Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரிக்காவும் சமாதானமும்...!
#1
<img src='http://sooriyan.com/images/stories/chandrika03.jpg' border='0' alt='user posted image'>

[size=14]கடந்த இரு தசாப்த காலத்துள் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தேர்தல் முடிந்த கையோடு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத ஒரே தேர்தல் நடந்து முடிந்த தேர்தல்தான்.

யுத்த காலங்களில தேர்தல் என்றாலே வாக்குகளுக்குப் பதிலாகக் குண்டுகள்தான் எண்ணப்படும். அல்லது பிணங்கள் எண்ணப்படும். ஆனால் இம்முறை அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதற்குக் காரணம் சிங்கள அரசியல்வாதிகள் திடீரென்று கூர்ப்படைந்து விட்டார்கள் என்பதோ அல்லது அவர்களுடைய அபிமானிகள் திடீரென்று மனந்திருந்தி விட்டார்கள் என்பதோ அல்ல.

மாறாக நிலவும் யுத்த நிறுத்தத்தின் விளைவே இது. ஒரு விதத்தில் இந்தத்தேர்தலே யுத்த நிறுத்தத்தின் விளைவுதான். எவ்வாறெனில், யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவந்து ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்குச் சலுகைகள் செய்து விட்டார் என்று குற்றம் சாட்டியே அவருடைய அரசாங்கம் கலைக்கப்பட்டது. அதன் விளைவே இந்தத் தேர்தல்.

அதேசமயம் யுத்த நிறுத்தம் நீடித்திருப்பதால்தான். இத்தேர்தலை மிகவும் அமைதியாகவும், ஆறுதலாகவும், பயமின்றியும் நடாத்த முடிந்திருக்கிறது.

இது ஒன்றைக்காட்டுகிறது. தமிழர்களுக்கு அமைதி இல்லை என்றால் சிங்களவர்களுக்குக்கும் அமைதி இல்லை. தமிழர்களுக்கு நிம்மதி இல்லை என்றால் சிங்களவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது.

ஆனால் இந்தத் தவிர்க்கப்படவியலாத யதார்த்தம். நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கப்படவில்லை என்பதே இங்குள்ள பயங்கரம்.

அதிகமதிகம் இனமுரண்பாடுகளை மிகக்கூர்மையாக வெளிப்படுத்திய ஒரு தேர்தல் இது.

தமிழர்கள் எதற்காக வாக்களித்தார்களோ பெருமளவிற்கு அதற்கெதிராகவே சிங்களவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் தமக்கேயான நலன்களை முதன்மைப்படுத்தி வாக்களித்திருக்கிறார்கள். இதைசற்று விரிவாகப் பார்ப்போம்.

தமிழர்கள் தமது போராட்ட இலக்குகளுக்காகவும், அவற்றை அடைவதற்கான ஒரு ஊடகம் என்ற வகையில் சமாதானத்துக்காவும் வாக்களித்திருக்கிறார். வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள் பெருமளவிற்கு ரணிலுக்கு வாக்களித்தது என்பத அவர் சமாதானத்தின் பக்கம் நிற்பதால்த்தான்.

முஸ்லிம்கள் ரணிலை ஆதரித்திருப்பது என்பது ஒரு வர்த்தக சமூகம் என்ற வகையில் சமாதானத்தின் நன்மைகளை அனுபவிப்பதற்காகத்தான்.

ஆனால் சிங்களவர்களோ, ரணிலுடைய சமாதான முயற்சிகளை நிராகரித்திருக்கிறார்கள். யுத்த நிறுத்தத்தைக்கொண்டு வந்து அவர் புலிகளுக்கு ரகசியமாக எதையோ கொடுத்துவிட்டார் என்று சந்திரிகா கிளப்பிய ஜயங்களையும், பயங்களையும் அப்படியே விழுங்கி ரணிலைத் தோற்கடித்து விட்டார்கள்.

ரணிலுக்குக் கிடைத்த தோல்வி எனப்படுவது அவர் செய்த சமாதானத்திற்கு கிடைத்த தோல்வியும்தான்.

ரணிலை அவர்கள் தோற்கடித்ததைவிடவும் பயங்கரமான மற்றொரு விசயம் ஹெல உறுமயவுக்கு அவர்கள் கொடுத்த வெற்றிதான். இது இரண்டு பிரதான கட்சிகளின் மீதும் அவர்கள் சலிப்புற்றதின் விளைவாகவும் இருக்கலாம். ஆனால் இப்பத்தியில் சிலவாரங்களுக்கு முன்பு கூறப்பட்டதைப்போல அதி தீவிர, மதவாதசக்திகள் மூன்றாவது அணியாக எழுச்சிபெற்றவிட்டன.

இத்தகைய சக்திகள் பேரம் பேசும் பலத்தோடு நாடாளுமன்றத்துக்கு வந்திருப்பது என்பது சமாதானத்தின் வழியில் தோன்றியிருக்கும். ஒரு புதிய துர்க்குறியே. எனவே தேர்தல் முடிவுகளின்படி நாம் பின்வரும் ஏதோ ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

முதலாவது, கடந்த இரு தசாப்தகால யுத்தத்திலிருந்து பெரும்பாலான சிங்கள வெகுசனம் எத்தகைய ஒரு பாடத்தையும் கற்றிருக்கவில்லை என்பது.

இரண்டாவது, அவர்களுக்கு மறதி மிக அதிகம் என்பது.

மூன்றாவது, பௌத்தத்தை மிகவும் தவறாகப்புரிந்து வைத்திருப்பதைப்போல சமாதானத்தையும் மிகத்தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது.

நாலாவது, அவர்கள் மிக மோசமாகக் குழம்பிப்போய் இருக்கிறார்கள் என்பது.

இது எது சரி? ஒவ்வொன்றும் அதற்கேயுரிய விகிதங்களில் சரிதான். இப்பத்தியில் ஏற்கனவே கூறப்பட்டபடி சிங்கள வெகுசனத்தை மிகவும் குழப்பிய ஒரு தேர்தல் இது. ஒருபுறம் அவர்கள் ரணிலைத் தோற்கடித்திருக்கின்றார்கள். இன்னொருபுறம் அவர்கள் சந்திரிகாவுக்கும் பெருவெற்றியை கொடுக்கவில்லை.

அதேசமயம் இரண்டு பெருங்கட்சிகளுக்கு வெளியே ஒரு மூன்றாவது அணியை அவர்கள் தேடியிருக்கிறார்கள்.

கொழும்பில் இருக்கும், அரசியல் ஆய்வாளர் றொகான் எதிரிசிங்க கூறுகிறார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு Charisma - ஜனவசியம் குறைவு என்று. இதைத்தவிர, நகர்புறச்சிங்களப் பெருமுதலாளிகளைத் திருப்திப்படுத்திய அளவுக்கு நாட்டுப் புறச்சிங்களவர்களையும், சிறு முதலாளிகளையும் குறிப்பாக விவசாயிகளையும் அவர் திருப்திப்படுத்தத் தவறிவிட்டார் என்றும் கூறப்படுகின்றது.

ரணிலைவிடவும் சந்திரிகா ஜனவசியம் மிக்கவர் என்று றொகான் எதிரிசிங்க கூறுகிறார். சந்திரிகாவைப் போலன்றி ரணில் அமைதியானவர், பெரிய பெரிய இலட்சியங்களைக் கதைப்பதில்லை. அதோடு சாதாரண சனங்களை நெருங்கிச்சென்று உறவாட முடியாதவர் என்றும் அவர் கூறுகிறார்.

மெய்தான், ரணிலுடைய துருத்திக்கொண்டு தெரியாத, காட்டூணிஸ்ட்களுக்கு சோதனையாக அமைந்துவிட்ட மிகச்சாதாரண முகம். மற்றும் கவர்ச்சியும் மிடுக்கும் குறைந்த குரல், நடை உடை பாவணை போன்றவற்றை வைத்துக் கூறுமிடத்து றொகான் எதிரிசிங்க நம்புவதுபோல ரணில் விக்கிரமசிங்க ஜனவசியம் குறைந்தவராக இருக்கலாம்தான்.

சந்திரிகாவைப் போல பொய் சொல்லவோ அல்லது குழம்பிக்கதைக்கவோ அல்லது தருண மறிந்து மன்னிப்புக் கேட்கவோ அல்லது கிராமிய வளக்கில் சொன்னால், மாய்மாலம் கொட்டவோ ரணிலால் முடியாதுதான். ஆனால் ரணிலின் மிகப்பெரிய கவர்ச்சி அவருடைய கண்ணுமல்ல, மூக்குமல்ல, குரலுமல்ல, நடையுமல்ல மாறாக அவர் சமாதானத்தின் நண்பனாகத் தோன்றியதுதான். என்பதனாலேயே தனக்கு வெற்றி நிச்சயம் என்று அவர் நம்பினார்.

இப்பத்தியிலும் கூட முன்பு சில தடவைகள் சமாதானத்தின் பெயரால் ரணில், வெல்லக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சிங்கள வெகுசனங்களின் தீர்போ வேறு விதமாய் அமைந்துவிட்டது ஆயின் எங்கே பிசகியது?

முதலாவதாக ஒன்றைச் சொல்ல வேண்டும். ரணில் சமாதானத்தின் நண்பன் போலத்தோன்றினவரே தவிர, அவரும் கூட மெய்யாகவே சமாதானத்துக்கு விசுவாசமாயிருக்கவில்லை.

அவர் சமாதானத்தை வர்த்தக மயப்படுத்துவதில் காட்டியளவு அக்கறையை சமாதானத்தை மக்கள் மயப்படுத்துவதில் காட்டியிருக்கவில்லை.

சுமார் இருதசாப்த காலமாக யுத்தம் மக்கள் மயப்பட்டுவரும் ஒரு நாட்டில் இரண்டே இரண்டு ஆண்டுகளில் சமாதானத்தை மக்கள் மயப்படுத்துவது என்பது யாரும் மந்திரவாதிகளால்தான் முடியும்.

ஆயினும் அப்படிச் சமாதானத்தை மக்கள் மயப்படுத்தும் திட்டம் எதுவும் ரணிலிடம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர் சமாதானத்தை விசுவாசமாக இருந்ததைவிடவும் தனது மேற்கத்தைய எஜமானர்களுக்கும், தனது கட்சியின் பிரகாசமான எதிர்காலத்துக்கும் குறிப்பாக தனது தனிப்பட்ட எழுச்சிக்குமே விசுவாசமாகக் காணப்பட்டார்.

மேலும் இரண்டாண்டுகளுக்குப் பேச்சு வார்த்தைகளை இழுத்திழுத்துக்கொண்டு வந்து முடிவில் சமாதானத்தின் பெயரால் சனாதிபதிக்கும் ஒருகனவே அவரிடம் இருந்தது. அவரைப் பொறுத்தவரை சமாதானம் எனப்படுவது அதிகபட்சம், எதிர்காலத்தில் சனாதிபதியாக வருவதற்குரிய ஒர் ஏணியே. எனவே விசுவாசம் இன்றி சமாதானம் செய்த அவருடைய அரசாங்கத்தால் அதை மக்கள் மயப்படுத்த முடியாமற் போனது தவிரக்க முடியாததே.

இப்பொழுது அவர் தனது தோல்விகளுக்கு தனது கட்சியின் ஊடகப்பிரிவைக் குறைகூறுகிறார். 96 கோடி ரூபாய் செலவழித்து S.L.F.E மீதும் J.V.P மீதும் சேறு பூசுவதில் காட்டப்பட்டுள்ள தீவிரம் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்குக் காட்டப்படவில்லை என்று இப்பொழுது கூறப்படுகின்றது.

அதாவது, அவர்களிடம் சமாதானத்தை வெகுசன மயப்படுத்தும் நடைமுறைச் சாத்தியாமான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் சமாதானத்தைக் குறித்த தரிசனம் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. யுத்தத்தை ஒத்திவைப்பதைத்தான் அவர்கள் சமாதானம் என்றுகாட்டவிரும்பினார்கள் போலும்.

எனவே சமாதானத்தை நோக்கி சனங்களை வசியம் செய்ய அவர்களால் முடியாது போயிற்று. இதனால் சந்திரிகா J.V.P கூட்டு சனங்களை வெற்றிகரமாகக் குழப்ப முடிந்தது. இதன் விளைவே ரணிலுக்குக்கிடைத்த தோல்வி.

இப்பொழுது சமாதானம் சந்திரிகாவின் கையில் - எதைச் சாட்டாக வைத்து ரணிலின் ஆட்சியைக் கவிழ்த்தாரோ அதை - சமாதானத்தை - அவர் இப்பொழுது பொறுப்பெடுக்கவேண்டிய ஒருநிலை. உண்மையில் அவர் எதிர்த்தது ரணிலைப்பலப்படுத்தும் ஒரு சமாதானத்தையே. எனவே இனி அவர் தன்னைப்பலப்படுத்தும் ஒரு சமாதானத்துக்கு வரக்கூடும்.

ஒரு ஸ்திரமான ஆட்சியை உருவாக்க முடியுமானால் அவர் சமாதானத்துக்கு வரக்கூடும் அல்லது ஒரு ஸ்திரமான ஆட்சியை உருவாக்குவதற்காகவும் அவர் சமாதானத்துக்கு வரகூடும். அப்படிவந்தால் சில சமயம் ரணிலைவிடவும் ஸ்திரமாக அவரால் சமாதானம் செய்யக் கூடியதாக இருக்கும். ஏனெனில் கொழும்பில் இப்பொழுது ஒரு அதிகாரமையம் தான் இருக்கிறது. அதோடு ரணில், சமாதானத்தின் வழியில் குறுக்கேநிற்கும் வாய்ப்புகளும் குறைவு. ஏனெனில் அவர் சமாதானத்தை வாக்களித்தே தேர்தலில் நின்றார்.

ஆனால் வெற்றிகரமாகச் சமாதானம் செய்வதென்றால் சந்திரிகா உடனடியாக இரண்டு தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்.

முதலாவது, புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வது. அதாவது நடந்து முடிந்த தேர்தலில் தமிழர்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து நடப்பது. இதிலும் குறிப்பாக மதித்து நடப்பது. இதிலும் குறிப்பாக புலிகளின் உட்கட்சிப் பூசலில் தலையிடாதிருப்பது.

மற்றது J.V.P யையும் கூட்டாளியாக வைத்துக்கொண்டு அமெரிக்காவை நெருங்கிச்செல்வது.

இந்த இரண்டையும் அவர் செய்யமாட்டார் என்பதற்கில்லை. ஏனெனில் தனது கணவரைக் கொன்ற J.V.Pயுடன் அவர் கூட்டுச் சேரமுடியுமென்றால், புலிகளுடன் சமாதானம் செய்யமுடியாதென்றில்லை அல்லது அமெரிக்காவை நெருங்கிவர முடியாதென்றுமில்லை.

அவரைப் பலப்படுத்தும் ஒரு சமாதானத்துக்காக அவர் எதையும் செய்யார். யாரோடும் கூட்டுச்சேர்வார். சில சமயம் அந்தச் சமாதானத்துக்காக முன்பு ஒருமுறை செய்தது போல யுத்தமும் செய்யக்கூடிய ஆள் அவர்.

[Image: vote1.bmp]

நிலாந்தன் ஈழநாதம்.


நன்றி சூரியன் டொட் கொம்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)