Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்
#1
பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்

போன கிழமை பல்லின மக்களுக்கானதொலைக்காட்சி ஒண்டில அதிகாலை ஒரு மணிக்கு பிரப இயக்குனர் சத்யஜித் ரேயின் "பதேர் பாஞ்சாலி" என்ற படம் போடுவதாகச் செய்தி கிடைச்சது.

பொதுவா இந்த தொலைக்காட்சியை இரவு பத்து மணிக்குப் பின்னால பார்ப்பது அறிஞ்சால் மெல்பனில இருக்கிற என்ர கூட்டாளி தாஸ் கொடுப்புக்குள்ள சிரிப்பான். ஏனெண்டால் பத்து மணிக்கு மேல அவங்கள் போடுற படங்கள் மொழி வித்தியாசமில்லாம வெளிப்படையான பாலியல் காட்சிகளை வாரி இறைக்கும். இந்தமாதிரி விசயத்தில பிரென்சு படம் என்றாலும் சீனப் படம் என்றாலும் அவங்கட கொள்கை ஒண்டு தான்.


இருந்தாலும் அத்தி பூத்தப் போல இப்பிடி " பதேர் பாஞ்சாலி" போலப் படங்களும் வருவதுண்டு.
நீண்ட நாளாத் தமிழ்ப் பலசரக்கு கடையள்ள "மெட்டி ஒலி", " அண்ணாமலை" இத்தியாதி கசற் மலைகளுக்க தேடினாலும் கிடைக்காத இப்பிடியான படங்களைப் பார்க்க இதுதான் சந்தர்ப்பம் எண்டு, படத்தைப் பதிவு பண்ணி அடுத்த நாள் பார்க்க முடிஞ்சுது. சரி இனிப் படம் எப்பிடி எண்டு பார்ப்பம்.

1955 ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலி" வங்காள மொழியில் வந்தது. பாட்டு, சண்டை, குழு நடனம் அல்லது குலுக்கல் டான்ஸ் போன்ற சராசரி இந்திய மசாலா சினிமாச் சமையலுக்குத் தேவையான ஒரு ஐட்டமும் இதில கிடையாது ( அடச் சீ, இவ்வளவும் இல்லாமப் ப்டம் பாக்கோணுமோ எண்டு தாஸ் முணுமுணுப்பது போல ஒரு பிரமை). படம் 115 நிமிசம் கறுப்பு வெள்ளையில ஓடுது.
பதேர் பாஞ்சாலி என்பதன் தமிழ் விளக்கம் " சின்னஞ் சிறு வீதியின் பாட்டு" (Song of the Little Road)
சரி, இனி இப்படத்தின் கதையைச் சொல்லுறன்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சூழலில் ஒரு மிகப் பின் தங்கிய பெங்காலிக்கிராமம்.
அந்தக் கிராமத்தில் வாழும் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம், குடும்பத்தலைவன் ஹரிகர் , அவன் மனைவி சர்பஜயா, மூத்த மகள் துர்கா, இளையவன் அபு, இவர்களின் வறுமை வருமானத்திலும் பங்கு போடும் ஹரிகரின் வயதான சகோதரி. இவர்களின் ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ர்புகள், ஏமாற்றங்கள் தான் கதைக் கருவை ஆக்கிரமிக்கிறது.

தன் கணவன் ஹரிகரின் அப்பாவித்தனத்தால், ஏமாற்றப்பட்டு தம் சொத்தை இழக்கும் இயலாமை,
ஏமாற்றிய குடும்பம் வைத்திருக்கும் தம் காணியில் மகள் துர்கா கொய்யாப்பழம் திருடுவதும், வீட்டுக்காரி வந்து கூச்சலிடும் போது மகளுக்காகப் பரிந்து பேசுவது, பின் அவள் போனதும் துர்க்காவைத் தண்டிப்பது, கணவன் வந்ததும் தம் இயலாமையை நொந்து கொள்வது என்று சர்பஜா பாத்திரத்தில் வரும் கருணா பனர்ஜி ஒரு சராசரி இந்திய அல்லது ஈழத்துக் குடும்பத்தலைவியை நினைவு படுத்துகிறார். குடும்பத்தலைவன் ஹரிகர் இந்தக்குடும்பத்தை விட்டு அடிக்கடி வேலைதேடி நாட் கணக்கில் அலையும் போது தான் ஒருத்தியாக அவள் போராடுவதும் வெகு இயல்பு.


கொய்யாப் பழம் திருடுவது, தாயிடம் எவ்வளவு ஏச்சும், அடியும் வாங்கினாலும் தன் பால்யப் பருவத்துக்கே உரிய ஆசைகளை அடக்க முடியாத துர்க்கா பத்திரம். திருடிய கொய்யாப்பழத்தை அப்படியே தன் முதிய மாமியாரிடம் (அப்பாவின் சகோதரி) கொடுப்பதும், மாமியார் தன் தாயிடம் சண்டை போட்டுக்கொண்டு வேட்டை விட்டுப் போகும் போது கையில் பிடித்துக்கூட்டி வருவது, ரயிலைக் காட்டும் படி கேட்ட தன் தம்பியின் கைபிடித்து நெல் வயல் வெளியே கொண்டு காட்டுவது என்று அவளின் பல பரிமாணங்கள் காட்டப்படுகின்றன.

பிபூதி பூஷன் பானர்ஜி இன் மூலக்கதையும், ரவி ஷங்கரின் இசையும் படத்திற்கு மிகப்பலம்.
செல்வந்த வீட்டில் களவான முத்து மாலையைத் துர்கா தான் திருடினாள் என்று பழிச்சொல் வரும் போது அவளுக்காக நாமும் பரிந்து பேசத் தோன்றுகின்றது. ஆனால் அவள் இறந்த பின்னர் அவள் தம்பி அபு தற்செயலாகக் காணுவதும், பின் யாரும் பார்க்காமல் இருக்க அதை நீரொடையில் வீசுகின்றான்.
அந்தக் காட்சி காட்டப்படும் போது, முத்து மாலை பொத்தென விழுவதும், பின் சிறிய சலசலப்பின் பின் சலனமற்றுத் தோன்றும் நீரோடை ஒரு அழகான கவிதை

.இந்தப் படத்தைப் பார்த்த போது ஒரு விசயம் சிந்தனைக்கு வந்தது. நல்ல படைப்பாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையின் பரிமாணங்களைச் செயற்கை இல்லாமல் அப்படியே தந்திருக்கிறார்கள். தோல்விகண்டவர்கள் பலர் மிதமிஞ்சிய செயற்கையைக் கொடுத்து அடையாளம் இழந்து போனார்கள்.

எல்லாம் இழந்து தனிமரமாக இருக்கும் குடும்பத்தலைவியும், மகன் அபுவும் வேலை தேடி உழைத்த பணத்துடன் வரும் கணவன் வந்ததும் ஊரைவிட்டு போக முடிவெடுக்கும் போது தான் ஒதுங்கி இருந்த அயலவர்கள் உதவுவதுபோல வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து வந்த துன்பச் சறுக்கல்களோடு பெனாரஸ் நகர் நோக்கி புதிய வாழ்க்கை ஒன்றுக்காக அவர்களின் கட்டி வண்டி பயணிக்கின்றது.


விமர்சனத்தின் இறுதிக்கு வரும் முன்னர் இன்னொரு பாத்திரத்தையும் பார்ப்போம்.
அது படத்தில் வரும் வயதான கிழவி (துர்காவின் தகப்பனின் சகோதரி) ஊனமான கண்ணுடன் இடுக்குப் பார்வை பார்த்துக்கொண்டே தன் தம்பி வீட்டில் களவெடுத்துத் தின்பதும், தம்பியின் மனைவியின் வசவுகளைக் கேட்டுப் பழிப்புக்காட்டுவதும், கோபித்துக்கொண்டு அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி இன்னொரு வீட்டில் அடைக்கலம் போகும் போது " கொஞ்ச நாளைக்குத்தான்" என்று இரஞ்சுவதும் மிக இயல்பு. சண்டி பாலா தேவி என்ற முதுபெரும் நடிகை சிறப்பாகவே அதைச் செய்திருக்கிறார்.

தம்பியின் மனைவி துரத்திய போதும் அவர்களுக்குப் பிள்ளை பிறந்த போது தன் வைராக்கியத்தையும், அவமானத்தையும் மூட்டை கட்டி விட்டு எதுவும் நடக்காதது போல், மீண்டும் வந்து குழந்தையை கொஞ்சுவதும், தன் வாழ்வின் இறுதி நிமிடங்களில் நைந்து போன சேலையைப் போல கேட்பாரற்று காட்டில் இறப்பதும் நம் இதயத்தை ஊசியால் குத்துவது போல...
தமது அந்திம காலத்தில் சொந்தங்களை இறுகப் பற்றி வாழ நினைக்கும் முதுமையும்
அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளாத சமுதாயமும் ஒரு சக்கரம் போல. அதே நிலை இவர்களுக்கும் இவர்களின் முதுமையின் விளிம்பில் வருவது தவிர்க்க முடியாத உலக நியதி.

இந்தப் படத்தில் வரும் வறட்டு வைராக்கியம் உள்ள அந்தக் கிழவிப் பாத்திரத்தைப் பார்த்த போது என் பெரிய மாமியின் குணாதிசயம் நினைவுக்கு வந்தது.
என்ர அப்பாவின் மூத்த சகோதரியான அவர் நான்கு இளைய சகோதரிகளின் வாழ்வுக்காக அப்புவுடன் சேர்ந்து தன் இளமையில் இருந்தே தோட்ட வேலைகளிலும், வறுமையின் போராட்டத்திலும் பங்கு போட்டவர். தன்ர திருமண வாழ்விலையும் குறுகிய கால அனுபவம் தான் அவவுக்குக் கிடைச்சது. மல்லிகைப் பூ வாசனைய விட அவர் அதிகம் மணந்தது எங்கட தோட்டத்தான் கோடா போட்ட புகையிலையாத் தான் இருக்கும். அவவின்ர வயதில முக்கால்வாசிப் பாகம் ஆச்சியைக் (அவரின் அம்மா)
கவனிப்பதிலேயே கழிந்தது. இப்படியான தொடர்ச்சியான போராட்டமும், வாழ்வின்ர நெருக்கடிகளும் அவரை ஒரு போர்க்குணம் மிக்க மனுசியாக மாற்றி விட்டது.
நான் ஊரில் இருந்த காலத்தில ஆச்சி வீட்டை போக இலேசான பயம் எப்பொழுதும் அடி மனசில இருக்கும். தப்பித் தவறி ஏதாவது என் சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களைச் செய்தால் போதும், " இனி இஞ்ச ஒருத்தரும் வரத்தேவேல்லை" என்று தொடங்கி வார்த்தைகள் அனல் பறக்கும். தடுக்க வரும் ஆச்சிக்கும் " ஆச்சி நீ சும்மா இரணை" என்று தொடங்கி சரமாரியான சொல் கணைகள் வந்து விழும். என்ர அப்பாவுடன் இடைக்கிடை அவருக்கு வரும் கோபதாபங்களிலும் பலிகடா நாங்கள் தான். ஆக மொத்ததில் என்ர இளமைப் பிராயத்து மன விம்பத்தில ஒரு பயங்கரமான இடம் அவருக்கு இருந்தது.

காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. ஆச்சியும் போய்விட்டா.
கொழும்பில் இருந்த 2 வருசங்களையும் புலம் பெயர்வில் 10 வருசங்களையும் தின்றுவிட்ட காலங்களையும் கடந்து இந்த ஆண்டு ஊருக்குப் போனேன். பெரியமாமி எப்படி இருப்பா, இப்பவும் அப்பிடியா என்று மனதுக்குள்ள நினைச்சுக்கொண்டு ஏஷியா பைக்கை தாவடியை நோக்கி மிதித்தேன்.

ஆச்சி வீடுப் படலையைத் திறந்தேன்.
"
"என்ர அப்பு வந்திட்டானோ" என்று ஒரு குரல் கேட்டது.
எட்டிப் பார்த்தேன். காலம் கொடுத்த பரிசான வில் போன்ற கூன் முதுகுடன் என் பெரியமாமியே தான்.
அவரின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்து வரவா என்று கேட்பது போல இருந்தது.
என்ர கன்னத்தைத் தடவி ஒரு குழந்தையைப் போல அழகு பார்த்தார்.
என்னை அந்த மண் திண்ணையில் இருத்தி, தளர்ந்த அவரின் நரம்பு விழுந்த கை என்கையைப் இறுகப் பிடித்துக் கொண்டது. என்ர வெளிநாட்டுப் புதினங்களை கேட்கும் பாவனையில் தன் பாவனையை ஏற்படுத்திக்கொண்டார். என் உள் மனதுக்குத் தெரியும் அவர் என்னுடைய புதினங்களை கேட்பதை விட என் அருகாமை தான் அவருக்குத் தேவைப்பட்டது.
" போட்டு வாறன் பெரியம்மா" என்ற போது " ஓமப்பு, நல்லா இரு மேனை"என்று அவரின் உதடும் " போகாதை" என்பது போல அவரின் மனம் சொல்லுவதைக் கண்ணும் வெளிப்படுத்தியது.


முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், விலகிப் போன பந்தங்களையும் தேடி அது ஒடுகின்றது, கிடைக்காத பட்சத்தில் கழிந்து போன வாழ்வியலின் நினைவுகளை அசை போட்டு அது எஞ்சிய அந்திம காலத்தை அது கழிக்கின்றது.

வாழ்க்கைப் பயணம் என்பது ஒரு பதேர் பாஞ்சாலி, அதாவது எமது எண்ணங்கள் போட்ட சின்னஞ்சிறு பாதையில் வரும் பாட்டு அது.

மேலதிக படங்களுடன்
http://kanapraba.blogspot.com/
Reply
#2
கான பிரபா உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.
மேலும் இது போன்ற நல்ல திரைப்படங்களுக்கான விமர்சனக்களை எதிர் பாக்கிறோம்.தலை சிறந்த இயக்குனர் அகியோ குரசேவா,சியாம் பெனகள்,அடூர் கோபாலகிரிஸ்ணன் போன்றோரின் படங்களின் விமர்சனங்களையும் எதிர் பாக்கிறோம்.முடிந்தால் எழுதுங்கள்.
Reply
#3
நிச்சயமாக, நன்றி நாரதர்.
Reply
#4
மறைந்த மாபெரும் திரைமேதை சத்யஜித்ரே அவர்களது
<img src='http://photos1.blogger.com/blogger/2746/1940/1600/pather_12.jpg' border='0' alt='user posted image'>
பாதர் பாஞ்சாலியை
மிக அருமையாக உங்கள் வாழ்வோடு இணைத்து எழுதியிருக்கிறீர்கள்.

நன்றி.

வாழ்த்துக்கள் கானபிரபா.
Reply
#5
பாதர் பாஞ்சாலியை
மிக அருமையாக உங்கள் வாழ்வோடு இணைத்து எழுதியிருக்கிறீர்கள்.

நன்றி அஜீவன்

வாழ்த்துக்கள் கானபிரபா.
நன்றி
Reply
#6
விமார்சனத்திற்கு நன்றி. உங்களுடைய வாழ்வில் சந்தித்த அந்த பயங்கரமானவர் எப்படி மாறி இருக்கிறார் என்பதையும் அழகாக எழுதியிருக்கிறிர்கள். நன்றி
இந்த படம் இன்னும் பார்க்கலை. ஆனால் உங்கள் விமர்சனத்தை பார்க்கும் போது பார்க்க வேணும் என்றா உணர்வு ஏற்படுது... நன்றி.

Reply
#7
வாழ்த்துக்கள் கானபிரபா....நன்றிகள் அருமையான விமர்சனத்துக்கு..............
Reply
#8
உங்கள் அருமையான விமர்சனத்துக்கு நன்றி கானபிரபா.ம்ம்ம் படம் பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது நானும் இன்னும் பார்க்கவில்லை.
<b> .. .. !!</b>
Reply
#9
இது போன்ற படங்கள் அதிகம் பார்த்ததில்லை, அறிய தந்தமைக்கு நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
தொடர்ந்து வரும் உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றிகள்
Reply
#11
விமர்சனம் அருமை. ஒஸ்ரேலியா ஈழமுரசில் வரும் லெப்டினன் கேணல் கஜனின்
'நீதிக்கு முன் நடு நிலைமை என்பது இல்லை'
என்ற வாக்கியாயத்தினை உபயோகிக்க இருந்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள்
! ?
'' .. ?
! ?.
Reply
#12
நல்ல விமர்சனம் பாராட்டுக்கள். இந்தபடத்தை நானும் பார்த்தேன் ஆனால் நீண்டநாட்களாகிவிட்டது, வங்காளமொழியில் இருந்தது, கீழே ஆங்கில சப்ரைட்டில் போட்டு இருந்தது. பிரதி பரிசில் அண்ணர் வீட்டில் இருக்கிறது. கிழவியின் நடிப்புக்காகவே அண்ணா என்னை வற்புறுத்தி பாக்கவைத்தார். ஏனென்றால் அவருக்கு தெரியும் நாங்கள் பாக்கும் படம் எப்படி என்று, நல்லபடங்கள் இப்படித்தான் இருக்கும் என்று பார்க்க வைத்தார். தொடர வாழ்த்துக்கள்.
.

.
Reply
#13
நல்ல விமர்சனம் பிரபா.
தொடர்ந்து எழுதுங்கள்
இந்தப்படம் பாக்க இன்னும் சந்தர்ப்பம்
கிடைக்கவில்லை. இஞ்சை கடைகளில கிடைக்குமோ
தெரியேல்லை.

உங்களுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#14
நன்றி கந்தப்பு, பிருந்தன், சபி
நேசம் கலந்த நட்புடன் கானா பிரபா
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)