Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆயுதயெழுத்து
#1
அமோரஸ் பெரஸ் அல்லது ஆயுதயெழுத்து


ஆயுதயெழுத்து படத்தின் முதல்நாள் இரவுக்காட்சிக்குச் சென்றிருந்தேன். சத்யம் தியேட்டரின் வாசலில் நின்றிருந்த கார்களும், ஜனத்திரளும் காரணமாக அந்தச் சாலையே அரைமணிநேர போக்குவரத்துதடை ஏற்பட்டிருந்தது. யுவா, ஆயுதயெழுத்து. மூன்று மொழிகளில் 800 பிரிண்டுகள் உலகமெங்கும் திரையிடப்பட்டிருந்தது. மணிரத்னத்தின் பேட்டி மற்றும் மிகரகசியமாக நடைபெற்ற படப்பிடிப்பு. படத்தினை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியிருந்தது.

படம் துவங்கியது முதலே இதே படத்தைப் பார்த்திருக்கிறோமே என்று சந்தேகமாகயிருந்தது. படத்தில் மாதவன் காட்சிகள் துவங்கியதுமே நினைவுகள் அமோரஸ் பெரஸைச் சுற்றத்துவங்கியது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் மெக்சிகப் படமான அமோரஸ் பெரஸ் படத்தை டிவிடியில் பார்த்தேன்.மெக்சிகோ நகரின் பிரதானச் சாலையொன்றில் ஒரு கார் விபத்து நடைபெறுகிறது. ரத்தக்காயத்துடன் உள்ள நாயைக் காப்பாற்றுவதற்காக ஒருவன் மிகவேகமாக காரில் வந்து கொண்டிருக்கிறான். அவனைச் சுடுவதற்காக ஒரு கூட்டம் துப்பாக்கியோடு இன்னொரு வேனில் துரத்துகிறது. தப்பும் போது மிக மோசமானதொரு சாலை விபத்து நேர்கிறது. அந்த விபத்தில் காரில் வந்தவன் காயம்படுகிறான். அவனது கார் மோதி இன்னொரு காரிலிருந்த இளம்பெண் பலத்த காயமடைகிறாள். விபத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த வயதானவன், உதவி செய்யத் துவங்குகிறான். கதை பின்னோக்கி நகர்கிறது.

விபத்திற்கு முன்னால், பின்னால், விபத்து நடந்த நிமிஷம் என மூன்று காலங்களுக்குள் கதை நீள்கிறது, அக்டோவியாயும் சூசனாவும் என்பது இதன் முதல் பகுதி.

அக்டோவியா ஒரு வேலையில்லாதவன்.

அவனது அண்ணன் ரொமிரோ ஒரு முரடன், திருடன். அண்ணனுக்கும் தம்பிக்கும் உள்ள உறவு விசித்திரமானது. ஒருவரையொருவர் மிரட்டிக்கொள்வதும் அடிப்பதுமாக நீள்கிறது. அண்ணன் மனைவி தான் சூசனா. அக்டோவியா முரட்டுத்தனமாக அவளைக் காதலிக்கிறான். அவளோடு சேர்ந்து வாழ விரும்புகிறான். அதற்கு அண்ணன் தடையாக இருப்பதால் அண்ணனைக் கொல்வதற்குக் கூட முயற்சிக்கிறான். பணமிருந்தால் சூசனாவைக் கூட்டிக்கொண்டு வேறு ஏதாவது இடத்திற்குப் போய்விடலாம் என்று பணம் சம்பாதிப்பதற்காக, நாய்ச்சண்டைக்கு தன் நாயைக் கூட்டிப்போகிறான்.

அவனது நாய், சண்டையில் ஜெயித்து பணத்தை வாறித்தருகிறது. சூசனாவின் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்குத் தானே அப்பா என்று நம்புகிறான். ஆனால் சூசனா அவனோடு வர மறுத்து கணவனோடு ஒரு நாள் தலைமறைவாகி விடுகிறாள். இதற்கிடையில் நாய்சண்டையில் ஏற்பட்ட தகராறில் அவனது நாயை சுட்டுவிடுகிறான் ஒருவன். ஆத்திரத்தில் அவனைக் கத்தியால் குத்திவிட்டு நாயைத் து¡க்கிகொண்டு வேகமாக மருத்துவமனைக்கு காரில் வருகிறான். வழியில் விபத்துக்குள்ளாகிறது இரண்டாம் பகுதி. டேனியலும் வலேரியும் துவங்குகிறது.

டேனியல் ஒரு பிரபலமான பத்திரிக்கை அதிபர். நடுத்தரவயது. அவருக்கு வாசனைதிரவியம் ஒன்றின் விளம்பர மாடலாக உள்ள வலேரி மீது காதல். தனது மனைவி, குடும்பத்திற்குத் தெரியாமல் அவளோடு பழகுகிறான். அவளுக்காக புதிய வீடு வாங்கித் தருகிறார். அவர்களது உறவு மற்றவர்களுக்கு தெரிந்துவிடாமலிருக்கும் படி செய்திருக்கிறார். வலேரி இந்த புதிய வாழ்வைத் துவங்கிய நாளில் தான், வீட்டிலிருந்து வெளியே வரும் போது கார் விபத்திற்குள்ளாகிறாள்.

கதை முன்னோக்கி நகர்ந்து விபத்தில் கால்முறிவு கொண்டு பிழைத்த வலேரியிடம் தொடர்கிறது. அவளைத் தன் பராமரிப்பில் வைத்து காப்பாற்றுகிறான் டேனியல். அவளது நாய்குட்டி ஒருநாள் வீட்டின் சிறிய புடவு ஒன்றில் மாட்டிக்கொண்டு காணாமல் போய்விடவே, வலேரியால் அதைத் தாங்கமுடியாமல் மனச்சிதைவடைந்தவள் போலாகிறாள். கால்முறிவு அவளை வீட்டிலே முடக்கிபோட்டுவிடுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. முடிவில் அவளது துயரம் ஆறுதல் சொல்லமுடியாமலே போகிறது.
மூன்றாம் பகுதி. எல் சிவோவும் மருவும்.

இப்பகுதியில் வரும் எல் சிவோ வயதானவன், ஒரு காலத்தில் பேராசிரியராகயிருந்தவன். கொரில்லா இயக்கத்தில் சேர்ந்து போராடி சிக்கலில் மாட்டிக்கொண்டு கொலை குற்றத்திற்காகத் தேடப்படுகின்றவனாகிறான். அவனது மனைவி அவன் இறந்துவிட்டதாக மகளிடம் சொல்லிவிடுகிறாள். அதுமுதல் தெரு நாய்களைப் பராமரித்தபடியே குப்பையில் கிடைத்தவற்றைச் சாப்பிட்டுக்கொண்டு மகளது அன்பைப் பெறுவதற்காக அவள் பின்னாலே அவளுக்கு தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறான், அவனிடம் ஒருவன் தனது சகோதரனைக் கொலை செய்யப் பணம் தருகிறான். அந்த கொலையைச் செய்ய ஒத்துக்கொண்டுவிட்டு, அதற்காகக் காத்திருக்கும் போது தான் எல் சிவோ விபத்தை நேரில் பார்க்கிறான். அது அவன் மனதை மாற்றிவிடுகிறது. அதனால் கொலை செய்வதற்கு பதில் தன்னை கொல்லநியமித்தவனையும், தான் கொல்ல திட்டமிட்டிருந்தவனையும் பிடித்துவந்து கட்டிப்போட்டுவிட்டு அவர்களது காரைவிற்று அந்தப் பணத்தை மகளிடம் சேர்த்துவிட்டு, தன் புதியவாழ்க்கையைத் தேடிப்போகிறான் எல்சிவோ.

ஒரேபடத்தில் மூன்றுவிதமான மாறுபட்ட கதாபாத்திரங்கள். ஒரே நகரம் தான் கதைப்புலம். அவர்களுக்குள் ஏற்படும் சாலைவிபத்து காரணமாக ஒருவர் வாழ்வை மற்றவர் எப்படி பாதிக்கிறரர்கள் என்பதே கதை. இதில் மெக்சிகோ நாட்டு குற்றக்கலாச்சாரமும் அங்கு சீரழிந்துவரும் வன்முறையும் படம் முழுவதும் காணமுடிகிறது. மூன்றுகதைகளில் வருபவர்களும் ஒருகதை நடக்கும் போது ஆங்காங்கே உபகதாபாத்திரம் போல அடையாளமற்று கடந்து போகிறார்கள். மூன்று கதாபாத்திரங்களும் முறையே சிவப்பு, பச்சை, மற்றும் ஊதா என மூன்றுவிதமான நிறத்தில் படம்பிடிக்கபட்டுள்ளனர். மேலும் பெரும்பான்மை காட்சிகள் கையால் எடுத்துச்செல்லப்படும் காமிராக் கோணத்திலே படமாக்கபட்டுள்ளது.

மெக்சிகோவில் இந்தப் படப்பிடிப்பு நடந்த போது உண்மையிலே படப்பிடிப்பு குழுவினரின் பொருட்களை அங்கிருந்த திருடர்கள் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறி செய்துபோய்விட்டார்கள். அந்த கூட்டத்தை அப்படியே படத்தில் பயன்படுத்த விரும்பி, அவர்களோடு பேசி படத்தில் துணைநடிகர்களாக நடிக்கவைத்திருக்கிறரர் இயக்குனர். படம் முடியும்வரை அவர்கள் தான் பாதுகாப்பு பணியும் கவனித்திருக்கிறரர்கள்.

வில்லியம் பாக்னரின் தி சவுண்ட் அண்ட் ப்யூரி நாவல் தான் இந்தப் படத்தின் வடிவத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. அத்தோடு அமெரிக்க இயக்குனரான குவாண்டன் டொரண்டினோவின் ரிசர்வாயர் டாக்ஸ் படத்தின் பாதிப்பும் இதில் பெருமளவு காணப்படுகிறது. லு¡யி ப்யூனுவல், பெட்ரோ அல்மதோவர் என இந்த வகை படத்திற்கு மெக்சிகோவில் முன்னோடி இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் தொழில்ரீதியான நவீனநாடக நடிகர்கள். திரைக்கதையை எழுதியவர் நாவலாசிரியர் கலிர்மோ அரிகே. 2000ல் மெக்சிகோவில் வெளியாகி கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறப்பு நடுவர் விருது. டோக்கியோ திரைப்படவிழாவிருது உள்ளிட்ட 14 விருதுகளை வாங்கிய படம். அலஜாந்தரோ கொன்சலஸ் இனூருடு என்ற இயக்குனரின் முதல்படம். ஆஸ்கார்விருதுக்கு கூட சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள 21 கிராம்ஸ் இதே இயக்குனரின் படம் தான்.

ஆயுதயெழுத்து அப்படியே இதை நகலெடுத்திருக்கிறது. கொஞ்சமும் தயக்கமோ கூச்சமோயில்லாமல் கோழிக்குஞ்சிற்கு நிறம் மாற்றிவிடுவது போல சுலபமாக இந்தியவடிவத்திற்கு மாற்றபட்டிருக்கிறது. மூவரும் இளைஞர்கள் என்பது மட்டும் தான் மணிரத்னத்தின் பங்களிப்பு. மற்றபடி எவ்வளவு காட்சிகளை அப்படியே பயன்படுத்த முடியுமோ அவ்வளவும் பயன்படுத்தியிருக்கிறார் . அதில் உள்ள நாய்ச்சண்டைகாட்சிகளுக்கு பதிலாக கபடிவிளையாட்டு, மெக்சிகோ கீழ்தட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு நிகராக மீனவர்குடியிருப்பு. அதில் பயன்படுத்தபட்ட நவீனநாடகநடிகர் போல மாதவனின் அண்ணனாக மேஜிக்லேண்டன் நாடககுழுவின் முக்கியநடிகர் பிரவீண். அதில் அக்டோவியா மொட்டையடித்திருப்பதால் இதிலும் மாதவன் மொட்டை. அதைவிடவும் அதில் பயன்படுத்தபட்ட அதே போல நிறமாறுதல்கள். விபத்திற்குள்ளாகியவளின் காதல்காட்சி. ம்யூசிக், காட்சியமைப்பு அத்தனையும் நகலெடுக்கபட்டிருக்கிறது.

ஆனால் மெக்சிகப் படம் போல அண்ணன்மனைவியோடு ஒடிப்போக திட்டமிடுவது, பொதுவாழ்வை சீர்குலைக்கும் வன்முறை, சகோரர்களுக்குள் உருவாகி வரும் மனக்கசப்பு. எதுவும் இதில் கிடையாது. தமிழ், ஹிந்தி கலாச்சாரத்திற்கு பொருந்தாது என்று நினைத்து தான் மாதவனுக்கு ஒரு மனைவி, அவளை மூர்க்கமாக காதலிக்கிறான். மெக்சிகோ படத்திலிருந்து தழுவியதால் தானோ என்னவோ எதற்கு, ஏன் எனத்தெரியாத ஏகப்பட்ட குழப்பமாக படமிருந்தது, வீட்டிற்கு வந்த போது வழியில் சற்றே கோபமாகயிருந்தது. ஒரு படத்திலிருந்து மட்டும் நகலெடுக்க வில்லையே சிட்டி ஆப் காட் என இன்னொரு படமும் இருக்கிறதே என்று மனசாட்சி சொன்னது. அதை வீடு திரும்பிய இரவில் மனசாந்திக்காக திரும்பப் போட்டு பார்த்தேன்

சிட்டி ஆப் காட், ஒரு பிரேசில்படம். ரியோ டி ஜெனிரோவில் உள்ள குற்றவாளிகளையும் அவர்களது குடியிருப்புகளையும், குற்றம் உருவாகும் முறையையும் பற்றியது. அதில் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டு கோழிபிடிக்கிறார்கள். அதில் வேனிலிருந்தபடியே துப்பாக்கியால் சுட்டபடியே ஒடுகிறான் முக்கியகதாபாத்திரம். ( மாதவன் சித்தார்த்தை விரட்டி சுடுவது போல) இப் படம் முழுவதும் நாலைந்து சிறு பகுதிகளாக பிரிக்கபட்டு கதை மாறிமாறி சொல்லப்படுகிறது. இப்படமும் ஆஸ்கா¡ர் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

மணிரத்னம் தான் தமிழ்சினிமாவின் அடையாளம். பெரியபடிப்பாளி. உலகத்திரைப்படவிழாக்களில் கலந்து கொள்பவர் என பொய்யான பிம்பங்களுக்கு நடுவில் தொடர்ந்து கூச்சமில்லாமல் வெளிநாட்டுப்படங்களை உருமாற்றி தனது பெயரில் கதை, திரைக்கதை என்று படமாக்கிக் கொண்டுவருவதை எவரும் கண்டு கொள்ளாமலேயிருப்பது விசித்திரமாகயிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் சென்ட்ரல் ஸ்டேஷன் (ருஷ்யா), ரன் லோலா ரன், காட்பாதர். என மணிரத்னத்தின் முந்தைய படங்களின் மூலப்படங்களை பார்த்து மகிழுங்கள்.

ஆங்கிலப்படங்களை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் பழக்கம் எப்போது துவங்கியிருக்கும் என்று சற்றே தேடிய போது தமிழில் அதற்கு ஒரு வலுவான மரபிருக்கிறது. மார்டன் தியேட்டர்ஸ், ஏவிஎம், கவிதாலயா என ஒவ்வொரு கம்பெனியும் தன் பங்கிற்கு பத்துப் படத்தையாவது சாயம் மாற்றி தமிழில் தயாரித்திருக்கிறார்கள். அகிரா குரசோவாவின் ரஷோமோன், அந்த நாள் ஆனதும். ஹாம்லெட் புதுமைபித்தன் ஆனதும் தற்செயலானதல்ல, சாம்பிளுக்கு சில ஆங்கிலப்படங்கள்.

பிரிசனர்ஸ் ஆப் ஜென்டா / நாடோடி மன்னன்.
அன்னாகரீனனா/ பணக்காரி
டாக்டர் ஷெகில் அண்ட் மிஸ்டர் கைடு / நான் வணங்கும் தெய்வம்
மார்னி / வெண்ணிற ஆடை
டு சேஸ் ஏ குருக்கடு ஷேடோ/ புதிய பறவை
டெஸ்பரேட் ஹவுஸ் / நாணல்
சம்மர் ஆப் 42 / அழியாத கோலங்கள்
ஒன் புளோ ஒவர் குக்கூஸ் நெஸ்ட்./ மனசுக்குள் மத்தாப்பு
கிரீன் கார்டு / நளதமயந்தி
மிசஸ் டவுட்பயர் / அவ்வைசண்முகி
டைமீ அப் டைமீ டவுன்/ காதல் கொண்டேன்
ஸ்லீப்பிங் வித் எனிமி / அவள் வருவாளா?
ஸ்டெப் மாம் / சதிலீலாவதி
தற்போது டிவிடி வந்துவிட்டதால் நகலெடுப்பது முழுமையாக அங்கீகரிக்கபட்டுவிட்டது.
தமிழ் சினிமாவில் இந்த கள்ளக்குழந்தைகள் தான் கம்பீரமாக சுற்றியலைகின்றன. தமிழ் கதைகளும், தமிழ்வாழ்வும், தமிழ்கதைசொல்லும் முறைகளும் இவர்களின் தயைவிற்கு காத்திருக்க வேண்டியிருப்பது தான் இதன் உச்சபச்ச துரதிருஷ்டம்.
nanri http://www.tamiloviam.com/atcharam/page.as...?ID=19&fldrID=1
Reply


Forum Jump:


Users browsing this thread: