Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய திருமகள் இலங்கையின் மருமகள்
#1
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/Hd1.jpg' border='0' alt='user posted image'>

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை கரம்பிடிக்கப் போகும் சென்னைப் பெண் மலர்மதியின் வீடு இப்போதே களைகட்டிவிட்டது.

கல்யாணப் பத்திரிகையின் முதல் பிரதியை திருப்பதி கோவிலில் வைத்து விட்டு உள்ளூரில் பத்திரிகை வைப்பதிலும் பிசியாகிவிட்டார்கள். (மதிமலருக்கும் முரளிதரனுக்கும் அடுத்தமாதம் (மார்ச்) 21-ந்தேதி சென்னையில் திருமணம். இவர்களது திருமணம் பெற்றோரே பார்த்து ராஜா அண்ணாமலைபுரத்தில் தாயார் நித்யா, தங்கை திவ்யாமலருடன் வசிக்கும் மதிமலரை நாம் கடந்தவாரம் பேட்டி காணச் சென்றபோது, குங்குமப் பூ நிறத்தில் சுரிதார் அணிந்திருந்தார். கூடவே மணப்பெண்ணுக்கே உரிய நாணம்.

மதிமலர் எம்.பி.ஏ படித்தவர், ஒரு ஆஸ்பத்திரியின் இயக்குனர் (மலர் மருத்துவமனை) என்பதால் பேச்சில் மிகமென்மையான அணுகுமுறை. கேள்விகளுக்கு நன்கு யோசித்து பதில் அளிக்கிறார்.

<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/cricket.jpg' border='0' alt='user posted image'>


உங்கள் குடும்பமே டாக்டர் குடும்பமாக இருக்க நீங்கள் எம்.பி.ஏ. படிப்பை தேர்வுசெய்தது ஏன்?

"எல்லோருமே டாக்டர்கள் என்றால் ஆஸ்பத்திரியை நிர்வகித்துக் கொள்ள யாராவது ஒருவர் வேண்டுமே? அதனால் எம்.பி.ஏ படிக்கவேண்டும் என்று தீர்மானித்துத் தான் படித்தேன்."

உங்கள் கணவராக வருபவர் எப்படியிருக்கவேண்டும் என்று நீங்கள் கற்பனை செய்ததுண்டா? அந்தக் கற்பனைக்கேற்ப முரளிதரன் இருக்கிறாரா?

"எனக்கு கணவராக வருகிறவர், கடினமாக உழைப்பவராக இருக்கவேண்டும். சொந்தக் காலில் நிற்பவராக இருக்கவேண்டும் என்பதை விரும்பினேன். முரளிதரன் கடினமான உழைப்பாளிதான் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனென்றால் பந்து வீச்சில் உலக சாதனை படைத்தவர், அவர். அதற்காக எவ்வளவு தூரம் தன்னை அர்ப்பணித்து இருப்பார் என்பதை அவரது சாதனைகளைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடியும். 532 விக்கெட்டுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரால் கடந்த 6 மாதங்களாக விளையாட முடியவில்லை. இல்லையென்றால் ஷேன் வார்னே நெருங்க முடியாத அளவிற்கு நிச்சயம் அவர் சாதனை படைத்திருப்பார். இப்போதும் கூட காலம் கடந்து விடவில்லை. அவர் மீண்டும் களமிறங்கும்போது விரைவிலேயே வார்னேயின் உலக சாதனையை (566 விக்கெட்டுகள்) முறியடித்து விடுவார்."

பிரபல கிரிக்கெட் வீரரை கல்யாணம் செய்வதால் பொது மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு குறைந்து விடும் என்று எண்ணுகிறீர்களா?

"அவருடன் திருமணம் என்றதும் மிகப் பெரிய அளவில் விளம்பரம் கிடைத்தது உண்மை. இன்னும் சிறிது நாளில் இந்த பரபரப்பு அடங்கி விடும். தவிர திருமணத்திற்குப் பின்னர் எல்லோரது பார்வையும் அவரை நோக்கித்தான் இருக்கும். இவரோட மனைவிதான் இவர் என்ற பெயர் மட்டும் தான் எனக்கிருக்கும். மற்றபடி பொது இடங்களுக்குச் செல்லும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படாது."

உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் உண்டா?

"உலகக் கோப்பை போன்ற முக்கியமான போட்டிகள் நடந்தால் அதை டி.வியில் பார்ப்பதுண்டு. மற்றபடி எனக்கு கிரிக்கெட் மோகம் இல்லை. ஆனால் அப்பாவிற்கு கிரிக்கெட் என்றால் ரொம்பப் பிடிக்கும். இந்திய அணி எங்கு கிரிக்கெட் விளையாடினாலும் போய் பார்த்து விடுவார். கிரிக்கெட் பார்ப்பதற்காக நிïசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து...என்று போகாத நாடுகள் கிடையாது.

அவருக்கு அவ்வளவு மோகம். அப்பா இப்போது இருந்திருந்தால் கிரிக்கெட் வீரர் ஒருவரையே நான் கல்யாணம் செய்யப் போவதை நினைத்து நிச்சயம் வெகுவாக சந்தோஷப்பட்டிருப்பார்."

உண்மையைச் சொல்லுங்கள் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?

"பொதுவாகவே எந்த வீரரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நல்ல ஆட்டத்தை யார் ஆடினாலும் ரசிப்பேன்.

இப்போது பிடித்தமான வீரர் என்று கேட்டால் முரளிதரன் தான்."

கிரிக்கெட் வீரர்கள் என்றால் வருடத்தில் 6 மாதங்கள் உள் நாட்டிலும் மீதி 6 மாதங்கள் வெளிநாடுகளிலும் விளையாடப் போய் விடுவார்களே?

"வெளிநாடுகளுக்கு மனைவியை அழைத்துச் செல்ல சில நேரங்களில் அனுமதிக்கிறார்கள். அப்படியான நேரங்களில் அவருடன் வெளிநாடுகளுக்குப் போவேன். மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்வேன்."
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/malar2.jpg' border='0' alt='user posted image'>


உங்களிடம் உங்களுக்குப் பிடித்த குணம்?

"எதையாவது ஒன்றைச் செய்து முடிக்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அதை எப்பாடு பட்டாவது முடிக்காமல் விடமாட்டேன். முதலில் அந்த வேலையை முடித்து விட்டுத்தான் மற்றவை என்ற உறுதியோடு செயலாற்றுவேன்.

எப்படியும் இருக்கலாம் என்பது எனக்குப் பிடிக்காத விஷயம். இப்படித் தான் இருக்கவேண்டும் என்று ஒரு கட்டுக்கோப்பாக இருப்பேன். அது அப்பாவும் அம்மாவும் எனக்கு கற்றுத் தந்த நல்ல பாடம். அப்பா பிள்ளையார் பட்டிக்கு அருகே பாதரக்குடி என்னும் குக்கிராமத்தில் பிறந்து மதுரையில் படித்து துபாய்க்குச் சென்று பின்னர் சென்னைக்கு திரும்பி கடுமையான போராட்டத்திற்கிடையே மருத்துவமனையைத் துவக்கினார். அதே போன்றுதான் அம்மாவும் கடுமையான போராட்டக்காரர். அப்பா இறந்தவுடன் இனி அவ்வளவுதான் அம்மாவால் ஆஸ்பத்திரியை நடத்த முடியாது என்று பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால் அம்மாவோ விரைவிலேயே சோகத்திலிருந்து விடுபட்டு ஆஸ்பத்திரியை திறம்பட நடத்தி வருகிறார். அவர் அப்பாவுக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்ததால்தான் இதையெல்லாம் சாதிக்க முடிந்தது."



பிடிக்காத விஷயம்?

"சட்டென்று கோபப்படுவது. நினைத்தது நடக்கவில்லை என்றால் உடனடியாக கோபம் வந்து விடும். ஆனால் அதுவும் கூட சிறிது நேரத்தில் மறந்து விடும். எதனால் அது நடக்காமல் போனது, அடுத்த முறை எப்படி சரியாகப் பயன்படுத்திக் கொள்வது என்று தோல்வியில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்."

உங்களுக்கு முரளிதரனிடம் பிடித்த குணம்?

"அவரது எளிமை, உதவும் குணம். சுனாமி தாக்கிய அன்று நாங்கள் இலங்கையில் இருந்தோம். அப்போதுதான் அவரது மனிதாபிமானத்தைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுனாமி தாக்கிய சிறிது நேரத்தில் பாதிப்பின் கொடூரத்தை உணர்ந்து அவர் யார், யாருக்கோ போன் செய்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்தார்.

தவிர அதோடு நிறுத்திக் கொள்ளாமல் நேரடியாகவே மக்களிடம் சென்று அவர்களது துயரத்தில் அவர் பங்கேற்றதை என்னால் மறக்க முடியாது." (முத்தையா முரளீதரன் 210 டன் அரிசியை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)

சின்ன வயதில் ஏதாவது தமாஷ் சம்பவம்?

"நானும் மூத்த சகோதரி ரதி மலரும் இரட்டையர்கள். உருவத்தில் கூட அச்சு வார்த்த மாதிரி இருப்போம். இந்த உருவ ஒற்றுமையால் நாங்கள் இருவரும் படித்த அடையாறு ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நிறையவே குழப்பங்கள் உருவாகும்.

தவிர எங்களின் குரலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

இதனால் இன்னும் குழம்புவார்கள்.

ஹோம் ஒர்க் செய்யும் போது என் கையெழுத்து சரிவர இருக்காது. இதனால் வகுப்பாசிரியை என்னைக் கண்டிப்பதற்கு பதிலாக ரதி மலரைக் கண்டிப்பார். இது போல் அவள் செய்யும் சின்னத் தவறுகளுக்கு என்னைக் கண்டிப்பார்கள். இப்படி அடிக்கடி நடந்ததால் எங்கள் இருவரில் யார் ரதிமலர், யார் மதிமலர் என்பதை சுலபமாக அடையாளம் காண்பதற்கு இருவரும் அவரவர் பெயர் பொறித்த பேட்சை அணிய நேரிட்டது. இப்படி 5-ம் வகுப்பு வரை இருவரும் பேட்ச் அணிந்தோம்.

இப்போதும் கூட எங்கள் இருவரது குரலும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.

இலங்கையில் அவரது குடும்பத்தினருடன் பேசினால் யார் ரதிமலர், மதிமலர் என்று அவர்களும் திண்டாடிப் போவார்கள். முரளியே பல தடவை இப்படி குரலை அடையாளம் காணமுடியாமல் திண்டாடி இருக்கிறார். நாங்களும் இப்படி சில நேரம் அவருடன் கண்ணாமூச்சி விளையாடுவோம்."

உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா?

"சமைக்கவும் தெரியும் நன்கு சாப்பிடவும் தெரியும். செட்டிநாடு அசைவ உணவுகள் என்றால் ரொம்ப இஷ்டம். நன்றாக சமைப்பேன். சைனீஷ் உணவுகளும் பிடிக்கும். ஆனால் அதை தயாரிக்கத் தெரியாது. "(மதிமலர் திருமணத்திற்கு பிறகு கணவரோடு இலங்கையில் குடியேறிவிடுவார்)

இலங்கையில் குடியேறுவதால் உங்கள் உணவுப் பழக்க வழக்கம் மாறிவிடுமே?..

"நமது தென்னிந்தியச் சமையலும் அவர்களது சமையலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. எனவே எவ்வித பிரச்சினையும் இதில் ஏற்படாது."

<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/malar.jpg' border='0' alt='user posted image'> அம்மா நித்யா ராமமூர்த்தியுடன்...

கல்லூரியில் படித்தபோது கட் அடித்து விட்டு சினிமா பார்த்த அனுபவம் உண்டா?

"உண்டு. வகுப்பு செம போர் என்றால் நிச்சயம் கட் அடித்து விடுவோம். பக்கத்திலேயேதான் தியேட்டர். தோழிகளுடன் போய் படம் பார்ப்போம். ஆனால் வகுப்பை கட் அடித்தது பற்றி அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் படத்துக்குப் போவேன். அம்மாவிடம் எதையும் நான் மறைத்தது கிடையாது. ஆனால் எம்.பி.ஏ படித்தபோது வகுப்புகளை கட் அடித்தது இல்லை."

படிப்பில் எப்படி?

"சத்யபாமா நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது கல்லூரியிலேயே முதல் மாணவியாக வந்து தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறேன்."

யாருடைய சினிமா படங்கள் பிடிக்கும்?

"குறிப்பிட்ட எந்த நடிகரையும் எனக்குப்பிடிக்காது. தமிழில் காமெடிப் படங்கள் என்றால் விரும்பிப்பார்ப்பேன். தமிழ் ஆக்ஷன் படங்கள் பிடிக்காது. அந்தமாதிரிச் சண்டைப் படங்களைப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆங்கில ஆக்ஷன் படங்களை விரும்பிப் பார்ப்பேன்."

முரளிதரன் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகிவிட்டீர்களா?...

"நிச்சயதார்த்தத்திற்கு பின் இலங்கைக்கு நானும் என் அம்மாவும் போய் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். பச்சை பசேர் மரங்கள், அழகிய கடற்கரை என்று அந்தச் சூழல் எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

அவர்கள் குடும்பத்தினர் மிகவும் அன்பாகப் பழகி நெருங்கி விட்டார்கள். முரளிதரனுடன் பிறந்த மூவருமே சகோதரர்கள்தான். பெண் பிள்ளைகள் யாரும் கிடையாது. அதனால் குடும்பத்தின் மூத்த மகள் போல் என்னைக் கனிவுடன் கவனித்துக் கொண்டார்கள்."

முரளிதரன் உங்களுக்கு வைர மோதிரம் போட்டிருக்கிறார். நீங்கள் அவருக்கு கல்யாணப் பரிசாக என்ன கொடுக்கப் போகிறீர்கள்?

(சற்று நாணத்துடன்) "விலையுயர்ந்த கைக்கெடிகாரம் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறேன்."

அதென்ன ரதிமலர், மதிமலர் பெயர் புதுமையாக இருக்கிறதே?

"எங்கள் வீட்டில் இன்னொரு மலரும் உண்டு. அவர் திவ்யா மலர். எங்களின் இளைய சகோதரி.

அம்மாவை மலேசியாவில் முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித் திருக்கிறார்கள். இங்கே அப்பா (ராமமூர்த்தி) பிரசவம் நல்லபடியாக நடந்தேறவேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்திருக்கிறார். அப்போது அர்ச்சகர் தந்த தட்டில் இரண்டு மலர்கள் இருந்திருக்கின்றன. அந்த நேரத்தில்தான் அம்மா எங்களையும் பெற்றெடுத்திருக்கிறார். அதனால் தெய்வம் தந்த வரப்பிரசாதமாக நினைத்து மலர் என்ற பெயரையே எங்களுக்குச் சூட்டிவிட்டார். எங்களுக்குப் பின் பிறந்த சகோதரிக்கும் திவ்யா மலர் என்று பெயர் சூட்டினார்கள்."

மதி மலரின் மூத்த சகோதரி ரதி மலர் டாக்டருக்குப் படித்தவர். (ரதி மலரின் கணவர் ஆனந்த்தும் டாக்டர்தான்.) இளைய சகோதரி திவ்யா மலர் சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் மாணவி. இவர்களின் தாயார் நித்யாவும் டாக்டர். மலர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.

Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)