகினார் விக்டர் ஐவன். அவரே இந்தத் தொடரை வரைந்துள்ளார். சந்திரிகாவின் வீரதீரங்கள், துணிவு, பொய், புரளி, பித்தலாட்டம் என்பன பற்றிய பல சுவையான அம்சங்களை அவர் இதில் திரட்டித் தந்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்தத் தொடர் எழுதப்பட்டிருந்தது. அதனை அப்படியே மொழியாக்கம் செய்து சூரியகாந்தியில் தொடர் கட்டுரையாக வெளிவந்தது அதை உங்களுக்கு தருகின்றேம்

<b>சந்திரிகா அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை மட்டும் 20 இலட்சம் ரூபா </b>

ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதிப் பதவி யிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் அவர் தொடர்¬பான எனது அனுபவங்களைத் தொகுத்து நூல் ஒன்றை எழுதவேண்டும் என்ற எண்ணம் 1999 இல் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நேரத்தில் உதயமாயிற்று. அந்த நூலை எழுதுவதற்காகப் பெரு¬மளவிலான நேரத்தைச் செலவிட்டதுடன், நான் எதிர்பார்த்தபடி அந்தநூலின் 90 சதவீதமான வேலை¬கள் முடிவடைந்தன. அவ்வாறு தொகுக்கப்பட்ட விவரங்கள் 500 இற்கும் குறையாத தாள்களில் தட்டச்சிடப்பட்டன.ஆனால், எஞ்சியுள்ள 10 சதவீதப் பணிகளை ஏதோ காரணங்களால் என்னால் செய்துமுடிக்க முடியவில்லை.
சந்திரிகா பற்றிய நூல் தொடர்பாக 90சதவீதப் பணிகள் முடிவுற்றிருந்த வேளையிலேயே பிரதம¬ நீதியரசர் குறித்த நூலை எழுதியிருந்தேன். பிரதம நீதியரசர் பற்றிய நூலை எழுதி என்னால் வெளியிட முடிந்தபோதிலும் சந்திரிகா பற்றிய நூலை எழுதி முடிக்க இன்றுவரை என்னால் முடியாமற்போயிற்று. இருப்பினும், தற்போது சந்திரிகா தனது பதவிக்காலத்தின் இறுதிநாள்களிலுள்ளார். அவர் பதவி துறப்பதற்கு முன்னராவது அவர் பற்றிய நூலை எழுதி வெளியிட என்னால் முடியாமல் உள்ளது. அந்தக் குறையை இட்டு நிரப்பவே இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் சிலவற்றை அவருக்கு நினைவூட்டுவது எனது கடமையும் பொறுப்புமென நான் நம்புகிறேன்.
சந்திரிகா ஆட்சி அதிகாரத்திற்கு வந்த விதத்தை விமர்சிக்கும்போது சில விமர்சகர்கள் அதில் எனக்குள்ள பங்களிப்புக் குறித்தும் விமர்சித்துள்ளனர். சந்திரிகா பதவிக்கு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியமை தொடர்பாக என்மீது எனது ஒரு சில நண்பர்கள் இன்றும் குற்றம் சுமத்துகின்றனர். சந்திரிகா ஆட்சிக்கு வருவதற்குவழி அமைத்தவர் களில் நானும் ஒரு முக்கிய பங்காளியாகவே இருந்துள்ளேன் என்பது எனது நம்பிக்கை. இந்த விடயத்தில் நான் எனது பங்களிப்பை வழங்கியதற்கான காரணம், எனக்கு நன்கு தெரிந்தவரை பதவியில் அமர்த்தி அதன்மூலம் தவறான வழிகளில் லாபங்களைப் பெற்று குறுகிய நோக்கங்களை நிறை¬வேற்று¬வது அல்ல. நாட்டிற்கு நன்மைகள் கிடைக்கும் என்பதாலேயேயாகும்.
நான் சந்திரிகா மீது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பு¬களையும் கொண்டிருந்தேன் என்பது உண்மையே. இருப்பினும், நான் சந்திரிகாவைப் பற்றி நினைத்திருந்தது "கனவுமாளிகை தானா' என்ற பிரச்சினை எழுந்தது அவர் பதவிக்கு வந்த பிறகு அல்ல. அவர் பதவிக்கு வருவதற்கு முதல் நாளிலேயே ஆகும்.
அவர் பதவிக்கு வருவதற்கு முதல்நாள் அவரின் ஆதரவாளரும் அதைவிட பண்டாரநாயக்க குடும்பத்திற்கு மிக நெருங்கியவருமான ஒருவர் சந்திரிகா குறித்து என்னுடன் கதைத்தார். 1994 தேர்தலுக்கு முதல்நாளிரவு அவர் என்னுடன் நீண்டநேரம் இதுபற்றி உரையாடிக்கொண்டிருந்தார். ""தொடர்ந்து 17 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஐ.தே.கட்சி அரசைத் தோற்கடிப்பது தவறு அல்ல. அந்த நோக்கத்தில் சந்திரிகா தேர்தல் களத்தில் நிற்பதும் தவறு அல்ல. இருப்பினும், சந்திரிகா மீது தேவைக்கு அதிகமான விதத்தில் நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனமானது அல்ல''. என அந்த நபர் தெரிவித்தார்.
தனக்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க குறித்து பெரிய அளவில் தெரியாவிடினும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஏனையோர் அனைவர் பற்றியும் தெரியும் எனவும், வெளித்தோற்றத்தில் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகத் தோன்றினாலும் செயலளவில் மரியாதை தெரியாதவர்கள் எனவும் அந்த நபர் தெரிவித்தார். அன்றிரவு அவர் அந்தக் குடும்பத்தைப் பற்றித் தானறிந்த பல்வேறு ரச¬மான கதைகளைக் கூறினார். அவர் கூறிய தகவல்கள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தின.
அதன்பின்னர் சந்திரிகா பதவிக்கு வந்து ஒருவருடம் முடிவடைந்த காலத்தில் எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் தனது வீட்டிற்கு என்னை அழைத்திருந்தார். அவர் சந்திரிகா பற்றி ஒருபோதும் மறக்க¬¬முடியாத புதுமையான தகவல்களை எனக்குத் தெரிவித்தார். என்னுடன் ஓராண்டுக்கு முன்னர் உரையாடிய நபரைப் போலவே இவரும் சந்திரிகாவின் ஆதரவாளர் ஆவார். இவர்களில் முதலாவது நபர் சிறிது காலமே சந்திரிகாவுடன் நட்புற¬வைக்¬ கொண்டிருந்தார். ஆனால், இரண்¬டாவது நபர் நீண்ட¬காலமாகவே சந்திரிகாவின் ஆதரவாள¬ராக இருந்து வருகிறார். இரண்டாவது நபர் என்னுடன் முதலில் சந்திரிகா பற்றிக் கதைக்கவில்லை. தங்கம் (பவுண்) குறித்தே கதைத்தார்.
""தங்கம் மின்னுவதால் புத்தியற்றோர் அதை விரும்புகிறார்கள். தங்க நகைகளை அணிந்து மற்ற¬வர்களுக்குக் காட்ட விரும்புகின்றனர். நாட்டுப் புறங்களைச் சேர்ந்த முதலாளிகள் சிலர் தங்களை வசதிபடைத்த¬வர்கள் எனக் காட்டுவதற்கு தங்கப் பற்களைக் கட்டிக் காட்டுகின்றனர்'' என அவர் தெரிவித்தார். அவர் முன்னாள் ஜனாதிபதி பிரேம¬¬தாஸவின் மனைவி குறித்¬தும் தெரிவித்தார். இருப்பினும் உலகிலுள்ள புத்திசாலிகளான நவீன தனவந்தர்கள் தங்க நகைகளை அணிவதில்லை எனவும்; ஆனால், தங்கத்திலும் பார்க்க விலையுயர்ந்த நகைகளை அணிகின்றனர் எனவும்; அந்த நகைகள் தங்கத்தைப் போல் மின்னுவதில்லை எனவும் விடயம் விளங்காதோருக்கு அந்த நகைகள் பெறுமதிமிக்கவை என்பது தெரியாது எனவும் கூறிய அவர், விடயம் தெரியாதவர்கள் உண்மையான முத்துமாலையை சாதாரண மணிமாலை என்றே கருதுவர் எனவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் அவர் என்னைப் பார்த்துக் கூறினார், நீங்கள் அதிகாரத்திற்குக் கொண்டுவந்த ஜனாதிபதி (சந்திரிகா) ஹேமா பிரேமதாஸவைப் போல் தங்கநகைகளை அணிவதில்லை. ஆனால், பதிலாக நாட்டிலுள்ள புத்தியற்றவர்களுக்கு எந்தவொரு பெறுமதியுமில்லாத மணிமாலையின் தோற்¬றத்தை அளிப்பதும் அதேநேரம் உலகிலுள்ள பிரபல செல்வந்தர்கள் மட்டுமே அணிவதுமான முத்து¬மாலையை அணிகிறார் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் அவரின் (சந்திரிகாவின்) தாயாரோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவருமோ அந்த முத்துமாலையை அணிந்திருந்ததைத் தான் காணவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி சந்திரிகா கூட பதவிக்கு வருவதற்கு முன்னர் அந்த முத்துமாலையை அணிந்திருந்¬ததைத் தான் பார்க்கவில்லை எனக் கூறிய அவர், முத்துமாலைகள் தொடர்பான விலைப்பட்டியலை என்னிடம் கையளித்தார். உங்கள் ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் அவையெல்லாம் எப்படிக் கிடைத்தன என்பது பற்றிக் கண்டறியும் கடமை உங்களுடையது என என்னிடம் கூறினார்.
அவர் இந்தக் கதையைக் கூறிய பலவருடங்களுக்குப் பின்னர் 2002 அல்லது 2003 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் முத்துநகைகள் தொடர்பான சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சி ஒன்று இடம்பெற்றது. அந்தக் காட்சி¬யில் வைக்கப்பட்டிருந்த இளநீல நிறத்திலான முத்துமாலையின் படமும் அதன் விலையும் "டெய்லி மிரர்' பத்திரிகையின் வர்த்தக அனுபந்தத்தில் வெளி¬யாகியிருந்ததைக் காணமுடிந்தது. அந்தப் படத்தில் காணப்பட்ட முத்து மாலையின் விலை 90 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். அதாவது 90 லட்சம் ரூபாவாகும்.
ஜனாதிபதியிடம் (சந்திரிகாவிடம்) மொத்தமாக எத்தனை முத்துமாலைகள் உள்ளன என்பதை நான் சரியாக அறியேன். இருப்பினும், அவரிடம் குறைந்தது மூன்று முத்துமாலைகளாவது இருக்கவேண்டும்.
1999 ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிகாவால் சொத்துகள் தொடர்பான பிரகடனம் கைய¬ளிக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரகடனத்தில் அவரிடமிருந்த நகைகளின் விவரங்களும் அடங்கியிருந்தன. ஆனால், முத்துமாலை பற்றிய விவரம் உள்ளடக்கப்படவில்லை.
எனது நண்பர் தனது கதையை முத்துமாலை¬யுடன் நிறுத்தவில்லை. அதையடுத்து சந்திரிகா கையில் அணிந்துள்ள கைக்கடிகாரம் குறித்து ஒரு கதையை ஆரம்பித்தார். ஜே.ஆர்.ஜெயவர்த்தன அணிந்த "கோல்ட் றொலெக்ஸ்' கைக்கடிகாரம் குறித்தும் கூறினார்.
ஜே.ஆரின் அந்தக் கைக்கடிகாரம் குறித்து முன்னர் விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டன எனவும் அந்தக் கடிகாரத்தின் பெறுமதி சுமார் 3 லட்சத்தைத் தாண்டாது எனவும் தெரிவித்தார். ஆனால், ஜனாதிபதி சந்திரிகா அணிந்துள்ள கைக்கடிகாரமானது சாதாரண மக்களுக்கு பெறுமதியற்ற தரங்குறைந்த கைக்கடிகாரம் போன்று தோன்றினாலும், அது "பதே பிலிப்ஸ்' ரகத்தைச் சேர்ந்தது எனவும் இந்த "பதே பிலிப்ஸ்' கைக்கடிகாரங்களை உலகிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே அணிகின்றனர் எனவும் அதன் பெறுமதி 20 லட்சம் ரூபாவுக்கு அதிகம் எனவும் கூறி என்னை மலைக்க வைத்தார். அத்துடன் நின்றுவிடாது "பதே பிலிப்ஸ்' கடிகாரங்களின் விலைப்பட்டியலையும் என்னிடம் கையளித்தார்.
சந்திரிகா ஜனாதிபதிப் பதவியை ஏற்பதற்கு முன்னர் "பதே பிலிப்ஸ்' கைக்கடிகாரத்தை அணிந்திராவிடின், ஜனாதிபதிப் பதவிக்கு வந்த பின்னர் அந்தக் கைக்கடிகாரத்தை அவர் எவ்வாறு அணிய முடியும் என்ற வினாவை எழுப்பிய அவர், ஜனாதிபதியைச் சந்திக்கும் வேளையில் அவர் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் எந்த ரகத்தைச் சேர்ந்தது என அவரிடமே கேட்டறியுமாறும் என்னிடம் கோரினார்.
எனக்கும் சந்திரிகாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் தொடர்பான விடயத்தில் நான் இதற்கு முன்னர் அந்த "பதே பிலிப்ஸ்' கைக்கடிகாரம் குறித்து எழுதியிருந்ததால் அதுகுறித்து மீண்டும் எழுதத் தேவையில்லை என நினைக்கிறேன். இருப்¬¬பினும், நான் எழுதாத ஒரு விடயம் குறித்து மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறேன்.
இந்த முத்துமாலை மற்றும் கைக்கடிகாரப் பிரச்சினை காரணமாக நாட்டின் தலைவர்களுக்குக் கிடைக்கும் அன்பளிப்புகள் தொடர்பாக எனது மனதில் சில எண்ணங்கள் எழுந்தன. அதன் காரணமாக நான் அன்பளிப்புத் தொடர்பான குறிப்பொன்றை எழுதியிருந்தேன். அந்தக் குறிப்பில் நாட்டில் தலைவர் அல்லது தலைவி வேறு ஆள்களுக்கு அன்பளிப்புகளை வழங்க வசதியாகப் பெரும் தொகையொன்று ஒதுக்கப்படுவதால் நாட்டின் தலைவருக்கு அல்லது தலைவிக்கு மற்றவர்களால் அளிக்கப்படும் அன்பளிப்புகளை அவர்கள் திறைசேரியிடம் ஒப்படைக்கவேண்டும். இது உலகில் சகல நாடுகளிலும் பின்பற்றப்படும் நடைமுறையாகும் என்று குறிப்பிட்டிருந்தேன். நான் எழுதிய அந்தக் குறிப்பு ஜனாதிபதிக்கு (சந்திரிகா) வெட்கத்தை உருவாக்கியிருக்கக்கூடும். இதையடுத்து ஜனாதிபதி (சந்திரிகா) "பதே பிலிப்ஸ்' கைக்கடிகாரம் உட்¬படத் தனக்குக் கிடைத்த அன்பளிப்புகள் சில¬வற்றை (ஆறு,ஏழு) திறைசேரியிடம் கைய¬ளித்தார். அவ்வாறு கையளிக்கப்பட்ட பொருள்¬களின் பட்டியலையும் அவற்றின் சந்தைவிலைகளையும் ஜனாதிபதி செயலகம் செய்தி அறிக்கை மூலம் வெளியிட்டது. அந்த அறிக்கையில் "பதேபிலிப்ஸ்'கைக்கடிகாரத்தின் சந்தைவிலை 20 லட்சத்திற்கும் அதிகம் எனக் குறிப்பிட்டிருந்தது.
ஜனாதிபதி ஓய்வுபெறுவதற்கு முன்னர் கடந்த 11 வருடங்களா கத் தனக்குக் கிடைத்த அன்பளிப்புகள் அனைத்தையும் திறைசேரியிடம் ஒப்படைத்துள்ளாரா? அவற்றின் விவரங்கள் மற்றும் பெறுமதிகள் தொடர்பான விவரங்களை மக்கள் தெரிந்து¬கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
சந்திரிகாவின் நேர்மை குறித்து சந்தேகிக்கும் அடுத்த கதையை நான் பிரான்ஸிலிருந்து வெளிவரும் "ஸ்மொன்ட்' பத்திரிகை யின் புதுடெல்கிச் செய்தியாளரிடமிருந்து கேள்விப்பட்டேன். அவரு¬ட¬னான கலந்துரையாடல் 1994 நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெற்றது.


<b>
விதிவசத்தால் கிடைத்த அதிஷ்டம் </b>


அந்தச் செய்தியாளரை நான் அதற்கு முன்னரும் பல தடவைகள் சந்தித்துள்ளேன். நான் சந்திரிகாவின் நெருங்கிய ஆதரவாளர் என்பதையும் அவர் அறிவார்.
சந்திரிகா ஜனாதிபதித் தேர்தலில் (1994) வெற்றியடைந்த பின்னர் பத்திரிகைகளில் வெளியான ஜனாதிபதியின் சுயதரவுகள் அந்தச் செய்தியாளருக்குப் பிரச்சினையைத் தோற்றுவித்தன. சந்திரிகாவுக்கு நீதி தொடர்பான எல்.எல்.பி. பட்டமும் அரசியல் விஞ்ஞானம் தொடர்பாக சோபொன் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற பட்டதாரிப் பட்டமும் உள்ளன எனவும் அபிவிருத்திப் பொருளாதாரம் தொடர்பான கலாநிதிப் பட்டத்திற்கான தகைமைகள் பெற்றுள்ளார் எனவும் அந்தப் பட்டத்தைப் பெறுவதற்கான கல்வியில் ஈடுபட்டுள்ளார் எனவும் சந்திரிகா வின் சுயதரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
புதுடில்லிச் செய்தியாளர் சோபொன் பல்¬கலைக்கழகக் கதையில் உண்மையில்லை எனத் தெரிவித்தார். தன்னுடனேயே சந்திரிகாவும் கல்வி பயின்றுவந்தார் எனவும் அவர் பட்டதாரி எனக்கூறும் கதை பொய் எனவும் கலாநிதிப் பட்டத்திற்கான தகைமைகள் உள்ளன; அதற்கான கல்வியில் ஈடுபட்டு வருகிறார் என்ற கதையும் பொய் எனவும் இந்தத் தவறான தகவல்கள் என்றோ ஒருநாள் அவருக்கு (சந்திரிகாவிற்கு) பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் எனவும் புதுடில்லிச் செய்தி¬யாளர் தெரிவித்தார். நான் அறிந்த வரையில் பத்¬திரிகைகளில் பிரசுரிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட சுயதரவுகளை சந்திரிகாவே தயாரித்துள்ளார். எனவே, அந்தத்தவறை வேறு எவராவது மேற்கொண்டிருக்கலாம் எனக் கருதமுடியாது. சந்திரிகா தனது கல்வித் தகைமைகளை விரிவாக்கப்போய் நாட்டிற்குப் பொய் கூறியுள்ளார் என்பது தெளி¬வாகிறது. அதுகுறித்து நான் அவரிடம் விசாரிக்காவிடினும் அவர் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையை நான் பெரிதும் இழப்பதற்கு இந்தச் சம்பவம் காரணமாக அமைந்தது.
""இந்த விடயம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்'' என லமொன்டே பத்திரிகையில் புதுடில்லி செய்தியாளர் கூறிய எதிர்வுகூறல் பின்னர் உறுதியாயிற்று என்றே கூறவேண்டும். ஐந்து வருடங்களின் பின்னர் சந்திரிகா வெளியிட்ட கல்வித் தகைமைகள் சவால்களை எதிர்நோக்கியவேளையில் தனக்கு அந்தத் தகைமைகள் உள்ளன என்பதை சந்திரிகாவால் நிரூபிக்கமுடியாமல் போயிற்று. சந்திரிகாவைப் பாதுகாக்க முயன்ற பிரான்ஸ் தூதுவர் இந்தநாட்டை விட்டுச்செல்லவும் நேர்ந்தது. நாட்டின் தலைவி பொய்களைக் கூறியபோதிலும், நிரபராதியாகக் கருதப்பட்டாலும் அரசியல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாட்டில் அந்த நாட்டின் தலைவர்/தலைவியை பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்த விடயம் ஒன்று மட்டுமே போதும்.
சிறிமாவோ பண்டாரநாயக்க மீண்டும் தனது மகள் சந்திரிகாவை சுதந்திரக் கட்சியில் சேர்த்ததற்குக் காரணங்கள் இருந்தன. தான் இறந்தபின்னர் தனது மகளைக் கட்சியின் தலைவியாக்கும் நோக்கத்துடன் சிறிமா சந்திரிகாவைக் கட்சியில் சேர்க்கவில்லை. தனது கட்சித் தலைமைக்குத் தனது "புத்திரசிகாமணி'யால் விடுக்கப்படும் சவால்களைத் தோற்கடிப்பதற்கேற்ற வகையில் தனக்கு வலுச்சேர்க்கும் தந்திரத்துடனேயே சந்திரிகாவை சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார் சிறிமா.
சந்திரிகாவுக்கு அவரது சகோதரரான அநுரா மீது நம்பிக்கையோ மதிப்போ இருக்கவில்லை. அதேநேரம் அவரைக் கைவிடும் நோக்கமும் சந்திரிகாவிடம் இருக்கவில்லை. அடுத்து நாட்டின் தலைவியாக வரவேண்டும் எனச் சந்திரிகாவுக்கு இருந்த ஆசைகள் சொல்லில் அடங்கா. முதலில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நுழையப் பேரவாக்கொண்டார். அநுருத்த ரத்வத்தை மூலம் தனது அந்த விருப்பத்தை நிறைவேற்றுவது எனத் தீர்மானித்தார். அவ்வேளை¬யில், எனக்கும் அநுருத்த ரத்வத்தைக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருந்தன. அவர் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்தார் என்ற காரணத்தால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு வழங்க அநுருத்தவை இணங்கவைக்குமாறு சந்திரிகா என்னைக் கேட்டிருந்தார். அநுருத்த ரத்வத்தையை இந்த விடயத்தில் இணங்கவைக்க முடியுமா முடியாதா என என்னால் கூறமுடியாது என நான் தெரிவித்தபோது எப்படியும் அவருடன் (ரத்வத்தையுடன்) பேசுமாறு சந்திரிகா கேட்டுக்கொண்டார். முடிவில் சந்திரிகாவின் வேண்டுகோள் குறித்தும் கலந்துரையாடுவதற்கு ரத்வத்தையைச் சந்திப்பதற்கு நான் கண்டிக்குச் செல்லநேர்ந்தது. என்னுடன் ஹேமசிறி பெர்னாண்டோவும் வந்திருந்தார். சந்திரிகாவின் வேண்டுகோள் ரத்வத்தைக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் ஹேமசிறியிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அந்தக் கோபத்தைப் போக்க பலவருடங்கள் சென்றன.
சந்திரிகாவைச் சுதந்திரக் கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகவே சேர்க்கமுடிந்தது. அதுவும் தகுதிகாண் கால அடிப்படையிலேயே ஆகும்.
தனக்கு வழங்கப்பட்ட இத்தகைய அனுசரிப்பு சந்திரிகாவுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. சந்திரிகாவை விசேடமாகக் கவனிப்பது தனது மகன் அநுராவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் சாதாரண வழிமுறைக்கு அப்பால் அவருக்கு விசேடமான கவனிப்பை வழங்கச் சிறிமா விரும்பவில்லை. தகுதிகாண் காலம் முடிவடைந்த பின்னர் சந்திரிகாவை மத்திய செயற்குழுவுக்கு நியமிக்குமாறு சிறிமாவுக்கு வேண்டியவர்கள் அழுத்தம் கொடுத்தனர். சந்திரிகாவுக்கு அவ்வாறான அந்தஸ்தை வழங்கச் சிறிமா விரும்பியபோதும் லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திஸநாயக்க ஆகியோரால் ரகசியமாகத் திட்டமிடப் பட்டிருந்த குற்றவிசாரணைப் பிரேரணை (பிரேமதாஸவுக்கு எதிராக) காரணமாக சிறிமாவின் திட்டத்தை உடனடியாகச் செயற்படுத்த முடியவில்லை.
ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்ட குற்றவிசாரணைப் பிரேரணை குறித்து காமினியும், லலித்தும் சுதந்திரக் கட்சியுடனான தொடர்பு¬ களைத் தாயாருடனா(சிறிமா) அல்லது மகனுடனா (அநுரா) வைத்துக்கொள்வது என்ற சர்ச்சைக்குள் சிக்கினர். லலித்தும் காமினியும் அநுராவுடன் தொடர்பு¬களை வைக்கவே முதலில் விருப்பப்பட்டனர். அது¬குறித்து லலித் என்னுடன் உரையாடினார். சுதந்திரக் கட்சியை சிறிமாவே வழிநடத்துவதால் சிறிமாவுடன் தொடர்புகளை வைப்பதே மிகப்பொருத்தமானது என்ற எனது கருத்தைத் தெரிவித்தேன். எனது கருத்தை லலித்தும் ஏற்றுக்கொண்டார்.
குற்றவிசாரணைப் பிரேரணை தொடர்பான விடயங்களை ரகசியமாக மேற்கொண்ட தலைவர்கள் மூவரும் (லலித், காமினி, சிறிமா) எப்போதும் ஒன்றுகூடிப் பேச்சுகளை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் தொடர்பாடல் விடயங்களை அவர¬வர்கள் நியமித்த பிரதிநிதிகளே மேற்கொண்டனர். வருண கருணதிலக லலித்தின் பிரதிநிதியாகவும், காமினி திஸநாயக்கவின் பிரதிநிதியாக அரசதுறையில் பணிபுரிந்த இளம்அதிகாரியும் பணிபுரிந்தனர். சிறிமாவின் பிரதிநிதியாக ரத்வத்த செயற்¬பட்டார்.
குற்றவிசாரணைப் பிரேரணையை நிறைவேற்ற சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்பதாலும் அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை யானோர் அநுராவை ஆதரித்து வந்தனர் என்பதாலும் பிரேரணையை நாடா¬ளுமன்றத்தில் நிறைவேற்றும்வரை அநுராவிற்கு சினமூட்டும் எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாமென லலித்தும் காமினியும் சிறிமாவுக்குத் தெரிவித்திருந்தனர்.எனவே, சந்திரிகா விடயத்தில் சிறிமா துரிதமாக எதையும் மேற்கொள்ளமுடியாத நிலையில் இருந்தார்.
குற்றவிசாரணைப் பிரேரணையைத் தாக்கல் செய்ய முன்வந்த மூன்று தலைவர்களும் கனவுலகிலேயே சஞ்சரித்தனர். நாடாளுமன்றில் குற்றவிசாரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் உருவாக்¬கப்படவுள்ள அரசுக்கு சிறிமாவைத் தலைமைதாங்க விடுவது என லலித்தும் காமினியும் விரும்பினர். எனவே, ஜனாதிபதி பிரேமதாஸவின் எஞ்சிய ஆட்சிக் காலத்திற்கு ஜனாதிபதிப் பதவியை வகிக்கும் உரிமை தனக்குக் கிடைக்கும் என சிறிமா நம்பினார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு முதலில் முக்கிய பதவி (ஜனாதிபதி) சிறிமாவைச் சென்றடைந்தாலும் ஆரம்பத்தில் பிரதமர் பதவியும் அதன்பின்னர் ஜனாதிபதிப் பதவியும் அவர¬வருக்குக் கிடைக்கும் என லலித்தும் காமினியும் தமக்குள் நம்பினர்.
குற்றவிசாரணைப் பிரேரணை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தாய்க்¬கும் மகனுக்கும் இடையேயான பிரச்சினைகள் அதிகரித்தன. அதுவரை பதுங்கியிருந்த சந்திரிகாவும் தலையைக் காட்ட ஆரம்பித்தார். அவ்வேளையில் சிறிமா சுதந்திரக் கட்சியில் தனது ஆற்றலை உறுதிப்படுத்தும் நோக்கில் சந்திரிகாவை சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கு நியமித்தார்.
அத்துடன், அடுத்து நடைபெறவிருந்த மாகாண சபைத் தேர்தலில் சந்திரிகாவுக்கு மிக முக்கிய இடம் அளிக்¬கப்பட்டது.
மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டி¬யிட சந்திரிகா விரும்பினார். ஆனாலும், தேர்தல் பிரசாரங்களின்¬போது தனது நற்பெயருக்குக் களங்¬கம் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் அவ¬ருக்கு இருந்தது. இதனால், உருவா¬கக்¬கூடிய எந்த நிலைமை¬யையும் எதிர்கொண்டு தேர்தல் களத்தில் குதிக்குமாறு அவரை நாங்கள் வற்புறுத்த நேர்ந்¬தது. மாகாண சபைத் தேர்தலில் போட்டி¬யிட சந்திரிகா முடிவெடுத்த¬போதிலும், முதலமைச்சர் என்ற "லேபல்' கிடைக்காதமை அவருக்குக் கவலை¬யளித்தது. முடிவில் முதலமைச்¬சர் என்ற "லேபலை' சந்திரிகா பலவந்தமாகத் தன்மீது ஒட்டிக்கொண்டார்.
கட்சியின் அனுமதியின்றி தானே முதலமைச்சர் என சுவரொட்டிகளை அச்சிட்டும் வேறு பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். ஆரம்பத்தில் சந்திரிகாவிற்குப் பலத்த நிதிப்பிரச்சினை இருந்தது. அவரது முதலாவது தேர்தல் விளம்பரத்திற்கான செலவை ஹேமசிறி பெர்னாண்டோ காசோலை மூலம் வழங்கினார் . நாடு பூராகவும் மாகாண சபைகளுக்கான (வடக்கு கிழக்குத் தவிர) தேர்தல் இடம்பெற்றதால் சந்திரிகாவுக்கு ஒத்துழைப்பை (நிதியை) வழங்குவதற்கு தேசியமட்டத்தில் எவரும் முன்வரவில்லை. எல்லோரும் தங்கள் மாகாணசபை எல்லைக்குள்ளேயே தங்கள் வெற்றிக்காக உழைத்தனர். செலவுகளை மேற்கொண்டனர். சுமார் 3 லட்சம் விருப்பு வாக்கு¬களை பெறுவதே தனது இலக்காகக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளில் அவர் கடுமையாக உழைத்ததைக் காண முடிந்தது.
மாவட்டங்கள் வேறாயினும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் லலித் அத்துலத் முதலி அந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டி¬யிட்டார். சந்திரிகா கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட வேளையில் லலித் அத்துலத் முதலி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். மாகாண சபைத் தேர்தலில் இந்த முன்னணி வெற்றிபெற்றால் முதல¬மைச்சர் பதவிக்கு இந்த இருவரிடையே (சந்திரிகா, லலித்) பிரச்சினை உருவாகக்கூடும் என நினைத்தேன். லலித் சந்திரிகாவை விட அனுபவம்மிக்க அரசியல்வாதி. அவர் போன்ற ஒரு பழுத்த அரசியல்¬வாதி சந்திரிகாவுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கிவிட்டு அதற்குக் குறைந்த ஒரு பதவியை ஏற்பாரா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. நான் சந்திரிகாவைத் தீவிரமாக ஆதரித்தபோதிலும் லலித்துடனும் நட்புறவைக் கொண்டிருந்தேன். இந்தப் பிரச்சினை குறித்து நான் லலித்துடன் கலந்துரையாடினேன். அதற்கு அவர் அளித்த பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. அந்தப் பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுமல்லாமல் அவர்மீது (லலித்) கொண்டிருந்த மரியாதை பல மடங்காக அதிகரிக்கக் காரணமாகவும் அமைந்தது. ""எனது இலக்கு, மேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவி அல்ல. அதைவிடப் பரந்தது எனவும் லலித் பதிலளித்தார். தனக்கு முதலமைச்சர் பதவிகிடைத்தாலும் தன்னால் பொறுமையாக இருந்து பணியாற்றமுடியாது எனவும் லலித் தெரிவித்தார்.
அந்த மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்னராக சந்திரிகாவின் அரசியலுக்குப் பாரிய அச்சுறுத்தலாக விளங்கிய இரு தலைவர்களும் கொல்லப்பட்டனர். முதலில் லலித் அத்துலத் முதலியும் ஏழுநாள்களுக்குப் பின்னர் ஜனாதிபதி பிரேமதாஸவும் படுகொலை செய்யப்பட்டனர். இதை சந்திரிகாவுக்கு விதிவசத்தால் ஏற்பட்ட அதிஷ்டம் எனக் கூறலாம்.
ஜனாதிபதி பிரேமதாஸ உயிருடன் இருந்திருந்தால் 1994 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றிபெறுவது மிகவும் கடினமானதாக அமைந்திருக்கும். அதேபோல லலித் அத்துலத் முதலி உயிரோடு இருந்திருந்தால் சந்திரிகாவுக்குக் கிடைத்த மக்கள் வரவேற்பை அவர் இழக்க நேர்ந்து லலித் நாட்டின் தலைவராக வரவும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். இவர்கள் இருவரது படுகொலைகளைத் தொடர்ந்து காமினியும் படுகொலை செய்யப்பட்ட¬தால் நாட்டின் முக்கியமான மூன்று தலைவர்களை நாடு இழக்க நேர்ந்தது. இதனால், நாட்டின் அரசியல் பாழடைந்த பூமிபோல ஆனது எனக் கூறலாம்.
மாகாண சபைத் தேர்தலில் கிடைத்த வெற்றியும் அதனைத் தொடர்ந்து சந்திரிகா மேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டதும் அவருக்குப் பலமான ஒருநிலையை உருவாகியபோதிலும் மகளான சந்திரிகாவுக்கு வாய்ப்பளித்து தான் ஓய்வு¬பெறும் எண்ணம் தாயான சிறிமாவுக்கு இருக்கவில்லை. சிறிமா மூப்படைந்து நோயாளியாக இருந்தபோதிலும் அடுத்த ஜனாதிபதியாகும் பேரவா அவரிடம் காணப்பட்டது.
சூரியகந்த மனிதப் படுகுழிகளை தோண்டிய சம்பவம் சந்திரிகாவுக்குப் பெரும் புகழையும் வரவேற்பையும் பெறக்காரணமாய் அமைந்தது எனக் கூறலாம். சந்திரிகா எவ்வளவுக்குப் பலவீனமான தலைவியாக இருப்பினும், சூரியகந்த படுகுழி தோண்டும் சம்பவமானது அவரைத் தீரமிக்க தலைவியாக்கியது எனக்கூறமுடியும்.


தொடரும்....
http://aautham.com/forum/viewtopic.php?t=21
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)