Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவில் இனியும் ஜனநாயக ஆட்சி வேண்டுமா?
#1
ப.சிவராமலிங்கம், நேதாஜி நகர், உசிலம்பட்டி யிலிருந்து எழுதுகிறார்: தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் சர்வாதிகாரப் போக்கு, காங்கிரஸ் கட்சியில் கேலிக்கூத்து, பா.ஜ.,வின் கோமாளித்தனமான நடவடிக்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற கட்சிகளின் நிலையில்லாத தன்மை, சுயநலப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள கட்சிகளின் பச்சோந்தி தனமான விபரீத கூட்டணி போன்றவற்றை பார்க்கும் போது நமது இந்திய நாட்டிற்கு இன்னும் ஜனநாயக (ஆட்சி) அரசியல் தேவைதானா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டம், துன்பங்களைக் காட்டிலும் தற்போதைய அரசியல்வாதிகளிடமும், அரசு ஊழியர்களிடமும் மக்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது.

கடந்த 50 வருடமாக நமது ராணுவத்தினரின் பாதுகாப்பு சேவைகள் யாராலும் மறக்க முடியாது. சீனப் போர், பாகிஸ்தான் போர், பங்களாதேஷ் போர், கார்கில் போர்களின் போது நமது ராணுவத்தினரின் வீரம், நமது இந்திய சரித்திரத்தில் பொன் எழுத்தில் இடம் பெற்றுள்ளது.

டில்லியில் குடியரசு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் நமது ராணுவத்தினரின் கம்பீரம், கடமை உணர்வு, வீர நடையைப் பார்த்து வியப்படையாதவர்களே கிடையாது.

நமது இந்தியா முன்னேற வேண்டுமானால் லஞ்சம் இல்லாத ஊழல் இல்லாத, தொழில் வளமிக்க, விவசாயத்தில் தன்னிறைவு மற்றும் தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு என்று எல்லா துறைகளிலும் முதன்மை நாடாக இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தியாவில் உள்ள முக்கிய துறைகள் எல்லாம் ராணுவ கட்டுப்பாட்டில் தான் இனி இருக்க வேண்டும்.

எம்.எல்.ஏ., எம்.பி., தேர்வு கூட ராணுவத்தினரின் நேரடி விசாரணையின் பின்பு தான் போட்டியிட அனுமதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் காலத்தில் அரசியல்வாதிக்கும், அரசு ஊழியர்களும், ரவுடிகளும், தாதாக்களும் மாவட்ட வாரியாக, தாலுகா வாரியாக இந்தியாவை பிரித்து கொள்ளையடித்து நாசப்படுத்தி விடுவர்.

அரசியல் சேர்ந்தவுடன் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டும் என அரசியல்வாதி கொள்ளையடிக்கிறான்.

அரசு ஊழியத்தில் சேர்ந்தவுடன் அரசு ஊழியர்கள் எப்படியெல்லாம் எவ்வளவு லஞ்சம் வாங்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என திட்டம் போடுகிறான்.

மனம் வேதனைப்பட்டு எழுதுகிறேன்... மாநிலத்தில் ஒரு கட்சியுடன் கூட்டு இல்லை என்றும் மத்தியில் கூட்டு உள்ளது என்றும், தமிழ்நாட்டு மக்களையெல்லாம் முட்டாள் என்று நினைத்து ஒரு கட்சியின் தலைவர் கூறுகிறார்.

எந்த அரசியல் கட்சி தலைவராவது கீழ்மட்ட மக்களைப் பற்றி சிந்தித்ததுண்டா? வரும் காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில் பூதாகரமாக வெடிக்கப் போகிறது. அதைக் காட்டிலும் தண்ணீர் பிரச்னை இன்னும் சில வருடங்களில் இந்திய மக்கள் குடிக்க நல்ல தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட வைக்கப் போகிறது! பார்லிமென்ட் கூட்டத் தொடரில் நடக்கும் கேலிக்கூத்துகள் சட்ட சபையில் நடக்கும் சர்க்கஸ் காட்சிகளைப் பார்க்கும் போது நமக்கு இன்னும் ஜனநாயகம் தேவைதானா என எண்ணத் தோன்றுகிறது.

நமது அரசியல் கொள்ளையர்களிடமிருந்தும், அரசு ஊழியர்களான லஞ்ச பேய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றிக் கொள்ள, இந்தியாவை ராணுவத்திடம் ஒப்படைத்தால் தான் கீழ்தட்டு மக்கள் நிம்மதி மூச்சுவிட முடியும்.

நன்றி: தினமணி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)