Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? பாகம்-4 ,5
#1
'ஏழாம் ஆண்டு நிறைவில் ஓயாத அலைகள் -02
ஓயாத அலைகள் -02 கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு?
பாகம்-4


ஓயாத அலைகள்- 02 நடவடிக்கையின் போது அணியொன்றுக்கு பொறுப்பாக நின்று வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்பு வேவுப் பிரிவு போராளியான சுரேந்திரன்ஃஅல்லது இளம்பரிதி எனும் போராளி தனது வேவு அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். கட்டளைத் தளபதி ஜெயம் அண்ணாவும் வேவுப்பகுதிக்கு பொறுப்பாக நின்ற ஜெரி அண்ணாவும் நாம் வேவுபார்க்க வேண்டிய பகுதிகளை விளங்கப்படுத்தி. என்னோடு நான்கு போராளிகளையும் சேர்த்து செயற்பாட்டில் ஈடுபடுத்தினார்கள்.

குறித்த பகுதியில் பாதையமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு என்னிடமிருந்தது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தப் பகுதியால் பாதை எடுக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருந்தது. அதன்படி சண்டை ஆரம்பிக்கும் நேரத்தில் அணிகளை நகர்த்துவதற்காக கிளிநொச்சி குளத்துக்குள்ளால் மூன்று பாதைகளை எடுத்திருந்தோம். அம்மூன்று பாதைகளும் குளத்து நீருக்குள்ளால்; தான் போக வேண்டும். ஏனென்றால் ஆமியின் மண் அரண்கள் வளைந்திருந்ததால் குளத்திற்குள்ளால் பாதை எடுத்தால் இலகுவாக இருக்கும் என்பதற்காக இந்தப் பகுதியால் பாதைகளை எடுத்திருந்தோம்.

முதல் முறையாக குளத்து நீருக்குள்ளால் சென்று பாதை எடுக்க முயற்சித்த போது நீருக்குள் இருந்த ஒரு நச்சுத்தன்மை எனது முகத்தில் தாக்கியதால் புண்கள் ஏற்பட்டு கதைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து அதனு}டாகவே பாதை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சென்றேன.; குளத்துக்குள் தாமரைக் கொடிகள் உடலைக் கீறிக் கிழித்தன. தண்ணீர் கூடிய பகுதிக்குள்ளால் நீந்தியும் ஏனைய பகுதிகளால் நடந்தும் சென்றுதான் பார்த்தோம்.

இரவு நேரத்தில் வேவு நடவடிக்கையிலும் பகல் வேளைகளில் அவதானிப்பிலும் ஈடுபட்டோம். டிப்போச் சந்தியிலிருந்து 200 மீற்றர் உள்ளே சென்றால்தான் குளத்திற்கு வரலாம் அந்தப்பகுதியால் வரும்போது ஆமி மரத்திலிருந்து குறிபார்த்து சுடுவான். இப்படி எனக்கு இரண்டு முறை சுட்டபோது ஒருதடவை எனது தொப்பியில் பட்டது. அதேநேரம் மாலதி படையணி போராளி ஒருவருக்கு இராணுவம் குறிபார்த்து சுட்டதில் காயமடைந்தார். நாங்கள் மூவிங் பங்கருக்குள்ளால் சென்றுதான் குளத்துக்குள் வருவோம். இவ்வாறு ஏழு நாட்களுக்குள் பாதைகளை எடுத்தோம்.

இரவில் மண் அரணில் ஏறிப்படுத்து அவதானித்துக் கொண்டிருக்கும் போது இராணுவத்தினர் ரோந்து செல்வதை காணக்கூடியதாக இருந்தது. பகல் வேளையிலும் மண் அரண் பகுதியில் தடயங்கள் இருக்கின்றதா என அவதானித்தவாறு ரோந்து செய்வதை நாங்கள் து}ரத்திலிருந்து அவதானித்தோம். எதிரியின் அரணில் இருந்து சிறிய இடைவெளியில் தண்ணிக்கு இடையில் பற்றை ஒன்று இருந்தது. அதற்குள் மூன்று நாட்களாக பகல் வேளையில் இரண்டு பேர் நின்று எதிரி எவ்வாறு நிலையெடுத்திருக்கின்றான் அவனது நடமாட்டங்கள் எவ்வாறு இருந்தது என்றெல்லாம் அவதானித்தோம்.

அத்தோடு எதிரியின் காப்பரணுக்கு மிக அண்மையாக நின்று தான் நாங்கள் அவதானித்தோம். ஒவ்வொரு காப்பரண்களுக்கும் இடையில் 35 மீற்றர் இடைவெளிகளே இருந்தன. இராணுவத்தின் பிரதான முகாமான கிளிநொச்சி மகா வித்தியாலய முகாமை கைப்பற்றினால் ஏனைய பகுதிகளை கைப்பற்ற இலகுவாக இருக்கும் என்பதற்காகவும் அதிலிருந்து ஏனைய பகுதிகளுக்கான விநியோகத்தை தடைசெய்ய வேண்டுமென்பதற்காகவுமே இந்த குளத்துப்பகுதி பாதையை தெரிவு செய்தோம்.

ஒன்பது நாட்களுக்குள் வேலைகளை முடித்துவிட்டோம். பின்பு தாக்குதல் அணித் தலைவர்களை அழைத்துச்சென்று அப்பாதைகளைக் காட்டினோம். பின்பு அந்தப்பகுதியால் உள்நுழைவதற்கான அணிகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி வழங்கினோம். இதேபோன்று ஒரு குளத்தினை தெரிவு செய்து அந்த அமைப்பை உருவாக்கி பயிற்சியை வழங்கினோம். இவ்வாறு சண்டையை ஆரம்பிப்பதற்கான நாள் நெருங்கியதும் தளபதி தீபன் அண்ணா எங்களோடு கதைத்து தயார்படுத்தல்களை செய்தார்.

26 ஆம் திகதி இரவு சண்டை ஆரம்பிக்கப்படவிருந்தது. முதல் நாள் இரவு நாங்கள் சென்று இரவு முழுவதும் அவதானித்து விட்டு மறுநாள் பகலிலும் அவதானித்தோம். இருட்டிய பின் திரும்பி வந்து 50 பேர் கொண்ட அணியை அழைத்துக் கொண்டு தண்ணிக்குள்ளால் சென்றோம். செல்லும் போது ஆமி பரா வெளிச்சங்களை அடித்துக் கொண்டிருந்தான் நாங்கள் நீருக்குள் மறைந்துகொண்டு சென்றோம.; 50 பேரும் உள்நகர்ந்து சண்டை தொடங்கும் நேரத்திற்கு சென்று விட்டோம் சென்றவுடன் எதிரிக்கும் எமக்கும் இடையே ஐந்து மீற்றர் அண்மித்திருந்து கொண்டு குண்டு அடித்து சண்டையை ஆரம்பித்தோம். அப்போது துப்பாக்கிகளுக்குள் நீர் சென்றதால் அவை இயங்கவில்லை. அதனால் குண்டுகளையும் டொங்கான்களையும் பயன்படுத்தியே தாக்குதலை நடத்தினோம். தாக்குதல் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்குள் அதிலிருந்த ஏழு அரண்களையும் பிடித்து விட்டோம். இரண்டு ஆமி இறந்துவிட ஏனையோர் காயங்களுடன் தப்பி ஓடத் தொடங்கினார்கள். இரவு 1.30 தொடக்கம் காலை 6.00 மணிவரை இப்பகுதியை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம.;

6.00 மணிக்குப்பின் எதிரியிடமிருந்து எதிர்ப்பு வர ஆரம்பித்தது. அந்த நேரத்தில் இரண்டு பகுதிகளாலும் எதிர்ப்பு வர 6.00 மணி தொடக்கம் 8.00 மணிவரை குண்டுகளையும் டொங்கான்களையும் அடித்து பிடித்த பகுதியை தக்க வைத்துக் கொண்டிருந்தோம். பிறகு மூன்று பகுதிகளாலும் ஆமி பெருமளவில் எதிர்த்தாக்குதலை நடத்த தொடங்கினான். இதனால் நாங்கள் பிடித்த காப்பரண்களை விட்டு பின்வாங்க வேண்டிய நிலை உருவானது. ஆமி நெருங்கி வந்து எங்களை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு வந்துவிட்டான். அந்த நேரம் எமது போராளிகளில் 40 பேர் வரை வீரச்சாவடைந்துவிட்டனர். அந்த அணிக்கு தலைமை தாங்கிய சித்தா மாஸ்டரும் வீரச்சாவடைந்துவிட்டார். ஏனையோருக்கும் காயம் ஏற்பட்டுவிட்டது. என்னோடு ஒன்பது பேரையும் கூட்டிக்கொண்டு ஆமியின் முகாமிற்குள் கண்டல் பகுதியினு}டாக எங்களுடைய மற்றுமொரு அணியுடன் போய்ச்சேர்ந்தோம். பின்னர் அந்தப் பகுதியை அடுத்த கட்டங்களாக நடைபெற்ற சமரின் போது கைப்பற்றினோம் எனக் கூறினார்.

இதேவேளை கிளிநொச்சி படைத் தளத்தினுள் உட்புகுந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட வேவுப் போராளி கலையழகன் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். 1997 ஆம் ஆண்டு ஏழாம் மாத காலப் பகுதியில் கிளிநொச்சி இராணுவ முகாமை வேவு பார்க்குமாறு பணிக்கப்பட்டது. எனக்கு பரந்தன் பகுதியையும் உள்ளேயிருந்த முகாம்களையும் வேவு பார்க்குமாறு கூறி என்னோடு இன்னும் இரண்டு பேரும் சேர்க்கப்பட்டார்கள். நாங்கள் முகாமுக்குள் செல்வதற்காக சுட்டதீவுப் பகுதியில் இராணுவ காப்பரண் பகுதியில் முயற்சிகளை மேற்கொண்டு உட்புகமுடியாத நிலையில் திரும்பி வந்து ஒவ்வொரு பகுதியிலும் பாதை எடுப்பதற்காக முயன்று கொண்டிருந்தோம். அப்போது கண்டாவளையின் நீரேரியினு}டாக உட்செல்லுமாறு கட்டளை கிடைத்தது. அதனு}டாக உள்ளே நுழைந்து ஏறத்தாழ 20 கிலோமீற்றர் நகர்ந்துதான் பரந்தன் பகுதியை அடைந்தோம்.

முதல் நாள் வந்து பகல் ஆனையிறவுப் பகுதியில் தங்கிவிட்டு அடுத்த நாள் பரந்தனை நோக்கி நகர்ந்து வர நேரம் போதாமலிருந்ததால் அன்று பகலும் பரந்தனில் ஓரிடத்தில் மறைந்திருந்து விட்டு மறுநாள் தான் வேலை செய்ய ஆரம்பித்தோம். பரந்தன் சந்தியில் ஒரு முகாமும் கெமிக்கலுக்கு அருகில் ஒரு முகாமும் இருந்தது. அதேபோன்று பரந்தன் புளியடிப் பகுதியிலும் ஒரு முகாம் இருந்தது. அங்கு வேவு பார்த்தாலும் பகலில் தங்குவதற்கு இடம் இருக்கவில்லை.

பற்றைகள், புல் வெளிகளெல்லாம் எரிக்கப்பட்டிருந்தன. வாய்க்கால்களின் கரைகளில் இருந்த பற்றைகளினுள்ளேயே தங்கினோம். இவ்வாறு நான்கு நாட்களாக பரந்தன் பகுதியில் எத்தனை முகாம்கள் இருக்கின்றதென்பதை பார்த்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டோம். பின்பு பரந்தன் பகுதியின் பிரதான முகாம்கள் இரண்டையும் வேவு பார்க்குமாறு கூறப்பட்டது. அதற்கேற்ப மீண்டும் உள்நுழைவதற்காக சுட்டதீவு பகுதியால் போக முயற்சி செய்தோம்.

மூன்று நாட்களாக நீருக்குள்ளிருந்து அவதானித்து பாதை எடுத்து உள்நுழைய முயன்றபோது முதலாவதாக கம்பிச் சுருள்களைத் தாண்டி சென்றோம். அடுத்து கற்களால் அரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கற்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் தட்டுப்பட்டால் கற்கள் விழக்கூடியவாறு அமைந்திருந்தது. நாங்கள் அதற்கு மேல் ஏறிச்செல்ல வேண்டியிருந்தது. ஏறும்போது கற்கள் விழுந்தால் எதிரி வெளிச்சம் பாய்ச்சி தேடுவான். இவ்வாறு பலமுறை கற்கள் விழ அவற்றை எடுத்து அடுக்கிவிட்டு ஒருவரை ஒருவர் து}க்கித்தான் அடுத்த பக்கம் வைத்து ஒவ்வொருவராக ஏறிக் கடந்தோம். உள்ளே இறங்கினால் அப்பகுதி சேற்றுப்பகுதி அதனுள் இறங்க கடுமையான துர்நாற்றம் வீசியது. அதையும் சகித்துக்கொண்டு வந்து ஆனையிறவுப் பகுதியில் அன்று பகல் தங்கினோம். அடுத்தநாள் இரவு நேரடியாக பரந்தன் பகுதிக்கு வந்து முகாம்களைப் பார்க்கத் தொடங்கினோம்.


அந்த முகாம்களை சுற்றி இருந்த காவல் அரண்களை அவதானித்தோம். பின் முகாமின் சுற்றளவையும் எடுத்தோம். இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்த போது நான்கு நாட்களுக்குப் பின்பு எமக்கு குடிநீர் உணவுகள் எல்லாம் முடிந்து விட்டன. நீரை நாங்கள் கெமிக்கலுக்கு முன் உள்ள கோயில் கிணற்றில் எடுத்துக் கொள்வோம். ஆனால் உணவு இல்லாததால் அடுத்தநாள் அந்தகட்ட வேலையை முடித்துக்கொண்டு வெளியே சென்று பின் அடுத்த கட்ட வேலைக்காக உள்ளே வந்தோம். உள்நுழைந்து பரந்தனை நோக்கி நடந்து வரும்போது அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. அதனால் இராணுவ காப்பரணுக்கு சிறிது து}ரத்தில் இருந்த ஒரு சிறிய பற்றைக்குள் படுத்துக் கொண்டோம். விடிந்தவுடன் எதிரி தேடுதலை ஆரம்பித்தான்.

பரவலாக தேடுதலை நடத்தத் தொடங்கினான். அப்போது ~நாங்கள் இருந்த பற்றையை நோக்கி ஒரு ஆமி வேகமாக வந்துகொண்டிருந்தான். மிக அண்மையில் வந்து நின்று சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு குனிந்து பற்றைக்குள் நோட்டமிட்டவன் எங்களைக் கண்டு விட்டான். உடனே பதற்றமடைந்து பெரிதாக கத்திக் கொண்டு ஓடத் தொடங்கினான். நாங்கள் உடனே அந்த பற்றையிலிருந்து அடுத்த பக்கமாகப் பாய்ந்து ஓட அந்தப் பகுதியால் வந்த ஆறு இராணுவத்தினரும் எங்களைக் கண்டவுடன் ஓடத் தொடங்கினார்கள்.

பிறகு எங்களை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். நாங்களும் பதிலுக்கு சுட்டுக் கொண்டே ஓடி சிறிய வெளியைக் கடந்து சென்றபோது அடுத்த பகுதியில் குழுவாக நின்ற இராணுவத்தினர் எங்களை கண்டு விட்டார்கள். அவர்கள் எங்களையும் இராணுவம் என நினைத்து கிட்டே வருமாறு கையசைத்தனர். நாங்கள் இந்தப் பக்கமாக வருமாறு சைகை செய்துகொண்டு ஓடி தொடர் காட்டுப் பகுதியொன்றினுள் சென்று நடக்கத் தொடங்கினோம். அப்போது எங்களது தண்ணீர்க் கான்களும் விடுபட்டு விட்டன. நீர்த்தாகம் ஒருபுறமிருக்க கால்களிலிருந்த செருப்பும் விடுபட்டதால் முட்கள் குத்தியதோடு கடுமையான வெய்யில் காலமாகையால் கால்களில் கொப்புளங்களும் ஏற்பட்டு விட்டன.

இதற்கிடையில் எங்களுக்கு முதல் உள்நுழைந்த ஒரு அணியும் எதிரியின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் வெளியே சென்று விட்டனர். இரண்டு பேர் உள்ளே நிற்பதாக முன்னரே அறிந்திருந்தோம். அன்று நாங்கள் வெளியே தொடர்பு கொண்டபோது உள்ளே நின்ற அந்த இருவரிலும் ஒருவர் வீரச்சாவடைந்து விட்டார் என்பதையும் மற்றவர் தனித்து நிற்பதையும் அறிந்தோம். அவரை எங்களோடு இணைக்குமாறும் வெளியிலிருந்து கட்டளை கிடைத்தது. அவரை எங்கு சந்திப்பதென்ற தகவலும் தரப்பட்டது. அதன்படி அங்கு சென்று பதுங்கியிருந்தோம். அப்போது எமக்கு அருகால் மூன்று இராணுவத்தினர் வந்து நின்று சுற்றிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

பிறகு சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து தனது தோல்ப்பையை கழற்றி வைத்து விட்டு கீழே அமர்ந்தார். நாங்கள் அவரை அவதானித்தபோது அவர்தான் நாங்கள் தேடிவந்த போராளி என அடையாளம் கண்டுகொண்டு அவரையும் எங்களோடு இணைத்துக்கொண்டோம். அவரும் குடிநீரோ உணவோ இல்லாத நிலையில் சோர்வடைந் திருந்ததோடு உப்பு நீரை குடித்ததால் வயிற்றோட்டத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை எங்களோடு வந்த ஒருவருக்கும் வயிற்றோட்டம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் வேலையை செய்ய முடியாமல் திரும்பி வெளியே வந்து விட்டோம். இதற்குப்பிறகு அடுத்தடுத்த சில நகர்வுகளை மேற்கொண்டுதான் பரந்தன் பகுதியின் முகாம்களின் தரவுகளை எடுத்து முடித்தோம். இவ்வாறு விடுதலைப் புலிகளின் வேவு வீரர்கள் தம்மை வருத்தி பல இரவுகள் கண்விழித்து வரைந்தெடுத்த முழுமையான தரவுகள் அடங்கிய வரைபடங்களை அடியொற்றி தாக்குதல் அணிகள் நகரத் தொடங்கின.

16 கிலோ மீற்றர் சுற்றளவையும் 20 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்ட இம் முகாமில் நிலை கொண்டிருந்த சண்டை அனுபவம் மிக்க 4 பற்றாலியன் துருப்புக்களை அழித்தொழித்து நகரைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னரங்கநிலைகளை நோக்கி அணிகள் நகர்கின்றன. நகர்ந்து குறித்த நேரத்தில் நிலைகளை அடைந்த அணிகள் அடுத்த கட்டளைக்காக காத்திருக்கின்றன.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
கிளிநொச்சி படைமுகாமில் முன்னரங்க நிலைகளை தகர்த்தழிப்பதற்காக காத்திருந்த அணிகளுக்கு சண்டையை ஆரம்பிப்பதற்கான கட்டளை கிடைத்ததும் முன்னரங்க காவலரண்களைத் தாக்கியழித்து முன்னேறியவாறு அணிகள் நகரத் தொடங்கின. இப்படைத்தளத்தைச் சுற்றி 25 அல்லது 30 மீற்றருக்கு ஒரு காவலரணாக ஏறத்தாழ 500 இற்கு மேற்பட்ட முன்னணி பாதுகாப்பு அரண்கள் அமைந்திருந்தன. இவற்றோடு மண் அரண்கள், முட்கம்பிச் சுருள்கள் கண்ணிவெடிகள் எனப் பல பாதுகாப்பு அரண்கள் இருந்தன.

இவற்றைத் தகர்த்தழித்தவாறு முன்னேறிய புலிகள்; அணிகளின் அடுத்த இலக்காக கிளிநொச்சி 6 ஆம் வாய்க்காலில் அமைந்திருந்த 10 ஆவது சிங்கறெஜிமென்ற் - தளம் கணேசபுரப் பகுதியில் அமைந்திருந்த 4 ஆவது சிங்கறெஜிமென்ற் தளம், பிரதான பாதையோரமாக இருந்த 6 ஆவது கெமுனு வோச்தளம், திருவையாற்றிலிருந்த 7 ஆவது கெமுனுவோச் தளம் என்பன அமைந்திருந்தன. இவற்றோடு புலிகளின் தாக்குதல் வியுூகத்துக்கும் அமைந்திருந்த 9 ஆம் வாய்க்கால் பகுதியில் இருந்த 9 ஆவது கெமுனுவோச் தளமும், கரடிப்போக்கு மேற்குப் பகுதியிலிருந்த 7 ஆவது சிறிலங்கா காலாட் படைத்தளமும், மக்கள் வங்கிக் கட்டடத்தினருகிலிருந்த கிளிநொச்சி பிரிக்கேடின் தலைமையகமும் தாக்கப் படவேண்டிய இலக்குகளாகவிருந்தன. இவற்றோடு பல மினி முகாம்களும் இப்பெரும் படைத்தளத்தினுள் இருந்தன. இவற்றை வெற்றிகரமாக தாக்கியழிக்கும் பணியில் விடுதலைப் புலிகளின் பல படையணிகளும் தீவிரமாக செயற்பட்டன.

இச்சமரில் மகளிர் படையணிகளின் பங்கும் அளப்பரியதாகவே அமைந்திருந்தன. இச்சமரில் பங்குபற்றிய மகளிர் அணிகளில் 2 ஆம் லெப். மாலதி படையணியின் தளபதி கேணல் விதுசா அன்றைய போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் பற்றியும் போராளிகளின் தீரமிகு தாக்குதல்கள் பற்றியும் அவர்களின் தியாகங்களையும் இன்றைய நாளில் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.

2 ஆம் லெப் மாலதி படையணி மூன்று முனைகளில் இராணுவக் காப்பரண்களைத் தாக்க உட்புகுந்தது. படையினரின் வெளிப்புறப் பாதுகாப்பு வேலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதேவேளை கிளிநொச்சி இராணுவம் ஆனையிறவுக்குத் தப்பியோடாமலும், ஆனையிறவிலிருந்து கிளிநொச்சிக்கு உதவிப்படைகள் வராமலும் தடுக்கும் ஊடறுத்து வழிமறிக்கும் அணியாகவும் செயற்பட்டிருந்தது. நாங்கள் தாக்க வேண்டிய பகுதி வேவு பார்க்கப்படாத பகுதியாக விருந்தது. ஏனெனில் நாம் போவதற்காக வேவுப் போராளிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்த பகுதியில் இராணுவத்தினர் படைத்தளத்திற்கு வெளியே வந்து உலாவத் தொடங்கியிருந்தார்கள்.

எனவே திடீரென எமக்கு வேறு ஒரு பாதை சண்டை நடக்கவிருந்த அன்று மாலை காட்டப்பட்டது. நாங்கள் அருகே போய் தடைகளையும் காப்பரண்களையும் பார்க்க முனைந்தால் இப்பகுதிச் சண்டை குழம்பி விடும் ஆபத்து இருந்தது. பரந்த வெளியுூடே எமது உருவங்களை மறைத்தவாறு 50 கலிபர் போன்ற கனரக ஆயுதங்களுடன் நாம் நகரும்போது காப்பரண்களிலிருந்தே எதிரியால் தேடொளி பாய்ச்சப்பட்டது. வெளிச்சக் குண்டுகள் ஏவப்பட்டன. படைத் தளங்களோ மிக விழிப்பாக இருந்தன. இத்தனைக்கும் மத்தியில் தடை வரை நகர்ந்த பின்னர்தான் காப்புச் சூட்டாளர்களை நிலைப்படுத்துவதற்கான இடங்களை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.

காப்பரண்களைத் தாக்கி உள்நுழைந்து பக்கக் காப்பரண்களைக் கைப்பற்றியவாறு போகும்போது எமக்குப் பின்புறமாக பிளாட்டூன் தலைமையகத்திலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. நிலத்துக்குமேலே உயரமாக அமைக்கப்பட்டிருந்த காப்பரண்களிலிருந்து கனரகச் சூடுகளை இராணுவத்தினர் வழங்கிக் கொண்டிருந்தனர். காப்பரண் வரிசையிலிருந்து குறுக்கே வெட்டப்பட்டிருந்த நகர்வகழிக்குள்ளிருந்தும் (மூவிங்பங்கர்) படையினர் தாக்கினார்கள.; உள்ளிருந்த உயர்ந்த கட்டடமொன்றிலிருந்தும் கடும் எதிர்ப்பு வந்தது. அந்த நேரம் எங்களுடைய 50 கலிபர் தாக்குதல் போராளிகளின் திறமையான செயற்பாடு நிலைமையை மாற்றியது. ஓரிடத்திலிருந்து குறிப்பிட்ட ரவைகளை அடித்துவிட்டு உடனேயே தமது நிலையை மாற்றி மாற்றி தாக்குதலை மேற்கொண்டார்கள்.

எங்களுடைய இழப்புக்களை குறைத்து இராணுவத்தினரின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதில் இக்கனரக ஆயுத அணி பெரும் பங்காற்றியது. நீண்டு தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைச் சமரில் தொடர்ந்து பங்காற்றிய எமது கனரக ஆயுத அணியினர் குறுகிய காலத்தில் கடும் பயிற்சியைப் பெற்று மிகுந்த சிரமத்தின் நடுவேதான் சண்டைக்கான நகர்வைச் செய்திருந்தார்கள்.

திடீரென தேர்ந்தெடுக்கப்பட்ட எமது பாதைக்கருகே இராணுவம் வெளியே உலாவுகின்ற பகுதி இருந்தது. எனவே எமது கவனக்குறைவால் எதிரி விழிப்படைந்து சண்டை குழம்பி விடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருந்தோம். உடலின் உயரத்தை குறைத்து (பென்ட்மூவ்) மிக நீண்ட து}ரம் கனரக ஆயுதங்களுடன் நகருவது இலகுவான விடயமல்ல. மிகச் சிறப்பாக இச் சண்டையில் எமது போராளிகள் செயலாற்றியிருந்தார்கள்.

இச்சண்டையில் எமது போராளிகளின் மனவுறுதியை மேம்படுத்தும் தியாகங்கள் பலவும் நடந்தேறின. அதாவது ஊடறுத்து உள்நுழைந்து வழிமறிக்கும் அணியோடு மழையில் நனைந்தபடி பயிற்சி பெற்ற காலத்தில் லெப். கேணல் செல்வியின் தலையிலும் உடலின் பல பாகங்களிலும் இருந்த ஷெல்லின் சிதறு துண்டுகளின் தாக்கத்தால் ஒரு கையும் காலும் முழுமையாக இயங்காதிருந்தது. பயிற்சிக்குப் பொறுப்பாக இருந்த தளபதி இவரை வெளியே எடுக்குமாறு கூறியிருந்த போதும் தன்னால் செய்யமுடியும் என்று செல்வி வர மறுத்துவிட்டார்.

கிளிநொச்சி மீட்பு நடவடிக்கையில் தான் பங்குபற்ற வேண்டும் என்று உறுதியோடு சென்ற அவர் நடவடிக்கையின் முடிவில் அவிழ்த்துவிட்ட விலங்குப்பட்டி போல எமது ஊடறுப்பு நிலைகளைக் கடந்து இராணுவம் ஓட முனைந்தபோது தன்னையும் பாராமல் எறிகணைகளை வீசுமாறு கேட்டு பல இராணுவத்தினரை அழித்ததோடு தானும் வீர வரலாறானார்.

செல்வியோடு நின்ற வீரவேங்கை அக அன்பு (அகன்பு) வைப் பற்றியும் நான் குறிப்பிட வேண்டும். புதிய போராளியாக ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கை முனைக்கு வந்த இவரை அடர்காடு அச்சமடையச் செய்துவிட்டது. செல்வியின் அணி வழிமறிப்புப் பயிற்சியில் ஈடுபட்டபோது அகன்புவும் பயிற்சியில் ஈடுபட்டார். ஊடறுப்பு நடவடிக்கை சண்டையின் மிக முக்கியமான செயற்பாடு என்பதால் அதில் பங்கேற்பவர்கள் உறுதி மிகுந்தவர்களாக இருக்க வேண்டும்.

எனவே அகன்புவைப் பயிற்சியெடுக்க வேண்டாமென்றும் அவருக்கு பதிலாக வேறொரு போராளியை விடுவதாகவும் நான் கூறிய போது அவர் மறுத்து விட்டார். தான் திறமையாக நடவடிக்கையைச் செய்வேன் என்று கூறினார். சண்டையில் இராணுவத்தினர் பெருந்திரளாக ஓடிய அந்த சந்தர்ப்பத்தில் தன்னிடமிருந்த ரவைகள் முடிவடையும் வரை சுட்டுவிட்டே வீரச்சாவடைந்தார். இவருடைய மனவுறுதி புதிய போராளிகளின் உறுதியான செயற்பாட்டுக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தது.

இந்தச் சண்டை எமக்கு ஒரு மாறுபட்ட கள அனுபவத்தை ஏற்படுத்தியது. அதாவது இச்சமருக்கு அண்மைக்காலங்களில் தாண்டிக்குளம் உட்பட எமது பல ஊடுருவல் தாக்குதல்கள் காடுகளிலேயே நடந்தன. காட்டுப் பகுதியில் எதிரியின் நிலைகளுக்கு அருகே நெருங்கிப் போய் வேவு பார்த்துத் தாக்கலாம். காட்டுச் சண்டைகளுக்குப் பழக்கப்பட்ட அணிகள் பரந்த வெளியால் நகர்ந்து கட்டடங்களிடையே சண்டை பிடித்தமை. வேறுபட்ட அனுபவம். இரவு வேளையில் நாம் காப்பரண்களைக் கைப்பற்றி வெளியான பகுதியில் நிலைகொள்ள பகல் வெளிச்சத்தில் மறைந்திருந்த இராணுவம் எம்மைத் தாக்கியதில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்டன.

காட்டுச் சண்டைகளில் இத்தகைய நிலை இல்லை. எனவே வெளியான பகுதிகளில் நின்று எமதணிகள் கட்டடப் பகுதிக்குள் நின்ற இராணுவத்தோடு சண்டையிட்டன. அந்த நேரத்தில் ஒரு மாறுபட்ட கள அனுபவம் மிகப் பலங் கொண்ட படைத்தளமாக கருதப்பட்ட ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து எந்த நேரமும் உதவி பெறக்கூடிய நிலையிலிருந்த கிளிநொச்சிப் படைத்தளத்தை முற்றாக அழித்ததும், பெரியது எண்ணிக்கையில் போராளிகள் வழிமறிப்பு அணியாக ஊடுருவி நின்றதும் வேறுபாடான அனுபவங்களே. இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு வழிமறிப்பு அணி மிகுந்த பங்காற்றியது. இச்சண்டைக்காக அவர்கள் எடுத்த பயிற்சி கடினமானது.

ஜெயசிக்குறு இராணுவத்தினரின் எறிகணை வீச்செல்லைக்குள் விமானக்குண்டு வீச்சுக்களிடையே மாற்ற உடையுமின்றி மழையில் நனைந்து வெயிலில் உலர்ந்தபடி பயிற்சி எடுப்பதும் பின்பு இரவு வேளைகளில் காப்பரண்களில் காவல் செய்ததுமாய் மிகக் கடுமையாக இவ்வெற்றிக்காக உழைத்திருந்தார்கள். நனைந்த குளிருக்குச் சூடாகத் தேநீர் குடிக்கக் கூட வசதி இருக்கவில்லை.

வழிமறிப்பு அணியினரின் ஆயுதங்களுக்கேற்ப நிலைப்படுத்தல், இவர்களுக்கான ஆதரவுச்சூடு என அனைத்தையும் தலைவர் அவர்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு நெறிப்படுத்திப் பயிற்சி வழங்கியமையானது சண்டையை மிகவும் இலகுவாக்கியது. ஏனெனில் சண்டை தொடங்கி மூன்று நாட்களின் பின்னர் முடியும்வரை வழிமறிப்பு அணியினர் தமது நிலைகளிலிருந்து அசையவில்லை. சத்ஜெய - 1, 2, 3 எதிர் நடவடிக்கைகளில் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழாதிருக்கப் போராடியது. மறுபடி பரந்தன் கிளிநொச்சி (1998.02.01) இல் ஊடுருவித் தாக்குதல் மூலம் நிலத்தை மீட்க முயன்ற நடவடிக்கையில் பங்கேற்றதான நினைவுகள் பயிற்சியின் போது எமதணிகளுக்கு உரமூட்டின.

யாழ். நெடுஞ்சாலைக்கு இடப்புறமாக புகையிரதப் பாதையருகே 2 ஆம் லெப். மாலதி படையணியைச் சேர்ந்த ஜமுனாவின் அணி உடைத்து உள்நுழைந்தது. அயலில் வேறு அணிகள் எடுத்த பாதைகள் போராளிகளிடமும் இராணுவத்தினரிடமும் கைமாறியபடியிருந்தாலும் தமது பாதையை அவர்கள் தக்க வைத்திருந்தார்கள். பல நடவடிக்கைகளைச் செய்வதற்கு அவர்களது பாதை பேருதவியாக இருந்தது. மிகக் குறைந்தளவு போராளிகளே இவ்வணியிலிருந்தனர். மிகக் குறைந்தளவு பயிற்சியையே அவர்கள் எடுத்திருந்தார்கள். என்னுடைய தொடர்பேதுமின்றி தனியாகவே அவர்கள் திறம்படச் செயலாற்றினார்கள்.

இவ்வெற்றிச் சமரில் மகளிர் அணியின் 2 ஆம் லெப் மாலதி படையணி, மேஜர் சோதியா படையணி, கப்டன் அன்பரசி படையணி, சிறப்பு (மகளிர்) படையணி, புலனாய்வுத்துறை மகளிர் தாக்குதலணி போன்ற பல மகளிர் படையணிகள் பல முனைகளில் வெளிப்புறக் காப்பரண்களைத் தாக்கி உள்நுழைந்ததோடு வழிமறிப்பு அணியாகவும் பங்காற்றினார்கள். மிக அதிகளவான பெண் போராளிகள் இச்சமரில் பங்காற்றினார்கள். நடவடிக்கையின் ஆரம்பத்திலிருந்து இறுதி தேடுதல் நடவடிக்கை வரை அவர்களின் பணி தொடர்ந்தது எனக் கூறினார்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#3
நன்றி வியாசன் தகவல்களுக்கு....
புலனாய்வுக்காக செல்லும் போராளிகளின் துணிவு ... அதை சொல்ல வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை... அதுவும் இராணுவத்தின் காம்பிக்குள்ளே சென்று தகவல்களை சேகரிப்பது என்பது சதாரண விடயம்

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)