Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவின் துரோகம்...ஒரு நோக்கு...!
#1
இன்று தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அரசியல் நோக்கர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் உள்ள பிரதானமான கேள்வி கருணா ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதே. அதாவது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ள போதும் தமிழ் மக்கள் தமது தேசிய எழுச்சியை வெளிப்படுத்தும் நோக்கிலும் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டுள்ள வேளையில் சர்வதேச சமூகம் அதன் முடிவை எதிர்பார்த்துள்ள நிலையிலும் கருணா அவற்றிற்கு மாறாக ஏன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்பதேயாகும்.

கருணா குறிப்பிடுவது போன்று மட்டு-அம்பாறை மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதனால் இத்தகையதொரு நிலைப்பாட்டை மேற்கொண்டார் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமல்ல. அதுவுமல்லாது மட்டு-அம்பாறை மாவட்டங்கள் தமிழீழத் தேசியத் தலைமையினால் புறக்கணிக்கப்பட்டதாக ஒரு பேச்சுக்குத்தான் வைத்துக் கொண்டாலும் கூட கருணா தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இக்காலப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

அண்மையில் அவரால் மட்டு-அம்பாறை மாவட்டத்திற்கென ஏதாவது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டனவா? அன்றி மட்டு-அம்பாறை மாவட்டத்திற்கு பாதகமான நடவடிக்கைகள் எதையாவது விடுதலைப் புலிகளின் தலைமை மேற்கொண்டதா? அவ்வாறு எதுவும் நிகழ்ந்ததாக இல்லை. இதேவேளை தமிழீழத் தேசியத் தலைவர் ஆயிரம் போராளிகளை அனுப்புமாறு கோரியமையே முரண்படுவதற்கும், பிரிந்து செல்வதற்குமான காரணியெனக் கருணா கூறுவது எந்தளவு பொருத்தப்பாடானது.

ஒரு புறத்தில் தற்பொழுது யுத்தமோ, யுத்தத்திற்கான தயாரிப்புகளோ எவையுமே நடைபெறுவதாக இல்லை. இந்நிலையில் போராளிகளை அனுப்புமாறு கோரினார் என்பதோ, வடக்கில் போரிட போராளிகளை அனுப்பப்போவதில்லை என்பதோ பொருத்தப்பாடானதொன்றல்ல. அவ்வாறு அனுப்புவதற்கு தான் விரும்பவில்லை என்றால் கூட அதனை உரிய முறையில் அல்லவா வெளிப்படுத்தியிருத்தல் வேண்டும்.

இதேவேளை ஒரு விடுதலை இயக்கமாயினும் சரி ஒரு நாட்டு இராணுவமாயினும் சரி போராளிகளையும் துருப்புக்களையும் ஒருங்கிணைப்பதும், போரிடுவதும், யுத்த தந்திரோபாயத்தின் பாற்பட்டதே யொழிய பிராந்திய ரீதியிலான பொறுப்பானவர்களின் விருப்பு வெறுப்பின்பாற்பட்டதல்ல.

அதுமாத்திரமல்ல எதிரிகளை எங்கோ ஒரு பகுதியில்-எமக்குச் சாதகமானதொரு களமுனையில் தோற்கடிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமானதொரு வெற்றியை தேடிக்கொள்வதே இராணுவ ரீதியிலான மதிநுட்பமாகும். இந்த வகையில் வடக்குப் போர் முனையென்றால் என்ன? கிழக்குப் போர் முனையென்றால் என்ன? படைகளை ஒருங்கிணைப்பதும் தாக்குதல்களை மேற்கொள்வதும் வெற்றியைத் தேடிக்கொள்வதுமே பொருத்தப்பாடான தந்திரோபாயமாக இருக்க முடியும்.

~ஐயசிக்குறு| இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது சிறிலங்கா இராணுவத்தின் போரிடும் ஆற்றலுள்ள சகல டிவிசன் படைகளும் யுத்த முனையில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக 53,54,55,56 வது டிவிசன்களுடன் 52 வது டிவிசனும் பயன்படுத்தப்பட்டது. இந்நடவடிக்கையில் விடுதலைப் புலிகளை முறியடித்து விட்டால் விடுதலைப் போராட்டமே முடிவிற்குக் கொண்டுவந்து விடப்படும் என்பது அவர்களது தீர்மானமாகும். இதேவேளை அவரை எதிர்த்துப் போரிட்ட விடுதலைப் புலிகளும் அதை ஒத்த குறிக்கோளே இருந்தது. ஐயசிக்குறு நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தை தோற்கடித்தால் அதை ஒரு போரிட முடியாத இராணுவமாக முடக்க முடியும் என்பதே புலிகளின் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் வடக்கு-கிழக்கு எங்குமிருந்தே திரட்டப்பட்டன.

ஒட்டுமொத்தத்தில் இந்நடவடிக்கையானது இரு தரப்பினரதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்தது. இதில் யார் வெற்றி பெறுகின்றனரோ அவர்களுக்கு இராணுவ ரீதியிலான மேன்மை கிடைப்பது தவிர்க்கப்பட முடியாத தொன்றாகவே இருந்தது. இவ்வாறே புலிகளின் இராணுவ மேலாண்மை உயர்ந்தது. இதேவேளை இவ் இராணுவ ரீதியிலான மேலாண்மை என்பது தனியாக வடக்கிற்கோ-கிழக்கிற்கோ என்பதல்ல. தமிழர் தாயகப் பகுதி; எங்குமேயாகும்.

எடுத்துக்காட்டாக இன்று கருணா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மட்டக்களப்பு-அம்பாறைப் பகுதிகள் அங்கு போரிட்டுப் பெறப்பட்ட வெற்றிகளால் கிடைக்கப் பெறவில்லை. ரிவிரெசவிற்கெனவும், ஐயசிக்குறுவிற்கெனவும் இராணுவம் தனது படைகளைத் திரட்டியபோது அங்கு ஏற்பட்ட இடைவெளிகளினால் பெறப்பட்டதாகும். ஒருவகையில் ~ஐயசிக்குறு| முறியடிப்பால் கிடைக்கப்பெற்ற பலாபலனாகும்.

ஆகையினால் போரில் வடக்கிற்காகப் போரிட்டதாகவோ, கிழக்கிற்காகப் போரிட்டதாகவோ கூறிக்கொள்ளுவதென்பது தவறு. தமிழர் தாயகத்திற்காகப் போரிட்டோம். அதில் வடக்கிலும் கிழக்கிலுமாக பெரும்நிலப்பரப்பு எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டது என்பதே உண்மை. இதைவிடுத்து தமிழர் தாயகத்திற்காகப் போரிட்டு மடிந்த மாவீரர்களை பிரதேச வாதத்திற்குள் கருணா உட்படுத்த முற்படுவதாவது அவரின் வரட்டுத்தனமான சிந்தனையையும் குறுகிய நோக்கிலான அணுகுமுறையையுமே எடுத்துக்காட்டுவதாயுள்ளது.

அடுத்ததாக இன்று தமிழ் மக்கள் தமது தேசிய எழுச்சியை சர்வதேசத்தின் முன் நிரூபிப்பதற்காக முற்பட்டுள்ள ஒரு காலகட்டமாகும். இதற்கென தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தமிழ்த் தேசிய எழுச்சியை வெளிப்படுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை பயன்படுத்திக்கொள்ள முற்பட்டு நிற்கும் வேளையாகும். இதற்கு வடக்கு-கிழக்கிற்கு அப்பால் வாழும் மக்களையும் அணிதிரட்டுவதற்காக சிறியளவிலாயினும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுமுண்டு.

இக்காலப் பகுதியில் தமிழ்த்தேசிய எழுச்சிக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அது தமிழ்; இனத்திற்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையாகவே கொள்ளத்தக்கதாகும். இத்தகையதொரு சூழ்நிலையில் கருணா தமிழ்த் தேசியத்தை பாதிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டது ஏன்? மட்டு-அம்பாறை மக்களின் பெயரால் தமிழ்த் தேசியத்துக்கு அவர் விளைவிக்கும் குந்தகம் மட்டு-அம்பாறை தமிழ் மக்களுக்காயினும் நன்மை பயக்கத்தக்கதா?

கருணாவின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு அடிப்படையில் இருக்கக் கூடிய காரணிகள் இரண்டு மட்டுமே.

1. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒழுங்கு விதிகளுக்கு மாறான வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும்.

2. தமிழ்த் தேசிய வாதத்திற்கெதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு அவர் விலைபோயிருத்தல் வேண்டும்.

கருணாவின் செயலுக்கு இவ்விரண்டு காரணிகளில் ஏதாவது, ஒன்றாகவும் இருக்கலாம், சிலவேளை இரண்டுமே ஒருமித்த நிலையில் இணைந்ததாகவும் இருக்கலாம். கருணாவை பொறுப்பிலிருந்து நீக்குவது தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக அறிக்கையானது கருணாவிற்கு பின்னால் சில தீய சக்திகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆயினும் எவரையுமே, எந்த நாட்டையுமோ அது சுட்டிக்காட்டவில்லை.

ஆயினும், கருணாவின் செயலுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்களில் ஒரு தரப்பின் குறிப்பாக, சனாதிபதி சந்திரிகாவின் தரப்பின் ஆதரவு இருப்பதாகவே ஊகிக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, சனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகத்துறை கருணாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடும் தகவல்கள் இதனையே வெளிக்காட்டுவதாய் உள்ளது.

கருணாவின் பின்னால் உள்ள தீய சக்திகள் அவை உள்நாட்டு சக்திகளாக இருப்பினும் சரி, வெளிநாட்டு சக்திகளாக இருப்பினும்சரி தற்பொழுது அவை இத்தகையதொரு நகர்விற்குச் சென்றதற்குக் காரணம் என்ன? அதாவது யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்ற நிலையிலும் இத்தகையதொரு குழப்பத்தை ஏற்படுத்தி வடக்கு-கிழக்கின் ஸ்திர நிலையை குழப்பியதற்கு வேண்டி தேவைதான் என்ன?

இங்குதான் ஏப்ரல் 2ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. இத்தேர்தலானது நிச்சயம் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியினை வெளிப்படுத்தும் ஒன்றாக அமையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டு மல்ல, இத்தேர்தலானது சிறிலங்கா அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் வலுவைத் தமிழருக்குக் கொடுக்குமெனவும் அரசியல் நோக்கர்களால் எதிர்வு கூறப்பட்டது.

ஆனால் இவை எவையுமே சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கோ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட வெளிநாட்டுச் சக்திகளுக்கோ உவப்பானதாக இருக்கவில்லை.

தமிழரின் தேசிய எழுச்சியை மழுங் கடித்துவிட அவர்கள் ஏற்கனவே மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் புதியதொரு முயற்சியை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம். இதற்கு அவர்கள் கருணாவின் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.

அடுத்ததாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கருணா புலிகள் இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளார் எனக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளதேயொழிய எந்தவகையில் அவை மீறப்பட்டன என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், தம்மீதான குற்றச்சாட்டுக்கள் எத்தகையவை என்பது அவரால் அறியப்பட்டதாகவே இருக்கும். ஏனெனில் தான் இழைத்த குற்றங்கள் அவரால் அடையாளங் காணத்தக்க வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பை நன்கே அறிந்து கொண்டிருந்தவராவார்.

இந்நிலையில் தான் தலைமைப்பீடத்தின் அழைப்பை ஏற்று அவர் வன்னிக்குச் செல்லத் தயாராக இருக்கவில்லை. தனது கட்டுப்பாட்டை மீறிய செயல்கள், குற்றச் செயல்கள் என்பனவற்றை மூடிமறைக்கும் வகையில் உணர்ச்சிகர மானதொரு விடயத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளர். ஆனால் இது எந்த வகையிலும் மட்டு-அம்பாறை மக்களுக்கு நன்மை பயக்கத்தக்கதல்ல.

கருணாவின் தற்போதைய நடவடிக்கையானது தமிழீழத் தேசியத் தலைமைக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம் என்பது வெளிப்படையானது. அதாவது இயக்கத்தின் கட்டுப்பாடுகள், ஒழுங்கு விதிகள் என்பனவற்றை மீறியதோடு மட்டுமல்ல பல பாதிப்புக்களையும் விளைவிக்கத் தக்கதொன்றாகவே அமையத் தக்கதாகும்.

இதில் குறிப்பாக, தமிழீழத் தேசியத் தலைமையை ஏற்றுப் போராட்டத்தில் இணைந்த போராளிகளை தேசியத் தலைமைக்கு எதிரான கிளர்ச்சிக்குப் பயன்படுத்த முற்படுவதானது அப்பட்டமான துரோகத்தனம் மட்டுமல்ல மோசடியும் கூட. அதுமட்டுமல்ல தமிழீழத் தேசியத் தலைமை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென வழங்கிய பெருமளவிலான ஆயுதத் தளபாடங்கள் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே பயன்படுத்த முற்படுவதானது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

அத்தோடு கருணாவின் நடவடிக்கையானது தனியாக விடுதலைப் புலிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் மட்டுமல்ல. தமிழ் தேசியத்திற்கும் இழைக் கப்பட்ட துரோகமாகும். அதாவது ஐக்கியப்பட்டு தமிழ்த் தேசிய எழுச்சியை மக்கள் வெளிப்படுத்த முற்பட்டுள்ள இவ்வேளையில் பிரதேச வாதத்தை கிளப்பியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேறுபாட்டையும் ஏற்படுத்த மேற்கொண்டிருந்த முயற்சியாகவே கொள்ளத்தக்கது.

ஆனால் விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் இழைத்த துரோகங்கள் ஒருபுறமிருக்க மட்டு-அம்பாறை மக்களுக்கு இவர் இழைத்துள்ள துரோகமானது மிகவும் உயர்வானது. மட்டு-அம்பாறை மக்கள் தங்கள் பலமே விடுதலைப் புலிகள் தான் என நம்பிக்கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது மட்டு-அம்பாறை மக்களை பெரியளவில் பலவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது.

அதாவது கருணா மட்டு-அம்பாறை மக்களை புறக்கணிப்பதாகக் கூறிக் கொண்டு தற்பொழுது மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது மட்டு-அம்பாறை மக்களை அப்பிராந்தியத்திலேயே பலவீனமானதொரு நிலைக்குத் தள்ளியுள்ளது. அரசியல் - இராணுவ ரீதியில் இப்பலவீனம் வெளிப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டாக ஏப்ரல் 2இல் நடைபெறவுள்ள தேர்தலில் மட்டு. தேர்தல் மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்கியது. ஆனால் தற்பொழுது கடந்த தேர்தலில் கிடைத்த ஆதாரங்களையே (மட்டு-03, அம்பாறை-01) தக்கவைத்துக் கொள்வதற்கே பெரும்முயற்சி மேற்கொள்ள வேண்டிய நிலையைக் கருணாவின் நடவடிக்கை தோற்றுவித்துள்ளது.

இராணுவ ரீதியில் பெறப்பட்டிருந்த பலம் கருணாவின் செயலால் சிறிதளவிற்கேனும் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்பது நிராகரிக்கப்பட முடியாததே. ஒருபுறத்தில் போராளிகள் மனச் சோர்வு, உற்சாகமின்மை என்பனவும், மறுபுறத்தில் போராளிகள் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்குதல் அதிகரித்த போக்கிலானதாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.

இந்த வகையில் கருணாவின் துரோகமானது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியத்திற்கும், மட்டு-அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கும் செய்த துரோகமாகவே கொள்ளத்தக்கதாகும். மாறாக சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு எதிரான சக்திகளுக்கு தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததாகவுமே இருக்கும்.



நன்றி...ஈழநாதம் மற்றும் தமிழ்நாதம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)