Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்ன செய்யப் போகிறார் ஜனாதிபதி சந்திரிகா?
#1
என்ன செய்யப் போகிறார் ஜனாதிபதி சந்திரிகா?

பேச்சுவார்த்தை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கியிருப்பதன் மூலம், சமாதானத்தின் மீது வை க்கக் கூடிய நம்பிக்கையை ஜே.வி.பி. மீண்டும் ஒரு தடவை சிதறடித்திருக்கின்றது. இடைக்கால நிர்வாக சபை ஒன்றை அமைப்பது தொடர்பாக, விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என அறிவிக்கப்பட்டு இருபத்தினான்கு மணி நேரத்துக்குள் தம்முடைய கடுமையான எதிர்ப்பை ஜே.வி.பி. வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், அவ்விதம் பேச்சுகள் முன்னெடுக்கப்படுமாயின் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாகவும் ஜே.வி.பி. அச்சுறுத்தியிருக்கின்றது.

`வெளியேறப் போவதாகக் கூறிக் கொண்டிருப்பவர்கள் வெளியேறலாம்- யாரையும் நாம் கட்டாயப்படுத்தி வைத்திருக்கவில்லை' என்ற பாணியில் ஜே.வி.பி. க்கு எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பதிலடியாக இந்த அறிவித்தல் வந்திருக்கின்றது. இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கும் சமாதான முயற்சிகளை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வந்திருக்கும் நிலையிலேயே இந்தச் சம்பவங்கள் அரங்கேறி வருவது கவனிக்கத்தக்கது.

சமாதானத்துக்கான தடை எது என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலாவது சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்! ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை `கொள்கை' அடிப்படையில் உருவான ஒன்றல்ல. அதிகாரத்தை இலக்காகக் கொண்டே இந்தக் கூட்டு உருக்கொண்டது என்பதில் சந்தேகமில்லை!

அதாவது தனித்துச் செயற்பட்டு ஐ.தே.க.வை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட நிலையிலேயே ஜே.வி.பி.க்கு நேசக்கரம் நீட்டியது ஷ்ரீல.சு.க.தலைமை. அதேபோல தனித்திருந்தால் எப்போதும் எதிரணியில் தான் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு `அதிகாரத்தில் பங்கு' கொள்ளும் நோக்குடன் தான் இந்த நேசக்கரத்தை ஜே.வி.பி.யும் பற்றிக் கொண்டது என்பது வரலாறு.

அதிகாரத்தில் பங்காளிகளாக இருந்தாலும் இரு கட்சிகளினதும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் முரண்பாடானவை. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைப் பொறுத்தவரையில், சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு தேவை அவருக்கு இருக்கின்றது. அவ்வாறு திருப்திப்படுத்தினால் மட்டும்தான் வெளிநாட்டு நிதி உவிகளை அவர் எதிர்பார்க்க முடியும். புனரமைப்பு, புனர்வாழ்வுப் பணிகளுக்கென விடுதலைப் புலிகளுடன் இணைந்து பொதுக் கட்டமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என சர்வதேச சமூகம் விரும்புகின்றது. அதனைச் செய்யாமல் சர்வதேச உதவிகளை எதிர்பார்க்க முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார்.

இது ஜனாதிபதி எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஒரு புறம். மறுபுறத்தில், இனவாத அடிப்படையிலான தனது வாக்கு வங்கிகளைப் பேணிக் கொள்ள வேண்டிய தேவை ஒன்றும் ஜனாதிபதிக்குள்ளது. அதனால்தான், ஜனாதிபதி நேரடியாக அறிவிக்காமல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மூலமாக அந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது. அரசாங்க சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபாலவும் இது தொடர்பாக அறிவித்திருந்தார். இருந்த போதிலும் ஜனாதிபதியோ முக்கிய அமைச்சர்களோ இது தொடர்பாக வாய் திறக்கவேயில்லை!

`வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம்' என்ற அறிவிப்பின் மூலம் ஜே.வி.பி.யினரை மௌனமாக்கி விடலாம் என்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அரசின் பங்காளிகளாகவும் இருந்து கொண்டு, இதற்கு அனுமதிப்பது தமது அரசியல் அத்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும் என்பது ஜே.வி.பி.யினருக்குத் தெரியும். ஹெல உறுமய போன்றன இடைக்கால நிர்வாகத்துக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட முற்பட்டால் தமது வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதையும் ஜே.வி.பி. உணர்கிறது. அதேவேளையில், ஜே.வி.பி. வெளியேறினால் அரசாங்கம் ஆட்டம் காணும் என்பதும் ஜே.வி.பி.யின் எதிர்பார்ப்பு..

இவை அனைத்தையும் சரியாகக் கணிப்பிட்டுள்ளதன் அடிப்படையிலேயே அரசுக்கு எதிரான பலமான தாக்குதல் ஒன்றை ஜே.வி.பி. இப்போது நடத்திக் கொண்டுள்ளது. இதன் மூலம் இனவாத அடிப்படையில் உள்ள தம்முடைய ஆதரவுத் தளத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதேவேளையில், அரசாங்கத்திலிருந்து தம்மை வெளியேற நிர்ப்பந்திக்கும் செயற்பாடு ஒன்றிற்கு ஜனாதிபதி துனியமாட்டார் எனவும் அவர்கள் மதிப்பிடுகின்றார்கள். அதனால்தான் ஜனாதிபதியின் எச்சரிக்கையின் பின்னரும் `துணிவாக' தமது கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்!

இப்போது பந்து ஜனாதிபதியின் பக்கத்தில்!

ஜனாதிபதியிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன. ஜே.வி.பி. வெளியேறினாலும் பரவாயில்லை என இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் அவர் பேச்சுகளை ஆரம்பிக்கலாம். இவ்வாறான நிலையில், அரசாங்கம் கவிழ்ந்து வடும் என ஜனாதிபதி அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இடைக்கால நிர்வாக சபையின் அடிப்படையில் ஜனாதிபதி பேச்சுகளை ஆரம்பித்தால் 22 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவு அவருக்கு கிடைக்கும். அதனை விட, அவ்வாறான ஒரு நிலைமையில் தம்முடைய ஆதரவும் கிடைக்கும் என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜே.வி.பி.யின் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் முன்வைத்த கால்களை பின்னால் எடுக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை என்பது நிச்சயம்!

நித்தம்புவ கூட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிவித்தலில் சொல்லியிருந்தாலாவது, ஜனாதிபதி மிகவும் உறுதியாக இருப்பார் என நாம் நம்புகின்றோம். அவ்வாறிருப்பதன் மூலமாகவே தமிழ் மக்களின் நல்லெண்ணத்தையும், சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் அவரால் பெற்றுக்கொள்ள முடியும். ஜே.வி.பி. யை அருகே வைத்துக்கொண்டு சமாதானத்தை செய்ய முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்திலாவது அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி என்ன செய்யப் போகின்றார் என்பதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்!

தினக்குரல்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)