Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!
#1
'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற தலைப்பில் பாரதியார் ஒரு பாடல் பாடியுள்ளார். அது 'பாரதி' திரைப்படத்திலும் வந்து இப்போது பலரும் அறிந்த ஒரு பாடலாகி விட்டது.

மகாகவி புதுவையில் இருக்கும் போது தத்துவ விசாரணையில் மிகுதியும் ஈடுபாடு கொண்டிருந்தார். அப்போது புதுவையில் வாழ்ந்து வந்த அரவிந்தருடன் அடிக்கடி தத்துவங்களைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார் என்றும் அறிகிறோம்.

மாயாவாதம் எனப்படும் அத்வைதத் தத்துவம் இந்திய இறைத்தத்துவங்களிலேயே மிகப் புகழ் பெற்றது. இந்தத் தத்துவப்படி இங்கு உள்ளதெல்லாம் இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. பெயர் உருவம் உள்ளதாய்க் காண்பதெல்லாம் மாயை. ப்ரம்மம் சத்யம்; ஜகத் மித்யை - இறைவன் மட்டுமே உண்மை, இந்த உலகம் பொய் என்பது அதன் கருத்து.

பாரதியார் அந்தக் கருத்தைப் பற்றி இந்தப் பாடலில் பாடி பாடலிறுதியில் தன் கருத்தை வலியுறுத்துகிறார்.

<b>நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?</b>

இங்கு உள்ளதெல்லாம் இறைவடிவம் என்பதில் பாரதியாருக்கு எந்த அளவும் சந்தேகம் இல்லை. ஆனால் பெயரும் உருவமும் கொண்டு தோன்றுவதெல்லாம் பொய் என்னும் கொள்கையைத் தான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நிலையாய் ஓரிடத்தில் நிற்கும் மலைகள், மரங்கள் போன்றவற்றை 'நிற்பதுவே' என்றும், நடக்கும் விலங்கினங்களை 'நடப்பதுவே' என்றும், பறக்கும் பறவையினங்களை 'பறப்பதுவே' என்றும் விளித்து, உங்களை நான் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறேனே நீங்கள் என்ன நான் காணும் சொப்பனமா? எனக்கு வந்துள்ள அழகான கனவா? கானல் நீர் போல், இல்லாத ஒன்று இருப்பது போல் தோன்றும் தோற்ற மயக்கங்களா? என்று கேட்கிறார்.

பிறந்த நாள் முதல் எத்தனையோ விஷயங்களை கற்கிறோம். மற்றவர்கள் அனுபவங்களைக் கேட்டு அதிலும் பல பாடங்களைப் பெறுகிறோம். இப்படி கற்றும் கேட்டும் உள்ள விஷயங்களை மனதில் கருதி அசை போட்டு ஒரு நிலையான கருத்தை அடைகிறோம். இப்படி நாம் நாள்தோறும் செய்பவையெல்லாம் வெறும் அற்ப மாயைகளா? இவற்றால் எந்த பயனும்மில்லையா? கற்பதிலும் கேட்பதிலும் மனதில் கருதுவதிலும் எந்த ஆழ்ந்த பொருளும் இல்லையா? என்கிறார்.

<b>வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?</b>

அதிகாலையிலும் நடுப்பகலிலும் பொன்மாலைப் பொழிதினிலும் வானம் தீட்டும் வண்ண வண்ண ஓவியங்களைக் கண்டு ஆச்சரியமும் ஆனந்தமும் எத்தனை முறை அடைந்துள்ளோம்? அதிகாலையில் வீசும் இளவெயில் உடலுக்கும் மனதிற்கும் எத்தனைப் புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதை அனுபவித்துள்ளோம் அல்லவா? பசுமையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள கானகத்தைக் கண்டால் மனது எப்படி துள்ளிக் குதிக்கிறது. இவையெல்லாம் கானலின் நீர் போல் தானோ? ஒன்றை பிறிதொன்றாய்க் காணும் காட்சிப் பிழைதானோ? என்கிறார்.

இவ்வுலகில் எந்தனையோ மாந்தர் வாழ்ந்தனர். பெரிய பெரிய வீரர்களும் பேரரசர்களும் பேரறிஞர்களும் செயற்கரிய செய்தவர்களும் எத்தனையோ பேர் வாழ்ந்துள்ளனர். ஆனால் அவர்களெல்லாம் வெறும் கனவினைப் போல் இப்போது இல்லாமல் போனார்கள். அது போல் நானும் ஒரு கனவினைப் போல் ஒன்றும் இல்லாமல் போய்விடுவேனோ? இந்த உலகம் உண்மையிலேயே பொய்தானோ? என்கிறார்.

'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்னும் பொய்யாமொழிக்கேற்ப அந்த செயற்கரிய செய்தவர்களெல்லாம் இப்போது இல்லாமல் மரித்து புதைந்து அழிந்து போனாலும், அவர் செய்த செயல்களின் பலன்களை அவர்களின் பின்னால் வந்த பல தலைமுறையினர் அனுபவிப்பதும் அவர் தம் புகழுடம்பால் என்றும் வாழ்வதும் உண்மையாதலால் அவர்கள் வெறும் கனவாய்ப் போய்விடவில்லை. இந்த ஞாலமும் பொய்யில்லை என்பது இப்பாடலில் தொக்கி நிற்கும் கருத்து என நினைக்கிறேன்.

<b>காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?</b>

ஒரு நாளிலேயே காலை, பகல், மாலை, இரவு, 24 மணி நேரம், அதைவிட சிறிய நேர பாகுபாடுகள், நாள் என்பதைவிடப் பெரிய நேர பாகுபாடுகள் - வாரம், மாதம், வருடம், நூற்றாண்டு என்று காலத்தைப் பற்றி நாம் எல்லோரும் ஒரே நினைவு கொண்டுள்ளோம். அதனால் தான் உலக நிகழ்ச்சிகள் தடை இல்லாமலும் குழப்பம் இல்லாமலும் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் காலம் இறைவனின் உருவம் என்றொரு கொள்கையும் உண்டு.
இப்படி பல வகையாக பிரிக்கப்பட்ட கால அளவுகளில் நாம் எத்தனையோ காட்சிகளைக் காண்கிறோம். அவை எத்தனைக் காலம் ஆனாலும் நம் நினைவில் நிற்கிறது. அப்படி நிற்கும் காலத்தைப் பற்றிய நினைவும் அதில் தோன்றும் காட்சிகளைப் பற்றிய நினைவுகளும் பொய்யா? என்கிறார். நல்லது, தீயது, சாந்தம், வேகம், அறியாமை என்று நாம் காணும் பல விதமான குணங்களும் பொய்களோ? என்கிறார்.

விதை உண்மை. அப்படியென்றால் அதிலிருந்து தோன்றும், சோலையில் உள்ள மரங்கள் எல்லாம் கூட உண்மையாகத்தானே இருக்க வேண்டும். இறைவன் உண்மை. அந்த இறைவனிடமிருந்து தோன்றிய, தோன்றும், தோன்றப்போகும் உலகும் அதில் வாழும் உயிர்களும் எப்படி பொய்யாக முடியும். உண்மையாம் இறைவனிடமிருந்து தோன்றுவதால் அவைகளும் உண்மையாகத் தானே இருக்கவேண்டும். அவை பொய் என்றால் அதனை ஒரு பேச்சாக மதிக்க முடியுமா? என்கிறார்.

<b>காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.</b>

இந்த உலகில் எதுவுமே நிலையில்லை; எல்லாம் ஒரு நாள் அல்லது ஒரு நாள் மறைந்து போகும் என்றால், அது சரி, இந்த உலகில் எதுவுமே புதிதாய் தோன்றுவதில்லை; அதனால் மறைந்து போகும் அவையெல்லாம் மீண்டும் தோன்றுமன்றோ? அதனால், நிலையில்லை என்பதால் அவற்றை பொய் எனலாகுமோ? அப்படி அது பொய் என்றால், நல்வினை தீவினை என்று நாம் செய்யும் செயலுக்கேற்ப வந்துறும் விதி எப்படி தொடர்ந்து வருகிறது. கண நேரத்தில் தோன்றி மறைபவை இக்காட்சிகள் என்றால், நாம் செய்யும் செயல்களும் கண நேரத்தில் தோன்றி மறையும் பொய்களாய்த் தானே இருக்க வேண்டும். அப்படிப் பட்ட பொய்களின் பலனை நாம் எப்படி செய்த வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கிறோம்? அவ்விதம் விதி தொடர்ந்து வந்து ஊட்டுவதால், தோன்றி மறையும் இவை யாவும் நிலையில்லாதவை மட்டுமே; பொய்களல்ல, என்கிறார்.

நாம் காண்பதெல்லாம் உறுதியானவை; பொய்களில்லை. ஏனெனில் அவை யாவும் சக்தியின் உருவங்களாம். அதனால் இந்த காட்சிகளெல்லாம் அந்த ஆதி சக்தியைப் போலவே நித்தியமானவை என்று கூறி தன் கருத்தை வலியுறுத்துகிறார்.

நன்றி>பாட்டுக்கொரு புலவன் பாரதி
.

.
Reply
#2
பாரதியின் கவிதைகள் தரும் வாழ்வியல் வழிகாட்டல்களை விளக்கும் உங்கள் பதிவுக்கு நன்றிகள் பிருந்தன்..!

நாங்கள் பழித்துப் பழையன என்று புறக்கணிப்பவை பல இன்று வேறு இடங்களில் அவற்றின் முக்கியத்துவம் கருதி விஞ்ஞானரீதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சில விடயங்கள் நிரூபிக்கப்படுகின்றன..! அந்த வகையில் தியானம் என்பதும் எமது வாழ்வியல் வழமைகளில் ஒன்று...! அண்மையில் அது கூட மூளையின் வளப்படுத்தலுக்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது..!

நாங்கள் எதையுமே ஆய்வு ரீதியாயாக அணுகியதில்லை...ஒரு தனிநபர் தனது சொந்த எண்ணங்களை வெளியிட அது கொஞ்சம் வழமைக்கு மாறாக இருந்துவிட்டால் அதில் புதுமை புரட்சி என்றே சிந்திக்கின்றோம்...காலம் காலமாக இதுதான் தொடர்கிறது..! எதிலும் உருப்படியான ஆய்வுரீதியான முடிவெடுப்பவர்களாக இல்லை..! அந்த வகையில் பாரதியில் கவிதைகளும் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டியவை...! அவற்றின் ஆழம் சமூகத்துக்கு தெளிவாக சொல்லப்பட வேண்டும்...! நீங்கள் தந்த கருத்து அதற்கு நல்ல உதாரணம்..! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)