Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாகரீகத்தின் தொட்டில்
#1
நாகரீகத்தின் தொட்டில்

மெஸபடோமியா என்று அந்த இடத்தைக் குறிக்கிறார்கள். ஈராக் என்று நான் அறிந்த அதை, பச்சாதாபம் பாக்கி வைத்திருக்கும் அமெரிக்கர்கள் ஐராக் என்று லேசான குற்றவுணர்வோடு குறிப்பிடுகிறார்கள். சதாம் தாத்தாவின் கொடுங்கோலாட்சியிலிருந்து மக்களை மீட்டெடுத்து சுதந்திரம் வழங்கிய குட்டி புஷ், இப்போது அங்கே தேர்தல் நடத்தி , அவர்களுக்கு ஜனநாயகத்தை அறிமுகம் செய்யப் போகிறாராம்.

ஜனவரி 30 என்று நாள் குறித்திருக்கிறார்கள். வேட்பாளர்கள் பெயர் வெளியே யாருக்கும் தெரியாது. தெரிந்தால் உயிர் போய்விடும். ஆனால் திசம்பர் 15 முதல் பிரசாரம் ஆரம்பித்து விட்டதாம். ஆச்சரியமாக இருக்கிறது கேட்பதற்கு. ஆனால் இதை எப்படியாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அமெரிக்க அரசு. இராக்கிலிருந்து திரும்பி வரும் ராணுவக்கைதிகளை( வீரர்களை) பேட்டி காண்கிறார்கள் டெலிவிஷனில். "இந்த தேர்தல் நம்மால் அவர்கள் மீது திணிக்கப்படுகிரது" என்கிறார்கள் போர் வீரர்கள். அமெரிக்காவில் வாழும் ஈராக்கியர்கள் " அந்த தேர்தலுக்கு நாங்கள் இங்கிருந்து ஓட்டுப் போட மாட்டோம். எங்களுக்கு அவர்கள் அரசை தீர்மானிக்க உரிமை கிடையாது" என்கிறார்கள் தெளிவாக.

இராக் போர் சம்பந்தப்பட்ட பேரழிவுக் காட்சிகள் இனையமெங்கும் இரைந்து கிடக்கின்றன. மண்ணை வாரித் தூற்றும் மூதாட்டியர்கள் டீவி ஃபுட்டேஜ்களில் ஏராளமாக தெரிகிறார்கள். தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறையும் பெருகி இருக்கிறது. அமெரிக்கா இதுவரை இழந்த 1420 வீரர்களுக்காக பரிதாபப்படும் ஊடகங்கள் கூட அதை விட பல மடங்கு இழப்பை உடைய ஈராக்குக்காக அந்தளவு வருந்துவது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக புஷ் மறுபடியும் வெற்றி பெற்று போர் அடிப்படையிலான தன் வெளியுறவுக் கொள்கைகளை இன்னமும் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருக்கிறார்.

என்ன நடக்கும் இராக்கில்..?? எதிர்ப்பாளர்களை பொறுத்தவரை தெர்தல் ஒழுங்காக நடந்து சகஜநிலை திரும்ப விட மாட்டார்கள். அப்படி விட்டு விட்டால், அமெரிக்காவின் உள்நுழைவை அங்கீகரித்து, அவர்கள் தந்திருக்கும் ஜனநாயகத்தை தங்கள் ரத்தம் வழியும் கைகளால், நிணநாற்றமெடுக்கும் தெருக்களில் நடுவே நின்று கொண்டு வாங்கிக் கொள்வது போலாகும். தேர்தல் நடக்காது தடுக்கப்பட்டாலோ, அமெரிக்கா தன் ராணுவத்தை அங்கிருந்து விலக்காது. கிட்டத்தட்ட இதே மாதிரி தருணத்தில் தான், வியட்நாமில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன. கிடைத்த ஹெலிகாப்டர்களை பிடித்து வெளியில் தொங்கிக் கொண்டே ஊர்வந்த அமெரிக்கர்கள் இன்றளவும் அதை மறக்காமல் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இராக்கில் இப்போதைக்கு வாபஸ் வாய்ப்பில்லை. அதனால், நன்றாக இருந்த ஒரு நாட்டை நாசமாக்கி, வழி வழியாக இர்ந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு ஈடாக இன்னொரு பிரச்சினையை உண்டாக்கியதை தவிர வேறொன்றும் இவ் விஷயத்தில் சாதிக்கவில்லை குட்டி புஷ்.

இராக்கியர்களுக்கு தேவை தேர்தல் அல்ல. தேறுதல். அரவணைப்பு. யாங்க்கிகளின் வெளியேற்றம்.

by மூக்கன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)